ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 8 / அத்தியாயம் 24/
பதம்
46-53
*************************************************************************
பதம் 46
ஸ்ரீ ராஜேவாச
மொழிபெயர்ப்பு
அரசர் கூறினார்: நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தங்கள் சுய அறிவை இழந்து, இந்த அறியாமையினால் துன்பம் நிறைந்த, பௌதிகமான பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டவர்கள், பகவானின் கருணையால் அவரது பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அப்பரமபுருஷரை நான் பரம ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன்.
பதம் 47
மொழிபெயர்ப்பு
முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா ஜட உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நம்பிக்கையில், துன்பத்தை மட்டுமே அளிக்கக்கூடிய பலன் நோக்குக் கருமங்களைச் செய்கிறான். ஆனால் பரமபுருஷ பகவானுக்குத் தொண்டு செய்வதன் மூலமாக, ஒருவன் இன்புற்றிருக்க வேண்டும் என்ற இத்தகைய பொய்யான ஆசைகளிலிருந்து விடுபடுகிறான். எனது பரம ஆன்மீக குரு என் இதயத்திலுள்ள பொய்யான ஆசைகளின் முடிச்சை வெட்டி வீழ்த்துவாராக.
பதம் 48
மொழிபெயர்ப்பு
ஜட சிக்கலிலிருந்து விடுபட விரும்பும் ஒருவன் பரமபுருஷரின் தொண்டை மேற்கொண்டு, பாவ, புண்ணியச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள, அறியாமை எனும் களங்கத்தைக் கைவிடவேண்டும். இவ்வாறாக, தங்கம் அல்லது வெள்ளிக் கட்டி நெருப்பால் பதனிடப்படும் போது, அதிலுள்ள அழுக்குகள் அனைத்தும் உதிர்ந்து அது தூய்மையடைவதைப் போலவே, ஒருவன் தனது ஆதியான சொரூபத்தை திரும்ப பெறுகிறான். பரமபுருஷ பகவான் மற்றெல்லா ஆன்மீக குருமார்களுக்கும் மூல குருவாக இருப்பதால், முடிவற்றவரான அந்த பகவான் நமது ஆன்மீக குரு ஆவாராக.
பதம் 49
மொழிபெயர்ப்பு
தேவர்களாலோ, அல்லது பெயரளவேயான குருமார்களாலோ அல்லது மக்களாலோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது மொத்தமாகவோ, உங்களால் வழங்கப்படும் கருணையில் பத்தாயிரத்தில் ஒரு பாகத்திற்கு ஈடான கருணையைக் கூட வழங்க முடியாது. ஆகவே உங்களுடைய தாமரைப் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
பதம் 50
மொழிபெயர்ப்பு
குருடனொருவன், காண இயலாதிருப்பதால், மற்றொரு குருடனைத் தனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறான். வாழ்வின் இலட்சியத்தை அறியாத மக்கள், மூடனும், அயோக்கியனுமான ஒருவனை குருவாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாங்களோ தன்னுணர்வில் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆகவே, தாங்கள் எல்லாத் திசைகளிலும் காணக்கூடியவராகவும், சூரியனைப் போல் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பதால், பரம புருஷராகிய தங்களையே எங்களுடைய ஆன்மீக குருவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
பதம் 51
மொழிபெயர்ப்பு
பெயரளவாக மட்டுமே உள்ள பௌதிகவாதியான ஒரு குரு தனது சீடர்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தையும், புலன் நுகர்வையும் பற்றி உபதேசிக்கிறார். இத்தகைய உபதேசங்களினால், மூடர்களான சீடர்கள் அறியாமை மிகுந்த பௌதிக வாழ்வையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். ஆனால் பெருமானாகிய தாங்கள் நித்தியமான அறிவை வழங்குகிறீர்கள். மேலும் இத்தகைய அறிவைப் பெறும் புத்திசாலி விரைவாக தனது இயற்கையான மூல நிலையில் நிலை பெறுகிறான்.
பதம் 52
மொழிபெயர்ப்பு
எம்பெருமானே, தாங்கள் எல்லோருடைய நலத்திலும் அக்கறை கொண்ட மிகச் சிறந்த நண்பரும், பரம ஆளுனரும், பரமாத்மாவும், பரம போதகரும், உன்னத அறிவை வழங்குபவரும் மற்றும் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவரும் ஆவீர். ஆனால் மூடர்களின் இதயங்களிலும் தாங்கள் இருந்த போதிலும், அவர்களுடைய இதயத்திலுள்ள சிற்றின்ப ஆசைகளின் காரணத்தால், தங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பதம் 52
மொழிபெயர்ப்பு
பரமபுருஷரே, தேவர்கள் உங்களை அனைத்திற்கும் பரம ஆளுனராக வழிபடுகின்றனர். தன்னுணர்வைப் பெறுவதற்காக தங்களிடம் நான் சரணடைகிறேன். வாழ்வின் இலட்சியத்தை வெளிப்படுத்தும் தங்களது உபதேசங்களால் என்னுடைய இதயத்திலுள்ள முடிச்சை வெட்டி வீழ்த்த வேண்டும். என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை நான் அறியும்படி செய்ய வேண்டும்.
Comments
Post a Comment