தோஷங்களும், பரிகாரங்களும் சரியான புரிந்துணர்வு




 

தோஷங்களும், பரிகாரங்களும் சரியான புரிந்துணர்வு


வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்



கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று: இஸ்கானிற்கு வந்து ஹரே கிருஷ்ண ஜபம் செய்தால், எனது தோஷங்கள் போகுமா? செவ்வாய் தோஷம், சனி தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு தோஷம், ஸர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், புத்திர தோஷம் என தோஷங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒருவனது ஜாதகத்தை அலசி ஆராயும்போது, அவனது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு தோஷம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பதால், பாமரர் முதல் பண்டிதர் வரை பலரும் பரிகாரத்தைத் தேடி அலைகின்றனர்.


அவர்களில் சிலர், இஸ்கான் இயக்கத்தின் கோயில்களுக்கு வரும்போது, இங்கு வந்தால் எனது இந்த தோஷம் போகுமா, அந்த தோஷம் போகுமா? என ஆர்வத்துடன் வினவுகின்றனர். அதுகுறித்து சற்று விளக்கமாக விவாதிக்கலாம்.


தோஷம், பரிகாரம்உண்மை நிலை



தோஷம் உள்ளது, என்பதைக் கேள்விப்பட்டவுடன் [அஃது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும்] மக்களின் மனதில் அதுவரை இல்லாத ஓர் அச்ச உணர்வு வந்து விடுகிறது, உடனடியாக பரிகாரத்தைத் தேடுகின்றனர். இதுதான் பரிகாரம், என்று எதைச் சொன்னாலும் [அஃது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும்] அதை மறுப்பு ஏதுமின்றி செய்ய முயல்கின்றனர். பரிகாரம் செய்து முடித்த பின்னர், தோஷம் போய் விட்டது, என்று மக்கள் நம்புகின்றனர். தோஷம் உண்மையிலேயே போய் விட்டதா? இல்லையா? என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும், மக்களிடம் ஒரு மனதிருப்தி ஏற்படுகிறது. இதுவே தோஷம், பரிகாரம் முதலியவற்றின் உண்மை நிலை.


தோஷங்கள் கிடையவே கிடையாது என்றோ, அவற்றிற்கு பரிகாரங்கள் கிடையாது என்றோ நாங்கள் கூறவில்லை. மாறாக, அவற்றின் உண்மைத் தன்மை மாபெரும் ஐயத்திற்கு உரியதாக உள்ளது என்பதையே சுட்டிக்காட்ட விழைகிறோம். இன்றைய நவீன நாகரிக உலகில் உண்மையான பரிகாரத்தைச் செய்யக்கூடிய தகுதி வாய்ந்த பிராமணர்கள் யார் உள்ளனர்? சல்லடை போட்டு சலித்தால், சில இடங்களில் சிலர் இருக்கலாம். அவர்கள் யாரும் காசுக்காக பரிகாரம் செய்ய மாட்டார்கள், அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும் இயலாத காரியமே. வேத முறைப்படி பரிகாரம் செய்வதற்கு இன்றைய உலகில் ஆட்களே இல்லை என்னும் பட்சத்தில், அதனை மீறி செய்யப்படும் பரிகாரங்களுக்கு உண்மையான பயன் இருக்குமா என்பதை வாசகர்களின் அறிவிற்கே விட்டு விடுகிறோம்.


பரிகாரம் தீர்வாகுமா?



சரி, எங்கோ தேடிக் கண்டுபிடித்து உண்மையான பரிகாரத்தைச் செய்து விட்டோம் என்றும், தோஷம் போய் விட்டது என்றும் எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்த தோஷம் வராதா? [நிச்சயம் வரும்.] புதிய தோஷங்களை உருவாக்க மாட்டோமா? [நிச்சயம் உருவாக்குவோம்.] அப்படியெனில், அத்தகு தோஷ பரிகாரங்களால் என்னதான் பிரயோஜனம்? ஸ்ரீமத் பாகவதம் இத்தகு பரிகாரங்களை யானையின் குளியலுடன் ஒப்பிடுகிறது. ஆற்றில் நன்றாகக் குளித்து விட்டு கரைக்கு வரும் யானை மீண்டும் உடல் முழுவதும் மண்ணை வாரி பூசிக்கொள்ளும். அதுபோலவே, பரிகாரம் செய்து விட்டு திரும்பும் மனிதன் மீண்டும் பாவத்தைச் செய்கிறான்; ஏனெனில், பாவத்தைச் செய்வதற்கான அவனது விருப்பம் அவனை விட்டு அகற்றப்படவில்லை.


திருடன் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர், மீண்டும் திருடுகிறான். முதல் குற்றத்திற்கு பரிகாரம் ஆகி விட்டது, அடுத்த குற்றத்தை உடனே செய்கிறான். இவனுக்கும் கோயில்களுக்குச் சென்று பரிகார நிவர்த்தி செய்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மாமிசம் புசித்தல் முதலிய பாவச் செயல்களைத் தொடருபவனுக்கும் என்ன வேறுபாடு?


புத்திசாலிகள் என்ன செய்வர்?



புத்திசாலிகள் பரிகாரங்களின் மூலமாக தங்களது தோஷங்களுக்கு நிவர்த்தியைத் தேட மாட்டார்கள். மாறாக, இந்த தோஷங்கள் அனைத்திற்கும் மூல காரணத்தை அறிந்து கொண்டு, அதற்கான நிரந்தர தீர்வைக் காண முயல்வர். கிருஷ்ண பக்தியில் தீவிரமாக ஈடுபடுவது மட்டுமே எல்லா தோஷங்களையும் போக்குவதற்கான நிரந்தர தீர்வாகும்.


கிருஷ்ண பக்தி எவ்வாறு தோஷங்களை நிரந்தரமாகப் போக்குகிறது? தோஷங்கள் என்பது முந்தைய பிறவியில் நாம் செய்த தவறுகளால் (பாவங்களால்) விளைகின்றன. கிருஷ்ண பக்தி எல்லா தோஷங்களையும் நிரந்தரமாகப் போக்குகிறது என்னும் எமது தைரியமான கூற்று, மற்றவர்களைப் போன்று ஆதாரமற்ற கூற்று அல்ல. மாறாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறும் வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டது. தம்மிடம் சரணடையும் ஜீவன்களின் எல்லா பாவங்களையும் அகற்றி விடுவதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் (18.66) உறுதியளிக்கிறார். எனவே, உண்மையை உரக்கச் சொல்வோம்: கிருஷ்ண பக்தி நிச்சயம் எல்லா தோஷங்களையும் நிர்மூலமாக்கி விடும். இதில் துளியும் ஐயமில்லை.


ஒவ்வொரு தோஷத்திற்கும் பரிகாரம் செய்வதாக எண்ணிக் கொண்டு, பரிகாரம் மாற்றி பரிகாரம் செய்து, வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டாம். மாறாக, கிருஷ்ண பக்தியில் வாழ்நாள் முழுவதையும் இன்பமுடன் தீவிரமாகக் கழித்தால், நமது எல்லா பாவங்களும் நிச்சயம் அகன்று விடும். எனவே, புத்திசாலி மனிதர்கள் இதனைப் புரிந்து கொண்டு கிருஷ்ணரிடம் சரணடைவர்.


தோஷங்கள் உடனே போய் விடுமா?



தோஷங்கள் உடனடியாக விலகலாம், சில வருடங்கள் கழித்து விலகலாம், பல வருடங்கள் கழித்து விலகலாம், அல்லது ஆயுள் முழுவதும் விலகாமல் இருப்பதைப் போலவே காணப்படலாம். இஃது அந்த தோஷத்தின் தீவிர தன்மையையும் நமது பக்தியின் தீவிரத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, இஸ்கானிற்கு வாருங்கள், ஸர்ப்ப தோஷம் போய் விடும், புத்திர தோஷம் போய் விடும், என்று நாங்கள் ஒருபோதும் விளம்பரம் செய்வதில்லை. மக்கள் தம்மிடம் எந்த அளவிற்கு சரணடைகிறார்களோ அந்த அளவிற்கு தாமும் அவர்களுக்கு பிரதிபலன் கொடுப்பதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் (4.11) கூறுகிறார். எனவே, நம்முடைய பாவங்கள் எந்த அளவிற்கு விலகும் என்பது நம்முடைய சரணாகதியைப் பொறுத்ததாகும்.

 

100% சரணடைந்தால்



நாம் கிருஷ்ணரிடம் 100% சரணடைந்தால், நமது பாவங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டு விடும். அத்தகு முழுமையான சரணாகதி ஒரே நிமிடத்தில்கூட நிகழலாம் என்றபோதிலும், பொதுவாக இந்த நிலையானது ஒரு பக்தனால் படிப்படியாக வளர்க்கப்படுகிறது. பகவானைப் பற்றி கேட்டல் (ஸ்ரவணம்), அவரைப் பற்றி பாடுதல் (கீர்த்தனம்), அவரை நினைத்தல் (ஸ்மரணம்) முதலிய ஒன்பது வழிமுறைகளை ஒருவன் ஸ்திரமாகப் பின்பற்றும்போது, அவன் படிப்படியாக பக்தியில் முன்னேறுகிறான், கிருஷ்ணரிடம் படிப்படியாக தன்னை முழுமையாக 100% ஒப்படைக்கின்றான். அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு எவ்வித கர்ம விளைவுகளும் கிடையாது, எந்த தோஷமும் அவனுக்கு இல்லை.


நடுவில் நிற்கும்போது



நான் இன்னும் 100% சரணடையவில்லை, 1% மட்டுமே சரணடைந்துள்ளேன், 10% மட்டுமே சரணடைந்துள்ளேன், 20%, 50%, 70% என எங்கேனும் நடுவில் நிற்கின்றேன். என்னுடைய கதி என்ன? தோஷங்கள் எனக்கு விலகுமா? பெரும்பாலான பக்தர்கள் இதுபோன்று நடுவில்தான் நிற்கின்றனர்; நீங்கள் மட்டும் நடுவில் நிற்பதாக எண்ண வேண்டாம். முன்னரே கூறியபடி, நமது சரணாகதியின் நிலைக்கு ஏற்ப நமது பாவ விளைவுகளின் வீரியமும் குறைந்து விடும். ஏதேனும் ஒரு பாவம் அல்லது தோஷத்தின் காரணமாக, நமது தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று இருந்தால், அன்றைய தினத்தில் நமக்கு தலையில் அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க நேரிடலாம், அல்லது சாதாரண சிகிச்சைப் பிரிவில் சில நாள்கள் இருக்க நேரிடலாம், அல்லது வெறும் கட்டு மட்டும் போடப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படலாம், அல்லது சிராய்ப்பு காயத்துடன் தப்பிக்கலாம். இவையெல்லாம் நமது சரணாகதியைப் பொறுத்ததாகும்.


பிரச்சனைகள் அதிகமாகுமா?



தலைக்கு வருவது தலைப்பாகையோடு நின்று விடும் என்பது பொதுவான கூற்று. ஆயினும், சில நேரங்களில் கிருஷ்ண பக்தியில் ஈடுபடுவோருக்கு முன்பு இருந்ததைவிட அதிக துன்பங்கள் வருவதுபோலவும் தோன்றலாம்; அதற்கு காரணம், கிருஷ்ண பக்தன் சில சமயங்களில் மாயையின் வெவ்வேறு சக்திகளால் பல்வேறு சோதனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் உட்படுத்தப்படலாம். உண்மையில், இவை அந்த பக்தனை தூய பக்தியில் ஸ்திரமாக்குகின்றன.


உண்மையான பக்தன் எல்லாச் சூழ்நிலையிலும்செல்வம் கிடைத்தாலும் சரி, செல்வத்தை இழந்தாலும் சரி, கஷ்டங்கள் தொலைந்தாலும் சரி, கஷ்டங்கள் வந்தாலும் சரி, நற்பெயரைப் பெற்றாலும் சரி, அவப்பெயரைப் பெற்றாலும் சரிதன்னிலை மாற மாட்டான், பகவானது தாமரைத் திருவடிகளைப் பற்றிக் கொண்டே இருப்பான், பகவத் பக்தியில் தொடர்ந்து ஈடுபடுவான்.


ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இதனைத் தமது சிக்ஷாஷ்டகத்தில் (8) குறிப்பிடுகிறார்: கிருஷ்ணர் என்னை முரட்டுத்தனமாக அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாது என் இதயத்தை நோகச் செய்தாலும், அவரே என் பிரபுவாவார். அவரைத் தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்துகொள்ள அவருக்கு பூரண சுதந்திரம் உண்டு; ஏனெனில், அவரே எனது பிராண நாதர். இதில் எந்த நிபந்தனையும் இல்லை. இதுவே தூய பக்தி. இதைத்தான் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் கற்றுக் கொடுக்கின்றோம்.


கொடுப்பவரும் அவரே, எடுப்பவரும் அவரே



கிருஷ்ண பக்தியில் உண்மையாக ஈடுபடத் தொடங்கி விட்டால், நாம் ஆரம்பநிலையில் இருந்தால்கூட, நமக்கு வரும் இன்னல்களைப் பொறுத்துக்கொள்வதற்குத் தேவையான மன வலிமையை கிருஷ்ணரே நமக்கு வழங்குவார். அவர் ஒரு தந்தையைப் போன்றவர், நாம் என்ன வேண்டுகிறோம் என்பதைக் காட்டிலும் நமக்கு உண்மையான தேவை என்ன என்பதை அவர் நன்கு அறிவார். அதன்படி, சில நேரங்களில் அவர் நமக்கு கொடுக்கலாம், சில நேரங்களில் நம்மிடமிருந்து எடுக்கலாம். கொடுப்பவரும் அவரே, எடுப்பவரும் அவரே. அவர் எதைச் செய்தாலும், அது நமது நன்மைக்காகவே இருக்கும்.


குசேலருக்கு ஸ்வர்க லோகத்தைக் காட்டிலும் அதிக செல்வத்தைக் கொடுத்தார், பாண்டவர்களுக்கு உலகையே ஆள்வதற்கான உரிமையை மீட்டுக் கொடுத்தார், பிரகலாதருக்கு அசுர தந்தையிடமிருந்து விடுதலை கொடுத்தார். இவை ஒருபுறம் இருக்க, குசேலரை வறுமையில் வாட்டியவரும் அவரே, பாண்டவர்களுக்கு சொல்லொணா துயரங்களை வழங்கியவரும் அவரே, பிரகலாதரை அசுரனுக்கு பிறக்க வைத்தவரும் அவரே. ஏன்? குசேலர், பாண்டவர்கள், பிரகலாதர் முதலிய தூய பக்தர்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பகவத் பக்தியில் ஸ்திரமாக ஈடுபடுகின்றனர் என்பதைக் காண்பித்து, அதே சமயத்தில் மே பக்த: ப்ரணஸ்யதி, எனது பக்தன் ஒருபோதும் அழிவடைவதில்லை, (பகவத் கீதை 9.31) என்னும் தமது வாக்கியத்தையும் நிரூபித்து, முட்டாள்களாகிய நம்மையும் பக்தியில் ஈடுபடுமாறு அவர் தூண்டுகிறார். மேலும், உன்னுடைய இந்த தோஷம், அந்த தோஷம் என எல்லா தோஷத்தையும் என்னிடம் விட்டு விடு. எதையும் எதிர்பார்க்காமல் எனது பக்தியில் மட்டும் ஈடுபடு, என்றும், அவர் இதன்மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார்.


பிரம்மதேவர் ஸ்ரீமத் பாகவதத்தில் (10.14.8) கூறுகிறார்: பகவத் பக்தர்கள் தங்களுக்கு வரும் துன்பங்கள் அனைத்திற்கும் தங்களது பூர்வ ஜன்ம செயல்களே காரணம் என்பதையும் கிருஷ்ணர் கருணையுடன் அந்தத் துன்பங்களைக் குறைத்து வழங்குகிறார் என்பதையும் உணர்ந்து, மனதாலும் சொல்லாலும் செயலாலும் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபடுகின்றனர். அத்தகு பக்தர்களுக்கு முக்தி என்பது உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது, சில தோஷங்களின் சுவடுகள் பக்தனின் வாழ்வில் தென்பட்டால்கூட, அவன் இந்த உடலைக் கைவிட்டவுடன் நேரடியாக வைகுண்டம் செல்கிறான், அப்போது அவனது எல்லா தோஷங்களும் அவனை விட்டு நிரந்தரமாக அகன்று விடுகின்றன.

எனவே, தோஷங்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம்மை விட்டு அவை விலகினாலும் சரி, விலகாவிட்டாலும் சரி, துன்பங்கள் குறைந்தாலும் சரி, அதிகரித்தாலும் சரிவாருங்கள், எல்லாச் சூழ்நிலையிலும் பிறழாத பக்தித் தொண்டில் ஈடுபட்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திருப்திப்படுத்துவோம்; அப்போது நமது எல்லா பாவங்களும் தாமாகவே நிரந்தரமாக அகன்று விடும்.

 

 

( " கிருஷ்ண பக்தி தோஷங்களைப் போக்குமா? என்னும் கட்டுரை - பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


https://suddhabhaktitamil.blogspot.com/


http://www.facebook.com/உத்வேககதைகள்-109460164055445

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more