( ஆதாரம் - கர்க சம்ஹிதை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கோலோகத்திலிருக்கும் பகவான் கிருஷ்ணரின் கட்டளையின் பேரில், யமுனா தேவி, பகவானை தரிசித்து விட்டு பூமிக்கு புறப்பட தயாரானார். அப்போது ஆன்மீகமான வ்ரஜா நதியும் கங்கை நதியும் யமுனைக்குள் புகுந்து கொண்டன. இந்த காரணத்தால் தான், யமுனை நதி சிறந்ததாகவும், பகவான் கிருஷ்ணரின் முதல் ராணியாகவும் கருதப்படுகிறது.
வ்ரஜா நதியின் ஓட்டத்தை உடைத்துக்கொண்டு, மிகுந்த சக்தியுடன் யமுனை நதி கோலோகத்தை கடந்தது. பல அண்டங்களை தாண்டி, கங்கை நதியின் நீரோட்டத்தையும் உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்து.
பகவான் வாமன தேவரின் பாத விரலால், அண்டத்தின் மேல் ஏற்பட்டிருந்த ஓட்டையின் வழியாக நுழைந்து, துருவ மஹாராஜருடைய உலகத்தின் (துருவ லோகத்தில் ) நுழைந்தது. அதன் பின்னர் பிரம்மலோகம் சென்று, அங்கிருந்து பல்வேறு லோகங்களுக்கு சென்று, ஒரு வழியாக சுமேரு பர்வதத்தை அடைந்தது. யமுனையின் சக்தி, சுமேரு பர்வதத்தின் பாறைகளை உடைத்து தள்ளியது. அந்த இடத்தில் யமுனை , கங்கை நதியை பிரிந்தது . கங்கை நதி அங்கிருந்து ஹிமாவதி பர்வதத்திற்கு சென்றது. அதே சமயம், யமுனை நதி, காலிந்தா பர்வதத்தை அடைந்தது. காலிந்தா பர்வதத்திலிருந்து பிரவாகம் செய்வதால், யமுனை, "காளிந்தி" எனவும் அழைக்கப்படுகிறது.
காளிந்தியின் பல பகுதிகளில் பிரவாகம் செய்து, அங்கிருக்கும் பெரிய பாறைகளை உடைத்து, அதன் பின்னர் அங்கிருந்து பூமிக்குள் நுழைந்து, தான் பிரவாகம் செய்யும் அணைத்து இடங்களையும் புனிதப்படுத்தி இறுதியாக காண்டவ வனத்துக்குள் நுழைத்தது. முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரை, தனது கணவனாக அடைய ஆசை கொண்ட காளிந்தி, ஆன்மீக ரூபம் தரித்து அங்கே கடும் தவம் புரிந்தார். இன்றளவும், அவர், தனது தந்தை அளித்த இல்லத்தில் அங்கே வசிக்கிறார். இறுதியாக காளிந்தி, வ்ரஜ மண்டலத்திற்குள் நுழைந்து, அழகிய விருந்தாவனம், மதுரா வழியாக, மஹாவனத்தை அடைந்தார்.
பல கோபிகளின் தலைவியாக, யமுனா தேவி கோலோக விருந்தாவனத்தில், பகவான் கிருஷ்ணருடன் ராஸ லீலை நடத்துவதற்காக தனது இருப்பிடத்தை அமைத்திருந்தார். ஆனால் தற்போது பூமிக்கு வந்துவிட்ட காரணத்தினால், அவர் பிரிவால் மிகவும் வருத்தமடைந்தார். கிருஷ்ண ப்ரேமையின் மூலம் அடைந்த ஆனந்தத்தினால், மேற்கே வ்ரஜ பூமியை நோக்கி பாய்ந்தார். வ்ரஜ மண்டலத்திற்கு மூன்று முறை நமஸ்கரித்து விட்டு, ப்ரயாகையை நோக்கி பாய்ந்தார்.
அப்போது அவர், "க்ஷீர" (பால் கடல் ) என்னும் சமுத்திரத்திற்குள் பாய்ந்தார். இதை கண்ட தேவர்கள், "வெற்றி! வெற்றி", என்று முழங்கினர். அப்போது, கங்கை தேவியிடம், தனது குரல் தழுதழுக்க பின்வருமாறு பேசினார்.
"கங்கை தேவியே! நீங்கள் மிகவும் பாக்கியசாலி. நீங்கள் அணைத்து உலகங்களையும் புனிதப்படுத்துகிறீர்கள். நீங்கள் பகவான் கிருஷ்ணரின் பாதகமலங்களிலிருந்து அவதரித்தீர்கள். அனைவரும் உங்களை வணங்குகிறார்கள். நான் இப்போது பகவான் கிருஷ்ணரின் தாமத்திற்குள் நுழையவிருக்கிறேன். என்னுடன் நீங்களும் பிரவாகம் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்", என்று கூறினார்.
கங்கை தேவி, " அனைத்து புண்ணிய தாமங்களையும் என்னுள் வைத்திருக்கும் கங்கையாகிய நான், உங்களை வணங்குகிறேன். நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. நீங்கள் அனைத்து உலகங்களையும் புனிதப்படுத்துகிறீர்கள். நீங்கள் பகவான் கிருஷ்ணருடைய இடது தோளிலிருந்து அவதரித்தீர்கள். உங்களுடைய ரூபம் ஆன்மீகமானது. நீங்கள் பூரணத்துவம் வாய்ந்தவர். நீங்கள் அனைவராலும் போற்றப்படுபவர். நீங்கள் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரியமானவர்.
ஓ கருமை நிற யமுனையே, மீண்டும் மீண்டும் நான் உங்களை வணங்குகிறேன். பகவான் கிருஷ்ணரின் முதல் ராணியான உங்களை அனைத்து தாமங்களும், அனைத்து தேவர்களும், அடைவதற்கு முயற்சி செய்கிறார்கள். கோலாக விருந்தாவனத்திலும் கூட உங்களை அடைவது மிகவும் கடினமானதாகும். பகவான் கிருஷ்ணரின் ஆணைப்படி நான் இப்போது பாதாள லோகத்திற்கு செல்ல வேண்டும். நான் இப்போது உங்களை பிரிய வேண்டும் என்று நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் என்னால் உங்களுடன் வர இயலாது. வ்ரஜ பூமியில் ராஸ லீலையில் நான் கோபிகளின் தலைவியாக இருக்கிறேன்.
இவ்வாறாக இருவரும் உரையாடிய பிறகு, ஒருவருக்கொருவர் நமஸ்காரம் செய்து பின்னர் அவரவர் பிரவாகத்தை நோக்கி பாய்ந்தனர். கங்கை தான் செல்லும் வழி அனைத்தும் புனிதப்படுத்தியவாறே, பாதாளலோகம் சென்றது. அங்கு கங்கை, "போகவதி" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது போகவதி காட்டை கடந்து செல்கிறது. அனந்தசேஷரும், சிவபெருமானும் கங்கையை தங்களது சிரசில் சுமக்கின்றனர்.
ஏழு கடல்களை தாண்டி, ஏழு தீவுகள் கொண்ட பூமிக்கு யமுனை வந்து. அங்கு ஸ்வர்ண பூமியான லோகலோக பர்வதத்தை வந்தடைந்து, தனது சக்தியால் அங்கிருக்கும் பாறைகளை உடைத்தது. அதன் பின்னர் அதன் உச்சிகளில் ஏறி, ஸ்வர்கலோகத்திற்கு சென்றது. அங்கிருந்து பல உலகங்களை கடந்து, பிரம்மலோகத்தை அடைந்தது. அங்கு மீண்டும் கங்கையுடன் இணைந்தது. அங்கிருந்து இருவரும், பகவான் ஹரியின் தாமமான கோலோகத்திற்கு சென்றனர்.
இதை கண்ட தேவர்கள் அனைவரும் மலர்மாரி பொழிந்து மகிழ்ச்சி அடைந்தனர். காளிந்தி மலையின் புதல்வியான யமுனையின் இந்த லீலையை ஒருவர் படித்தாலோ கேட்டாலோ, அவர் பெரும் மங்களம் உண்டாக்கப்பெறுவார். எவரொருவர் இந்த லீலையை மீண்டும் மீண்டும் ஸ்மரணம் செய்கிறார்களோ, அவர், பகவான் கிருஷ்ணர் தனது அந்தரங்க லீலைகள் நடத்தும் காட்டிற்குள் நிலைபெறுவார்.
யமுனையின் மகத்துவம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
( பரீட்சித்து மகாராஜன் ஏழு நாட்களில் தமக்கு மரணம் சம்பவிக்க போகிறதென்ற செய்தியைக் கேள்விப்பட்ட உடனேயே குடும்ப வாழ்வைத் துறந்து, புனிதமான யமுனா நதிக் கரையில் குடி யேறினார். அரசர் கங்கைக் கரையில் குடியேறியதாகத்தான் பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யமுனைக் கரையில் குடியேறினார் என்பது ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியின் கருத்தாகும். பூகோள அமைப் பின்படி, ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கூற்று மிகவும் சரியாய் இருக்கு மென காணப்படுகிறது. பரீட்சித்து மகாராஜன் இன்றைய டில்லிக்கு அருகிலுள்ள தமது தலைநகரான ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தார் அந்த நகரத்தைக் கடந்துதான் யமுனா நதி ஓடுகிறது. இந்நதி அரசரின் அரண்மனையைக் கடந்து ஓடியதால், இயல்பாகவே அவர் இந்நதியைத் தான் புகலிடம் கொண்டிருப்பார். மேலும் புனிதத் தன்மையைப் பொறுத்தவரை கங்கையை விட யமுனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் இன்னும் நேரடியான தொடர்பு கொண்டதாக உள்ளது. பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய திவ்யமான தமது லீலைகளின் துவக்கத்திலேயே யமுனா நதியை புனிதப்படுத்தினார். குழந்தை கிருஷ்ணர் கோகுலத்தில் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, குழந்தையின் தந்தையான வசுதேவர் குழந்தை கிருஷ்ணரை தூக்கிச் கொண்டு யமுனையைக் கடந்தார். அப்பொழுது பகவான் கிருஷ்ணர் நதியில் விழுந்து விட்டதால், அவரது திருவடி தூசி பட்டு நதி உடனே புனிதமடைந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய தாமரைப் பாதங்களின் தூசியையும், துளசி இலைகளும் ஏந்தியபடி அழகாக உருண்டோடும் அக்குறிப்பிட்ட நதியை அரசர் புகலிடம் கொண்ட தாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள் எப்பொழுதும் துளசி இலைகளால் அலங்கரிக் கப்பட்டிருந்ததால், அப்பாதங்கள் கங்கை நீரையும், யமுனை நீரையும் தொட்ட உடனேயே அந்நதிகள் புனிதமடைந்தன. ஆனால் பகவான் கங்கையைவிட யமுனா நதியுடன்தான் அதிக தொடர்பு கொண்டிருந்தார். கங்கை யமுனை நீதிகளுக்கிடையில் வேறு பாடில்லை, ஆனால் கங்கை நீர் நூறு மடங்கு புனிதமடையும் பொழுது, அது யமுனை என்று அழைக்கப்படுகிறது என்ற வராஹ புராணத்தின் கூற்றை ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மேற்கோள் காட்டுகிறார் இதைப்போலவே, ஆயிரம் விஷ்ணு நாமங்கள் ஒரு ராம நாமத்திற்குச் சமம் என்றும், மூன்று ராம நாமம் ஒரு கிருஷ்ண நாமத்திற்குச் சமம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.19.6 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment