🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரண்யகசிபு :-
மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்?
பிரகலாத மகாராஜன் கூறினார்:-
அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர். எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது சொந்த சக்திகளால் இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறார்.
அன்புத் தந்தையே, தயவுசெய்து உங்களுடைய அசுர மனோ பாவத்தை விட்டு விடுங்கள். உங்களுடைய இதயத்தில் நண்பனென்றும், பகைவனென்றும் வித்தியாசம் பாராட்ட வேண்டாம்; அனைவரிடமும் சமநோக்கு உடையவராக இருங்கள். கட்டுப்படுத்தாத, தவறாக வழிநடத்தப்பட்ட மனதைத் தவிர வேறு பகைவன் இவ்வுலகில் இல்லை. அனைவரையும் சமத்துவ நிலையில் காணும்பொழுது, ஒருவன் பகவானைப் பரிபூரணமாக வழிபடும் நிலையை அடைகிறான். முற்காலத்தில், உடலெனும் செல்வத்தைக் கவர்ந்து செ்ல்லும் ஆறு எதிரிகளை வெல்ல முடியாத, உம்மைப் போன்ற பல முட்டாள்கள் இருந்தனர். அந்த முட்டாள்கள், “பத்துத் திக்குகளிலும் உள்ள எல்லா எதிரிகளையும் நான் வென்றுவிட்டேன்” என்றெண்ணி மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் ஆறு எதிரிகளை வென்று, எல்லா ஜீவன்களிடமும் சமத்துவம் உடையவனாக இருப்பானாயின், அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகள் அறியாமையிலுள்ள ஒருவனின் கற்பனையில்தான் உருவாகின்றனர்.
ஸ்ரீமத்-பாகவதம் 7.8.6-10
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
https://suddhabhaktitamil.blogspot.com/?m=1
Comments
Post a Comment