ஸ்ரீவாஸ பண்டிதர்

 

ஸ்ரீவாஸ பண்டிதர்


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீவாஸ-பண்டிதோ தீமான் ய: புரா நாரதோ முனி: 

பர்வதாக்யோ முனி-வரோ ய ஆஷீன் நாரத-ப்ரிய:

ஸ்ரீ-ராம-பண்டித: ஸ்ரீமான் தத்-கனிஷ்ட-ஸஹோதர:

நாம்னாம்பிகா வ்ரஜே தாத்ரீ ஸ்தன்ய-தாத்ரீ ஷ்திதா புரா

சைவியம் மாலினீ நாம்னீ ஸ்ரீவாஸ-க்ருஹினீ மதா


கிருஷ்ண லீலையின் நாரதமுனிவரே கெளர லீலையின் ஸ்ரீவாஸ பண்டிதராவார். நாரத முனிவரின் நண்பரான பர்வத முனிவரே ஸ்ரீவாஸ பண்டிதரின் இளைய சகோதரர் ஸ்ரீ ராம பண்டிதராவார். ஸ்ரீவாஸ பண்டிதரின் மனைவி மாலினி தேவி, விரஜத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டும் செவிலித்தாயான அம்பிகா ஆவார். (கெளர- கணோதேஷ- தீபிகா 90) 


பஞ்ச தத்துவம்

🍁🍁🍁🍁🍁🍁


பஞ்சதத்வாத்மகம் க்ருஷ்ணம் 

பக்தரூப ஸ்வரூபகம் 

பக்தாவதாரம் பக்தாக்யம் 

நமாமி பக்தஷக்திகம்


பக்த ரூபம், பக்த ஸ்வரூபம், பக்த அவதாரம், பக்தன் மற்றும் பக்த சக்தி, எனப்படும் தமது தோற்றங்களிலிருந்து வேறுபடாதவரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன். 

(சைதன்ய சரிதாம்ருதம் 1.1.14)


பரமசக்தியானது ஐந்துவிதமான லீலைகளை அனுபவிப்பதற்கான, தனது விருப்பத்தின் காரணமாக, ஐந்து விதங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றது. இயக்கவியல்ரீதியாக, அவர்களிடையே எவ்விதமான வேறுபாடும் இல்லை: ஐந்து குணாதிசயங்களிலும் ஒரே உண்மையையே வெளிப்படுத்துகின்றனர். இவ்விதமாக, ஸ்ரீ கெளராங்கர், ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர், ஸ்ரீ கதாதர பண்டிதர் மற்றும் ஸ்ரீவாஸ பண்டிதர் மற்றும் பிற பக்தர்கள் அனைவரும் செயல்முறையில் காணும்போது, ஒருவருக்கொருவர் எவ்விதமான வேறுபாடும் அற்றவர்களே. எனினும், பரம உண்மை பக்தராக (பக்த-ரூபம்), பக்தரின் விரிவாக (பக்த-ஸ்வரூபம்), பக்த அவதாரமாக(பக்தாவதாரம்), பக்த சக்தியாக(பக்த-சக்தி), மற்றும் தூய பக்தராக(பக்தாக்யம்) தெய்வீகமான உறவுமுறைகளை பல்வேறு விதங்களில் சுவைப்பதற்காக அவதரித்துள்ளனர்.


இந்த ஐந்து உண்மைகளில், நந்தரின் மைந்தனாகிய பரம புருஷரே, பக்தி மனோபாவத்தில் பக்த ரூபமாக அவதரித்துள்ளார். அவருடைய முழு விரிவாகிய (ஸ்வயம் பிரகாசம்) பலராமர், பக்தி மனோபாவத்தில் பக்த ஸ்வரூபமாக, நித்யானந்த பிரபுவாக அவதரித்துள்ளார். மஹா விஷ்ணு பக்தி மனோபாவத்தில் பக்தாவதாரமாக, அத்வைத ஆச்சாரியராக அவதரித்துள்ளார். இந்த மூன்று பிரபுக்களும் விஷ்ணு தத்துவங்களாவர். பக்த சக்தி (பக்த-சக்தி) மற்றும் தூய பக்தர் (ஸுத்த பக்தர்) விஷ்ணு தத்துவத்தின் சக்திகளாக அறியப்படுகின்றனர். அவர்களிடையிலான உறவின் அடிப்படையில் அவர்கள் வேறுபாடற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். 


கதாதர பண்டிதர், ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி, மற்றும் இராமனந்த ராயர் போன்றோர் முதன்மை பக்த சக்திகள். நட்பு மற்றும் சேவக மனோபாவத்தில் உள்ள ஸ்ரீவாசர் உட்பட மற்றைய பக்தர்கள் தூய பக்தர்களாவர். இவ்வாறாக ஸ்ரீவாஸ பண்டிதர் பஞ்ச தத்துவத்தில் ஒருவராவார். 



ஸ்ரீவாஸருடைய தோற்றம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீவாச பண்டிதர் சில்லட்டில் என்ற ஊரில் அவதரித்தார். பின்னாளில் அவர் கெளராங்க லீலையை சிறப்புறச் செய்வதற்கான கருவியாக நவத்வீபத்தை வந்தடைந்தார். ஸ்ரீவாஸருக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர் : ஸ்ரீ ராம பண்டிதர், ஸ்ரீபதி பண்டிதர் மற்றும் ஸ்ரீகாந்த அல்லது ஸ்ரீநிதி பண்டிதர், இவர்கள் அனைவருமே மஹாபிரபுவின் லீலையில் பங்குகொண்டனர் என்பதை சைதன்ய பாகவதம் மற்றும் சைதன்ய சரிதாம்ருதம் மூலமாக அறிகின்றோம். 


கெளடீய வைஷ்ணவ அபிதானம் குறிப்பிடும் பிரேம விலாஸம் கூறுவதாவது, ஸ்ரீவாஸ பண்டிதருடைய தந்தையான ஸ்ரீ ஜலதர பண்டிதர் வேத பிராமணராக இருந்தார். ஸ்ரீவாஸ பண்டிதர் அவருடைய ஐந்து மகன்களில் இரண்டாவது மகன் ஆவார். மூத்த மகனான ஸ்ரீ நளின பண்டிதரின் மகளான நாராயணி தேவி, சைதன்ய பாகவதத்தின் ஆசிரியரான விருந்தாவன தாஸரின் அன்னையாவாள். நாராயணி தேவியின் கணவர் வைகுந்த தாஸ பிராமணர், விருந்தாவன தாஸர் அன்னையின் வயிற்றில் இருந்தபோதே இறந்துவிட்டார், எனவே அவள் குமாரஹட்டாவில் (ஹலிசாஹர் கிராமத்தில்) இருந்த தனது கணவரின் இல்லத்தைவிட்டு, நவத்வீபத்தில் உள்ள ஸ்ரீவாஸ பண்டிதரின் அடைக்கலத்தில் வாழ்வதற்கு வந்துவிட்டாள். 



ஸ்ரீவாஸ பண்டிதர் மற்றும் நிமாய் பண்டிதர்


🍁🍁🍁🍁🍁🍁🍁


தனது மாணவ பருவத்தில் நிமாய், கதாதரர், முகுந்தர் மற்றும் பிற பக்தர்களுடன் வாதத்தில் ஈடுபட்டார், முதலில் அனைவருடைய வாதங்களையும் முறியடித்து,  பின்னர் எவ்வாறு அவர்களும் முறியடிக்கலாம் என்பதை கற்றுத்தருவார். அவருடைய திறமையை கண்டு பக்தர்கள் வியப்படைவர், இருப்பினும், கிருஷ்ண பக்தராக ஆனால் மட்டுமே, இவருடைய அறிவு பலனிக்கும் என்று எண்ணினர். நிமாய், ஸ்ரீவாஸ பண்டிதரைப் போன்ற பக்தர்களை எங்கு பார்த்தாலும் நமஸ்கரிப்பார், அவர்களும் இவரை, “கிருஷ்ண பக்தனாவாய்” என்று ஆசிர்வதிப்பர்.


ஒருநாள் ஸ்ரீவாஸ பண்டிதர் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது நிமாயை சந்தித்தார். நிமாயிடம் கூறினார், “மக்கள் கிருஷ்ண பக்தர்களாக ஆவதற்காக கற்கின்றனர். இருப்பினும், கிருஷ்ண பக்தனாக ஆகவில்லை என்றால், படித்து என்ன பிரயோஜனம்? உனது நேரத்தை வீணடிக்காதே. உடனடியாக கிருஷ்ண வழிபாட்டை மேற்கொள்” என்றார். 


தனது பக்தரிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைகேட்டு பேரானந்தம் அடைந்த மஹாபிரபு, “பக்தராகிய தங்களுடைய கருணையினால் மிக விரைவில் கிருஷ்ண பக்தியை மேற்கொள்வேன்” என்றார். தங்களால் உதவிட முடியவில்லை என்றாலும், நிமாயால் கவரப்பட்டிருந்த பக்தர்களால், அவருடைய யோகமாயை லீலா சக்தியின் காரணத்தினால் அவரே தங்களுடைய பகவான் என்பதை அறியமுடியாமல் இருந்தனர். இது வியப்பிற்குரியதாகவும் கவர்ச்சிகரமான லீலையாகவும் இருந்தது.



நிமாய் பக்தராகுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁


கயாவிலிருந்து திரும்பிய நிமாய், பிரேமைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். இதனைக் கண்டு பயந்த சச்சி மாதா, தனது மகன் பைத்தியமாகிவிட்டதாக எண்ணினாள். ஸ்ரீவாஸ பண்டிதர் அவரைக் காணவந்தபோது, “நான் பைத்தியமாகிவிட்டதாக அனைவரும் எண்ணுகின்றனர். தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று வினவினார். அதற்கு ஸ்ரீவாஸ பண்டிதர் புன்னகைத்தவாறு கூறினார்: 


தங்களுடைய பைத்தியம் நல்ல பைத்தியம். நானும் இவ்வாறு ஆகவேண்டும் என்றே விரும்புகிறேன். உங்களுடைய தேகத்தில் பரவச அறிகுறிகளை காண்கிறேன். பகவான் கிருஷ்ணர் தங்கள் மீது கருணைகொண்டுள்ளார்.” 


இதனால் நிம்மதியடைந்த மஹாபிரபு ஸ்ரீவாஸரை கட்டியணைத்து, “தாங்களும் நான் பைத்தியமாகிவிட்டதாக கூறியிருந்தால், நான் கங்கையில் உயிரை மாய்த்திருப்பேன்” என்றார்.

(சைதன்ய பாகவதம் 2.2.113-7)


மஹாபிரபு புனித நாம ஸங்கீர்த்தனத்தை தனது இல்லத்திலும், ஸ்ரீவாஸ பண்டிதருடைய இல்லத்திலும் மேற்கொண்டபோது, அக்கம்பக்கத்து நாத்திகவாதிகள் அனைவரும் சப்தத்தின் காரணமாக தங்களுடைய தூக்கம் கெடுவதாக புகார் செய்தனர். இயக்கத்தை தடைசெய்வதற்கான வழிகளை எதிர்பார்த்திருந்த அவர்கள், அரசர் மிகவிரைவில் பக்தர்களை தண்டிக்கவுள்ளார் என்ற பொய்த்தகவலை பரப்பிவிட்டனர். அப்பாவியான ஸ்ரீவாஸ பண்டிதர், இந்த கட்டுக்கதைகளை உண்மையென்று நம்பி கவலையடைந்தார். உடனே அவர் பாதுகாப்பை வேண்டி நரசிம்ம தேவரை பூஜித்தார்.


பக்தர்களுடைய துன்பங்களை நீக்குபவரான பகவான், ஸ்ரீவாஸருடைய கவலையை அறிந்து அவருடைய இல்லத்திற்கு சென்றார். கதவை உதைத்துத்தள்ளி உள்ளே சென்ற பகவான் கூறினார், “யாரை வழிபட்டுக் கொண்டுள்ளீரோ அதே பகவானாக உமக்குமுன்னால் நிற்கின்றேன். நான் பக்தர்களை காத்து துஷ்டர்களை அழிப்பேன். கவலைவேண்டாம்.” இவ்வாறாக கூறிக்கொண்டே வீரமான தோரணையில் (வீராஸனத்தில்) அமர்ந்தவர் நரசிம்ம தேவரின் ரூபத்தில் கைகளில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலரை ஏந்தியவராக காட்சியளித்தார். 


பகவானுடைய இத்தகைய அதியற்புத காட்சியைகண்ட ஸ்ரீவாஸர், பிரேமானந்தத்தில் திளைத்தவராக பகவானை போற்றத் துவங்கினார். ஸ்ரீவாஸ பண்டிதருடைய போற்றுதல்களால் மகிழ்ந்த பகவான் அவருடைய மனைவி மற்றும் குடும்ப அங்கத்தினர்களை தனது தெய்வீக ரூபத்தைக் காண அழைக்குமாறு கூறினார். நாராயணி தேவிக்கு தனது பிரஸாதத்தை வழங்கி, புனித நாமத்தை உச்சரிப்பதற்கான, தனது கருணையை அவளுக்கு வழங்கினார். பக்தர்கள் பகவானுக்கு பிரியமானவர்களாக இருப்பதைப்போலவே, பகவானும் பக்தர்களுக்கு பிரியமானவராக இருக்கின்றார்.



ஸ்ரீவாஸ அங்கனில் (வீட்டில்) ஸங்கீர்த்தனம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மஹாபிரபு தனது ஸங்கீர்த்தன லீலைகளை தொடங்க நினைத்தபோது, ஸ்ரீவாஸருடைய இல்லமே தனது அந்தரங்க சகாக்களுக்குரியதாக எண்ணினார். ஏகாதசி அன்று தொடங்கப்பட்ட ஸங்கீர்த்தனத்தில், ஸங்கீர்த்தனத்தை ஆரம்பித்தவுடனேயே மஹாபிரபு பரவசத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்தினார்.


ஸ்ரீ ஹரி வாஸரே ஹரி-கீர்த்தன விதான

ந்ருத்ய ஆராம்பிலா பிரபு ஜகதேர ப்ராண

புண்யவந்த ஸ்ரீவாஸாங்கணே ஷுபாரம்ப

உடில கீர்த்தன-த்வனி “கோபால!கோவிந்த!”


ஒருவர் ஹரி-வாஸர என்றறியப்படும் ஏகாதசி அன்று ஹரிகீர்த்தனையில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அன்றைய இரவு, உலகின் உயிர்மூச்சான மஹாபிரபு நடனமாடத்தொடங்கினார். ஸங்கீர்த்தன இயக்கத்தின் மங்களகரமான ஆரம்பம் ஸ்ரீவாஸ பண்டிதரடைய இல்லத்தில் தொடங்கியது, அதில் கோபாலா, கோவிந்த என்ற கிருஷ்ணருடைய நாமங்களின் ஒலியலைகள் விண்ணை தொட்டன. (சைதன்ய பாகவதம் 2.8.77-8)


துஷ்டர்களும்,  கல்நெஞ்சம் கொண்டவர்களும், உள்ளே நுழைந்து மஹாபிரபுவையும் பக்தர்களையும் நிந்தித்துவிடக் கூடாது என்பதற்காக கதவை தாளிட்டு வைக்குமாறு பகவான் உத்தரவிட்டார். மஹாபிரபுவினுடைய சீடர்கள் நாத்திகர்களுடைய நிந்தனைகளை கண்டுகொள்ளாது, புனித நாம பரவசத்தை தொடர்ந்தனர். நீண்ட இரவின் ராஸலீலை கோபியர்களுக்கு நொடிப்பொழுதாக  இருந்ததைப்போன்றே, மஹாபிரபு மற்றும் அவருடைய பக்தர்களுக்கும் ஸ்ரீவாஸருடைய இல்லத்தில் இரவு முழுக்க நடைபெற்ற ஸங்கீர்த்தனம் நொடிப்பொழுதாகவே தோன்றியது.



ஸ்ரீவாஸருக்கு அபராதம் இழைத்தல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


வருடம் முழுவதும் தினந்தோறும் இரவில் ஸ்ரீவாஸ பண்டிதருடைய இல்லத்தில், கதவு தாளிடப்பட்ட நிலையில் மஹாபிரபுவின் கீர்த்தனைகள் தொடர்ந்தன. அச்சமயங்களில் எண்ணற்ற அபக்த பிராமணர்கள் மஹாபிரபுவையும், அவருடைய சீடர்களையும், நிந்திக்க முற்பட்டனர். உள்ளே என்ன நடக்கின்றது என்பதை காணமுடியாமல், அபக்தர்கள் அனைவரும் வெகுவாக பொறாமை கொண்டிருந்தனர். அதில் பிராமண பட்டச்சாரியரான, கோபால சபலா என்பவர் காளியின் படையலான மாமிசத்தை, ஸ்ரீவாஸருடைய இல்ல முற்றத்தில் வைத்து அவரை இழிவுபடுத்த எண்ணினார். மாமிசத்துடன் மது மற்றும் சிகப்பு மலர்கள், சிகப்பு சந்தனம் போன்றவற்றை வைத்திருந்தார். காலையில் கதவைத் திறந்த ஸ்ரீவாஸர் , இவைகளைக் கண்டு சிரித்தார். அவர் சப்தமாக, “சாக்தனாகிய நான் இரவு முழுவதும் காளியை வழிபட்டுக் கொண்டிருந்ததை அனைவரும் பாருங்கள்” என்றார். அவரை நன்கறிந்திருந்த அக்கம்பக்கத்தவர்கள், அவைகளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, சாணத்தால் தூய்மைப்படுத்தினர்.


ஸ்ரீவாஸ பண்டிதருக்கு இழைத்த இத்தகைய அபராதத்தின் காரணமாக, கோபால சபலா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். ஒருநாள் கங்கைக்கு நீராட வந்த மஹாபிரபுவிடம் தன்னை இந்த பிணியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினார். அதற்கு மஹாபிரபு கோபமாக பதிலளித்தார்: 


“பாவியே ! பக்தர்களிடம் பொறாமை கொண்டவனே ! நான் உன்னை ரட்சிக்க மாட்டேன். இலட்சக்கணக்கான பிறவிகளுக்கு புழுக்களால் உண்ணப்படும் நிலைக்கு ஆளாவாய். ஸ்ரீவாஸ பண்டிதர் காளியை வழிபட்டதாக எண்ணவைத்த நீ, இலட்சக்கணக்கான பிறவிகளுக்க ரெளரம் எனப்படும் நரகத்தில் உழல்வாய்.” (சைதன்ய சரிதாம்ருதம் 1.17.51-2)


மஹாபிரபு சந்நியாசம் ஏற்றபின்னர், அபராதங்களை மன்னிக்கும் இடமாகிய, குலியாவிற்கு வருகைபுரிந்தார். குலியா தற்போது நவதீப நகராக இருப்பதுடன் கோலத்வீபம் என்றும் அறியப்படுகிறது. இம்முறை கோபால சபலா மன்னிப்பு வேண்டியாசித்தபோது, கருணைகொண்ட மஹாபிரபு, ஸ்ரீவாஸ பண்டிதரிடம் மன்னிப்பு வேண்டுமாறு கூறினார். அபராதங்களிலிருந்து விடுபட விரும்புபவர், அபராதம் இழைத்த நபரிடமே, மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்ரீவாஸர் கோபால சபலாவை மன்னித்தபோது, அவர் தனது அபராதங்களிலிருந்து விடுபட்டார்.



சந்த்காசி ஸங்கீர்த்தனத்தை முறியடிக்க முயற்சித்தல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


அமானீன மானதேன மனோபாவத்தில், - மற்றவர்களிடம் மரியாதை எதிர்பாராமல், மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பவர் – மஹாபிரபு அனைவரையும் அரவணைத்து, பகவானின் புனித நாமத்தை உச்சரிக்க வேண்டியதின் அவசியத்தை, வலியுறுத்தி யாசித்தார். இத்தகைய சீடர்கள் அனைவரும் சங்குகள் மற்றும் மிருதங்கங்களின் முழக்கத்துடனான, ஸங்கீர்த்தனத்தில் கலந்துகொண்டனர். பாடகர்களும், நடனக்கலைஞர்களும், விஷேசமற்ற நாட்களில் மகாமாயை வழிபடுவதில் ஈடுபட்டிருப்பதாக,  எண்ணிய பெளதிகவாதிகள் அவர்களை பலாவாறாக நிந்தித்தனர். ஒருநாள் உள்ளூர் அதிகாரியான சிரஜுத்தின் சந்த் காசி என்றறியப்படுபவரான காசி நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியை கண்டார். ஸங்கீர்த்தன ஒலியின் அதிர்வைக் கேட்டு எரிச்சலுற்றவராக, கோபப்பட்டார். எனவே அவர் ஸ்ரீவாஸரின் இல்லத்திற்கு சென்று அங்குள்ள மிருதங்கங்களை உடைத்தெறித்து, சில பக்தர்களை அடித்து எச்சரித்தார். “எவரேனும் மீண்டும் இந்த ஸங்கீர்த்தனத்தை தொடர்ந்தீர்கள் என்றால்,  கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்” என்றார். இச்த செய்தி நகரிலுள்ள அபக்தர்களுக்கு பேரானந்தத்தை அளித்ததுடன், பக்தர்களை பரிகசிப்பதை ஆனந்தமாக தொடர்ந்தனர். 


இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட மஹாபிரபு, சினத்தினால் வெகுண்டார். தீப்பந்தங்களையும் மிருதங்கங்களையும் எடுத்துக்கொண்டு,  பயமின்றி ஸங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளுமாறு பக்தர்களுக்கு உத்தரவிட்டார். பக்தர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து, தனது தலைமையில் கங்கைக்கரையில் மாபெரும் ஊர்வலத்தை மேற்கொண்டு, நடனத்தையும் மேற்கொண்டு வழிநடத்தினார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் தங்களது இல்லறக்கடமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஸங்கீர்த்தன ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். துர்பாக்கியசாலிகள் இத்தகைய கீர்த்தன அதிர்வை கேட்டு,  இதயம் நடுங்கினர். 


இதற்கிடையில், ஆயிரக்கணக்கான இந்துக்கள் தனது இல்லத்தை நோக்கிவருவதைக்கண்ட சந்த்காசி, நடுங்கிய இதயத்துடன் ஒளிந்துகொள்வதற்கு ஓடினான். 


அங்கு வந்தடைந்ததும் மஹாபிரபு அக்கம்பக்கத்திலிருந்தவர்களிடம் காசியை துன்புறுத்துவதற்காக இங்கு வரவில்லை என்பதை அன்புடன் தெரிவிக்குமாறு, கேட்டுக்கொண்டார்.  மஹாபிரபு அழைத்த இத்தகைய கண்ணியமான முறையைக் கேட்ட காசி, அவரால் கவரப்பட்டவராக வெளியே வந்தார். அவர் நீலம்பரச் சக்கரவர்த்தியின் சகோதரர் என்ற உறவில், மஹாபிரபுவை “மருமகனே” என்று அழைத்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, நட்புறவு உரையாடல் தொடர, காசி பின்வரும் கதையை நினைவுகூர்ந்தார்: “நான் மிருதங்கத்தை உடைத்த அன்றைய இரவில்,  நான் கண்ட கனவில், பாதி மனிதன் மற்றும் பாதி மிருகமாக உள்ள பயங்கரமான உருவத்தைக் கண்டேன். அவர் எனது மார்பின் மேல் அமர்ந்து  மிருதங்கத்தை உடைத்ததால் எனது இதயத்தை கிழிக்கப்போவதாக அச்சுறுத்தினார். நான் மிகவும் பயந்திருப்பதைக் கண்ட அவர், என்னை அமைதிப்படுத்தி, இனிமேல் ஸங்கீர்த்தனத்திற்கு தடையாக இருக்கமாட்டேன் என்று உறுதியளித்தால் மன்னிப்பேன் என்றார். 


சந்த்காசி தனது மார்பில் பதிந்துள்ள நரசிம்மதேவரின் கூரிய நக கீறல்களை காண்பித்தார். நானோ, எனது வம்சாவழியினரோ,  இனிஒருபோதும் ஸங்கீர்த்தனத்திற்கு தடைசெய்ய மாட்டோம் என்று உறுதியப்பதாக கூறினார். அத்துடன் அவரும் மஹாபிரபுவின் பக்தராகினார். சந்த்காசியின் சமாதி பழமைவாய்ந்த கோலோக சம்பக மரத்தின் அடியில், தற்போதைய பாமன் புகுர் எனப்படும் பிராமண் புஷ்கரணியில் அமைந்துள்ளது. இந்துக்களும் முகம்மதியர்களும் இணைந்து சந்த்காசியின் சமாதிக்கு மரியாதை செலுத்துகின்றனர். 



ஸ்ரீவாஸ பண்டிதர் குமார ஹட்டாவிற்கு செல்லுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மஹாபிரபு கட்வாவில் சந்நியாசம் ஏற்றதும், நவத்வீபத்தில் இனி தங்கினால் மஹாபிரபுவின் நினைவுகளால் வேதனையே மிஞ்சும் என்று ஸ்ரீவாஸ பண்டிதர் எண்ணினார். எனவே அவரும் அவருடைய சகோதர்களும் ஈஸ்வரபுரியின் ஜன்மஸ்தானமாகிய குமாரஹட்டாவிற்கு (ஹலிஸஹருக்கு) இடம்பெயர்ந்தனர். எனினும் ஸ்ரீவாஸ பண்டிதரும், அவருடைய சகோதர்களும் வருடந்தோறும் குமாரஹட்டாவிலிருந்து மஹாபிரபுவைக் காண நீலாச்சலத்திற்கும், சச்சிமாதாவைக் காண மாயாபுருக்கும் பயணம் செய்துவந்தனர். 


ஒரு தருணத்தில் தனது குருவின் ஜன்ம ஸ்தானத்திற்கு வந்த மஹாபிரபு, அங்குள்ள மண்ணை எடுத்து தனது துணியில் சுற்றி தனது வந்தனங்களை செலுத்தினார். அன்றிலிருந்து அங்கு செல்லும் யாத்ரீகர்கள் பயபக்தியுடன் அங்குள்ள மண்ணை எடுத்துக் கொள்கின்றனர். இதன்விளைவாக உருவாகிய ஒரு குட்டை (தோபா) சைதன்ய தோபா என்று புகழ்பெற்றது. 


ஸ்ரீவாஸ பண்டிதருடைய இல்லம் சைதன்ய தோபாவிற்கு மிக அருகாமையில் உள்ளது. மஹாபிரபு தனது சகாக்களுடன் ஸ்ரீவாஸரின் இல்லத்திற்கு வருகைபுரிந்தார். இல்லத்தார்கள் அனைவரும் அவர்களை மகிழ்வுடன் வரவேற்று அவர்களுக்கு சேவை புரிந்தனர். இதனை கவனித்த மஹாபிரபு ஸ்ரீவாஸரிடம், “கிருஹஸ்தராகிய உங்களது குடும்பம் மிகப்பெரியது. உங்களுடைய குடும்பத்தை பராமரிப்பதற்காக பொருள்ஈட்ட வேண்டும், இல்லையென்றால் எவ்வாறு இது சாத்தியமாகும்?” என்றார். அதற்கு ஸ்ரீவாஸ பண்டிதர் பொருள் ஈட்டுவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றுகூறி கைகளை மூன்று முறை தட்டினார். இதற்கான பொருள் என்னவென்று மஹாபிரபு வினவ, ஸ்ரீவாசரும், “நான் ஒன்று, இரண்டு, மூன்று நாட்களுக்கு உபவாசம் இருப்பேன். அதன்பிறகும் உண்பதற்கு கிடைக்கவில்லை என்றால், கழுத்தில் குடத்தைக் கட்டி கங்கையில் குதித்துவிடுவேன்” என்றார். ஸ்ரீவாஸரின் கூற்றை வெகுவாக பாராட்டிய மஹாபிரபு முன்பு நவத்வீபத்தில் அவருக்கு அளித்த அதே ஆசிகளை மீண்டும் வழங்கினார், “லக்ஷ்மிதேவியே யாசிக்கச் சென்றாலும்கூட, தங்களுக்கு ஒருபோதும்  அத்தகை நிலைமை வராது.  கிருஷ்ணர் தனது உன்னத பக்தர்களுக்கு வேண்டியவைகள் அனைத்தையும் வழங்கிவிடுகிறார்.” 


ஸ்ரீவாஸ பண்டிதருடைய அவதார நன்னாள் சைத்ர மாதத்தின் தேய்பிறை எட்டாம்நாள் (க்ருஷ்ண அஷ்டமி), மற்றும் அவருடைய மறைவுநாள் ஆஷாட மாதத்தின் தேய்பிறையின் பத்தாம் நாளில் (க்ருஷ்ண தசமி) கொண்டாடப்படுகிறது.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more