கங்காமாதா கோஸ்வாமினி இன்றைய வங்காள நாட்டில் (தற்போதைய பங்களாதேஷ்) ராஜ்ஷாஹி என்ற மாநிலத்தில் உள்ள புந்தியாவின் அரசர் நரேஷ் நாராயணாரின் ஒரே மகளாவார். அவருடைய குழந்தை பருவத்தில் அவர் சச்சி என்று அழைக்கப்பட்டார். தனது இளவயது முதலே பகவத் விசயங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். மேலும் குறுகிய காலத்திற்குள்ளேயே, வியாகரணங்கள், காவியங்கள் மற்றும் பல சாஸ்திரங்கள் குறித்து உரையாட ஆரம்பித்தார்.
சச்சி வளர்ந்ததும் அவரது அழகும், கருணையும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அவருடைய மனம் முழுமையாக மதனகோபாலனிடம் ( பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்) ஈர்க்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர்கள் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்த அவர், தான் பெளதிக வாழ்க்கையில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தான் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவதாகவும் உறுதியாக கூறினார். சச்சியின் இந்த முடிவால் அவரின் பெற்றோர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு அரசனும் அரசியும் உடல் நலக் குறைவினால் மரணம் அடைந்தனர். அவர்களுடைய மறைவிற்கு பிறகு அரசாங்க பொறுப்புகளை சச்சி ஏற்றுக் கொள்ளும் படி ஆகிவிட்டது. சிறிது காலம் ராஜ்ஜிய பொறுப்புகளை கவனித்தார். ஆனால், அவருடைய மனம் அதில் முழுமையாக லயிக்கவில்லை. அவர் எப்போதும் கிருஷ்ண சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள உறுதி கொண்டு தன்னுடைய உறவினர்களிடம் அரசாங்க பொறுப்பை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை மேற்கொண்டார்.
சச்சிக்கு எங்கும் மனஅமைதி கிடைக்காததால் நிலையான ஒரு ஆன்மீக குருவைத் நாட முடிவு செய்து முடிவில் பூரியை வந்து அடைந்தார். பூரியின் புனிதத் தன்மை அவரை ஈர்க்க தொடங்கியது. சில நாட்கள் அங்கேயே தங்கி அதன் பிறகு அங்கிருந்து அவர் விருந்தாவனத்தை நோக்கி பயணித்தார். சச்சியினுடைய நல்லதிர்ஷ்டம் அங்கு பகவான் கெளர நித்தாயின் மிகச் சிறந்த பக்தரும், அனந்த ஆச்சாரியரின் சீடருமான ஹரிதாஸப் பண்டிதரை சந்திக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றார். அவரை பார்த்தவுடன் அவருடைய தாமரைபாதங்களில் நமஸ்கரித்து கண்களில் நீர் மல்க அவரிடம் அடைக்கலம் புகுந்தார்.
அப்போது ஹரிதாஸ பண்டிதர் சச்சியின் நம்பிக்கையை சோதிக்கும் நோக்கத்தில், "ஒரு இளவரசியானவர் உலகாயத விசயங்கள் அனைத்தையும் கைவிடாமல் பக்தியைப் பயிற்சி செய்ய முடியாது. எனவே நீங்கள் உங்கள் நாட்டிற்கே திரும்பிச் சென்று உங்கள் வீட்டிலேயே பக்தியை பயிற்சி செய்வது நல்லது" என்றார். சச்சியோ ஹரிதாஸரின் இந்த உள்நோக்கத்தை புரிந்து கொண்டு அவர் விருந்தாவனத்திலேயே சிறிது காலம் தங்கி பக்தி சேவையை பற்றுதல்கள் ஏதுமின்றி தொடர்ந்து செய்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல அவருடைய தூய்மையான பக்தி சேவையால், ஆடம்பரமான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிவதை படிப்படியாக தவிர்த்தார்.
ஒரு நாள் ஹரிதாசர் சச்சியிடம் நீ உன்னுடைய பெருமை, கெளரவம், பயம் முதலியவற்றை விட்டு விட்டு விரஜ மண்டலத்தில் மதுக்கரி அதாவது யாசகம் செய்து வந்தால் பகவானின் கருணை நீ பெற முடியும் என்று கூறினார். இதை கேட்ட சச்சி மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஹரிதாஸரின் அறிவுரைப்படி ஒரு சாதாரண பெண்ணுக்குறிய உடை அணிந்து அந்த யாசகத்தில் (மதுக்கரி) ஈடுபட்டார்.
வைராக்கியத்தோடு கந்தலான ஆடைகளை அணிந்திருந்த போதிலும் ஒவ்வொரு வீதியில் செல்லும் பொழுது பார்ப்பவர்கள் அவருடைய தேக காந்தியை கண்டு இவள் ஒரு சாதாரண பெண் அல்ல என்று கருதினார்கள். நாட்கள் செல்ல செல்ல சச்சியின் வைராக்கியமும் தவ வாழ்வும் அவரை மெலிந்த உடலாக மாற்றியது. ஆயினும் கூட தனது அன்றாட கடமைகளான, யமுனையில் குளித்தல், கோவில் முற்றத்தை சுத்தம் செய்தல், பரிக்ரமா செய்தல் (திரு கோவில் வலம் வருதல்) , தீபாராதனையில் பங்கெடுத்தல் மற்றும் உபன்யாசம் கேட்டல் போன்றவற்றை இடைவிடாமல் நிறைவேற்றினார்.
தனது அறிவுரைகளை சச்சி மிகவும் தீவிரமாக நிறைவேற்றுவதைக் கண்ட ஹரிதாஸ பண்டிதர், சச்சியின் மீது கருணை கொண்டார். ஒரு நாள் அவர் சச்சியை அழைத்து, "நீங்கள் ஒரு இளவரசி என்றாலும் கிருஷ்ணரின் மீதான உங்கள் தனிப்பட்ட தியாகமும் பக்தியும் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. எனவே நீங்கள் ஹரிநாம மந்திர தீட்சைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
இவ்வாறாக சித்திரை மாதம் பதிமூன்றாம் நாளில் பெளர்ணமி தினத்தன்று சச்சிதேவி ஹரிதாஸ் பண்டிதரிடமிருந்து "ராதா கிருஷ்ண" மந்திர தீட்சை பெற்றார். அதன் பிறகு சச்சிதேவி தன்னை முழுவதுமாக குரு மற்றும் பகவான் கோவிந்தரின் சேவையில் அர்ப்பணித்தார். தினமும் அவர் ஹரிதாஸ் பண்டிதர் வழங்கிய கோஸ்வாமி சாஸ்திரம் குறித்த சொற்பொழிவுகளில் மிகவும் கவனத்துடன் கலந்து கொண்டார். மிக குறுகிய காலத்திற்குள் கோஸ்வாமி சித்தாந்தத்தை முழுவதுமாக தெரிந்துகொண்டார்.
அச்சமயத்தில் தினமும் மூன்று லட்சம் முறை ஹரிநாமத்தை உச்சரிக்கும் ஹரிதாஸப் பண்டிதரின் மிகச் சிறந்த சீடரான லட்சுமிபிரியா தேவி விருந்தாவனத்திற்கு வந்தார். ஹரிதாஸப் பண்டிதரின் அறிவுறுத்தலின் கீழ் லட்சுமிபிரியாதேவியும், சச்சிதேவியும் ராதா குண்டத்தில் ஹரிநாம பஜனையை பயிற்சி செய்ய தொடங்கினர். தினமும் அவர்கள் இருவரும் கோவர்தனகிரியை பரிக்ரமா செய்தனர். சச்சிதேவியின் ஹரிநாம பஜனை மற்றும் அவரின் முழு தூய்மையான பக்தியிலும் உறுதியான நம்பிக்கை கொண்ட ஹரிதாஸர் ஒருநாள் அவரை அழைத்து புருஷோத்தம க்ஷேத்திரமான பூரி தாமத்திற்குச் சென்று அங்கு வசிக்கும், வந்தனங்களுக்குரிய மக்களிடையே பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளையும் , ஹரிநாம சங்கீர்த்தனத்தையும் பிரச்சாரம் செய்யுமாறு கட்டளை இட்டார்.
அவர் பூரிக்கு வந்த சமயத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சகாக்களில் பெரும்பாலானோர் இந்த பௌதீக உலகில் தங்களது லீலைகளை முடித்து பகவத்தாமத்திற்கு திரும்பி சென்றுவிட்டார்கள். சர்வபெளம பட்டாசாரியாவின் பாழடைந்த இல்லத்தில் சச்சிதேவி வாழத் துவங்கி அங்கு சர்வபெளம பட்டாசாரியரால் வணங்கப்பட்ட தாமோதர சாலிகிராமை வைத்து தன்னுடைய நித்திய ஆராதனை வழிபாடுகளை துவக்கினார். அங்கு ஒவ்வொரு நாளும் சச்சிதேவி பூரி மக்களுக்கு ஸ்ரீமத்பாகவத ஸ்லோகங்களை படித்து காண்பித்தார். இதன் மூலமாக வெகு விரைவிலேயே அவர் ஸ்ரீமத் பாகவதத்தின் மிகவும் பெருமை வாய்ந்த பிரச்சாரகராக மதிக்கப்பட்டார்.
ஒரு நாள் பூரியின் மன்னரான முகுந்த தேவர் சச்சிதேவின் ஸ்ரீமத் பாகவத உரையைக் கேட்பதற்காக வந்தார். அவரது உபன்யாசத்தினால் கவரப்பட்டு அதன்பால் ஒரு ஈர்ப்பையும் உணர்ந்த மன்னர் அவரை (சச்சிதேவியை) பாராட்டும் விதத்தில் ஏதாவது ஒன்றை வெகுமதியாகக் கொடுக்க சித்தமானார். அன்றிரவு மன்னரது கனவில் தோன்றிய பகவான் ஜெகந்நாதர் ஸ்வேத கங்காவிற்கு அருகாமையிலுள்ள ஒரு பகுதியை சச்சிதேவிக்கு வழங்குமாறு கட்டளையிட்டார். அதன்படி மன்னர் அடுத்த நாள் காலையில் சச்சிதேவியை சந்தித்து தனது கனவை விளக்கினார். பின்னர் ஸ்வேத கங்கைக்கு அருகிலுள்ள ஒரு நிலத்தை தனது எளிமையான வெகுமதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டார். முதலில் சச்சிதேவி மறுத்து விட்டார். அதன்பின்னர் இது பகவான் ஜெகந்நாதரின் கட்டளை என்பதாலும் மன்னரின் வற்புறுத்தலினாலும் அதை ஏற்றுக் கொண்டார்.
சச்சிதேவி ஒரு அரச குடும்பத்தில் பிறந்த இளவரசி என்பது பூரி மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது. அவர் ஒரு முறை மங்களகரமான வருணி தினத்தன்று கங்கை நதியில் புனித நீராட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஸ்ரீக்ஷேத்திரத்தில் தங்கவேண்டுமென்பது தன்னுடைய குருவின் கட்டளையென்பதால் தன் விருப்பத்தைக் கைவிட்டார்.
அன்றிரவு பகவான் ஜெகந்நாதர் சச்சிதேவியின் கனவில் தோன்றி, "சச்சி கவலைப்படாதே!! மிகவும் புனிதமான வருணி தினத்தில் நீ ஸ்வேத கங்கையில் நீராடுவாயாக, அப்போது கங்காதேவி (கங்கை நதி) உன்னை சந்திக்க நீ ஸ்நானம் செய்யும் இடத்திற்கே வருவார்" என்று அருளினார்.
அந்த புனிதமான வருணி தினத்தின் போது சச்சிதேவி தனியாக இரவில் ஸ்வேதகங்காவில் புனித நீராடுவதற்கு சென்றார். ஸ்வேதகங்காவில் அவர் இறங்கி கை வைத்த உடனேயே கங்கை நதியின் பிரவாகம் போல் ஸ்வேதகங்கா நீர் அவரை அடித்துச் சென்று பகவான் ஜெகந்நாதருக் கென்று ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனிமையான நீராடும் பகுதியில் ஜெகந்நாதரின் ஆலயத்தின் உள்ளே அவர் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பூரி மக்கள் புனிதமான நாமங்களை ஜபித்துக் கொண்டு அந்த புனித நீரில் நீராடி கொண்டு இருப்பதைக் கண்டார்.
இந்த சமயத்தில் கோவிலினுள் இருந்து வித்தியாசமான சப்தம் வருவதை கோயில் பாதுகாப்பு ஊழியர்கள் கவனித்து எழுந்தனர். இச்செய்தி மன்னருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கோயில் கதவும் திறக்கப்பட்டது.
அங்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸ்ரீமத் பாகவதத்தில் புலமை வாய்ந்த சச்சிதேவி கோவிலுக்குள் தனியாக நின்று கொண்டு இருப்பதை கண்டார்கள். பகவானுக்கு சேவகம் செய்யும் பாண்டாக்கள் அவர் மீது சந்தேகப்பட்டு பகவான் ஜெகந்நாதருடைய ஆபரணங்களை திருடுவதற்காக சச்சிதேவி அங்கு வந்திருப்பதாக சந்தேகப்பட்டார்கள். ஆனால் வேறு சிலரோ அது போல இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். ஆனால் முடிவில் சச்சிதேவி ஒரு குற்றவாளி என்று கருதப்பட்டு அவரை சிறைச்சாலையில் அடைத்தார்கள். சச்சிதேவியோ அந்த பெளதீக வெளிப்புற ஏற்பாடுகள் எதிலும் கவனம் செலுத்தாமல் பகவானின் புனித நாமமான கிருஷ்ணரின் திவ்ய நாமங்களை மட்டும் ஆனந்தத்துடன் உச்சாடனம் செய்தவாறு இருந்தார்.
அன்று நள்ளிரவிற்குப் பிறகு மன்னர் முகுந்த தேவர் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதரைக் தனது கனவில் கண்டார் அப்போது மிகவும் கோப்த்துடன் பிரபு ஜெகந்நாதர் மன்னருக்கு கட்டளையிட்டார், "கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற சச்சிதேவியின் விருப்பத்தை நிறை வேற்றும் பொருட்டு நான் தான் கங்கையை என் பாதத்திற்கு கொண்டு வந்தேன். எனவே உடனடியாகச் சென்று சச்சிதேவியை விடுவிக்க வேண்டும். மேலும் நீயும், கோவில் பூஜாரிகள் மற்றும் பாண்டாக்கள் உடனடியாக சச்சிதேவியின் திருப்பாதத்தில் பிரார்த்தனைகள் செய்து அவரிடமிருந்து மந்திர தீட்சையும் பெற வேண்டும்". என்றார்.
மறுநாள் காலை மகராஜா முகுந்ததேவர் நீராடிய பிறகு சச்சிதேவியை காண்பதற்கு விரைந்து சென்றார். அவரை சிறையிலிருந்து விடுதலை செய்த பிறகு சாஷ்ட்டாங்கமாக அவருடைய காலில் விழுந்து அவருடைய கருணைக்காக வேண்டினார். மன்னர், தான் கண்ட கனவினை சச்சிதேவியிடம் கூறி அவரது திருப்பாதத்தில் தஞ்சம் புகுந்தார். பின் பகவானின் விருப்பத்திற்கிணங்க அடுத்து வந்த புனித நாளில் மன்னர் முகுந்த தேவர்,மற்றும் எண்ணற்ற கோயில் பூஜாரிகளும் அவரிடம் மந்திர தீட்சை பெற்றனர். அன்றிலிருந்து சச்சிதேவி "கங்காமாதா கோஸ்வாமினி" என்று அழைக்கப்பட்டார்.
தன்னுடைய ஆன்மீக குருவிற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மகராஜர் முகுந்ததேவர் ஒரு சில நிலப் பகுதிகளை கங்கா மாதவிற்கு காணிக்கையாக தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். பெளதீக பரிசுகளை வாங்க மறுத்த கங்காமாதா கோஸ்வாமினி அதன் பிறகு முகுந்ததேவரின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பரிசுகளை வாங்க சம்மதம் தெரிவித்தார். அதில் சில பொருட்களை மட்டும் மன்னரிடமிருந்து பெற்றுக் கொள்ள கங்கா மாதா சம்மதம் தெரிவித்தார். அதன்படி இரண்டு பாத்திரங்கள் நிறைய பகவான் ஜகந்நாதரின் மகா பிரசாதம் அனைத்து வைஷ்ணவர்களும் புசிப்பதற்கு மற்றும் இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகள். அது தவிர பகவானுக்கு அர்ப்பணம் செய்த சிறிய ஆடை மற்றும் நூற்றி அறுபது காசுகள் இதுவே அவருக்கு மகராஜர் முகுந்த தேவரிடமிருந்து அன்பளிப்பாக தினமும் பகவானின் மதியவேளை பூஜைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கங்காமாதா கோஸ்வாமினி கீ ஜெய்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment