(சனகர், சனாதனர், சனந்தனர், மற்றும் சனத்குமாரர் )
வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁
முழுமுதற் கடவுளின் ஒரு குறிப்பிட்ட சக்தி ஒரு குறிப்பிட்ட உயிர்வாழிகட்கு அளிக்கப்படும் பொழுது அவர்கள் "ஆவேச அவதாரங்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். நான்கு குமாரர்களும் குறிப்பாக முழுமுதற் கடவுளின் ஞான சக்தியின் பிரதிநிதிகளாவர். இவர்கள் பகவானைப் பற்றிய உன்னத அறிவை மிகத் தெளிவாக விளக்கியதால் அனைத்து சாதுக்களும் ஒரே நேரத்தில் இந்த அறிவை எவ்வித சிரமமும் இல்லாமல் கிரகித்துக் கொள்ள முடிந்தது. நான்கு குமாரர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனக்குள்ளேயே முழுமுதற் கடவுளை காண முடியும்.
படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் அவரது மனதின் சக்தியில் இருந்து நான்கு புதல்வர்களை படைத்தார். அவர்கள் நான்கு குமாரர்கள் எனப்பட்டனர். பிரபஞ்சத்தில் பிரஜைகளை பெருக்குவதன் பொருட்டு பிரம்மதேவர் பிறப்பித்த கட்டளையைக் கேட்டதும் குமாரர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் வாழ்நாள் முழுவதும் இல்லறத்தில் ஈடுபடாமல் பிரம்மச்சாரிகளாகவே இருக்கப் போவதாக உறுதி பூண்டனர். அவர்கள் வளர்ந்து, இளமை பிராயத்தில் புலன் இன்பங்களின்பால் தாங்கள் திசைதிருப்ப படாமலிருக்க பார்ப்பதற்கு எப்போதும் தங்களை சிறு குழந்தைகளாக வைத்துக்கொண்டார்கள். கடவுளை உணர்தல் என்னும் முறையை செயல் முறையில் நமக்கு கற்பிப்பதற்காக அவர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்து கடுமையான ஒழுங்கு முறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அவர்கள் அனைவரும் முதலில் தங்களை தகுதிவாய்ந்த பிராமணர்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதிலிருந்து ஒருவன் பிராமணன் என்ற தகுதியைப் பெறுவது வெறும் பிறப்பால் மட்டுமல்ல அவனது செயல்முறைகளில் அந்த தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
நான்கு குமாரர்களான சனகர், சனாதனர், சனந்தனர், மற்றும் சனத்குமாரர் ஆகியோர் ஆன்மீக மற்றும் பௌதீக உலகங்களுக்குப் பிரயாணம் செய்யும் ஆற்றலைக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்பதால் இந்த பௌதிக உலகிற்கு அப்பால் உள்ள ஆன்மீக வானிற்றகுச் செல்லும் பொழுது தங்களை இலகுவானதை விட மிக இலகுவாக மாற்றிக் கொள்வார்கள். ஆன்மீக வானில் எண்ணற்ற ஆன்மீக கிரகங்கள் உள்ளன. அவை "வைகுண்டங்கள்" என்று அழைக்கப்பட்டன. அங்குதான் முழுமுதற் கடவுள் பகவான் நாராயணரும் அவரது தூய பக்தர்களும் உள்ளனர். குமாரர்கள் பார்ப்பதற்கு ஆடையின்றி ஐந்து வயது பாலகர்களாகக் காணப்பட்டாலும் அவர்கள் படைப்பில் உள்ள உயிர்களுக்கெல்லாம் மூத்தவர்கள் ஆவர். அவர்கள் உண்மையில் தாங்கள் யார் என்பதில் தெளிவு பெற்று இருந்தார்கள். சிறு குழந்தைகள் போல் காணப்பட்ட அவர்கள் வைகுண்டத்தின் வாயிலை அடைந்தனர். அவ்வாறு அடையும் பொழுது அவர்களுடைய மனதில் இது நம்முடையது இது பிறருடையயது என்ற எண்ணங்களிலிருந்து விடுபட்டிருந்தார்கள். வைகுண்ட புரியின் ஆறு வாயில்களைக் கடந்து பகவான் வாசம் புரியும் மாளிகையின் ஏழாவது வாயிலை அடைந்தபோது குழந்தைகள் போன்றிருந்த அந்த சாதுக்கள் அங்கு வாயில் காப்பாளர்களாகயிருந்த ஜெய மற்றும் விஜயர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பகவத் சேவையில் தங்களுக்கு ஏற்பட்ட இந்த தடையின் காரணமாகவும், தங்களுக்கு மிகவும் பிரியமான பகவான் ஶ்ரீ ஹரியைக் காண மிகுந்த ஆவல் கொண்டதாலும் கடும் கோபம் கொண்டனர். கோபம் கொண்ட குமாரர்கள் ஜெய மற்றும் விஜயர்களை கண்டிக்கும் விதமாக பௌதிக உலகில் அசுர குடும்பத்தில் பிறவி எடுக்குமாறு அவர்களை சபித்தனர். அங்கு நடந்தவை என்ன என்பதை உடனடியாகப் புரிந்து கொண்ட முழுமுதற்கடவுள் பகவான் பத்மநாபன் தனது நித்திய மனைவியான லக்ஷ்மி தேவியுடன் சம்பவ இடத்தில் பிரசன்னமானார். யோக முறையைப் செய்யும் அதிர்ஷ்டசாலி யோகிகள் பகவானைத் தியானம் செய்து அவரை தங்கள் இதயத்தில் காண்கின்றனர். ஆனால் அவரை நேருக்கு நேர் காண்பது மிகவும் அரிதானதும் அதைவிட வித்தியாசமானதும் ஆகும். அது தூய பக்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகும். இதுவரை பரபிரம்மத்தை தியானம் செய்து கொண்டிருந்த குமாரர்கள் வெறுமனே பகவானின் திருமுகத்தை பார்த்ததாலும் அவரது திருப்பாதத்தில் இருந்து வந்த துளசியின் கந்தத்தை (நறுமணத்தை) சுவாசித்ததாலும், அவரது திருமேனியில் இருந்து எழுந்த குங்குமப்பூ மற்றும் சந்தனத்தின் வாசனையை முகர்ந்ததாலும் குமாரர்களின் மனது மாறியது. முழுமுதற்கடவுளுடன் ஒன்றாகி சாயுஜ்ய முக்தி அடைவதைக் காட்டிலும் பகவானின் பக்தர்கள் ஆவதே மிகவும் புத்திசாலித்தனம் என்று அவர்கள் நினைத்தனர். இறுதியாக பகவானின் தனிப்பட்ட திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்தனர்.
இவர்கள் வேதங்கள் மற்றும் பிற சாஸ்திரங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்களாவர். அவர்களது வரம்பற்ற தவம் மற்றும் விரதங்களின் காரணமாக அவர்களுடைய சிறந்த குணங்கள் வெளிப்படுத்தப்டுகின்றன. பகவானின் புகழை உலகெங்கும் பரப்புவதில் நல்ல கருவிகளாக இருந்தனர். ஸ்ரீமத் பாகவத மஹா புராணத்தின் மகிமைகளை ஸ்ரீமான் நாரதருக்கும், மஹாராஜா ப்ருது மற்றும் மன்னன் வ்ருதரா விற்கும் முனிவர் சுக்ராச்சாரியார் மற்றும் பலருக்கும் எடுத்துரைப்பதாக வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு குமாரர்கள் எல்லோரிடமும் நட்புணர்வோடு மென்மையாகவும் பழகினர். அவர்களைப் பொறுத்தமட்டில் நண்பன் பகைவன் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு இல்லை. திவ்யமான தளத்தில் இருக்கும் குமாரர்கள் போன்ற உயர்ந்தவர்கள் எப்பொழுதும் உலகாயதக் விஷயங்களுக்கு அப்பாற்பட்டும் இருமைகளில் நடுநிலை வகித்தும் வருகின்றனர்.
தாமாகவே அவர்கள் ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்தினர். அதுவே பக்தியின் முன்னேற்றத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட நான்கு சம்பிரதாயங்களில் ஒன்றான குமார சம்பிரதாயம் அல்லது நிம்பார்க்க சம்பிரதாயம் ஆகும். 'யதவத்ரியில் உள்ள திரு நாராயணர் 'ஆலயம் முதன்முதலில் நான்கு குமாரர்களால் நிர்மாணிக்கப்பட்டு புனிதப்படுத்த பட்டது என்று கூறப்படுகின்றது. இந்த ஆலயம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் மேல் கோட்டையில் அமைந்திருக்கும் திருநாராயண புரத்தில் உள்ளது.
I🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
Comments
Post a Comment