மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை யுதிஸ்டிரரின் சகோதரனான பீமசேனர், பெருமுனிவரான வியாசதேவரிடம் கேட்டார். ஓ! கற்றறிந்த மற்றும் வணக்கத்திற்குரிய பெரியவரே! என் தாய் குந்திதேவி, எனது சகோதரர்களான யுதிஸ்டிரர், அர்ஜுனன், நகுலா, சகாதேவா, மற்றும் திரௌபதி ஆகியோர் ஏகாதசி நாளன்று எதையும் உண்ணுவதில்லை. அவர்கள் என்னையும் ஏகாதசியன்று விரதம் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தவர். ஏகாதசி விரதம் வேத சாஸ்திரங்களின் கட்டளையாக இருப்பினும் என்னால் பசியை பொறுத்துக் கொள்ள இயலாததால் என்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு கூறுவேன். ஆனால் என்னால் இயன்றவரை தானங்கள் செய்வேன். விதிமுறைகளுக்கேற்ப பகவான் கேசவனை வணங்குவேன். ஆனால் உண்ணாவிரதம் மட்டும் என்னால் மேற்கொள்ள முடியாது. ஆகையால், உண்ணாவிரதம் இருக்காமல் எவ்வாறு ஏகாதசியின் பலனை அடைவது என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசதேவர் கூறினார். ஓ! பீமா நீ நரகலோகத்தைக் தவிர்த்து மேலுலகங்களுக்கு செல்ல விரும்பினால், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசியன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். பீமன் கூறினான். ஓ! பெருமுனிவரே! பகவானின் கட்டளைப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகளை என்னால் கடைபிடிக்க இயலாது. என்னால் ஒரு கணம் கூட பசியை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் பகலும் இரவும் எப்படி என்னால் உண்ணாமல் இருக்க முடியும்? ப்ரிகா எனப்படும் பசித்தீ எப்பொழுதும் என் வயிற்றிலே குடிகொண்டுள்ளது. அத்தீயை அதிக அளவில் உண்பதால் மட்டுமே அணைக்க முடியும். ஆனால் மிக சிரமப்பட்டு வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். ஆகையால் இவ்வாழ்க்கையிலும் அதற்கும் பின்னரும் மங்களத்தை அடையக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள்.
வியாசதேவர் கூறினார். மன்னா! நீ ஏற்கனவே என்னிடம் இருந்து வேத மதக் கொள்கைகளைப் பற்றியும், மனிதப் பிறவியின் கடமைகளைப் பற்றியும் கேட்டறிந்துள்ளாய். ஆனால் இந்த கலியுகத்தில் யாராலும் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது. ஆகையால், மிகுந்த பலனை அளிக்கக்கூடிய ஒரு சுலபமான வழிமுறையை உனக்குக் கூறுகிறேன். இந்த வழிமுறை எல்லா புராணங்களின் சாரமாகும். தேய்பிறை மற்றும் வளர்பிறையின் ஏகாதசியன்று உண்ணாவிரதம் மேற்கொள்பவர் யாராயினும் நரகத்திற்கு செல்லமாட்டார். வியாசதேவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனா, அதிர்ச்சியுற்று அரச மரத்தின் இலைபோல உடல் நடுங்கிக் கூறினான். ஓ! பெரியவரே! நான் என்ன செய்வேன்? வருடம் முழுக்க ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள கண்டிப்பாக என்னால் இயலாது. ஆகையால், எனது பகவானே தயவுசெய்து எல்லா பலன்களையும் அடையக்கூடிய ஒரே ஒரு சக்தி வாய்ந்த விரதத்தை எனக்குக் கூறுங்கள்.
வியாசதேவர் பதிலளித்தார். மே/ஜுன் மாதங்களில் வளர்பிறையில் சூரியன் ரிஷப ராசி அல்லது மிதுன ராசியில் இருக்கும்போது தோன்றக்கூடிய ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் ஒருவர் நீரும் கூட அருந்தாமல் முழு உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த நாளன்று ஒருவர் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக ஒரே ஒரு கடுகளவு நீரை அருந்தி ஆச்சமனா செய்து கொள்ள வேண்டும். இந்த அளவிற்கு மிகுதியாகவோ குறைவாகவோ நீரை அருந்தினால் அது மதுவை அருந்துவதற்கு ஈடாகும். இந்த ஏகாதசியன்று கண்டிப்பாக ஒருவர் எதையும் உண்ணக்கூடாது. ஏகாதசி சூர்யோதயம் தொடங்கி, துவாதசி சூர்யோதம் வரை நீரைக் கூட அருந்தக்கூடாது. இவ்வாறு நீரையும் அருந்தாமல் சிரத்தையுடன் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர். வருடத்திலுள்ள எல்லா ஏகாதசிகளின் பலனையும் அடைவார். துவாதசியன்று விடியற்காலையில் துயில் எழுந்து, குளித்து விட்டு, பிறகு தங்கத்தையும், நீரையும் அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அந்தணர்களோடு உணவ உண்டு. விரதத்தை முடிக்க வேண்டும்.
ஓ! பீமசேனா, இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பயன்களைப் பற்றி கூறுகிறேன் கேள். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் ஒரு வருடத்திலுள்ள அனைத்து ஏகாதசிகளையும் அனுஷ்டிப்பதால் அடையும் பலன்களையெல்லாம் அடைவர். தன் கைகளில் சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரை மலர் ஆகியவற்றை ஏந்தியுள்ள பகவான் விஷ்ணு என்னிடம் ஒரே முறை கூறினார். எல்லா தர்மங்களையும் துறந்து, என்னிடம் சரணடைந்து எனக்கு மிகப் பிரியமான இந்த நிர்ஜல ஏகாதசியை எவரொருவர் கடைபிடிக்கிறாரோ, அவர் நிச்சயமாக எல்லா பாவவிளைவுகளில் இருந்தும் விடுபடுவார். இந்த கலியுகத்தில் செல்வத்தை தானமளிப்பதால் ஒருவர் இறுதி இலக்கை அடைய முடியாது. அது போன்ற ஸ்மார்த விதிமுறைகளை கடைபிடிப்பதாலும் ஒருவர் எந்தவொரு பலனையும் அடைய முடியாது. பல தவறுகளால் களங்கப்பட்ட இந்த கலியுகத்தில் வேத, மத கொள்கைகள் யாவும் பயன் தராது.
ஓ! வாயுபுத்திரா இதற்கு மேலும் என்ன சொல்வது? எல்லா ஏகாதசிகளிலும் உணவு உள்கொள்வதை தடை செய்யப்பட்டுள்ளது. நிர்ஜல ஏகாதசியன்று நீர் அருந்துவதையும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர் எல்லா புனித ஸ்தலங்களுளுக்கும் செல்வதன் பலனை அடைவார். இப்படிப்பட்ட ஒருவரை மரண நேரத்தில் பயங்கரமான தோற்றமுள்ள யமதூதர்கள் நெருங்குவதில்லை. மாறாக தெய்வீகத் தன்மை உடைய விஷ்ணு தூதர்களால் விஷ்ணுவின் பரமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்த ஏகாதசியை அனுஷ்டித்த பின்னர் ஒருவர் நீரையோ பசுவையோ தானமளித்தால் அவர் தன் எல்லா பாவ செயல்களில் இருந்தும் விடுபடுவர்.
இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேட்ட மற்ற பாண்டவர்கள். இதை அனுஷ்டிக்க தீர்மானித்தனர். அன்று முதல் பீமனும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க துவங்கினார். ஆகையால் இந்த ஏகாதசி பாண்டவ நிர்ஜல (அ) பீமசேனா, ஏகாதசி எனப் புகழ் பெற்றது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் சுமேரு மற்றும் மந்தாரா மலைகளைப் போன்று மிகப்பெரிய அளவிலான பாவச் செயல்கள் அனைத்தும் உடனே எரிந்து சாம்பலாகின்றன. ஓ! மன்னா! புனித ஸ்தலங்களில் குளிப்பது. தானமளிப்பது, வேத மந்திரங்களை உச்சரிப்பது போன்ற எந்தவொரு பக்தி தொண்டையும் இந்த ஏகாதசியன்று மேற்கொண்டால் அதன் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும் என பகவான் கிருஷ்ணர் நிர்ணயித்துள்ளார். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ ஒருவர் வைகுண்டத்தை அடைவார். பிரதிபாதா உடன் இணைந்து வரும் அமாவாசை விரதத்தை கடைபிடிப்பதன் பலனையும் சூரிய கிரகணத்தின் போது முன்னோர்களுக்கு பிண்ட பிரதானம் செய்வதன் பலனையும் இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பதாலேயே அடையலாம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment