ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 7 / அத்தியாயம் 9 /
பதம்
8-50
*************************************************************************
பதம் 8
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
மொழிபெயர்ப்பு
பிரகலாத மகாராஜன் பின்வருமாறு துதித்தார்: அசுரர்களின் குடும்பத்தில் பிறந்த நான், பரமபுருஷரை திருப்திப்படுத்தக்கூடிய தகுந்த ஸ்தோத்திரங்களைச் செய்வது எவ்வாறு சாத்தியமாகும்? பிரம்மா முதலான அனைத்து தேவர்களும், அனைத்து முனிவர்களும் சத்வ குணத்தில் இருப்பதால், தகுதி மிக்கவர்களான இருப்பினும், அவர்களுடைய வார்த்தைப் பிரவாகங்களால் இக்கணம் வரை அவர்களால் பகவானைத் திருப்திப்படுத்த இயலவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்? எனக்குச் சிறிதளவு தகுதிகூட இல்லை.
பதம் 9
மொழிபெயர்ப்பு
பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: ஒருவன் செல்வம், உயர்குடிப் பிறப்பு, அழகு, தவம், கல்வி, ஆற்றல், காந்தி, செல்வாக்கு, தேகபலம், முயற்சி, புத்தி, யோக சக்தி ஆகிய இத்தகுதிகளையெல்லாம் பெற்றிருக்கக்கூடும் என்றாலும், இவை அனைத்தினாலும் கூட பரமபுருஷரை அவனால் திருப்திப்படுத்த முடியாதென்று நான் நினைக்கிறேன். ஆனால் பக்தித்தொண்டின் மூலம் பகவானை ஒருவனால் திருப்திப்படுத்த முடியும். இந்த பக்தியாலல்லவா பகவான் கஜேந்திரனிடம் திருப்தியடைந்தார்!
பதம் 10
மொழிபெயர்ப்பு
ஒரு பிராமணன், (சனத்-சுஜாதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள) பன்னிரண்டு பிராமணத் தகுதிகளையும் பெற்றிருப்பினும், பக்தனல்லாதவனாகவும், பகவானுடைய தாமரைப் பாதங்களிடம் வெறுப்புடையவனாகவும் இருப்பானாயின், அவன், நாய் மாமிசம் திண்ணும் ஒரு சண்டாளனாயிருந்தும், பரமபுருஷரிடம் தனது மனம், வாக்கு, செயல், செல்வம், உயிர் ஆகிய அனைத்தையும் அர்ப்பணித்துள்ள ஒரு பக்தனைவிடக் கீழானவன் என்பது நிச்சயம். இத்தகைய ஒரு பக்தன் இத்தகைய ஒரு பிராமணனை விடச் சிறந்தவனாவான். ஏனெனில், அவனால் தன் குடும்பம் முழுவதையும் புனிதப்படுத்த முடியும். ஆனால் பொய்க் கௌரவம் என்ற நிலையிலுள்ள பெயரளவேயான அந்த பிராமணனால் தன்னையே கூட புனிதப்படுத்திக் கொள்ள முடியாது.
*இவை ஒரு சிறந்த பிராமணனுக்குரிய பன்னிரண்டு குணங்களாகும்: சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுதல், உண்மையே பேசுதல், தவ விரதங்களால் புலன்களைக் கட்டுப்படுத்துதல், பொறாமை கொள்ளாமை, புத்திக்கூர்மை, பொறுமை, எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளாமை, யக்ஞம் செய்தல், தானம் செய்தல், நிலையாக இருத்தல், வேதக் கல்வியில் பாண்டித்தியம் பெற்றிருத்தல், மற்றும் விரதங்களை அனுஷ்டித்தல்.
பதம் 11
மொழிபெயர்ப்பு
பரமபுருஷர் எப்பொழுதும் பூரண சுயதிருப்தி உடையவராவார். எனவே அவருக்கு ஏதேனும் அர்ப்பணிக்கப்படும் பொழுது, அந்த அர்ப்பணம், பகவானின் கருணையால், பக்தனின் நன்மைக்கே உரியதாகும். ஏனெனில் எவருடைய சேவையும் பகவானுக்குத் தேவையில்லை. உதாரணமாக, ஒருவனது முகம் அலங்கரிக்கப்பட்டு இருக்குமானால், கண்ணாடியில் தெரியும் அம்முகத்தின் பிரதிபலிப்பு கூட அலங்கரிக்கப்பட்டதாகவே காணப்படும்.
பதம் 12
மொழிபெயர்ப்பு
ஆகவே, நான் ஓர் அசுர குடும்பத்தில் பிறந்துள்ள போதிலும், என் புத்திக்கேற்பவும், முழு முயற்சியுடனும் பகவானிடம் பிரார்த்தனைகள் செய்வேன். ஜட உலகில் நுழையும்படி அறியாமையால் கட்டாயப்படுத்தப்பட்ட எவருமே, பகவானின் மகிமைகளைக் கேட்பதாலும், அவரிடம் பிரார்த்தனைகள் செய்வதாலும் பௌதிக வாழ்விலிருந்து புனிதமடைய முடியும்.
பதம் 13
மொழிபெயர்ப்பு
பகவானே, பிரம்மதேவர் முதலான எல்லாத் தேவர்களும், உன்னத நிலையிலுள்ள தங்களுடைய உண்மையான சேவகர்களாவர். ஆகவே இவர்கள் எங்களைப் (பிரகலாதர், அவரது தந்தை இரண்யகசிபு) போன்றவர்களல்ல. இந்த பயங்கரமான ரூபத்தில் தாங்கள் தோன்றியிருப்பது, ஆத்ம திருப்திக்காக மேற்கொள்ளப்பட்ட தங்களுடைய திருவிளையாடலாகும். இத்தகைய ஓர் அவதாரம் எப்பொழுதும் பிரபஞ்சத்தின் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்குமே ஆகும்.
பதம்
14
மொழிபெயர்ப்பு
ஆகவே, பகவான் நரசிம்மதேவரே, என் தந்தையும், பெரிய அசுரனுமான இரண்யகசிபு இப்பொழுது கொல்லப்பட்டு விட்டதால் தயவுகூர்ந்து கோபம் தணிந்து சாந்தமடையுங்கள். சாதுக்கள் கூட ஒரு தேளையோ, ஒரு பாம்பையோ கொல்வதில் மகிழ்ச்சியடைகின்றனர் என்பதால், இந்த அசுரன் கொல்லப்பட்டதன் காரணமாக அனைத்து லோகங்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளன. அவர்களுக்குத் தங்களுடைய மகிழ்ச்சியில் இப்பொழுது நம்பிக்கை பிறந்துள்ளது. அவர்கள் பயத்திலிருந்து விடுபடுவதற்கு, உங்களுடைய மங்களகரமான இந்த அவதாரத்தை எப்பொழுதும் நினைந்து போற்றுவார்கள்.
பதம் 15
மொழிபெயர்ப்பு
எவராலும் ஜயிக்க
முடியாத பகவானே, உங்களுடைய பயங்கரமான வாய் மற்றும் நாக்கு, உங்களுடைய சூரியன்போல் பிரகாசிக்கும் கண்கள், நெறிந்த புருவங்கள் ஆகியவற்றைக் கண்டு நான் பயப்படவில்லை. உங்களுடைய கூர்மையான கொடிய பற்கள், குடல்மாலை, இரத்தம் தோய்ந்த பிடரி மயிர், உயர்ந்த ஆப்பு போன்ற காதுகள் ஆகியவற்றைக் கண்டு நான் பயப்படுவில்லை. யானைகளை வெகுதூரம் விரட்டியடிக்கும் உங்களுடைய உரத்த கர்ஜனையையோ, அல்லது எதிரிகளைக் கொல்வதற்கென அமைந்த நகங்களையோ கண்டும் நான் பயப்படவில்லை.
பதம் 16
மொழிபெயர்ப்பு
மிகச் சக்திவாய்ந்தவரும், இழிவடைந்த ஆத்மாக்களிடம் கருணை கொண்டவருமான வெல்லுதற்கரிய பகவானே, எனது செயல்களின் விளைவாக நான் அசுரர்களிடையே தள்ளப்பட்டிருக்கிறேன். ஆகவே பொறுக்கமுடியாததும், கொடியதுமான இந்த ஜட உலக வாழ்க்கையைக் கண்டு நான் மிகவும் அச்சப்படுகிறேன். பகவானே, பந்தப்பட்ட வாழ்விலிருந்து முக்தியளிக்கும் சரணாலயமாகிய உங்களுடைய பாத மூலத்திற்கு எப்போது என்னை நீங்கள் அழைத்துக் கொள்ளப்போகிறீர்கள்.
பதம் 17
மொழிபெயர்ப்பு
உயர்ந்தவரே, பரமபுருஷரே, பிரியமுள்ள மற்றும் பிரியமற்ற சூழ்நிலைகளின் சேர்க்கையினாலும், அவற்றின் பிரிவினாலும், ஒருவன் சுவர்க்க லோகத்திலோ அல்லது நரக லோகத்திலோ, சோகத் தீயில் எரிவது போன்ற மிகவும் வருந்ததக்க ஒரு நிலையில் தள்ளப்படுகிறான். துன்பகரமான வாழ்விலிருந்து வெளியேறுவதற்குப் பல பரிகாரங்கள் இருந்த போதிலும், இந்த ஜட உலகிலுள்ள இத்தகைய பரிகாரங்கள், துன்பங்களைப் போக்குவதற்குப் பதிலாக, அதிக துன்பங்களையே கொடுக்கின்றன. ஆகவே தங்களுடைய சேவையில் ஈடுபடுவதே ஒரே பரிகாரம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய சேவையைப் பற்றி அன்புடன் எனக்கு உபதேசித்து அருளுங்கள்.
பதம் 18
மொழிபெயர்ப்பு
பகவான் நரசிம்மதேவரே, முக்திபெற்ற ஆத்மாக்களான (ஹம்ஸர்களான) உங்களுடைய பக்தர்களின் சகவாசத்தினால், உங்களுடைய உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதன் மூலமாக, பௌதிக குணங்களின் சகவாசத்தினால் உண்டான களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, எனக்கு மிகப் பிரியமான பெருமானாகிய தங்களுடைய மகிமைகளை என்னால் பாட முடியும். பிரம்மதேவர் மற்றும் அவரது சீடப்பரம்பரையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தங்களுடைய மகிமைகளை நான் பாடுவேன். இவ்விதமாக, ஐயமின்றி அறியாமைக் கடலை என்னால் கடந்துவிட முடியும்.
பதம் 19
மொழிபெயர்ப்பு
பகவான் நரசிம்மதேவரே, பரமனே, தேகாபமானத்தின் காரணத்தால், உங்களால் கவனிக்கப்படாது ஒதுக்கப்பட்ட உடல்பெற்ற ஆத்மாக்களால் அவர்களுடைய மேன்மைக்காக எதையுமே செய்ய முடியவில்லை. அவர்களால் செய்யப்படும் பரிகாரங்கள் தற்காலிகமாக நன்மையளித்த போதிலும், நிச்சயமாக நிரந்தரமானவையல்ல. உதாரணமாக, பெற்றோர்களால் தங்கள் குழந்தையைக் காப்பாற்ற முடியாது. மருத்துவராலும், மருந்தினாலும் துன்புறும் நோயாளியை அதிலிருந்து விடுவிக்க முடியாது. சமுத்திரத்திலுள்ள ஒரு படகினால் நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்ற முடியாது.
பதம் 20
மொழிபெயர்ப்பு
பகவானே, இந்த ஜட உலகிலுள்ள அனைவரும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். மிகவும் மேலானவரான பிரம்மதேவரிலிருந்து சிறிய எலும்பு வரையுள்ள அனைவருமே இக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் செயற்படுகின்றனர். ஆகவே இவ்வுலகிலுள்ள அனைவரும் உங்களுடைய சக்தியினால் வசீகரிக்கப்படுகின்றனர். அவர்கள் செயற்படுவதற்கான காரணம், செயற்படும் இடம், செயற்படும் நேரம், எந்த காரணத்தினால் செயற்படுகிறார்களோ அந்த விஷயம், அவர்கள் முடிவானது என்று கருதிய வாழ்க்கையின் இலட்சியம், அந்த இலட்சியத்தை அடைவதற்கான முறை ஆகிய அனைத்தும் உங்களுடைய சக்தியின் தோற்றங்களேயன்றி வேறில்லை. உண்மையில், சக்தியும், சக்தியளிப்பதும் ஒன்றே என்பதால் இவையனைத்தும் உங்களுடைய தோற்றங்களே ஆகும்.
பதம் 21
மொழிபெயர்ப்பு
நித்திய புருஷராகிய பகவானே, தங்களுடைய பூரண அம்சத்தை விரிவடையச் செய்வதன் மூலம், காலத்தால் கிளர்ச்சியடையும் தங்களுடைய புறச் சக்தியின் வாயிலாக, ஜீவராசியின் சூட்சும சரீரங்களைத் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். இவ்விதமாக மனமானது பலவகைப்பட்ட எண்ணிலடங்காத ஆசைகளில் ஜீவராசியை சிக்க வைக்கிறது. எண்ணிலடங்காத இந்த ஆசைகள், வேதக் கர்ம காண்டத்திலுள்ள வழிமுறைகளாலும், பதினாறு பௌதிக மூலப் பொருட்களாலும் நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும். தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்தாலன்றி, யாரால் இந்த சிக்கலிலிருந்து விடுபட முடியும்?
பதம் 22
மொழிபெயர்ப்பு
பகவானே, பரமபுருஷரே, நீங்கள் பதினாறு பகுதிப் பொருட்களையுடைய இந்த ஜட உலகைப் படைத்திருக்கிறீர்கள். ஆனால் அவற்றின் பௌதிக குணங்களுக்குத் தாங்கள் அப்பாற்பட்டவராவீர். அதாவது, இந்த பௌதிக குணங்கள் உங்களுடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றினால் நீங்கள் ஜயிக்கப்படுவதே இல்லை. ஆகவே காலத் தத்துவமானது உங்களுடைய பிரதிநிதியாகும். பகவானே, பரமபுருஷரே, உங்களை எவராலும் வெல்ல முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, காலச் சக்கரத்தினால் நான் நசுக்கப்படுகிறேன். ஆகவே நான் உங்களிடம் பூரண சரணாகதி அடைகிறேன். அன்புடன் தங்களுடைய தாமரைப் பாதங்களில் எனக்குப் பாதுகாப்பு அளித்து அருள்வீராக.
பதம் 23
மொழிபெயர்ப்பு
பகவானே, பொதுவாக மக்கள் நீண்ட ஆயுளையும், செல்வத்தையும், சுகபோகங்களையும் அடையும் பொருட்டு மேலுலகங்களுக்கு ஏற்றம் பெற விரும்புகின்றனர். என் தந்தையின் செயல்களின் மூலம் இவற்றையெல்லாம் நான் கண்கூடாகக் கண்டேன். என் தந்தை கோபாவேசத்துடன தேவர்களைப் பார்த்து அட்டகாசமாகச் சிரித்தபொழுது, அவரது புருவங்களின் நெறிவுகளைக் கண்டதாலேயே உடனே அவர்கள் முறியடிக்கப்பட்டனர். இருப்பினும் மிகவும் பலசாலியான என் தந்தை ஒரு நொடியில் உங்களால் முற்றிலும் முறியடிக்கப்பட்டார்.
பதம் 24
மொழிபெயர்ப்பு
எனதருமை பகவானே, பிரம்மதேவர் முதல் எறும்பு வரையுள்ள எல்லா ஜீவராசிகளாலும் அனுபவிக்கப்படும் இகலோக ஐசுவரியம், யோக சித்தி, நீண்ட ஆயுள் முதலான பௌதிக சுகபோகங்களைப் பற்றிய முழுமையான அனுபவத்தை இப்பொழுது நான் பெற்றுள்ளேன். சக்திவாய்ந்த காலமாக இருந்து கொண்டு இவற்றையெல்லாம் நீங்கள் அழித்து விடுகிறீர்கள். ஆகவே, நான் பெற்ற அனுபவத்தின் காரணமாக, இவற்றை அடைவதில் எனக்கு விருப்பமில்லை. பகவானே, உங்களுடைய தூய பக்தரின் சகவாசத்தில் என்னை வைத்து, அவருடைய உண்மையான ஒரு சேவகனாக இருந்து அவருக்கு நான் சேவை செய்ய எனக்கு அருள் புரிவீராக.
பதம்
25
மொழிபெயர்ப்பு
இந்த ஜட உலகில் ஒவ்வொரு ஜீவராசியும், பாலைவனத்திலுள்ள கானல் நீர் போன்ற வருங்கால மகிழ்ச்சியையே விரும்புகிறான். பாலைவனத்தில் நீரேது? அதாவது, இந்த ஜட உலகில் மகிழ்ச்சியேது? இந்த உடலைப் பொறுத்தவரை இதன் மதிப்பென்ன? இது பல்வேறு நோய்களுக்குப் பிறப்பிடம், அவ்வளவே. பெயரளவேயான தத்துவாதிகளும், விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும் இதை நன்கறிவர் இருப்பினும் தற்காலிகமான இன்பத்தையே இவர்கள் நாடுகின்றனர். மகிழ்ச்சியை அடைவது மிகக் கடினம். ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்தமுடியாத காரணத்தால், பெயரளவேயான இந்த பௌதிக மகிழ்ச்சியின் பின்னால் ஓடும் இவர்கள், சரியான ஒரு முடிவுக்கு வருவதேயில்லை.
பதம் 26
மொழிபெயர்ப்பு
பரமபுருஷரே, தமோகுணம் மிக்கதும், ரஜோகுணம் குடி
கொண்டதுமான,
இந்த அசுர குடும்பத்தில் பிறந்த நான் எங்கே? பிரம்மதேவருக்கும், சிவபெருமானுக்கும், லக்ஷ்மிதேவிக்கும்கூட அளிக்கப்படாத, கருணையின் அடையாளமாகிய உங்களுடைய தாமரைத் திருக்கரத்தை என் தலைமேல் வைத்து ஆசிர்வதித்த உங்களுடைய கருணை எங்கே?
பதம் 27
மொழிபெயர்ப்பு
பகவானே, உங்களுக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இல்லை. ஆகவே ஒரு சாதாரண ஜீவராசியைப் போல் நீங்கள் நண்பர்கள், பகைவர்கள் என்றும், வேண்டியது, வேண்டாதது என்றும் வேற்றுமை பாராட்டுவதில்லை. கற்பக விருட்சம் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாபாடில்லாமல் ஒருவனுடைய விருப்பத்திற்கேற்ப பலன்களை அளிப்பது போலவே, நீங்களும் ஒருவனுடைய சேவையின் தரத்திற்கேற்ப வரங்களை அளிக்கிறீர்கள்.
பதம் 28
மொழிபெயர்ப்பு
பகவானே, பரமபுருஷரே, ஒன்றன் பின் ஒன்றாக பௌதிக ஆசைகளுடன் நான் கொண்ட சகவாசத்தின் காரணத்தால், பொது ஜனங்களைப் பின்பற்றி, நானும் சிறிது சிறிதாக பாம்புகள் நிறைந்த பாழுங் கிணற்றில் விழுந்து கொண்டிருந்தேன். ஆனால் உங்களுடைய சேவகரான நாரத முனிவர் அன்புடன் என்னை அவரது சீடராக ஏற்றுக் கொண்டு, உன்னதமான இந்நிலையை அடையும் மார்கத்தை எனக்கு உபதேசித்தார். ஆகவே அவருக்குச் சேவை செய்வதே எனது முதல் கடமை என்பதால், அதை எவ்வாறு நான் விட்டுவிட இயலும்?
பதம் 29
மொழிபெயர்ப்பு
பகவானே, எண்ணற்ற உன்னத குணங்களின் இருப்பிடமே, நீங்கள் என் தந்தை இரண்யகசிபுவைக் கொன்று என்னை அவரது வாளிடமிருந்து காப்பாற்றினீர்கள். அவர் என்னிடம் “என்னைத் தவிர வேறு பரம ஈசுவரன் இருந்தால் உன்னைக் காப்பாற்றட்டும். இப்பொழுது உன் தலையை நான் துண்டிக்கப்போகிறேன்” என்று மிகவும் கோபத்துடன் கூறினார். ஆகவே என்னைக் காப்பாற்றுவதிலும், என் தந்தையைக் கொல்வதிலும், உங்களுடைய பக்தர்களின் வார்த்தைகள் உண்மையென்பதை மெய்ப்பிக்கும் வகையில் தாங்கள் நடந்து கொண்டீர்கள். இதற்கு வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
பதம் 30
மொழிபெயர்ப்பு
பகவானே, நீங்கள் சிருஷ்டிக்கு முன்பும் இருந்தீர்கள், அழிவுக்குப் பிறகும் இருக்கிறீர்கள். மேலும் ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையிலுள்ள காப்பவரும் நீங்களே. ஆகவே முழு பிரபஞ்சமாக விரிவடைந்திருப்பவரும் நீங்கள் ஒருவரேயாவீர். இவையெல்லாம் உங்களுடைய புறச் சக்தியின் மூலமாக, மூன்று ஜட இயற்கைக் குணங்களின் செயல் விளைவுகளின் வாயிலாக செய்யப்படுகின்றன. எனவே உள்ளும், புறமும் இருப்பவை அனைத்தும் நீங்களேயாவீர்.
பதம் 31
மொழிபெயர்ப்பு
பகவானே, பரமபுருஷரே, முழு பிரபஞ்ச சிருஷ்டியும் உங்களாலேயே செய்யப்படுகிறது. பிரபஞ்ச தோற்றமானது உங்களுடைய சக்தியின் ஒரு விளைவாகும், முழு பிரபஞ்சமும் உங்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும், நீங்கள் அதனிடமிருந்து தனித்திருக்கிறீர்கள். “என்னுடையது,” “உன்னுடையது” என்ற எண்ணம் நிச்சயமாக ஒருவித மாயையாகும். ஏனெனில், அனைத்து உங்களிடமிருந்து தோன்றியவையே என்பதால் அவை உங்களிடமிருந்து வேறுபட்டவையல்ல. உண்மையில் பிரபஞ்ச தோற்றத்திற்கும், உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அழிவும் உங்களால்தான் செய்யப்படுகிறது. பகவானாகிய உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் உள்ள வேறுபாடானது, சூட்சும காரணமான விதை மற்றும் ஸ்தூல தோற்றமான மரம் என்ற உதாரணத்தால் சித்தரிக்கப்படுகிறது.
பதம் 32
மொழிபெயர்ப்பு
பகவானே, பரமபுருஷரே, அழிவுக்குப்பின் படைப்புச் சக்தியானது, பாதி மூடிய கண்களுடன் உறங்குவது போல் (யோக நித்திரையில் இருப்பது போல்) காணப்படும் உங்களுக்குள் பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு சாதாரண மனிதனைப் போல் உறங்குவதில்லை. ஏனெனில் நீங்கள் எப்பொழுதும் ஜட சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட உன்னதமான ஒரு நிலையில் இருக்கிறீர்கள். அந்நிலையில் நீங்கள் எப்பொழுதும் உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கிறீர்கள். காரணோதகசாயி விஷ்ணுவாக, பௌதிக பொருட்களால் தொடப்படாதவராக, உங்களுடைய உன்னதமான நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் உறங்குவதுபோல் காணப்பட்டாலும், இந்த உறக்கம் அறியாமையில் உறங்குவதிலிருந்து வேறுபட்டதாகும்.
பதம் 33
மொழிபெயர்ப்பு
இந்த பிரபஞ்ச தோற்றம் அல்லது ஜட உலகம்கூட உங்களுடைய உடலேயாகும். இந்த மொத்த ஜடப் பிண்டமானது. உங்களுடைய ஆற்றல் மிக்க சக்தியான கால-சக்தியினால் கிளர்ச்சியூட்டப்படுகிறது. இவ்வாறாக மூன்று ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுகின்றன. நீங்கள் அனந்த சேஷன் எனும் படுக்கையிலிருந்து எழுந்ததும், உங்களுடைய நாபியிலிருந்து உன்னதமான ஒரு சிறு விதை உற்பத்தி செய்யப்படுகிறது. சிறு விதையிலிருந்து பெரிய ஆலமரம் வளர்வது போலவே, இந்த விதையிலிருந்துதான் பிரும்மாண்டமான பிரபஞ்சத்தைக் கொண்ட தாமரை மலர் தோன்றியது.
பதம் 34
மொழிபெயர்ப்பு
அப்பெரிய தாமரைப் பூவிலிருந்து பிரம்மா உற்பத்தயிானார். ஆனால் நிச்சயமாக பிரம்மாவால் அந்த தாமரையைத் தவிர வேறெதையும் காண இயலவில்லை. ஆகவே, நீங்கள் வெளியில் இருப்பதாகக் கருதிய பிரம்மதேவர், நீருக்குள் மூழ்கி, நூறு ஆண்டுகாலமாக அந்த தாமரையின் பிறப்பிடத்தை அறிய முயன்றார். ஆனால் விதையானது முளைத்த பிறகு மீண்டும் அந்த விதையைக் காண முடியாது என்பதால், உங்களைப் பற்றி அவரால் எதையுமே தெரிந்து கொள்ள இயலவில்லை.
பதம் 35
மொழிபெயர்ப்பு
தாயில்லாமல் பிறந்ததால் ஆத்ம-யோனி என்று புகழுப்படும் பிரம்மதேவர் தன் பிறப்பை எண்ணி ஆச்சரியமடைந்தார். இவ்வாறாக அவர் அத்தாமரைப் பூவையே தஞ்சமடைந்தார். அங்கு பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடுந் தவமிருந்து பரிசுத்தமடைந்தார். பிறகு, வாசனையானது மிகவும் சூட்சுமமானதாக இருப்பினும் பூமியில் உணரப்படுவது போல், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகிய பரமபுருஷர் தன் சொந்த உடல் மற்றும் புலன்கள் முழுவதிலும் பரவியிருப்பதை அவரால் காண முடிந்தது.
பதம் 36
மொழிபெயர்ப்பு
பிறகு நீங்கள் ஆயிரமாயிரம் முகங்களையும், பாதங்களையும், தலைகளையும், கைகளையும், தொடைகளையும், மூக்குகளையும், காதுகளையும் மற்றும் கண்களையும் நீங்கள் பெற்றிருப்பதை பிரம்மதேவரால் காண முடிந்தது. நீங்கள் மிகவும் அழகாக உடையணிந்தும், பலவகையான ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தீர்கள். மேலும் உங்களுடைய உருவமும், அடையாளங்களும் உன்னதமானவையாக இருப்பதையும், உங்கள் கால்கள் கீழுலகங்களைத் தொட்டுக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார். உங்களை இந்த விஷ்ணு ரூபத்தில் கண்ட பிரம்மதேவர் உன்னத ஆனந்தத்தை அடைந்தார்.
பதம் 37
மொழிபெயர்ப்பு
பகவானே, நீங்கள் குதிரைத் தலையுடன் ஹயகிரீவராகத் தோன்றியபொழு, ரஜோ மற்றும் தமோ குணங்கள் நிரம்பிய மது, கைடபன் என்ற இரு அசுரர்களைக் கொன்று, வேத ஞானத்தை பிரம்மதேவரிடம் ஒப்படைத்தீர்கள். இதனால் சிறந்த முனிவர்கள் எல்லோரும் உங்களுடைய ரூபங்களை பௌதிக குணங்களால் தொடப்படாத திவ்ய ரூபங்களாக ஏற்றுக் கொள்கின்றனர்.
பதம் 38
மொழிபெயர்ப்பு
இவ்வாறாக பகவானே, நீங்கள் ஒரு மனிதராகவும், மிருகமாகவும், சிறந்த முனிவராகவும், தேவராகவும், மீனாகவும், ஆமையாகவும் வெவ்வேறு அவதாரங்களில் தோன்றுகிறீர்கள். இவ்விதமாக நீங்கள் அசுர சக்திகளைக் கொன்று, வெவ்வேறு கிரக அமைப்புக்களிலுள்ள முழு சிருஷ்டியையும் பராமரிக்கிறீர்கள். பகவானே வெவ்வேறு யுகங்களுக்கேற்ப சமயக் கோட்பாடுகளை நீங்கள் காத்து வருகிறீர்கள். ஆனால் இக்கலியுகத்தில் நீங்கள் உங்களைப் பரமபுருஷராக காட்டிக் கொள்வதில்லை. ஆகவே நீங்கள் த்ரியுக, மூன்று யுகங்களில் தோன்றுபவர் என்று அறியப்படுகிறீர்கள்.
பதம் 39
மொழிபெயர்ப்பு
கவலையே இல்லாத வைகுண்ட லோகங்களின் நாயகரே, என் மனம் சிலசமயம் பெயரளவேயான இன்ப துன்பங்களில் ஆழ்ந்து, மிகவும் பாவமானதாகவும், காம வேட்கையுடையதாகவும் இருக்கிறது. மேலும் இது வருத்தமும், பயமும் நிறைந்ததாகவும், எப்பொழுதும் அதிகமான பணத்தையே நாடுவதாகவும் இருக்கிறது. இவ்வாறு மிகவும் மாசு படிந்ததாக உள்ள இது, உங்களைப் பற்றிய கதைகளில் நாட்டம் கொள்வதேயில்லை. ஆகவே நான் மிகவும் இழிவடைந்தவனாகவும், எளியவனாகவும் இருக்கிறேன். இந்நிலையிலுள்ள என்னால் எவ்வாறு உங்களுடைய செயல்களைப் பற்றி விவாதிக்க இயலும்?
பதம் 40
மொழிபெயர்ப்பு
இழிவற்ற பகவானே, என்னுடைய நிலை, பல மனைவிகளை உடைய ஒருவன் அவர்களால் வெவ்வேறு வழிகளில் கவர்ந்து இழக்கப்படுவதற்கு ஒப்பானதாகும். உதாரணமாக, நாக்கு அறுசுவை உணவுகளால் கவரப்படுகிறது. பாலுறுப்பு கவர்ச்சியான ஒரு பெண்ணுடனான காம சுகத்தை நாடுகிறது. சருமம் தொட்டு அனுபவிக்கக்கூடிய மென்மையான பொருட்களால் கவரப்படுகிறது. வயிறானது நிரம்பிவிட்ட பிறகும் இன்னும் உண்ண விரும்புகிறது. காது உங்களைப் பற்றி கேட்க முயலாமல், பொதுவாக சினிமா பாடல்களைக் கேட்க விரும்புகிறது. முகரும் புலனோ வேறொரு புறம் கவரப்பட்டுள்ளது. அமைதியற்ற கண்கள் புலன் நுகர்வுக் காட்சிகளால் கவரப்படுகின்றன. செயற்புலன்கள் வேறு எதனாலோ கவரப்படுகின்றன. இவ்விதமாக நான் மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.
பதம் 41
மொழிபெயர்ப்பு
பகவானே, நீங்கள் எப்பொழுதும் மரணமெனும் நதிக்கு அப்புறத்தில் உன்னதமான நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் எங்களுடைய சொந்த கர்ம விளைவுகளின் காரணத்தால் இப்புறத்தில் நாங்கள் துன்புறுகிறோம். உண்மையில், இந்த நதிக்குள் விழுந்து கிடக்கும் நாங்கள் பிறப்பு, இறப்பெனும் தொடர்ந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டு, உண்ணத்தகாத பொருட்களைப் புசித்துக் கொண்டிருக்கிறோம். அருள்கூர்ந்து இப்பொழுது என்மீதும், துன்பத்திலிருக்கும் மற்றனைவர் மீதும் பார்வையைத் திருப்பி, உங்களுடைய அகாரணமான கருணையினாலும், இரக்கத்தினாலும் எங்களை விடுவித்துக் காத்தருள வேண்டும்.
பதம் 42
மொழிபெயர்ப்பு
பகவானே, பரமபுரஷரே, அதில் லோகங்களுக்கும் ஆதி குருவே, பிரபஞ்ச விவகாரங்களை நடத்தும் உங்களுக்கு, உங்களுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள இழிவடைந்த ஆத்மாக்களை மீட்பதில் என்ன கஷ்டம் உள்ளது? நீங்கள் துன்புறும் மனித குலம் முழுவதற்கும் நண்பராவீர். மகா-புருஷர்களுக்கு அறிவற்ற மூடர்களிடம் கருணை காட்டுவது அவசியமல்லவா! ஆகவே, உங்களுடைய சேவையில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்றவர்களிடம், உங்களுடைய காரணமற்ற கருணையைக் காட்டுவீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
பதம் 43
மொழிபெயர்ப்பு
மகா புருஷர்களில் மிகச் சிறந்தவரே, நான் பௌதிக வாழ்வைக் குறித்து சிறிதும் அஞ்சவில்லை. ஏனெனில் நான் எங்கே இருந்தாலும் உங்களுடைய மகிமைகள் மற்றும் செயல்களைப் பற்றிய சிந்தனையிலேயே முழுமையாக ஆழ்ந்திருக்கிறேன். பௌதிக சுகத்திற்காகவும், தங்களுடைய குடும்பம், சமூகம், தேசம் ஆகியவற்றிற்காகவும் பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் முட்டாள்களையும், கயவர்களையும் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன்.
பதம் 44
மொழிபெயர்ப்பு
பகவான் நரசிம்மதேவரே, உண்மையில் பல சிறந்த முனிவர்கள் இங்கிருப்பதை நான் காண்கிறேன். ஆனால் தங்களுடைய சொந்த முக்தியில் மட்டுமே இவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர். இவர்கள் பெரிய நகரங்களிலும், பட்டணங்களிலும் வாழும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், மௌன விரதம் பூண்டு தியானம் செய்வதற்காக இமயமலைக்கு அல்லது வனத்திற்குச் செல்கின்றனர். மற்றவர்களைக் கடைத்தேற்றுவதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை, தீனர்களான இந்த மூடர்களையும், கயவர்களையும் விட்டுவிட்டு தனியான முக்தியடைவதை நான் விரும்பவில்லை. கிருஷ்ண உணர்வின்றி, உங்களுடைய தாமரைப் பாதங்களின் புகலிடமின்றி ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாதென்பதை நானறிவேன். ஆகவே இவர்களை உங்களுடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்திற்கு திரும்பவும் அழைத்துவரை நான் விரும்புகிறேன்.
பதம் 45
மொழிபெயர்ப்பு
உடலுறவு வாழ்வானது, அரிப்பைப் போக்க கைகளை ஒன்றோடொன்று தேய்ப்பதற்கு ஒப்பாகும். ஆன்மீக அறிவு இல்லாத பெயரளவேயான கிருஹஸ்தர்கள் (க்ருஹமேதீ), இந்த அரிப்புதான் மிக உயர்ந்த இன்பம் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் அதுவே துன்பத்திற்கு பிறப்பிடமாகும். பிராமணர்களுக்கு நேர் எதிரானவர்களான முட்டாள்கள் (க்ருபணர்கள்), தொடர்ந்த புலன் சுகத்தினாலும் திருப்தியடைவதில்லை. ஆனால் புத்தி வன்மை உடையவர்களும், இந்த அரிப்பைப் பொறுத்துக் கொள்பவர்களுமான தீரர்கள், முட்டாள்களுக்கும், கயவர்களுக்கும் உரிய துன்பங்களுக்கு ஆளாவதில்லை.
பதம் 46
மொழிபெயர்ப்பு
பரமபுருஷரே, முக்தியடைவதற்குப் பத்து வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை, மௌனம் அனுஷ்டித்தல், விரதங்களை அனுஷ்டித்தல், எல்லா வகையான வேத அறிவையும் சேகரித்தல், தவங்களைச் செய்தல், வேதங்களையும் பிற வேத இலக்கியங்களையும் கற்றறிதல், வர்ணாஸ்ரம-தர்ம கடமைகளை நிறைவேற்றுதல், சாஸ்திரங்களை விளக்கிக் கூறுதல், தனிமையான இடத்தில் வசித்தல், மௌனமாக மந்திரங்களை ஓதுதல் மற்றும் சமாதியில் ஆழ்ந்திருத்தல் என்பனவாகும். வெவ்வேறான இந்த முக்தி வழிகளெல்லாம், பொதுவாக புலன்களை அடக்க முடியாதவர்களுக்குரிய ஜீவனோபாய வழிகளாகவும், பொருளீட்டும் தொழில்களாகவும் மட்டுமே இருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் பொய்யான தற்பெருமை கொள்வதால், இந்த வழிமுறைகள் வெற்றி அளிக்காமலும் போகக் கூடும்.
பதம் 47
மொழிபெயர்ப்பு
பிரபஞ்சத்திலுள்ள காரண விளைவுகளின் ரூபங்கள் பரமபுருஷருக்குச் சொந்தமானவை என்பதை அதிகாரப்பூர்வமான வேத ஞானத்தின் மூலமாக, ஒருவனால் காண முடியும். ஏனெனில் பிரபஞ்ச தோற்றம் அவருடைய சக்தியாகும். காரணம், விளைவு ஆகிய இரண்டும் பகவானுடைய சக்திகளேயன்றி வேறில்லை. ஆகவே, பகவானே, காரண விளைவுகளை ஆராய்வதன் மூலம் எப்படி விறகில் நெருப்பு ஊடுருவிப் பரவியிருக்கிறது என்பதை அறிவுள்ள ஒருவனால் காண முடிகிறதோ, அப்படியே நீங்கள் எப்படி காரணமாகவும், விளைவாகவும் இருக்கிறீர்கள் என்பதை பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
பதம் 48
மொழிபெயர்ப்பு
பரமபுருஷரே, மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் உண்மையில் நீங்களே ஆவீர். நீங்களே புலன் உணர்வுப் பொருட்களாகவும், உயிர்க் காற்றுகளாகவும், ஐந்து புலன்களாகவும், மனமாகவும், உணர்வாகவும் மற்றும் பொய் அகங்காரமாகவும் இருக்கிறீர்கள். உண்மையில், ஸ்தூலமான மற்றும் சூட்சுமமான அனைத்தும் நீரே. மனதாலோ அல்லது வாக்காலோ விவரிகக்ப்படுபவை மற்றும் பௌதிக மூலப்பொருட்கள் ஆகிய அனைத்தும் நீங்களேயன்றி வேறில்லை.
பதம் 49
மொழிபெயர்ப்பு
மூன்று ஜட இயற்கைக் குணங்களாலோ (சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம்), இம்மூன்று குணங்களையும் ஆளும் தெய்வங்களாலோ, பஞ்ச பூதங்களாலோ, மனதாலோ, தேவர்களாலோ அல்லது மனிதர்களாலோ உங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவையனைது பிறப்பிற்கும், அழிவுக்கும் உட்பட்டவையாகும். இதைக் கருத்திற் கொண்டுதான் ஆன்மீக வாழ்வில் முன்னேறியவர்கள் பக்தித்தொண்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். இத்தகைய விவேகிகள் வேதங்களைக் கற்பதில் அவ்வளவாக கருத்தைச் செலுத்துவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக பக்தித் தொண்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
பதம் 50
மொழிபெயர்ப்பு
ஆகவே, ஸ்தோத்திரம் செய்யப்படுபவருள் மிகவும் மேலானவராகிய பரமபுருஷரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஏனெனில், ஸ்தோத்திரம் செய்தல், செயல்களின் பலன்களையெல்லாம் அர்ப்பணித்தல், உங்களை வழிபடுதல், உங்கள் சார்பாக செயலாற்றுதல், எப்பொழுதும் உங்களுடைய தாமரைப் பாதங்களை நினைத்துக் கொண்டிருத்தல் மற்றும் உங்களுடைய மகிமைகளைப் பற்றி கேட்டல் ஆகிய இந்த ஆறு வகையான பக்தித் தொண்டுகளைச் செய்யாமல், யாரால் பரமஹம்ஸர்களுக்கு உரியதை அடைய முடியும்?
Comments
Post a Comment