இந்திரத்யும்ன மஹாராஜ கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை
🔆🔆🔆🔆🔆🔆
ஜேஷ்ட மாதத்தின் (ஆனி மாதம்) பௌர்ணமி தினத்தில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோரை, சுதர்ஷனத்துடன் கர்பகிரகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து ஒரு மேடையில் அமர்த்துவர். பின்னர் இவர்கள் தங்க கலசங்களின் புனிதநீரை கொண்டு விமர்சையாக நீராட்டுவர்.
நீராட்டு முடிந்த பின்னர், பகவான் ஜெகந்நாதர் கணேசரின் ரூபத்தில் காட்சியளிப்பார். இந்த நீராட்டு விழாவை தேவர்களும் விமர்சையாக கொண்டாடுவர். பிரம்மாவின் தலைமையில், அனைத்து தேவர்களும் பாரிஜாத மலரின் சாரை கொண்ட நறுமண கங்கை நீரை தங்களது சிரசின் மேல் சுமந்து வந்து பகவானை கோலாகலமாக நீராட்டுவர். பின்னர் தங்களது பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்வர்.
அனைத்து தேவர்களும் இந்த விழாவை சவுகரியமாக காணவேண்டும் என்பதற்காக இந்திரத்யும்ன மஹாராஜர் பெரிய பந்தலை நிர்மாணம் செய்தார். மேலும் பகவான் அமர்த்தப்பட்டிருந்த மேடையை ரத்தினங்கள் பாதிக்கப்பட்டிருந்த தோரணங்கள் கொண்டு விமர்சையாக அலங்காரம் செய்திருந்தார். நாளடைவில் இந்த மேடை பழையதாகி விட்டது. பின்னர் அநங்கபீமதேவர் என்ற மன்னர் புதிய மேடையை எழுப்பினார்.
ஸ்நான யாத்திரை அன்று, பகவான் அமர்ந்திருக்கும் மேடை மற்றும் அந்த இடம் முழுவதும் தோரணங்கள், ரத்தினங்கள், முத்துக்கள், மலர் மாலைகள், கொடிகள், மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அலங்கரிக்கப்படும். பக்தர்கள், தெற்கு திசையில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் எடுத்து அதனை தங்க கலசங்களில் ஊற்றி, அதனோடு வாசனை திரவியங்களை சேர்த்து, பவமணி மந்திரங்களை உச்சரித்து அந்த நீரை தூய்மையாக்குவர். பின்னர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதைப்போல் ஆதிவாஸ் விழாவை (சங்கல்பம் நிகழ்ச்சி) கடைபிடிப்பர். கர்பகிரகத்தில் இருக்கும் பகவான் ஜெகந்நாதருக்கு பல வண்ண பொடிகளை தூவிய பின்னர், அவரை நீராடும் மேடைக்கு எடுத்து வருவர். ஜெகந்நாதரோடு, பலதேவர், சுபத்திரா தேவி மற்றும் சுதர்சனத்தையும் எடுத்து வருவர்.
விக்கிரஹங்களை நீராட்டு மேடைக்கு எடுத்து செல்லும் வழி முழுவதும் மன்னரால் நியமிக்கப்பட்ட பக்தர்கள், சாமரங்கள் மற்றும் பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட விசிறிகள் மூலம் பகவானுக்கு சாமரம் வீசுவர். பக்தர்கள் பகவானுக்கு பட்டு வஸ்திரங்களை உடுத்திவிடுவர். பக்தர்கள் பகவான் ஜெகந்நாதரை உயர்த்தும்போது, இந்த கண்கொள்ளா காட்சிகளை காணும் தேவர்கள், "ஒருவேளை பகவான் ஜெகந்நாதர், மேல் லோகங்களுக்கு வர விருப்பம் கொள்கிறார் போலும்", என்று எண்ணுவர்.
இவ்வாறு வைத்த கண் வாங்காமல் , ஆனந்த பூரிப்பில் பக்தி பரவசத்தில் தேவர்கள், லக்ஷ்மிபதியான பகவானை நினைத்து, "ஓ கிருஷ்ணா! ஓ ராமா! அனைத்து புகழும் உங்களுக்கு உரித்தாகுக!". ஓ பகவானே, பிரகாசிக்கும் சூரியனை ஒத்த நீங்கள் உங்களுடைய பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறீர்கள்.எனவே நீங்கள் ஒரு கற்பக மரம் (வாஞ்சா-கல்பதரு) என்று அறியப்படுகிறீர்கள். ஆசாரியர்கள் பயங்கரமான அறியாமைக் கடலைக் கடப்பதற்கு உங்களுடைய பத்ம பாதங்களில் முழுமையாகச் தஞ்சமடைந்து, பிறவிக் கடலைக் கடக்கும்பொழுது, எந்த முறையினால் அவர்கள் கடந்தனரோ அதை மண்ணுலகிலேயே விட்டுச் செல்கின்றனர். உங்களுடைய பிற பக்தர்களிடம் நீங்கள் மிகவும் கருணை கொண்டிருப்பதால், அவர்களுக்கு உதவும் பொருட்டு இம்முறையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஓ கிருஷ்ண! ஓ ஜெகந்நாத ஓ பலராமா! சுபத்ர தேவி அனைத்து புகழும் உங்களுக்கு உரித்தாகுக!" என்று தேவர்கள் பல உத்தம ஸ்லோகங்களால் பிராத்தனை செல்வார்கள். இவ்வாறு பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் அவதார தினமான இந்த ஜேஷ்ட மாதத்தில் புனித நீராடல் மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர், இந்திரத்யும்ன மஹாராஜரிடம் "நான்கு யுகங்கள் கொண்ட ஸ்வயம்புவ மனுவின் ராஜ்யத்தில் இரண்டாம் பாகத்திலும், சத்ய யுகத்தின் முதல் பாகத்திலும், ஸ்வயம்புவ மனுவின் தூய்மையான பக்தியாலும் தியாகத்தினாலும் தான் நான் இந்த ஜெகந்நாத ரூபத்தில் தோன்றினேன்", என்று கூறினார். இந்த நாளே ஜெகந்நாதரின் புனித அவதார தினமாகும். இதன்படி, இந்த நாளில் ஆதிவாஸ் (சங்கல்பம்) பின்பற்றி மேலும் பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரையை வெகு விமர்சையாக சாஸ்திரங்களின் படி கொண்டாட வேண்டும் என்றும் கூறினார்.
மேலக ஸ்ரீ ஜெகந்நாதர், இந்த்ரத்யும்ன மஹாராஜரிடம், "கடற்கரையில் ஒரு அழிவில்லாத ஆலமரம் இருக்கிறது. இந்த மரத்திற்கு வடக்கில் ஒரு கிணறு இருக்கிறது. இந்த கிணறு அனைத்து புனித நதிகளின் நீரினாலும் நிரம்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த கிணறு மணலால் மூடப்பட்டுள்ளது. நான் நீராடுவதற்காகத்தான் அந்த கிணற்றை உருவாக்கினேன். ஆனால் இப்போது அந்த கிணற்றை காணவில்லை. நீ அந்த கிணற்றை கண்டுபிடித்து சதுர்தசி தினத்தில் சங்க நாதங்கள் முழங்க அதனை புதுப்பிக்க வேண்டும். பின் வரும் நாட்களில் பிராமணர்கள், இந்த கிணற்றின் நீர் கொண்டு என்னை (ஜெகந்நாதர்) பலதேவர், சுபத்திரா தேவி மற்றும் ப்ரம்ம தேவர் ஆகியோரை ஜேஷ்ட மாதத்தின் பௌர்ணமி தினத்தில் நீராட்டுவர்.
இந்த்ரத்யும்ன மஹாராஜருக்கு பகவான் ஜகந்நாதர் நேரடியாக கட்டளையிட்டதால், இந்த ஸ்நான யாத்திரை இன்றும் நடைபெறுகிறது. ஸ்நான யாத்திரைக்கு பிறகு பகவான் கணேசரின் ரூபத்தில் காட்சியளிப்பார்.
🔆🔆🔆🔆
மேலும் பகவான் ஜெகந்நாதர், ஸ்நான யாத்திரைக்கு பிறகு பதினைந்து தினங்கள், அலங்காரமற்ற நிலையில் தங்களை (விக்ரகங்களை) யாரும் தரிசிக்க கூடாதென்று கூறியுள்ளார். இந்த கட்டளையின்படி ஆலயங்கள் பதினைந்து நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். "அனவசர" காலம் என்று கூறப்படும் இந்த காலத்தில் பகவானை யாரும் தரிசிக்க முடியாது.
ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை நிகழ்ச்சிக்குப் பின்னர், ஜெகன்நாத விக்கிரகத்தின் திருமேனியில் மீண்டும் வண்ணம் தீட்டப்படுகிறது. இது முடிவுறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகின்றது. இந்த காலமானது "அனவஸர " என்று சொல்லப்படுகிறது. பகவான் ஜெகன்நாதரை தினமும் தரிசிப்பதற்காக கோயிலுக்குச் செல்பவர்கள் பலர் உள்ளனர். ஸ்நான யாத்திரைக்கு பின்னர் வரக்கூடிய ஜெகநாதனின் ஓய்வுக்காலம் அவர்களுக்குத் தாங்கவியலாததாக அமைகிறது. கோயிலில் பகவான் ஜெகநாதருடைய தரிசனம் இல்லாததால் கலியுக அவதாரம் பதீத பாவன ஸ்ரீசைதன்ய மஹாபிரபு மிகவும் வருந்தி. கிருஷ்ணரின் பிரிவில் கோபியர்கள் உணர்ந்த அதே வருத்தத்தினை ஜெகந்நாதரின் பிரிவினால் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு உணர்ந்தார். இந்நிலையில் அவர் தமது சங்கத்தினர்கள் அனைவரையும் கைவிட்டு ஆலாலநாத் கோவிலுக்கு சென்றார்.இன்றும் கௌடிய வைஷ்ணவர்கள், பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் இந்த திவ்ய லீலைகளை நினைவிற்கொள்ள அனைவரும் ஆலாலநாத் கோவிலுக்கு சென்று தரிசித்து வருவார்கள்.
பதினைந்து தினங்களுக்கு பகவான், ஜென்மோஹனருக்கு அருகில் "கடசேஷ கிரஹா" அல்லது "நிரோதன கிரஹா" என்னும் அறையில் பகவான் ஜெகந்நாதர் தங்குவார்.
ஸ்நான யாத்திரையின் பின்பு, மனித உருவில் அவதாரம் எடுத்ததற்காக, ஜுரம் வந்ததுபோல் லீலை செய்வார். ஜெகந்நாதர் ஜுரத்தால் அவதியுறுகிறார் என்று என்னும் பக்தர்கள், பகவானுக்கு பச்சிலை மருந்துகள் , கசாயம் மற்றும் பத்திய உணவை வழங்குவர்.
நவ யௌவனா அல்லது நேத்ரோற்ஸவம்
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஒவ்வொரு வருடமும் ஸ்நான யாத்திரையின் பின்பு பகவான் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோருக்கு மீண்டும் வர்ணம் தீட்டப்படும். இதை ஸ்ரீ அங்காரகா என்று அழைப்பர். இந்த காலத்தில் பகவானின் தரிசனம் பதினைந்து தினங்களுக்கு கிடையாது. பதினைந்து தினங்கள் முடிந்ததும் பகவான் தரிசனம் தரும்போது, பல்வேறு பட்டாடைகள், ஆபரணங்கள், மலர் மாலைகள் கொண்டு அலங்காரத்தோடு காட்சியளிப்பார். இந்த உற்சவம் நவ யௌவனா அல்லது நேத்ரோற்ஸவம் என்று அழைக்கப்படுகிறது. "அங்காரக சேவை" பற்றிய விதிமுறைகள் மற்றும் குறிப்புக்கள், "நீலாதிரி மஹோதயம்" என்ற நூலின் பதினைந்தாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடபடும் இந்த ஸ்நான யாத்திரை பூரியின் பிரதான சாலையில் எங்கு நின்றாலும், தெளிவாக காணக்கூடிய அளவிற்கு, பகவானின் ஸ்நான மேடை அமைக்கப்பெற்றிருக்கும். ஆகையால் பக்தர்கள் ஸ்நான யாத்திரையை தரிசித்து தங்கள் வாழ்வை வெற்றிமயமாக்குவார்கள்.
ஜெய் ஜெகந்நாத்,
ஜெய் பலதேவ்
ஜெய் சுபத்ரா தேவி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment