🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நாகரீகமற்ற மனிதர்களின் கடுஞ்சொற்கள் அம்புகளை விட அதிகமாக இதயத்தைத் துளைக்கின்றன. இருப்பினும் அவந்தி தேசத்து பிச்சாண்டி பிராமணரொருவர் துஷ்டர்களால் தாக்கப்பட்ட போதுகூட இத்தொல்லைகளுக்கெல்லாம் தன் ஊழ்வினையே காரணம் என்று கருதி மிகுந்த அடக்கத்தோடுஅதைப் பொறுத்துக் கொண்டார். துஷ்டர்களால் விளைவிக்கப்படும் தொல்லைகளையும், குற்றங்களையும் எவ்வாறு ஒருவன் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற உதாரணத்தை அவந்தி பிரமணரின் வரலாறு மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் உத்தவருக்கு உபதேசம் செய்தார்.
ஒரு சமயம் அவந்தி என்ற நாட்டில் பெரும் செல்வந்தனும், சகல ஐசுவரியங்களின் பேறு பெற்றவனுமான ஒரு குறிப்பிட்ட பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் வணிகத் தொழில் செய்துவந்தான். ஆனால் கஞ்சனான அவன் காமுகனாகவும், பேராசைக்காரனாகவும், முன்கோபியாகவும் இருந்தான். தர்மமும், தேவையான புலன் நுகர்வு இல்லாத அவனது வீட்டில், குடும்ப அங்கத்தினர்களும் விருந்தினர்களும் வாக்கினால்கூட முறையாக உபசரிக்கப்படவில்லை . தேவையான காலங்களில் தன் சொந்த உடலுக்கு அவன் போதுமான புலன் நுகர்வைக் கொடுக்கவில்லை.
அவன் கல்நெஞ்சம் கொண்டவனாகவும், கஞ்சனாகவும் இருந்ததால், அவனது புதல்வர்களும், சம்பந்திகளும், மனைவியும், புதல்விகளும் மற்றும் சேவகர்களும் அவனிடம் பகைமை பாராட்டத் துவங்கினர் அவனிடம் வெறுப்படைந்த அவர்கள் அவனிடம் அன்போடு நடந்து கொள்ளவில்லை. இவ்விதமாக, யக்ஷர்களைப் போல் தன் செல்வத்தைச் செலவிடாமல் காத்து வந்தவனும், இம்மையிலும் மறுமையிலும் நல்ல கதி இல்லாதவனும் தர்மத்தையும், புலன் நுகர்வையும் அறவே இழந்தவனுமான அந்த பிராமணனிடம் இல்லறத்திற்குரிய பஞ்ச-யக்ஞங்களின் அதி தேவதைகள் கோபம் கொண்டனர். அதிதேவதைகளை அலட்சியம் செய்ததால் அவன் தன் புண்ணியம் மற்றும் அனைத்துச் செல்வங்களின் கையிருப்பையும் இழந்தவனானான். பெரும் முயற்சியுடன் கடின உழைப்பினால் சம்பாதித்த அனைத்தையும் இழந்தான்
அந்த பெயரளவு பிராமணனின் செல்வத்தின் ஒரு பகுதி உறவினர்களாலும், ஒருபகுதி திருடர்களாலும், ஒருபகுதி விதியாலும், ஒருபகுதி காலத்தின் விளைவுகளாலும், ஒரு பகுதி சாதாரண மக்களாலும், மற்றும் ஒரு பகுதி அரசாங்க உயர் அதிகாரிகளாலும் அபகரிக்கப்பட்டது. இறுதியில், தர்மத்திலும், புலன் நுகர்விலும் ஒருபோதும் ஈடுபட்டிராத அவன் தன் சொத்துக்களையெல்லாம் இழந்துவிட்டபோது தன் குடும்ப அங்கத்தினர்களால் அலட்சியம் செய்யப்பட்டு, பொறுக்க இயலாதகவலைக்குள்ளானான். அவன் தன் செல்வத்தையெல்லாம் இழந்து பெரும் வேதனைக்கும் வருத்தத்திற்கும் உள்ளானான். கண்ணீரால் தொண்டை அடைத்துக் கொள்ள நீண்ட நேரம் தன் துரதிஷ்டம் எண்ணி சிந்தனையில் ஆழ்ந்த அவனுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஒரு துறவு மனப்பான்மை எழுந்தது.
அந்த பிராமணன் பின்வருமாறு கூறினான்: எவ்வளவுபெரிய துரதிஷ்டம் தர்மத்துக்கோ ஜட சுகத்திற்கோ கூட செலவிடப்படாத செல்வத்திற்காக நான் மிகக் கடினமாக உழைத்து, தேவையின்றி என்னை நான் கஷ்டப்படுத்திக் கொண்டேன். பொதுவாக, கஞ்சர்களின் செல்வம் அவர்களுக்கு ஒரு போதும் மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை . அது இப்பிறவியில் அவர்களுக்கு சித்திரவதையும் இறந்தபின் நரக வாழ்வையும் கொடுக்கிறது. செல்வத்தைச் சம்பாதித்து அதைக் காப்பாற்றுவதில் எவ்வளவு பெரு முயற்சியும், பயமும், கவலையும் மற்றும் குழப்பமும் உள்ளன என்பதை அவர் எண்ணிப்பார்த்தார். செல்வத்தின் காரணமாக திருட்டு, இம்சை, பொய், ஏமாற்றம், காமம், கோபம், தற்பெருமை, நிம்மதியின்மை, கருத்து வேறுபாடு, வெறுப்பு. நம்பிக்கையின்மை, சண்டை, பெண்களிடம் பற்று, சூதாட்டம் மற்றும் குடிப் பழக்கம் ஆகிய 15 விரும்பத்தகாத விஷயங்கள் எழுகின்றன.
இந்த எண்ணம் இதயத்தில் உதயமானதும், பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ ஹரி எப்படியோ தன்னிடம் திருப்தி அடைந்துள்ளதை அந்த பிராமணர் புரிந்துகொண்டார். பகவான் தன்னிடம் திருப்தி அடைந்ததால்தான், அனுகூலமற்றவை போல் காணப்பட்ட சம்பவங்கள் தன் வாழ்வில் நிகழ்ந்துள்ளன என்பதை அவர் உணர்ந்தார். அவர் தன் இதயத்தில் ஏற்பட்ட துறவு மனப்பான்மையைத் தனது ஆத்ம விடுதலைக்குரிய உண்மையான மார்க்கமாகக் கருதி மிகவும் நன்றியுள்ளவரானார். இந்நிலையில் தன் வாழ்நாள் முழுவதையும் பகவான் ஸ்ரீஹரியின் வழிபாட்டில் ஈடுபடத் தீர்மானித்து திரிதண்டி-ஸந்நியாஸம் என்ற துறவு வாழ்வை அவர் ஏற்றார். அதைத் தொடர்ந்து வெவ்வேறு கிராமங்களுக்குச் சென்று யாசகம் செய்து வந்த அவரை மக்கள் துன்புறுத்தினர்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறினார். அன்பு உத்தவா, போக்கிரிகள் வயதான, தூய்மையற்ற பிச்சைக்காரனாக அவனைப் பார்த்து, பல நிந்தனைகளால் அவனை அவமதித்தனர். அவர்களுள் சிலர் அவனது சந்நியாசி தண்டத்தையும், சிலர் பிச்சைப் பாத்திரமாக உபயோகிக்கப்பட்ட அவனது கமண்டலத்தையும் எடுத்துக் கொள்வார்கள். சிலர் அவனது மான் தோல் ஆசனத்தையும், சிலர் அவனது ஜப மாலையையும், மற்றும் சிலர் அவனது கிழிந்த கந்தலையும் திருடிக் கொள்வார்கள் இப்பொருட்களையெல்லாம் திருப்பிக் கொடுப்பதுபோல் அவன் முன் காட்டி மீண்டும் அவற்றை மறைத்துக் கொள்வார்கள் . அவன் ஒரு நதிக்கரையில் அமர்ந்து, தான் பிச்சையெடுத்துச் சேகரித்த உணவை உண்ணப்போகும் தறுவாயில், இத்தகைய பெரும் பாவிகள் வந்து அதில் சிறுநீர் கழித்தனர், மேலும் அவனது தலை மேல் எச்சிலை உமிழவும் துணிந்தனர்.
அவன் மௌன விரதம் ஏற்றிருந்த போதிலும், அவனைப் பேச வைக்க முயன்றும் அவன் பேசாததால் அவர்கள் அவனைப் பிரம்பால் அடித்தனர். மற்றவர்களோ, "இவன் ஒரு திருடன்” என்று கூறி அவனைத் தண்டிப்பார்கள். மேலும் மற்றவர்களோ, "அவனைக் கட்டுங்கள்! அவனைக் கட்டுங்கள்!” என்று கூவியபடி அவனைக் கட்டிப் போட்டனர்
இவன் ஒரு வேஷதாரியும், வஞ்சகனுமாவான். இவன் தன் செல்வத்தை இழந்து, தன் குடும்பத்தினரால் வெளியே துரத்தப்பட்டுவிட்டதால், சமயத்தை (பக்தி மார்க்கத்தை) ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்டுள்ளான்" என்று கூறி அவரை அவர்கள் நிந்தித்து அவமதிப்பார்கள். ஆனால் அவர் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஒரு மலைபோல் உறுதியோடு இருந்தார். தான் தேர்ந்தெடுத்த ஆன்மீக வழியில் உறுதியாக இருந்து கொண்டு, பிக்கு-கீதை (விஷூ கீதா) என்ற பிரபலமான ஒரு பாடலை அவர் பாடினார்.
ஒருவனது இன்ப துன்பங்களுக்கு மனிதர்களோ, தேவர்களோ, ஆத்மாவோ ஆளும் கிரகங்களோ, கர்ம பலன்களோ அல்லது காலமோ காரணமல்ல, மாறாக மனம் ஒன்றே இவற்றிகுக் காரணம், ஏனெனில் மனம்தான் ஆன்மீக ஆத்மாவை ஜட வாழ்வின் சுழற்சியில் சஞ்சரிக்கச் செய்கிறது. தானம், தர்மம் முதலியவைகளின் உண்மையான நோக்கமே மனதைக் கட்டுப்படுத்துவதுதான். தியானத்தில் தன் மனதை ஏற்கனவே அடக்கியவனுக்கு வேறான இந்த முறைகளெல்லாம் அவசியமில்லை. மேலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாதவனுக்கு இந்த முறைகளால் பயனில்லை. ஜட அகங்காரத்தினால் விளையும் தவறான கருத்து ஆன்மீக ஆத்மாவை ஜடப் புலன் பொருட்களோடு பிணைக்கிறது. எனவே அந்த அவந்தி பிராமணர், பரமபுருஷராகிய முகுந்தனின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், கடக்கமுடியாத சம்சாரக் கடலைக் கடக்க உறுதி கொண்டார். கடந்த காலத்தில் பரம பக்தர்களால் பகவானிடம் காட்டப்பட்ட பரிபூரணமான அதே நம்பிக்னையை இவரும் வெளிப்படுத்தினார். பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் தன் புத்தியை ஒருவன் ஒருமுகப் படுத்தும்போதுதான் மனம் முழுமையாக அடக்கப்படுகிறது:
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார். " ஆகவே உத்தவா, இவ்வாறு என்னிடம் நிலைபெற்ற புத்தியுடன் எல்லா விதத்திலும் மனதை அடக்குவாயாக, இதுவே யோக விஞ்ஞானத்தின் சாரமாகும். எவனொருவன், பூரணத்தைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான அறிவைக் கொடுக்கின்ற அந்த சந்நியாசியின் இப்பாடலைக் கேட்கவும், பிறர் கேட்கும்படி பாடியும், முழு கவனத்துடன் அதைத் தியானிக்கிறானோ, அவன் மீண்டும் இன்ப துன்பங்களாகிய இருமைகளால் பீடிக்கப்பட மாட்டான்.
ஹரே கிருஷ்ண!
(ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் காண்டம் 11 / அத்தியாயம் 23)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment