வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁
பகவானுடைய பக்தர்கள் எப்போதும் அடுத்தவர்களிடம் அன்போடும் கருணையோடும் இருப்பார்கள்; உயிர்வாழிகள் துன்பப்படுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் மனிதர்கள், இந்த பௌதிக உலகம், ஒரு நரகம் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த உலகத்தில் நாம் அகப்பட்டுள்ளோம் என்பதை மறந்து, இந்த உலக சுகங்களை அனுபவிக்க முயல்கிறார்கள். வலியை இன்பமாக கருதுகிறார்கள். இந்த உலகத்தை விட்டு ஆன்மீக உலகை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். இத்தகைய மக்களை பார்க்கும்போது, அவர்களை இந்த நரக வாழ்விலிருந்து விடுவிக்கக்கூடிய வழியை பக்தர்கள் காட்டுகின்றனர். அவ்வகையில் பக்தர்களுள் சிறந்தவரான நாரத முனிவர், கலியுக மக்களின் நிலைமை கண்டு மிகவும் வேதனையடைந்தார். ஆகையால் அவர்களுக்கு கருணை காட்டவேண்டும் என்று எண்ணினார்.
முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே, இந்த மக்களை விடுவிக்க வல்லவர் என்று முடிவு செய்தார் நாரதர். கருணை உள்ளம் வாய்ந்த நாரதர், பகவான் கிருஷ்ணரை சந்திக்க ஆன்மீக சாம்ராஜ்யமான துவாரகைக்கு சென்றார்.
துவாரகையில், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், தனது பிரிய மனைவியான ஸ்ரீமதி சத்யபாமாவிடம் சிறிது நேரம் செலவழித்த பிறகு, தனது மற்றோரு மனைவியான ருக்மிணி தேவியை சந்திக்க சென்றார். பகவான் கிருஷ்ணர், தனது அரண்மனைக்கு வரும் செய்தியை அறிந்த ருக்மிணி தேவி, அவரை வரவேற்பதற்காக ஆயத்தங்களை செய்தார். அரண்மனை ஏற்கனவே சுத்தமாக இருந்தாலும், மீண்டும் அனைத்தையும் சுத்தம் செய்தார்; அணைத்து இடங்களிலும் நெய் தீபம் ஏற்றினார்; நுழைவாயிலில் நீர் குடத்தை வைத்தார்; பகவானுடைய திருப்திக்காக தனது அந்தபுரத்தை அலங்காரம் செய்தார். மேலும் தன்னையும் அலங்கரித்துக்கொண்ட ருக்மிணி தேவி, பகவானுடைய வருகைக்காக காத்திருந்தார். பகவான் கிருஷ்ணர், வந்ததும் அவருக்கு பாதாபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்தார். பகவானுடைய தாமரை மலர்பாதங்களை தனது உயிரினும் மேலாக கருதி, அவற்றை தனது பேழையின் மீது வைத்துக்கொண்டு, அழ ஆரம்பித்தார். மிகவும் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருக்கும் ருக்மிணி தேவியை கண்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மிகவும் ஆச்சரியமடைந்தார். தான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா அல்லது ருக்மிணி தேவியின் ஏதேனும் ஆசையை நிறைவேற்றாமல் இருந்துவிட்டேனா என்று வினவினார். மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்ட கிருஷ்ணரிடம், ருக்மிணி தேவி, "தாங்கள் அனைத்தையும் அறிந்தவர். இருப்பினும் தங்களுடைய பக்தர்கள் தங்கள் மீது வைத்துள்ள அன்பையும் பக்தியையும் தாங்கள் இன்னும் உணரவில்லை. ஆகையால், நான் எதற்காக அழுகிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது", என்று பதிலளித்தார்.
மேலும், "உங்களுடைய தாமரை மலர்பாதங்களை என்னுடைய உயிரினும் மேலாக கருதுகிறேன். தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் இந்த இடத்திலிருந்து சென்றுவிடுவீர்கள் என்பதை நினைத்தாலே என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தங்களுடைய முழு அன்பிற்கு பாத்திரமான ஸ்ரீமதி ராதா ராணியால் மட்டுமே என்னுடைய வேதனையை புரிந்துகொள்ள முடியும்", என்று கூறினார். தன்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயத்தை ஸ்ரீமதி ருக்மிணி தேவி கூறியதும், மேலும் ஆச்சர்யத்துடன் இது பற்றி வினவினார். இதை கேட்ட ருக்மிணி தேவி, எவ்வாறு பக்தர்கள் பகவான் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்பதையும், பகவானின் திருப்பாதங்களில் எல்லையற்ற மகிமைகளையும் விளக்கினார். மேலும், "ராதாபாவா" - அதாவது ஸ்ரீமதி ராதாராணியின் நிலையிலிருந்தால் மட்டுமே தன்னுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்", என்று விளக்கினார். இதை கேட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா பாவத்தை தானும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரம் பார்த்து நாரத முனிவர் அங்கு வந்தார். அவரை மரியாதையுடன் வரவேற்று பாதாபிஷேகம் செய்த பின்னர், அவருடைய வருத்தத்திற்கான காரணத்தை கேட்டார் பகவான் கிருஷ்ணர். நாரத முனிவர், "எனதன்பு பகவானே! நான் தங்களுடைய புனித நாமத்தை இந்த அகிலம் முழுவதும் பரப்பிக்கொண்டு கருணையை வழங்கி வருகிறேன். அப்போது, கலியுகம் என்னும் பாம்பின் பிடியில் சிக்கி தவிக்கும் ஜீவாத்மாக்களை பார்த்து எனது மனம் வேதனை கொண்டது. இந்த பௌதிக நரகத்தில் வாழ்ந்து கொண்டு, வலியை சுகமாக கருதி, புலனின்ப செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய புனித நாமத்தை அவர்களுக்கு வழங்கி, பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுதலை பெரும் வழியை நான் அவர்களுக்கு எடுத்துரைத்தாலும் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஆகையால் பகவானே! தாங்கள் மீண்டும் இந்த பூமியில் அவதரித்து, கலியுக மக்களின் மீது கருணை காட்ட வேண்டுகிறேன்", என்று கூறினார். பக்தர்களுடைய விருப்பமே பகவானுடைய விருப்பம். பகவான் என்றும் தனது தூய பக்தர்களின் ஆசையை நிறைவேற்ற தவறியதில்லை. நாரத முனியின் வேண்டுதலுக்கேற்ப, ராதாபாவத்தையும் அனுபவிக்கும் வகையில், இந்த பூமியில் அவதரிக்க பகவான் முடிவு செய்தார். அவரே சச்சி நந்தனாக - கௌரஹரியாக அவதரித்தார். இவ்வாறு எண்ணியவுடனே, தனது பொன்னிற மேனியுடன் ருக்மிணி தேவிக்கும் நாரத முனிவருக்கும் காட்சியளித்தார். சைதன்ய மஹாபிரபுவின் இந்த ரூபத்தை முதன்முதலில் தரிசித்த இருவரும் பேரானந்தத்தில் திளைத்தனர். மேலும் பகவான் கூறினார், "நான் விரைவில் நவதீபத்தில் ஜெகநாத் மிஸ்ராவிற்கும் சச்சி தேவிக்கும் மகனாக அவதரிக்கவுள்ளேன். புனித நாமத்தின் மகிமையையும், கிருஷ்ண ப்ரேமையையும், ராதாராணியின் பாவத்திலிருந்து (நிலையிலிருந்து) அனுபவித்து, மற்றவர்களுக்கும் வாரி வழங்குவேன்", என்று உறுதியளித்தார். அவ்வாறே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்து, கட்டுண்ட ஜீவாத்மாக்களை விடுவித்தார்.
(ஸ்ரீல லோச்சன தாஸ் தாகூர் எழுதிய ஸ்ரீ சைதன்ய மங்கள் என்னும் நூலிலிருந்து இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது).
🍁🍁🍁🍁🍁🍁
Telegram செயலி
🍁🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw
🍁🍁🍁🍁🍁🍁
வலைதளம் / website
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
https://suddhabhaktitamil.blogspot.com/?m=1
Comments
Post a Comment