ஸ்வேதஜனான கர்ணனும்
ஆதாரம் :- பத்ம புராணம் / ஸ்ருஷ்டி காண்டம் / அத்தியாயம் 14
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁
பீஷ்மர் புலஸ்திய மகரிஷியைப் பார்த்து, "மகா வீரனான அர்ஜுனன் எவ்வாறு மனித ஜென்மம் எடுக்க நேர்ந்தது? கர்ணனுக்கு கன்னிப் பெண்ணிடம் உற்பத்தி நேர்ந்த காரணம் என்ன? இவர்கள் இருவருக்குமிடையே தீராத பகைமை ஏற்படக் காரணம் என்ன இந்த விஷயத்தில் எனக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் தயவு செய்து இதன் உண்மையை விளக்க வேண்டும் என்று கேட்டார்.
புலஸ்திய முனிவர் கூறத் தொடங்கினார். "பூர்வ காலத்தில் சங்கரர் பிரம்மதேவரின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்து விட்டதால், பிரம்ம தேவருக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது, அந்தக் கோபத்தால் அவருடைய நெற்றியில் தோன்றிய வியர்வை துளிகளை வழித்து பூமியின் மேலிட்டார். அந்த வியர்வையில் இருந்து கவசகுண்டலங்களுடனும், வில் அம்புடனும் ஒரு மகாவீரன் தோன்றினான். அவன் எழுந்து நின்று பிரம்ம தேவரை வணங்கி நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
பிரம்மதேவர் அந்த மாவீரனிடம். ருத்திரனைக் அடையாளம் காட்டி நீ உன்னுடைய பலத்தால் இவனைக் கொன்று விடு இந்த மாதிரி துர்புத்தியுடையவன் இனிமேல் தேன்றாதிருக்கட்டும் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் கவசம் தரித்த அந்த வீரன் ருத்திரனைக் கொல்வதற்காகப் பாய்ந்தான். ருத்திரன் ஓட்டம் பிடித்தார் அவன் தன்னைவிடாமல் துரத்திக் கொண்டு வருவதைக் கண்ட ருத்திரன் வெகு வேகமாக ஓடிச்சென்று விஷ்ணு இருக்கும் இடத்தை அடைந்தார். பகவான் விஷ்ணுவைப் பார்த்து, "சத்துருக்களை வெல்லக் கூடியவரான தாங்கள் என்னை இவனிடமிருந்து காப்பாற்றுங்கள். இந்த மகாபாவியை பிரம்மா உற்பத்திசெய்து என் மேல் ஏவி விட்டு விட்டார். இவன் பயங்கரமான கோபத்தோடு, என்னைக் கொல்வதற்காகப் பின் தொடர்ந்து வருகிறான். நீங்கள்தான் என்னைக் காப்பற்ற வேண்டும் என்று முறையிட்டார்.
ருத்திரனிடம் இரக்கம் கொண்ட விஷ்ணு ஹுங்காரம் செய்து அந்த வீரனை மூர்ச்சை அடைந்து விழச் செய்து விட்டார். யோக சொரூபமானவரும், சகல பிராணிகளையும் இரட்சிப்பவருமான விஷ்ணு இவ்வாறாக ருத்திரனை காப்பாற்றினார். பிறகு ருத்திரனைப் பார்த்து ருத்திரனே நீ எனக்கு மிகவும் பிரியமான பக்தன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், தருகிறேன்” என்று கூறினார்.
சிவபெருமான், பகவான் விஷ்ணுவைப் பார்த்து, "எனக்குத் தாங்கள் பிச்சை இட்டால் அதுவே போதும்" என்று கூறி தன் கையை நீட்டினார். பிட்சா பாத்திரமான கபாலமும் அக் கையின் மேல் தோன்றி விட்டது. அது, அற்புதமான தேஜசுடன் பிரகாசித்து கையில் கபாலத்துடன் இருக்கும் சிவபெருமானைப் பிட்சா பாத்திரத்தை நிரப்புவதற்கு போதிய பொருள் என்னிடம் வேறொன்றுமில்லை என்னுடைய கரத்தையே தானமாகத் தருவேன் என்று தனது வலது கரத்தை நீட்டினார். அதைப்பார்த்த சிவபெருமான், தனது சூலத்தால் அந்தக் கையைக் குத்தினார். பகவான் விஷ்ணுவின் கரத்திலிருந்து பெருகிய ரத்தத்தைத் தனது கபால பிட்சாபாத்திரத்தில் பிடித்தார். வேகமாக விழுந்த இரத்தம் சூரியனைப்போல் பிரகாசித்தது. பகவான் விஷ்ணுவின் கரத்திலிருந்து பீரிட்டு வந்த உதிரம் பத்து யோசனை தூர அகலமும், ஐம்பத்தைந்து யோசனை தூர உயரமும் உடையதாய், அந்த இரத்த தாரை ஒரு ஆயிரம் வருஷகால பரியந்தம் வெள்ளம் போல் விழுந்து கொண்டிருந்தது.
அதன்பின் பகவான் நாராயணன் சம்புவைப் பார்த்து, பிட்சா பாத்திரம் நிரம்பி விட்டதா? என்று கேட்டார். மேகத்திலிருந்து விழும் அமுத தாரைப் போன்ற ஹரி வசனம் கேட்டு சிவபெருமானுடைய இரண்டு கண்களும் சூரிய, சந்திரர்களைப் போல் பிராகாசித்தன. தமது மூன்றாவது கண்ணால் பிட்சா பாத்திரத்தைப் பார்த்தபடி விரலால் தடவிப் பார்த்து, "பிட்சா பாத்திரம் நிரம்பி விட்டது. பகவானே தாங்கள் சத்துருக்களை வெல்வதில் சமர்தர் என்பது உண்மையாகி விட்டது" என்று கூறினார். சிவபெருமான் கபாலத்திலிருந்த இரத்தத்தை தன் கையால் துழாவியதால் கடையப் பட்டு, அந்த இரத்தத்திலிருந்து கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய, கிரீடத்துடனும் அக்னி போன்ற தேஜஸுடனும் கூடிய வீர புருஷன் ஒருவன் தோன்றினான். அதைப் பார்த்த பகவான் விஷ்ணு, "சம்போ, இந்தக் கபாலத்திலிருந்து எழுந்து வரும் நரன் யார் என்று கேட்டார் சிவபெருமான், பகவான் விஷ்ணுவைப் பார்த்து பிரபு, நீங்களே இவனை நரன் என்று பெயர் சூட்டி அழைத்த பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இந்த வீரன் அஸ்திர வித்தையில் நிகரற்றவனாவான் இவன் நாராயணனாகிய தங்களுக்குத் துணையாக நரன் என்ற பெயரால் பிரசித்தி அடைவான். சகல யுத்தங்களிலும் தேவர்களுக்குத் துணையாக இருந்து உலகத்தை பரிபாலனம் செய்வான், அசுரர்களை கொல்வதற்கு தங்களுக்கு உதவியாக இருப்பான். பிரம்ம தேவரின் ஐந்தாவது தலையாலான கபாலத்தின் தேஜஸும், தங்களுடைய வலது கையிலிருந்து விழுந்த இரத்தத்தின் வீரியமும், என்னுடைய சிருஷ்டியினாலான வேகமும் இம்மூன்று சக்திகளும் ஒன்று திரண்டு இருப்பதால், இவனை யுத்தங்களில் யாராலும் வெல்ல முடியாத பராக்கிரமசாலியாகத் திகழ்வான்” என்று கூறினார்.
பிறகு சிவபெருமான் அந்த வீரனைத் தன் கபாலத்திலிருந்து கீழே இறக்கி விட்டார். அவன் சிவபெருமானை வணங்கி, “தாங்கள் என்னைச் சிருஷ்டித்த காரணம் என்ன நான் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டான். சிவபெருமான் அவனைப்பார்த்து "பிரம்மாவின் தேஜஸுலிருந்து உண்டான இந்த வீரன் என்னைக் கொல்ல வருகிறான். நீ இவனைக் கொன்று விடு" என்று கூறி மறைந்து விட்டார்.
கபாலத்திலிருந்து தோன்றிய வீரன் விஷ்ணுவின் ஹுங்கார கர்ஜனையால் மூர்சித்துக் கிடந்த வீரனைத் தனது வலது காலால் உதைத்தான். அவனும் உடனே துள்ளி எழுந்து நின்றான் உடனே இருவாக்குமிடையே மகா பயங்கரமான போர் மூண்டு விட்டது அவர்கள் வில்களை இழுத்து விட்ட டங்கார ஓசை இடிமுழக்கம் போல சகல லோகங்களையும் நடு நடுங்கச் செய்தது அவர்களுடைய அஸ்திரங்கள் அனல் கக்கிக்கொண்டு பாய்ந்தன இருவரும் சளைக்காமல் இரண்டு திவ்ய வருஷகாலம் போர் புரிந்தனர். இவர்களில் பிரம்மதேவரின் வியர்வைத் துளியிலிருந்து உற்பத்தியானவன் வெண்மையாகவும், பகவான் விஷ்ணுவின் இரத்தத்திலிருந்து தோன்றியவன் சிவப்பாகவும் இருந்ததால், அவர்களுக்கு ஸ்வேதஜன், ரக்தஜன் என்று பெயர்கள் வழங்கலாயின.
அவர்கள் ஓயாமல் யுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து பகவான் விஷ்ணு சிந்தனையில் ஆழ்ந்தார். அங்கிருந்து மறைந்து பிரம்மதேவரின் சபையில் தோன்றினார். பிரம்மாவை பார்த்து, பிரம்ம தேவரே இன்று ஸ்வேதஜன், ரக்தஜனிடம் தோற்று விழப் போகிறான். நீர் என்ன செய்யப்போகிறீர் என்று கேட்டார். அதைக் கேட்டதும் பிரம்மதேவருக்கு மிகவும் சங்கடமாக போயிற்று. பகவான் விஷ்ணுவைப் பார்த்து, “பகவானே என்னால் சிருஷ்டிக் கப்பட்டவனுக்குப் புது வாழ்வு அளியுங்கள், என்று பிரார்த்தனை செய்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பகவான் விஷ்ணு, ' அவ்வாறே ஆகட்டும் ," என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
பகவான் விஷ்ணு , போரிட்டுக் கொண்டிருந்த ஸ்வேதஜன், ரக்தஜன் இருவருக்கிடைய தோன்றி, அவர்களைப் போரை நிறுத்தும்படி செய்தார். இந்த ஜென்மத்தில் நீங்கள் போர் செய்தது போதும். துவாபர யுகத்தின் முடிவில், ஒரு பெரிய யுத்தம் மூளப் போகிறது. அதில் நீங்கள் இருவரும் போர் புரிந்து, உங்களுடைய வீர, தீர பராக்கிரமங்களைக் காட்டலாம்," என்று கூறினார். அதன்பின் பகவான் விஷ்ணு , கிரகங்களின் அதிபதியாகிய சூரியனையும், தேவர்களின் அதிபதியாகிய இந்திரனையும் அழைத்து, இந்த இரண்டு மகா பராக்கிரமசாலிகளில் யாராவது ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொண்டு இரட்சிக்க வேண்டும் என்று கூறினார். இந்த சுவேதஜன் சூரியனிடம் இருக்கட்டும், ரக்தஜன் இந்திரனிடம் இருக்கட்டும். துவாபரயுக முடிவில் தேவர்களின் காரியமாக யுத்தத்தில் சந்திப்பார்கள், " என்று கூறினார்.
நரன் என்று பகவானால் அழைக்கப்பட்ட ரக்தஜன் யதுகுலத்தில் தோன்றிய குந்தியின் மகனாகப் பிறந்தான்.
யது குலத்தில் பிறந்த ப்ருதா என்ற பெண் ( குந்தி ) மிகவும் ரூப சௌந்தர்யம் உடையவளாக, நற்குணமும், நல்லொழுக்கமும் உடையவளாக விளங்கினாள்.
அவள் தேவர்களின் காரியம் நிறைவேறுவதற்காகவே பிறந்தவள்.. துர்வாச முனிவருக்கு மனம் கோணாமல் சேவை செய்து அவரிடமிருந்து அபூர்வமான வரத்தையும், மந்திரங்களையும் பெற்றாள். துர்வாசர் விடை பெற்றுச் செல்கையில் ப்ருதாவைப் பார்த்து, "நீ எந்த தேவதையை பக்தியுடன் உபாசனை செய்து அழைக்கிறாயோ, அந்த தேவதை உன் முன்னால் பிரத்தியட்சம் ஆவார். அவர் அருளால் அவருடைய பிரசாதமாக ஒரு புத்திரனும் உண்டாவான், என்று கூறிச் சென்றார்.
ப்ருதாவுக்கு ஒரே ஆச்சரியம் அப்படியும் நடக்குமா ? என்று பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவள் மனதைத் தூண்டிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் நதியில் நீராடிவிட்டுச் சூரிய நமஸ்காரம் செய்தபடி நின்றவள் மந்திர சக்தியால் சூரியனை அழைத்து விட்டாள். அதன் விளைவாக கன்னியான குந்தி சூரியனால் கர்ப்பம் தரித்து, தனது காதின் வழியாக கர்ணனைப் பெற்றெடுத்தாள். பின்பு ஆற்றில் விடப்பட்டு, தேரோட்டியால் எடுத்து வளர்க்கப்பட்டான் மகா விரனான கர்ணன்.
பகவான் விஷ்ணு, சூரியனையும் இந்திரனையும் மகா வீரர்களான சுவேதஜனையும், ரக்தஜனையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட போது தேவந்திரன் பகவானைப் பார்த்து "பகவானே ராமாவதாரத்தில் என் மகனாகிய வாலியைக் கொன்று சூரிய புத்திரனாகிய சுக்ரீவனைக் காப்பாற்றினீர்கள். மறுபடியும் அப்படி நேரக்கூடாது. இம்முறை தாங்கள் என் மகனுக்கு ஆதரவாக இருந்து இரட்சிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். அதன் காரணமாகவே பகவான் அர்ஜுனனைத் தனது. தோழனாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு உதவியாக இருந்து காப்பாற்றினார்.
சுவேதஜன் கர்ணனாகப் பிறந்த பிறகு, பருதா மறுபடியும் கன்னித் தன்மை அடைந்தவளாகத் தன் தந்தையின் வீட்டில் வசித்தாள். அவளைப் பாண்டு மணம் செய்து கொண்டான்.
பாண்டுவுக்கு ஒரு மானின் சாபம் ஏற்பட்ட காரணத்தால் மனைவியைத் தீண்ட முடியாதவனானான். ஆயினும், தன் மனைவி மூலம் தனக்குச் சந்ததி ஏற்பட வேண்டும் என்று எண்ணினான். கணவனின் விருப்பத்தை அறிந்த குந்தி, - அரசே மனிதர் முலமாக மகப்பேறு அடைய நான் விரும்ப வில்லை எனக்குக் குழந்தை பிறப்பதானால் தேவர்கள் மூலமாகவே பிறக்க வேண்டும் என்று கூறியயவளாக, துர்வாசர் தனக்கு அளித்த மந்திர சித்தியைப் பற்றிக் கூறினாள். பாண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இந்திரனிடமிருந்த ரக்தஜன், அதன் பயனாக குந்தியிடம் அர்ஜுனனாகப் பிறந்தான். அர்ஜுனனுக்கு உதவி செய்வதற்காகவே பகவானும் ஶ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்தார்
ஹரே கிருஷ்ண🙏
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI
Comments
Post a Comment