🍁🍁🍁🍁🍁🍁🍁
பரீட்சித் மகாராஜா கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி மேலும் அறிய கிருஷ்ணரின் தூண்டுதலின் பேரில் தாத்தா அர்ஜுனன் எவ்வாறு கடத்திச் சென்றார் என்பதை கூறும்படி சுகதேவ கோஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார். தாத்தா எப்படிப் பாட்டியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாரென்பதைத் தெரிந்துகொள்ள பரீட்சித் மகாராஜாவுக்கு அவ்வளவு ஆவல்.
சுகதேவ கோஸ்வாமி அந்தச் செய்தியை விவரிக்கலானார், “உமது தாத்தாவான மாவீரன் அர்ஜுனன் பல புனிததலங்களுக்கு யாத்திரை சென்ற போது ஒரு சமயம் பிரபாசக க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் தன் தாய்மாமனான வசுதேவரின் மகளான சுபத்ராவின் திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகளை பகவான் பலராமர் நடத்தி வருவதாகக் கேள்விப்பட்டார். சுபத்ராவின் தந்தையான வசுதேவர் மற்றும் சகோதரனான கிருஷ்ணரின் விருப்பத்துக்கு எதிராக சுபத்ராவைத் துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்க பலராமர் எண்ணியிருந்தார். ஆனால் அர்ஜுனன் சுபத்ராவின் கரம் பற்ற ஆசைப்பட்டார்.”
சுபத்ராவின் அழகில் மனதைப் பறிகொடுத்திருந்த அர்ஜுனன் அவளை அடைவதில் தீவிரமாக இருந்ததால் அதற்கு ஒரு திட்டம் தீட்டினார். அத்திட்டத்தின் படிகையில் த்ரிதண்டம் ஏந்திய ஒரு வைஷ்ணவ சந்நியாசியைப் போல் வேஷம் தரித்துக் கொண்டார்.
(மாயாவாதி சந்யாசிகள் ஒரு தண்டம் மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் வைஷ்ணவ சந்நியாசிகள் த்ரிதண்டம் அதாவது மூன்று தண்டங்கள் வைத்திருப்பது வழக்கம். முழுமுதற் கடவுளுக்கு மனம், வாக்கு, காரியம் ஆகிய மூன்றிலும் சேவை செய்வதாக அவர்கள் உறுதி எடுத்திருப்பதை அது குறிக்கிறது. த்ரிதண்ட சந்யாச முறை வெகு காலமாக வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. வைஷ்ணவ சந்நியாசிகள் த்ரிதண்டி என்றும் த்ரிதண்டி ஸ்வாமிகள் அல்லது த்ரிதண்டி கோஸ்வாமிகள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.)
பொதுவாக சந்யாசிகள் மதப் பிரசாரம் செய்வதற்காக நாடு முழுவதிலும் பயணம் செய்வது வழக்கம். ஆனால் மழைக் காலமான நான்கு மாதங்களில் அவர்கள் பிரயாணத்தைத் தவிர்த்து ஓரிடத்தில் தங்குவார்கள். இவ்வாறு அவர்கள் தங்குவது சாதுர்யமாஸ்ய விரதம் எனப்படும். ஒரு சந்நியாசி ஓரிடத்தில் தங்கும் போது அங்கு வசிக்கும் மக்கள் அவர் வந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான உபதேசங்களைப் பெறுவார்கள். திரிதண்டி சந்நியாசியின் வேஷத்திலிருந்த அர்ஜுனன் துவாரகையில் நான்கு மாதங்கள் தங்கினார். இது அவர் சுபத்ராவை அடைவதற்காகத் தீட்டிய திட்டத்தின் ஒரு பகுதி. சந்நியாசியாக வந்திருப்பது அர்ஜுனன் என்பதை பலராமரும் துவாரகையின் மக்களும் அறியவில்லை. உண்மையறியாமல் எல்லோரும் அந்த சந்நியாசியை வணங்கிச் சென்றார்கள்.
ஒரு நாள் பகவான் ஶ்ரீ பலராம அந்த சந்நியாசியைப் பகல் உணவுக்காகத் தம் இல்லத்துக்கு அழைத்திருந்தார். சந்நியாசிக்கு விதவிதமான சுவையுள்ள உணவுகள் வழங்கப்பட்டன. அவரும் திருப்தியாக உணவருந்தினார். உணவருந்திய போது அர்ஜுனன் சுபத்ராவின் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அவளிடம் கொண்ட காதலால் அர்ஜுனனின் கண்கள் பிரகாசமடைந்தன. ஒளி வீசிய கண்களுடன் அவர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை எப்படியாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவருள் எழுந்தது. அந்தத் தீவிர இச்சையின் காரணமாக அவரின் மனம் மிகவும் சஞ்சலமடைந்தது.
பரீட்சித் மகாராஜாவின் தாத்தாவான அர்ஜுனனும் அதிசயிக்கத்தக்க அழகையுடையவர். எனவே அவரின் அழகில் மயங்கிய சுபத்ராவும் அர்ஜுனனையே கணவனாக அடைவதென்று மனதில் தீர்மானித்தாள். அர்ஜுனனைக் காண்பதில் அவளுக்கும் மகிழ்ச்சியாதலால் அவரைப் பார்த்தபோதெல்லாம் புன்னகை பூத்தாள். இதனால் அர்ஜுனன் அவளிடம் கொண்டிருந்த காதல் மேலும் அதிகரித்தது. இவ்வாறாக சுபத்ராவும், அர்ஜுனனும் ஒருவரையொருவர் மணப்பதென்று தீர்மானித்த அர்ஜுனன் ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரமும் அதற்கான திட்டத்தைப் பற்றிச் சிந்திப்பதில் செலவிட்டார். எப்போதும் சுபத்ராவையே எண்ணி கொண்டிருந்ததால் அவர் கணநேரமும் மன அமைதியின்றியிருந்தார்.
ஒரு சமயம் சுபத்ரா ஆலயங்களில் தரிசிப்பதற்காக ரதத்திலேறி துவாரகையின் கோட்டையைவிட்டு வெளியே வந்தாள். அர்ஜுனன் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வசுதேவர் மற்றும் தேவகியின் அனுமதியுடன் அவளைக் கடத்திச் சென்றார். சுபத்ராவின் ரதத்தில் ஏறிக்கொண்டு அவர் யுத்தத்துக்குத் தயாரானார். தன்னைத் தடுக்க வந்த சைனிகர்களைத் தன் வில்லம்புகளால் தாக்கி நிறுத்திவிட்டு அவர் சுபத்ராவைக் கவர்ந்து சென்றார். இவ்வாறு அர்ஜுனன் சுபத்ராவைக் கவர்ந்து சென்றபோது அவளின் உறவினர்களும் குடும்பத்தினரும் அழுது புலம்பினார்கள். இது பலராமருக்குத் தெரிவிக்கப்பட்டு சந்நியாசியாகக் கருதப்பட்டவன் அர்ஜுனன் என்பதையும் சுபத்ராவை அடைவதற்காக அவர் திட்டமிட்டு மாறுவேஷத்தில் அவளைக் கடத்திச் செல்கிறார் என்பதையும் அறிந்த பலராமர் மிகவும் கோபம் கொண்டார். அவர் பூரண சந்திரனால் அலை கழிக்கப்படும் கடலலலைகளெனப் பொங்கி எழுந்தார்.
ஆனால் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனின் செயலை ஆதரித்தார். குடும்பத்தில் மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள். கிருஷ்ணர் பலராமரின் கால்களில் விழுந்து வணங்கி அர்ஜுனனை மன்னிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தார். பலராமரும், சுபத்ரா அர்ஜுனனை மிகவும் நேசிக்கிறாளென்றும் அவரைக் கணவனாக அடைய விரும்புகிறாளென்றும் அறிந்து சமாதானமடைந்து இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் செய்வித்தார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment