அம்பரீஷ சரித்திரம்
**********************
மனுவின் மகன் நபகன், அவரது
மகனான நாபாகன் , நாபாகனிலிருந்து, மிகவும்
சக்திவாய்ந்தவரும், புகழ்பெற்ற பக்தருமான அம்பரீஷர் பிறந்தார். அம்பரீஷ மகாராஜன் முழு
உலகிற்கும் பேரரசராக இருந்தார். ஆனாலும் தன் செல்வங்களெல்லாம் தற்காலிகமானவை என்று
கருதினார். இத்தகைய பௌதிக ஐசுவரியமே பந்தப்பட்ட வாழ்வில் விழுவதற்கு உண்மையான காரணம்
என்பதை அறிந்திருந்த அவர், அதில் பற்றற்றவராக இருந்தார். அவர் தமது புலன்களையும், மனதையும்
பகவத் சேவையில் ஈடுபடுத்தினார். இந்த முறை யுக்த-வைராக்யம், அல்லது சாத்தியமான துறவு
என்று அழைக்கப்படுகிறது. பரமபுருஷரின் வழிபாட்டிற்கு இது மிகவும் பொருத்தமான முறையாகும்.
சக்கரவர்த்தியான அம்பரீஷ மகாராஜன் அளவுக்கு மிஞ்சிய செல்வந்தராக இருந்ததால், பக்தித்
தொண்டையும் பெரும் ஐசுவரியத்துடன் அவர் நிறைவேற்றினார். எனவே அவ்வளவு செல்வம் இருந்தும்
மனைவியிடமோ, குழந்தைகளிடமோ, அல்லது இராஜ்யத்திலோ அவர் பற்றுக் கொண்டவராக இருக்கவில்லை.
தம் புலன்களையும், மனதையும் அவர் இடைவிடாமல் பகவானின் தொண்டில் ஈடுபடுத்தினார். எனவே
பௌதிக செல்வங்களை அனுபவிப்பதைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. முக்தியைக் கூட அவர் விரும்பவில்லை.
ஒருசமயம் அம்பரீஷ மகாராஜன் பிருந்தாவனத்தில்
துவாதசி விரதத்தை ஏற்று பரமபுருஷரை வழிபட்டு வந்தார். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசியன்று,
ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்ளப்போகும் வேளையில் மகாயோகியான துர்வாசர் அதிதியாக
அங்கு தோன்றினார். அம்பரீஷ மகாராஜனும் அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். அரசரின்
அழைப்பை ஏற்று, அங்கு உணவருந்துவதாக ஒப்புக்கொண்ட துர்வாச முனி, நடுப்பகலில் குளிப்பதற்காக
யமுனை நதிக்குச் சென்றார். நீண்ட நேரம் சமாதியில் ஆழ்ந்துவிட்ட அவர் விரைவில் திரும்பவில்லை.
ஆனால் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதைக் கண்ட அம்பரீஷ மகாராஜன்,
விரதத்தை முடித்துக் கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றுவதற்காக, கற்றறிந்த பிராமணர்களின்
யோசனைப்படி சிறிது நீரைப் பருகினார்.
பரமபுருஷரான விஷ்ணுவின் கட்டளைப்படி துர்வாச
முனிவர் உடனே அம்பரீஷ மகாராஜனிடம் சென்று அவரது பாதம் பணிந்தார். அம்பரிஷர் இயல்பாகவே
அடக்கமும், எளிமையும் உடையவர் என்பதால், துர்வாசர் தன் பாதங்களில் விழுந்ததால் அவர்
வெட்கமும், கூச்சமும் அடைந்தார். இவ்வாறாக அவர் துர்வாசரைக் காப்பாற்றும்படி சுதர்சன
சக்கரத்திடம் பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினார். இந்த சுதர்சன சக்கரம் என்பது என்ன?
சுதர்சன சக்கரம் பகவானின் பார்வையாக இருக்கிறது. இப்பார்வைதான் ஜட உலகம் முழுவதையுமே
படைக்கிறது. ஸ ஐக்ஷத, ஸ அஸ்ருஜத. இது வேத வாக்காகும். படைப்பின் மூலமான சுதர்சன சக்கரம்
பகவானுக்கு மிகப்பிரியமானதாகும். இச்சக்கரத்தில் ஆயிரக்கணக்கான அரங்கள் உள்ளன. இச்சக்கரம்
மற்றெல்லா ஆயுதங்களையும் வெல்லக்கூடியதும், இருளை அழிக்கக்கூடியதும், பக்தித் தொண்டை
தோற்றுவிக்கக் கூடியதுமாகும்; அதுவே சமயக் கோட்பாடுகளை நிலைநாட்டுவதற்குரிய சாதனமாகவும்,
அதர்மங்களை அழிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதன் தயவில்லாமல் பிரபஞ்சத்தைப் பராமரிக்க
முடியாது. எனவேதான் சுதர்சன சக்கரத்தை பகவான் உபயோகிக்கிறார். அம்பரீஷர் சுதர்சன சக்கரத்திடம்,
கருணை காட்டும்படி வேண்டியதும், அது சாந்தமடைந்து, துர்வாசரைக் கொல்வதிலிருந்து பின்வாங்கியது.
இவ்வாறாக சக்கரத்தின் கருணையைப் பெற்ற துர்வாசர், ஒரு வைஷ்ணவர் சாதாரண ஒரு மனிதராவார்
என்ற வெறுப்பூட்டும் எண்ணத்தை விட்டொழிக்க கற்றுக் கொண்டார் (வைஷ்ணவ ஜாதி-புத்தி).
க்ஷத்திரிய பிரிவைச் சேர்ந்த அம்பரீஷ மகாராஜன் பிராமணர்களை விட தாழ்ந்தவர் என்று கருதிய
துர்வாசர், தன் பிராமண சக்தியை அம்பரீஷர் மீது பிரயோகிக்க முயன்றார். இச் சம்பவத்தின்
மூலமாக, வைஷ்ணவர்களை அலட்சியப்படுத்தும் தீய கருத்துக்களை எப்படி விட்டொழிப்பது என்பதை
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இச்சம்பவத்திற்குப் பின், அம்பரீஷ மகாராஜன் துர்வாச
முனிவருக்கு விருந்தளித்தார். பிறகு ஓராண்டு காலமாக எதையும் சாப்பிடாமல் ஒரே இடத்தில்
நின்றிருந்த அம்பரீஷ மகாராஜனும் பிரசாதத்தைச் சாப்பிட்டார். பிற்காலத்தில் அரசர் தமது
ஆஸ்தியை தன் மகன்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, பகவத் தியானத்தை மேற்கொள்ள மானஸ-ஸரோ
வரத்தின் கரைக்குச் சென்றார்.
அம்பரீஷ மகாராஜன் எப்பொழுதும்
தன் மனதைக் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை தியானிப்பதிலும், வார்த்தைகளை பகவானின் பெருமைகளை
விவரிப்பதிலும், கரங்களை பகவானின் ஆலயத்தைச் சுத்தம் செய்வதிலும், மற்றும் செவிகளை
கிருஷ்ணரைப் பற்றி அல்லது கிருஷ்ணரால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்பதிலும் ஈடுபடுத்தினார்.
அவர் தன் கண்களை, கிருஷ்ணரின் விக்கிரகத்தையும், ஆலயங்களையும் மற்றும் பிருந்தாவனம்,
மதுரா போன்ற இடங்களையும் காண்பதில் ஈடுபடுத்தினார். அவர் தன் ஸ்பரிச உணர்வை பகவத் பக்தர்களின்
உடல்களைத் தொடுவதிலும், முகரும் புலனை பகவானுக்கு நிவேதம் செய்யப்பட்ட துளசியின் நறுமணத்தை
முகர்வதிலும், மற்றும் நாக்கை பகவானின் பிரசாதத்தைச் சுவைப்பதிலும் ஈடுபடுத்தினார்.
தன் கால்களைப் புண்ணிய ஸ்தலங்களுக்கும், பகவானின் ஆலயங்களுக்குச் செல்வதிலும், தலையை
பகவான் முன் வணங்குவதிலும் மற்றும் தன் விருப்பங்களை எல்லாம் பகவானுக்கு இருபத்து நான்கு
மணி நேரமும் தொண்டு செய்வதிலும் ஈடுபடுத்தினார். உண்மையில், அம்பரீஷ மகாராஜன் தன் புலன்
நுகர்வுக்காக எதையுமே விரும்பியதில்லை. அவர் தனது புலன்களை எல்லாம் பகவானுக்குச் சம்பந்தப்பட்ட
பல்வேறு பக்தித் தொண்டுகளில் ஈடுபடுத்தினார். பகவானிடமுள்ள பற்றை அதிகரிப்பதற்கும்,
பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதற்கும் இதுதான் வழி. ( ஶ்ரீமத் பாகவதம் 9.4.18 )
ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் காண்டம் 9 / அத்தியாயம் 4 - அத்தியாயம் 5)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment