ஐந்து விதமான கடன்கள்
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து விதத்தில் கடன்பட்டுள்ளனர்.
******************************
முதலாவதாக, தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். நமது உடலின் ஒவ்வோர் அங்கமும் அசைவும் பல்வேறு தேவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், நாம் முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களுக்கும் கடன்பட்டுள்ளோம். தேவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கு யாகங்கள் புரிய வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தேவர்களுக்கான கடனை அடைப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர். வேத சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலம் ரிஷிகள் திருப்தியடைகின்றனர். பொதுவாக கலி யுக மக்கள் வேத சாஸ்திரங்களை வயதான காலத்தில் படிப்பதற்குக்கூட தயங்குகின்றனர்.
மூன்றாவதாக, பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களுக்கு சிரார்த்த சடங்கு சரிவர செய்வதாலும் சந்ததியர்களை வாழையடி வாழையாகத் தழைக்க வைப்பதாலும் மூதாதையர்கள் திருப்தியடைகின்றனர். இதனை பித்ரு யாகம் என அழைப்பர், பித்ரு லோகத்தில் மூதாதையர்கள் இன்பமாக வாழ்வதற்கு இஃது உதவுகிறது. சிரார்த்த சடங்கு செய்யாத பட்சத்தில் மூதாதையர்களின் சாபத்தினால் குடும்ப விருத்தி தடைபடுகிறது.
நான்காவதாக, மனிதர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். தாய், தந்தை, சகோதரர், சகோதரி, சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் எனப் பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். அதே சமயம் விருந்தினர்களைக் நன்கு உபசரித்து, மற்றவர்களையும் அந்த சேவையில் ஈடுபடுத்தும்போது விருந்தினர்கள் திருப்தியடைகின்றனர். இதனை நிர் யாகம் என அழைப்பர். எதிரியே இல்லத்திற்கு விருந்தினராக வந்தாலும், அவருக்கு விருந்து படைப்பது பண்பாடு. தற்போதைய காலக்கட்டத்தில் விருந்தினர்களைக் கழுத்தைப் பிடித்து இல்லத்திற்கு வெளியே தள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
ஐந்தாவதாக, இதர உயிர்வாழிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். உதாரணமாக, பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம். அந்த ஜீவன்களின் சேவையைப் போற்றுதல் பூத யாகம் எனப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பசுவை பால் கொடுக்கும்வரை மட்டுமே பராமரிக்கின்றனர், பால் கறவை முடிந்த பிறகு இறைச்சி கூடத்திற்கு விற்று விடுகின்றனர்.
கடனிலிருந்து விடுபடுவது எப்படி?
***************************
இந்த ஐந்து கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது. அவ்வாறு கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யும்போதே, மேலும் பலரின் சேவையை ஏற்று, மேன்மேலும் கடன்காரர்களாக தான் திகழ்வோம். அப்படியெனில், இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன?
தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன் ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்
“யாரொருவர் முழுமையாக கிருஷ்ணரின் திருப்பாதத்தில் தஞ்சம் புகுகிறார்களோ, அவர்கள் தேவர்களுக்கோ ரிஷிகளுக்கோ பித்ருக்களுக்கோ மனிதர்களுக்கோ மற்ற உயிர்வாழிகளுக்கோ கடன்பட்டவர்கள் அல்லர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.5.41)
கிருஷ்ணரைச் சார்ந்து வாழ்வதால் அனைத்து கடனிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். ஏனெனில், கிருஷ்ணரே அனைத்து ஜீவன்களுக்கும் தந்தையாகத் திகழ்கிறார். பொருளாதாரக் கடனிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்குச் சிலர் நீதிமன்றத்தில் சரணடைகிறார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ என்னிடம் சரணடைந்தால், அனைத்து விதமான கடன்களிலிருந்தும் விடுவிப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறார்.
ஸநாதன கோஸ்வாமியிடம் சைதன்ய மஹாபிரபு கூறினார், “யாரொருவர் பௌதிக விருப்பத்தைக் கைவிட்டு, தன்னை முழுமையாக கிருஷ்ணரின் திவ்யமான பக்தித் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைத்து விதமான கடனிலிருந்தும் விடுபடுகின்றனர்.” (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 22.140)
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை தினமும் உச்சரித்து, கிருஷ்ணருக்கு பக்தி செய்தால், அனைத்து கடனிலிருந்தும் படிப்படியாக விடுபட்டு, நிம்மதிக்கும் மேலான ஆனந்தத்தை அடைய முடியும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment