🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சமயம் கார்க்கியன் என்பவனை சால்வன், " கோழை என்றும் பேடி என்றும் சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை. "என்னைப் பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,'' என்று தவத்தில் ஈடுபட்டான். அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மீது பகை கொண்டு மதுராவை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக படையெடுத்து வந்ததால் மதுராவை விடுத்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, அங்கிருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த காலயவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன்!
காலயவனன் கிருஷ்ணரை நெருங்கினான். கிருஷ்ணரோ, அவனுக்குப் பயந்தோடுவதைப் போல ஓடிப்போய் ஒரு குகைக்குள் மறைந்தார். பின் தொடர்ந்து ஓடிய காலயவனனின் பார்வையில், அங்கே யாரோ படுத்திருப்பது போல தெரிந்தது. படுத்திருப்பவர் கிருஷ்ணர் என எண்ணி கொண்டு, தாக்கினான். தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துப் பார்த்தார். அவர் பார்வையில் பட்ட காலயவனன் எரிந்துபோனான்.
தூங்கிக் கொண்டிருந்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி. இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன். தேவர்களுக்கு உதவியதன் காரணமாகக் களைத்து, ஓய்வெடுக்க நினைத்த அவர், "என்னை உறக்கத்தில் இருந்து எழுப்புபவன் சாம்பலாகப் போக வேண்டும்,'' என்ற வரம் பெற்றிருந்தவர் இதை அறிந்திருந்த பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் , காலயவனனை குகைக்கு வரும்படி செய்து, முசுகுந்த சக்கரவர்த்தியின் பார்வையாலேயே அழியும்படி செய்தார்.
இவ்வாறு காலயவனுடன் போரிடாமல் தந்திரமாக ஓடி அவனை அழித்தால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ரண்சோர் ராய் என்ற திருநாமம் வந்தது. ஒரு சாரார் ஜராசந்தனுடன் போர் புரியாமல் மதுராவை விட்டு துவாரகை வந்ததாலும் ஸ்ரீகிருஷ்ணருக்கு இப்பெயர் வந்ததென்றும் கூறுவர். இன்றும் குஜராத்தில் உள்ள பக்தர்கள் அவரது சாதுர்யமாக அசுரனை அழித்த இந்த லீலைகளை நினைவு கூர்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை ரண்சோர் ராய் என்று அழைக்கின்றனர்.
டாக்கோர்
🍁🍁🍁🍁🍁🍁
குஜராத் மாநிலத்தில் கேடா (Kheda) மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. அகமதாபாத் மற்றும் பரோடா ஆகிய இரு நகரங்களில் இருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனந்த் – கோத்ரா புகை வண்டி தடத்தில் உள்ள இத்தலத்தை பரோடா, நதியாத், ஆனந்த் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் புகைவண்டி மூலம் அடையலாம். ஒரு சிறிய கிராமம் தான். அதன் மையத்தில் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் எதிரே பீமன் தன் கதையால் உருவாக்கிய கோமதி குளம் உள்ளது.
மஹாபாரத காலத்தில் இப்பகுதி ஹிடும்பவனம் என்னும் அடர்ந்த காடாக இருந்தது. அதில் பல முனிவர்கள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் டாங்க முனியும் ஒருவர். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் காட்சி கொடுத்து, முனிவரின் விருப்பத்திற்கிணங்கி அங்கேயே கோவில் கொண்டார் எனவே இத்தலம் முன்காலத்தில் டாங்கோர் என்றழைக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து தன் பக்தன் போதணாவிற்காக இத்தலம் வந்த பிறகு அது டாக்கோர் ஆகியது.
துவாரகை கிருஷ்ணன் தன் பக்தன் ஒருவருக்காக டாக்கோர் வந்த கதையைப் பார்க்கலாம். ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரும் பீமனும் டாங்க முனி தவம் செய்யும் இவ்வனத்திற்கு வந்த போது டாங்கமுனிவர் கிருஷ்ணரிடம் தாங்களும் சிவபெருமானுடன் இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கவேண்டும் என்று வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணரும் 4225 வருடங்கள் துவாரகையில் இருந்த பின் இங்கு வருகின்றேன் என்று வரமளித்தார்.
தான் கொடுத்த வரத்திற்கேற்ப தனது பிரியமான பக்தன் போதாணா மூலம் தனது நித்ய லீலை புரிய டாக்கோர் வர முடிவு செய்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்தெடுத்த பக்தர் போதாணா என்ற அந்தணர், துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்தார், வருடந்தோறும் தன் கையால் வளர்த்த துளசி செடியை எடுத்துக் கொண்டு டாக்கோரிலிருந்து துவாரகைக்குச் சென்று, துவாரகாதீஷனை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதிலும் அவ்வாறு சென்று வந்து கொண்டிருந்தார், அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ? எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாக்கோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான் துவாரகாதீஷன் .
ஒரு சமயம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் போதாணாவின் கனவில் , மறு முறை துவாரகை வரும் போது ஒரு வண்டியுடன் வருமாறு பணித்தாராம். போதாணாவும் அவ்வாறே எருதுகள் பூட்டப்பட்ட வண்டியுடன் துவாரகையை அடைந்தார். துவாரகாவின் பூசாரிகள் எதற்காக வண்டியுடன் வந்திருக்கிறீர்கள் என்று வினவ. பகவான் தன்னுடன் டாக்கோருக்கு வரவிருப்பதாகக் போதாணா அவர்களிடம் கூறினார். பூசாரிகள் அதை கேட்டு நகைத்தனர். நித்ய பூஜைகள் முடிந்து கோவில் நடையடைத்த பின் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் போதாணாவிற்கு கொடுத்த வாக்கிற்கிணங்க அவரது வண்டியில் அமர்ந்து கொண்டார், தன்னை டாகோருக்கு அழைத்துச் செல்ல கட்டளையுமிட்டார். வண்டியை ஓட்டிய போதாணா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கிருஷ்ணரே வண்டியை ஓட்டிவந்தார். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய கிருஷ்ணர், பக்தர் போதாணாவுக்காக மாட்டு வண்டியை ஓட்டினார்.
போதாணாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக பிலேஸ்வர் மஹாதேவ் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு வேப்பமரக் கிளையில் பகவான் கிருஷ்ணர் சாய்ந்து நின்றாரார் . இன்றும், அந்த மரக்கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!. " லிமடமா மே ஏக் டால் மேதே" (வேப்ப மரத்தில் ஒரு கிளையில் இனிப்பு) இந்த வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள்.
இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பூசாரிகள் அரசரிடம் இதை தெரிவிக்க . அரசர் பூசாரிகளிடம் தீவிரமாக விசாரணை செய்தார். அப்போது பூசாரிகளிள் முன்தினம் போதணாவிடம் நடந்த உரையாடலையும் எடுத்து கூறினார்கள். இதை பொருமையுடன் கேட்ட அரசர் போதணாவை விசாரணை செய்து குற்றம் நிருபிக்கப்பட்டால் கைதி செய்து கொண்டு வர கட்டளையிட்டார். காவலர்கள் போதணாவை தேடி கடைசியில் அவரது இல்லம் வந்தடைந்தார்கள்.
இதையடுத்து பகவான் துவாரகையிலிருந்து தன்னைத் தேடி வரும் காவலர்களிடம் மறைத்து ,கோமதி ஏரியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போதாணாவைப் பணித்தார். அப்போது காவலர்களின் கடுமையான விசாரணையில் போதனா உயிர் பிரிந்தது.
அவரது மனைவி கங்காபாய் மிகவும் வருந்தி , 'எங்கே நம் இறைவனைக் கண்டுபிடித்தது அழைத்துச் சென்றுவிடுவார்களோ’ என்று பதறினார். அப்போது, அணைவரது இதயத்தில் குடிகொண்டிருக்கும் பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!’ என்றார் . ஆனால், எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் அவர் செல்வந்தர் இல்லை! கங்காபாய் கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கிருஷ்ணரின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் கருணையினால் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கிருஷ்ணரின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. பூஜாரிகள் தங்கள் தவறை உணர்ந்தனர். மன்னிப்பு கேட்டு கதறி அழுதனர். துவாரகையில் ஒரு கிணற்றில் ஆறு மாதம் கழித்து, தான் அதே மாதிரி வடிவில் அவர்களுக்கு மீண்டும் கிடைப்பேன் என்று கூறினார். ஆனால் அவசரப்பட்டு பூஜாரிகள் முன்னதாகவே சென்று பார்த்தனர். டாகூர் விக்கிரகத்தை போன்றே ஆனால் அவரை விட உயரம் குறைவான விக்கிரகம் கிடைத்தது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI
Comments
Post a Comment