வழங்கியவர்: திருமதி. கீத கோவிந்த தாஸி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர்
தோற்றம்
🍁🍁🍁🍁🍁
1874ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி அவர்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஜகந்நாத பூரியில் மாபெரும் வைஷ்ணவ ரான ஸ்ரீல பக்திவினோத தாகூருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பிமல பிரஸாத் என்று பெயரிடப்பட்ட அவர், பிற்காலத்தில் மிகுந்த அறிவாளியாகவும் பகவானின் புகழை உலகெங்கும் பரப்பும் உயர்ந்த போதகராகவும் திகழ் வார் என ஜோதிடர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, ஒரு மஹா புருஷருக்கான அனைத்து இலட்சணங்களும் அடங்கிய வேறொரு ஜாதகத்தை அதுவரை பார்த்ததேயில்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஜகந்நாதரின் அருள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிமல பிரஸாத் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது வருடந் தோறும் கொண்டாடப்படும் ஜகந்நாதரின் ரதயாத்திரை திருவிழா வந்தது. ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன் வந்த ரதம், உடனே நின்று விட்டது. பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் ரதம் நகரவில்லை. பகவான் ஜகந்நாதர் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன்பு நிற்க விரும்பினார் என்பது அனை வருக்கும் நன்றாகப் புரிந்தது. அந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பிமல பிரஸாத்தின் தாயார் குழந்தையை ஜகந்நாதரின் திருவடிகளில் சேர்த்தார். உடனடியாக ஜகந்நாதரின் கழுத்திலிருந்த மாலை குழந்தையின் கழுத்தில் விழுந்தது. குழுமியிருந்தோர் அனைவரும் அதனை ஜகந்நாதரின் தனிப்பட்ட கருணையாகக் கொண்டாடினர்.
குழந்தைப் பருவம்
🍁🍁🍁🍁🍁🍁🍁
கிருஷ்ண உணர்வை பரப்பும் உன்னத தொண்டிற் காக தனக்கு ஒரு தெய்வீக மகன் வேண்டும் என்பது ஸ்ரீல பக்திவினோத தாகூரின் தீவிரமான விருப்பமாகும். பிமல பிரஸாத்திடம் இருந்த ஆன்மீக நாட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அவர், மிகக் கவனமான முறையில் தன் மகனுக்கு கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபிப்பதிலும், விக்ரஹ ஆராதனையிலும் பயிற்சியளித்தார்.
பிமல பிரஸாத் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது, தந்தை வாங்கி வைத்திருந்த ஒரு மாம்பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டார். மாம்பழம் பகவானுக்கு நைவேத்யம் செய்யப்படவில்லை என்றும், நைவேத்யம் செய்யாதவற்றை உண்பது தவறு என்றும், தந்தை சுட்டிக்காட்ட, சிறுவன் மிகவும் வருந்தினான். நைவேத்யம் செய்யப்படாதவற்றை சாப்பிடக் கூடாது என்றும், இனிமேல் வாழ்நாளில் மாம் பழமே சாப்பிட மாட்டேன் என்றும் முடிவெடுத்தார். அந்த உறுதிமொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார் என்பதிலிருந்து அவரது உறுதியை உணரலாம்.
மற்ற சிறுவர்களைப் போல பிமல பிரஸாத் விளையாடுவதில் நேரத்தை வீணடிக்க மாட்டார். தந்தை கூறும் ஆன்மீக விஷயங்களை சிறு வயதிலிருந்தே மிகவும் கவனமாக கேட்பார். ஏழு வயதான போதே பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்தது மட்டுமின்றி, அவற்றிற்கு தெளிவான விளக்கமும் கொடுப்பார். சற்று வளர்ந்த பின்னர், புத்தகங்களை தொகுத்து அச்சிடுவதில் அவரின் தந்தை அவருக்கு பயிற்சி கொடுத்தார். தந்தை எங்கெல்லாம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகின்றாரோ, அங்கெல்லாம் பிமல பிரஸாத் உடனிருப்பார்.
மாணவப் பருவத்தில் விமல பிரஸாத்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கல்வி
பிமல பிரஸாத், கணிதத்திலும் ஜோதிடத்திலும் மிகவும் தேர்ந்தவராக விளங்கினார், மிகச்சிறந்த நினைவாற்றலைக் கொண்டிருந்தார். பாடங்களை ஒருமுறை கேட்டாலே போதும் அவற்றை மனப்பாடமாக கூறிவிடுவார். தன்னுடைய எல்லா நேரத்தையும் வேத பாடங்களை படிப்பதில் அவர் செலவிட்டார். ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தபோதிலும், அவர் பௌதிக கல்வியை விட ஆன்மீக ஞானத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஒய்வு நேரங்களில் நண்பர்களை அழைத்து ஆன்மீக விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவார். அவருடைய ஜோதிட அறிவினால் திருப்தியுற்ற பண்டிதர்கள், அவருக்கு “சித்தாந்த சரஸ்வதி” என்னும் பட்டப் பெயரைச் சூட்டினர்.
1892ம் ஆண்டு, தனது 18ம் வயதில், கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்குச் சென்றார். அதில் அவர் மிகச்சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார், இருப்பினும் தன் வாழ்வை பகவானின் தொண்டிற்கு அர்ப்பணிப்பதற்காக மூன்று ஆண்டுகளிலேயே கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டார்.
தீட்சை
🍁🍁🍁
திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட சிறிதும் நாட்டமில்லாமல் இருந்த பக்தி சித்தாந்த சரஸ்வதியை 1898ம் ஆண்டு, ஸ்ரீல பக்திவினோத தாகூர், கௌர கிஷோர தாஸ பாபாஜியிடமிருந்து ஆன்மீக தீட்சை பெறும்படி அறிவுறுத்தினார். கௌர கிஷோர தாஸ பாபாஜியோ பக்திசித்தாந்த சரஸ்வதியை பலமுறை சோதித்து, அவரது திடமான பக்தியைக் கண்டு, இறுதியில் தீட்சை வழங்கினார்.
சந்நியாசம் வாங்கிய சமயத்தில்
ஸ்ரீல பக்திசித்தாந்தர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
100 கோடி நாம ஜெபம்
1905ம் ஆண்டில், தனது 31வது வயதில், 100 கோடி திருநாமங்களை ஜெபிப்பது என்னும் மாபெரும் விரதத்தை பக்திசித்தாந்த சரஸ்வதி மேற்கொண்டார். தினசரி குறைந்தது மூன்று இலட்சம் திருநாமங்கள் என்று ஜெபம் செய்த அவருக்கு நூறு கோடி நாம ஜெபத்தை முடிக்க ஒன்பது வருடங்களுக்கு மேலாயின. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இடைவிடாது ஜெபம் செய்தார். மாயாப்பூரிலுள்ள யோகபீட் என்னுமிடத்தில் ஒரு சிறு குடிசையை அமைத்து, கடும் குளிர், வெயில், மற்றும் மழைக்கு மத்தியிலும் சாதாரண உடையுடன் ஜெபம் செய்து வந்தார். கால்களில் இரத்தம் வடிந்தபோதிலும் காலணி அணிய மாட்டார். சிறிதளவு வெறும் சாதத்தை ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே உண்டு வந்தார், குடிசையின் மண் தரையில் குறைந்த நேரம் உறங்கிய அவர், மழைக்காலத்தில் தனது ஒழுகும் குடிசையினுள் குடை பிடித்தபடி ஜெபம் செய்து வந்தார். இந்த விரதத்தின் போதுகூட யோகபீடத்தின் நிர்வாகப் பணிகளிலும் சைதன்ய சரிதாம்ருதத்திற்கு விளக்கவுரை எழுதுவதிலும் ஈடுபட்டார்.
பிறப்பின் மூலம் பிராமணரா
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
1911, ஆகஸ்ட் மாதத்தில் சில ஸ்மார்த்த பிராமணர்கள் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்க பக்திவினோத தாகூருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்தில் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே விக்ரஹ வழிபாடு செய்யவும் சீடர்களை ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சாஸ்திரக் கொள்கைகளின்படி, பிராமணன் என்பது குலத்தினால் முடிவு செய்யப்படுவதில்லை, ஒருவரின் குணத்தையும் செயலையுமே அடிப்படையாகக் கொண்டது. போலி பிராமணர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பக்திவினோத தாகூர் விரும்பினார். ஆனால் கருத்தரங்கம் நடைபெறும்போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. எனவே, தன் மகனை அதில் கலந்துகொள்ள அனுப்பினார். அக்கருத்தரங்கில் இந்தியா முழுவதிலுமிருந்து மாயாவாதிகளும் ஸ்மார்த்த பிராமணர்களும் கூடியிருந்தனர். பண்டிதரான பக்திசித்தாந்த சரஸ்வதி பேசும்போது சாஸ்திரங்களை மேற்கோள்காட்டி அவர்களுடைய வாதங்களை முறியடித்தார். சஞ்சலமுற்ற பண்டிதர்கள் அவரை தோற்கடிக்க முயன்றனர், ஆனால் அவரோ சரியான மேற்கோள்களைக் காட்டி அவர்களின் வாதங்களை முறியடித்தார். இவ்வாறாக மூன்று நாள்கள் நடந்த விவாதத்தின் இறுதி நாளில், பக்திசித்தாந்த சரஸ்வதி இரண்டு மணி நேரம் உரையாற்றினார். எவராலும் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல் போனது. அனைவரும் அவரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டு ஆசி பெறுவதற்கு முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.
ஆன்மீக குருவின் மறைவு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பக்திசித்தாந்த சரஸ்வதியின் தந்தையாகவும் உபதேச குருவாகவும் செயல்பட்ட ஸ்ரீல பக்திவினோத தாகூர், 1914ம் ஆண்டு மறைந்தார். ஒரு வருடம் கழித்து, பக்திசித்தாந்த சரஸ்வதியின் தீட்சை குருவான ஸ்ரீல கௌர கிஷோர தாஸ பாபாஜியும் மறைந்தார். இதனால் பக்திசித்தாந்த சரஸ்வதி மிகவும் துயருற்றார். பக்தி பிரச்சாரத்தை எப்படி நடத்துவது, எவ்வாறு தொடர்வது என்று வேதனையுற்றார். அச்சமயத்தில், கனவு போன்று தோன்றிய ஒரு நிகழ்ச்சியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது சகாக்களும் நடனமாடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். அவர்களுடன் கௌர கிஷோரும் பக்தி வினோத தாகூரும் கூட இருந்தனர். அவர்கள், பக்திசித்தாந்தரிடம், எப்போதும் பகவானின் நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளைப் பாடும்படியும், புனிதமான பக்தித் தொண்டினை பிரச்சாரம் செய்யும்படியும் கட்டளையிட்டனர். மேலும், “நாங்கள் எப்போதும் உன்னோடு இருப்போம்,” என்று உறுதியளித்தனர்.
சந்நியாசம், யுக்த வைராக்யம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
1918ல் சந்நியாசம் மேற்கொண்ட பக்திசித்தாந்தர் பல வகையிலும் தன்னை ஒரு புரட்சிகரமான அசாதாரணமான சந்நியாசியாக நிரூபித்தார். தனிமையான இடங்களில் வாழ்ந்து மக்களோடு பழகுவதை தவிர்க்கும் துறவிகளுக்கு மத்தியில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய தொண்டர்களாகிய ரூப மற்றும் சநாதனரின் வழி நடந்த பக்திசித்தாந்த சரஸ்வதி, உலகப் பொருள்களை பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார், முக்கியமாக பிரச்சாரத்தில் உபயோகித்தார். உலகப் பொருள்களை சுயநலனுக்காக அன்றி பகவானின் தொண்டில் ஈடுபடுத்துதல் என்னும் யுக்த வைராக்ய முறையை அவர் கையாண்டார்.
கிருஷ்ண சேவையில் அனைத்தையும் ஈடுபடுத்தும் ஸ்ரீல பக்திசித்தாந்தர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சிங்கம் போன்ற குரு
சுயநலவாதிகளான ஸஹஜியர்கள், ஸ்மார்த்த பிராமணர்கள் மற்றும் போலி சாமியார்களுக்கு எதிராக பக்திசித்தாந்த சரஸ்வதி புத்திக் கூர்மையுடன் பிரச்சாரம் செய்தார். ஸ்ரீ சைதன்யரின் உபதேசங்களை உலகில் நிலைநாட்ட அரும்பாடுபட்ட அவர் அற்புதமான பலனையும் எட்டினார். அவர் எங்கு சென்றாலும், அங்கிருந்த போலிகள், எங்கே தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பறந்து ஓடுவர். சிறிதும் விட்டுக் கொடுக்காமல் சிங்கம் போன்று திடமாக பேசியதால், அவருக்கு “ஆசார்ய கேசரி,” அதாவது சிங்கம் போன்ற குரு என்ற பட்டம் கிட்டியது. அவரை தாக்கவும் அழிக்கவும் முயன்ற தீயவர்கள் தங்களது முயற்சிகளில் தோல்வியுற்றனர்.
சிங்கம் போன்ற குரு என்று அழைக்கப்பட்டபோதிலும், வைஷ்ணவருக்கே உரிய பணிவுடன் திகழ்ந்தார். தனக்கு பல்லாயிரக்கணக்கான சீடர்கள் இருந்தும் அவர் தன்னை ஒருநாளும் தலைவனாக நினைத்ததில்லை. மற்றவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் உதாரண புருஷராகவும் விளங்கினார்.
கௌடிய மடம்
🍁🍁🍁🍁🍁
பக்தி பிரச்சாரத்தை முழுமைப்படுத்த ஓர் ஒழுக்கமான நிறுவனம் தேவைப்பட்டதால், 1920ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கௌடிய மடத்தை நிறுவினார். அதில் ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு தீட்சை வழங்கினார். மேலும், இந்தியா முழுவதும் 64 கோவில்களை கட்டினார், விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்தார். தனது சீடர்கள் வீடுவீடாகச் சென்று ஆன்மீக அறிவை விநியோகம் செய்ய கட்டளையிட்டார், இந்தியா முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.
மிகச்சிறந்த சீடர்
🍁🍁🍁🍁🍁🍁
பக்திசித்தாந்தரின் சீடர்கள் பலர் உயர்ந்து விளங்கியபோதிலும், அவர்களில் ஒருவர் தன்னிகரற்று விளங்கினார். இன்று உலகமெங்கும் பரவியிருக்கும் இஸ்கான் இயக்கத்தை நிறுவிய ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரே அவர். தனது வெற்றிக்கு காரணம் தனது குருவான பக்திசித்தாந்தரின் கருணையே என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாடு களில் பிரச்சாரம் செய்யும்படியும், பணம் கிடைத்தால் புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்யும்படியும் பக்தி சித்தாந்தரால் இடப்பட்ட கட்டளையே இன்று உலகமெங்கும் கிருஷ்ண பக்தி பரவியிருப்பதற்கான காரணம்.
அவரின் மறைவு
🍁🍁🍁🍁🍁🍁
1937, ஜனவரி 1, ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். கௌடிய வைஷ்ணவ சம்பிர தாயத்திற்கு புத்துயிரளித்த பக்திசித்தாந்தர் ஓர் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர் என்றால் அது மிகையல்ல.
🍁🍁🍁🍁🍁🍁
"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment