நரசிம்ம அவதாரம்
ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 7
பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் உபதேசங்களைப் பின்பற்றி பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பற்றுக் கொண்டவர்கள் ஆயினர். இப்பற்றுதல் தீர்மானமானதாக மாறியபொழுது, அவர்களுடைய ஆசிரியர்களான சண்டனும், அமர்க்கனும், அச்சிறுவர்கள் பகவானிடம் அதிக பக்தியுடையவர்களாக மாறி விடுவார்களோ என்று மிகவும் அஞ்சினர். அவர்கள் உதவியற்ற இந்நிலையில் இரண்யகசிபுவை அணுகி, பிரகலாதருடைய பிரச்சாரத்தின் விளைவைப் பற்றி அவனிடம் விவரமாகக் கூறினார்கள். இதைக் கேட்டதும், இரண்யகசிபு தன் மகனான பிரகலாதரைக் கொன்றுவிட முடிவு செய்தான். இரண்யகசிபு கடுங்கோபமடைந்ததால், பிரகலாத மகாராஜன் அவனை சமாதானப்படுத்துவதற்காக அவனுடைய பாதங்களில் விழுந்து பல விஷயங்களைக் கூறினார். ஆனால் இரண்யகசிபுவை அவரால் சமாதனப்படுத்த இயலவில்லை. ஓர் அசுரனுக்கு இலக்கணமாக விளங்கிய இரண்யகசிபு, தன்னைப் பரமபுருஷரை விடப் பெரியவனாக கூறிக்கொள்ளத் துவங்கினாள். ஆனால் இரண்யகசிபு கடவுளல்ல என்று கூறி அவனது வாதத்தை மறுத்த பிரகலாத மகாராஜன், பகவான் எங்கும் நிறைந்தவர் என்றும், அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டவையே என்றும், அவருக்குச் சமமானவரோ அல்லது அவரை விடப் பெரியவரோ எவருமில்லை என்றும் கூறி, பரமபுருஷரை புகழத் துவங்கினார். இவ்விதமாக சர்வ வல்லமையுடைய பரமபுருஷருக்கு அடங்கி நடக்கும்படி தன் தந்தையை அவர் கேட்டுக் கொண்டார்.
பிரகலாத மகாராஜன் பரமபுருஷரை அதிகமாக புகழப்புகழ, அந்த அசுரனின் கோபமும் அதிகமாகிக் கொண்டே போனது. இவ்வாறு சலனமடைந்த இரண்யகசிபு தன் வைஷ்ணவ மகனைப் பார்த்து, அவருடைய கடவுள் அந்த அரண்மனைத் தூண்களில் இருக்கிறாரா என்று கேட்டான். பகவான் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதால், அவர் தூண்களிலும் இருக்கிறார் என்று பிரகலாத மகாராஜன் உடனே பதிலளித்தார். தன் இளம் மகனிடமிருந்து இந்த தத்துவத்தைக் கேட்ட இரண்யகசிபு, அது வெறும் குழந்தைத்தனமான பேச்சு என்று ஏளனம் செய்து, ஒரு தூணைத் தன் முஷ்டியால் பலமாகத் தாக்கினான்.
இரண்யகசிபு அந்த தூணைத் தாக்கியவுடனேயே அதிலிருந்து ஒரு பலத்த ஓசை வெளிக் கிளம்பியது. முதலில் இரண்யகசிபுவால் அந்தத் தூணைத் தவிர வேறெதையும் அங்கு காண இயலவில்லை. ஆனால் பிரகலாதரின் கூற்றை நிரூபிப்பதற்காக, பகவான் அற்புத நரசிம்ம அவதாரமாக அத்தூணிலிருந்து வெளியே வந்தார். பகவானின் அதி அற்புதமான அந்த ரூபத்தினால் தனக்கு நிச்சயமாக மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதை இரண்யகசிபுவால் உடனே புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறாக அவன் பாதி சிங்கம், பாதி மனிதனாக அவதரித்த நரசிம்மருடன் யுத்தம் செய்யத் தயாரானான். பகவான் கொஞ்ச நேரம் அந்த அசுரனுடன் யுத்தம் செய்யும் லீலையை நடத்தினார். பிறகு பகலும் இரவும் சந்திக்கும் சாயங்கால நேரத்தில் அவர் அந்த அசுரனைப் பிடித்து, தமது மடியில் கிடத்தி, தமது நகங்களினால் அவனது வயிற்றைப் பிளந்து அவனைக் கொன்றார். பகவான் இரண்யகசிபுவை மட்டுமின்றி, அவனது பல ஆட்களையும் கூட கொன்றார். அவருடன் போரிட வேறொருவரும் இல்லாத போது, பகவான் கோபத்துடன் கர்ஜித்தபடி இரண்யகசிபுவின் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
இவ்வாறாக முழு பிரபஞ்சம் இரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபட்டது. அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு பிரம்மதேவர் முதலான அனைத்து தேவர்களும் பகவானை அணுகினர். அவர்களுள் சிறந்த ரிஷி முனிவர்களும், பிராக்களும், சித்தர்களும், வித்யாதரர்களும், நாகர்களும், மனுக்களும், பிரஜாபதிகளும், கந்தர்வர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், கிம் புருஷர்களும், வைதாலிகர்களும், கின்னரர்களும் மற்றும் மனித ரூபத்திலுள்ள வேறுபல ஜீவன்களும் அடங்குவர். பரமபுருஷராகிய அவர் ஒளிவீசும் பரஞ்ஜோதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவர்களனைவரும் அவரை அணுகி போற்றித் துதிக்கலானார்கள்.
தொடரும் . .
நாளை ..
பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment