வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரமே கபிலதேவர். சத்யயுகத்தில் தோன்றிய இவர் பண்டைய இந்தியாவின் பாரம்பரியத் தத்துவத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படும் ஸாங்கிய யோக தத்துவத்தின் ஆசிரியராவார். இவ்வுலகில் பகவான் கபிலர் கர்தம முனிவருக்கும் தேவஹுதி தாயாருக்கும் மகனாக அவதரித்தார். கர்தம முனிவரும், தேவஹுதி தாயாரும் தங்களது மகனின் தெய்வீகத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். உண்மையில் கபிலதேவர் தோன்றுவதற்கு முன்னரே பிரம்மதேவர் தேவஹுதியின் முன் தோன்றி எல்லாவற்றையும் விவரித்து விட்டார். அதாவது உனக்கு மகனாக வருபவர் முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரம் என்றும், அவரே உனது ஆன்மிக அறிவைப் பிரகாசிக்கச் செய்து இறுதியில் முக்திக்கான (விடுதலைக்கான) பாதையைக் காட்டுவார் என்றும் கூறினார். தங்க நிறத்திலான தலைமுடியையும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையும், தாமரைப்பூவின் சின்னங்களுடன் கூடிய தாமரை போன்ற பாதங்களையும் கொண்ட பகவான் கபிலதேவர், இந்த பௌதீக உலகோடு நம்மைப் பிணைத்திருக்கும் நம்முடைய ஆழ்ந்த ஆசைகளை அடியோடு வேரறுக்கவே தோன்றினார்.
வேத அகராதியின் படி "ஸாங்க்ய" என்பது ஜீவாத்மாவின் உண்மையான நிலையை விவரிக்கும் தத்துவத்தை குறிக்கின்றது. ஞானம் என்பது வேத சாஸ்திரங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட குரு-சிஷ்ய பரம்பரையில் இருந்து பெறப்படும் அறிவாகும். விஞ்ஞானம் என்பது அவ்வாறு பெறப்பட்ட அறிவை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது பற்றியதாகும் . கபில முனிவரின் ஸாங்க்ய யோக தத்துவ முறையானது ஞானம் மற்றும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த ஸாங்க்ய யோக தத்துவமானது உண்மையில் தன்னால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும் அது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்தது என்றும் காலப்போக்கில் அது மிக மோசமான நிலையில் மறைந்துவிட்டது என்றும் எனவே அதை மறுபடியும் அறிமுகப்படுத்தவே நான் தோன்றியிருக்கிறேன் என்றும் கபில முனிவர் கூறுகிறார்.
வேத கலாச்சாரத்தின் படி கர்தம முனிவர் தான் சந்நியாசம் மேற்கொண்ட பிறகு தனது தெய்வீக மகனான கபிலதேவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்தார். தேவஹுதி தனது மகனிடம் மிகவும் தாழ்மையான மனோநிலையில் தனக்கு பௌதீக சிக்கல்களில் இருந்து விடுதலை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். உண்மையில் பௌதீக சிக்கல்களில் இருந்து விடுதலை பெற்று மனித வாழ்வின் பக்குவத்தை அடைய முயற்சிக்கும் ஒருவருக்கு தேவஹுதி தனது மகன் கபிலதேவரிடம் கேட்ட கேள்விகள் மிகவும் சுவாரஸ்யம் அளிப்பவை ஆகும். அதற்கு பதிலளிக்கும் விதமாக பகவான் கபிலதேவர் கட்டுண்ட நிலை மற்றும் முக்திக்கான நிலையின் உணர்வுகள் குறித்து விவரித்தார். அவர் தூய்மையான உணர்வு நிலையை ஒரு சாதுவின் பண்புகளோடு கோடிட்டுக்காட்டினார்.
ஒரு சாதுவானவர் சாதுக்களுடனான உள்ள சங்கத்தை வலியுறுத்துபவராக இருப்பார். பகவான் கபிலர் தன் தாயிடம் முக்தி என்பது பக்தியை அடைவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் பக்தியை அடைந்து விட்டால் முக்தி தானாகவே அடையப்பட்டு விடுகிறது என்றும் கூறினார். அனுதினமும் பக்திக்கான செயல்களிலும், சேவைகளிலும் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தாமாகவே படிப்படியாக பௌதிக ஆசைகள் குறைந்து இறுதியில் பிறப்பு இறப்பு சுழற்சியை கடந்து விடுகின்றார்கள் என்றும் கூறினார்.
பிறகு அவர் கடவுளின் தனிப்பட்ட உருவத்தின் மீது தியானம் செய்ய தன் தாயிடம் கூறினார். இதனால் அன்னை தேவஹுதியின் இதயம் முழுவதும் தூய்மையாக்க பட்டு வைகுண்டத்தில் பகவான் கபிலதேவர் வசிக்கும் தாமத்தை அடையும் தகுதியைப் பெற்றார். பகவானின் ஒவ்வொரு அவதாரங்களுக்கும் ஆன்மிக வானில் தனிப்பட்ட லோகங்கள் உள்ளன.
மகாமுனிவராக இருந்த முழுமுதற்கடவுள் பகவான் கபிலர் தன் தந்தை கர்தம முனிவரின் ஆசிரமத்தை விட்டு தன் தாயின் அனுமதியுடன் வெளியேறினார். அவர் முதலில் இமயமலைக்குச் சென்று கங்கை நதியின் போக்கை அறிந்து அது கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றார். அந்த இடத்தின் பெயர் தற்போது "கங்கா சாகர்" என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இத் தலத்திற்கு வருடந்தோறும் ஆன்மிக யாத்திரைக்காக வரும் பல கோடான கோடி மக்கள் மகர சங்கராந்தி" அன்று இங்கு ஒன்று கூடி பல்வேறு பிரார்த்தனைகளுடன் புனித நீராடுகின்றனர். இந்தப் புனிதத் தலம் "கபில ஆசிரமம்" என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இப்பொழுதும் பகவான் கபிலர் இங்கு வாசம் புரிந்து மூன்று உலகங்களிலும் உள்ள கட்டுண்ட ஜீவன்களின் விடுதலைக்காக பல்வேறு விரதங்களையும் தவங்களையும் மேற்கொள்கிறார் என்றறியப்படுகிறது . பகவான் கபிலரின் ஸாங்கிய தத்துவ முறையானது இன்று கபிலன் என்றறியப்படும் வஞ்சகன் ஒருவனால் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த கபிலரின் தத்துவமானது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பகவான் கபிலரால் விளக்கப்பட்ட ஸாங்ஙகியத்துடன் பொருந்தவே பொருந்தாது. பகவான் தன் தாயான தேவஹுதிக்குக்குக் கூறிய அறிவுரைகள் ஸ்ரீமத் பாகவதத்தில் மூன்றாவது ஸ்கந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளது (அத்தியாயம் 25-32). யாரொருவர் இந்த அறிவுரைகளை ஏற்று தங்களது வாழ்க்கையில் இதை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அன்னை தேவஹுதியைப் போன்ற முக்தியை அடைவார்கள் என்பது நிச்சயம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
Comments
Post a Comment