ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதருடைய தாய் தந்தையின் பெயர் ஸ்ரீ கமல தேவி, ஸ்ரீ காமேஸரி மிஸ்ரர், அவருடைய ஐந்து சகோதர்கள்: தாமோதரர், ஜகன்னாதர், சூர்யதாஸர், கிருஷ்ணதாஸர், நரசிம்ம சைதன்யர்.சூரியதாஸர் தனது புதல்விகளாகிய வசுதா மற்றும் ஜானவா தேவி இருவரையுமே பகவான் ஶ்ரீ நித்யானந்தருக்கு மணமுடித்தார். விருந்தாவன லீலையில் சுபலா சகாவாக இருந்த கெளரிதாஸர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடைய முக்கியமான பன்னிரெண்டு, அதாவது துவாதச கோபால நண்பர்களுள் ஒருவராவார்.
ஒருமுறை பகவான் ஶ்ரீ சைதன்யரும், பகவான் நித்யானந்தரும் கெளரிதாஸரை சந்திக்க சாந்திபுரிலிருந்து தாங்களே படகில் துடுப்புபோட்டு கங்கையை கடந்து, அம்பிகா கல்னாவிற்கு வந்தனர். தனது கையிலிருந்த துடுப்பை கெளரிதாஸரிடம் தந்த பகவான் ஶ்ரீ சைதன்யர், இந்த துடுப்பின் மூலமாக மக்களை பெளதிக கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்வீராக” என்று ஒப்படைத்தார். இன்றும் கெளரிதாஸரின் இல்லத்தில் உள்ள கோவிலில் அந்த துடுப்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு முறை சைதன்யரும் நித்யானந்தரும் “ஹரி ஹரி” என்று நடனமாடியவண்ணம் கெளரிதாஸரின் இல்லத்திற்கு வந்தபோது, கெளரிதாஸர் பிரிவெனும் மீளாத்துயரில் ஆழ்ந்து கதறியழுதார். இருவரையும் நிரந்தமாக தனது இல்லமாகிய அம்பிகா கல்னாவிலேயே தங்கி கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிக்குமாறு வேண்டினார். அவரது இதயக்கோவிலுக்குள் இருந்து வெளியேற முடியாத, பக்த வத்ஸலனாகிய, பகவான்கள் தங்களது பிரதிபிம்ப மூர்த்திகளை ( அர்சா விக்ரகம்) வெளிப்படுத்தி, இனிமேல் நாங்கள் இந்த ரூபத்தில் தங்களுடன் நித்தியமாக உறவாடுவோம் மற்றும் .எங்களுக்கும் இந்த விக்ரகங்களுக்கும் எந்த வேறுபாடு இல்லை என்றார்கள். அப்போது பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்த மஹாபிரசாதத்தினை பகவான் சைதன்யருக்கும் , பகவான் நித்யானந்தருக்கும். பின் அவர்களின் பிரதிபிம்ப மூர்த்திகளுக்கும் ( அர்சா விக்ரகம்) படைத்தார். அச்சமையம் நால்வரையும் கண்டு திகைத்த கெளரிதாஸர் நால்வருக்குள்ளும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. நான்கு அதிதிகளுக்கும் தடபுடலாக பரிமாறி, மாலையணிவித்து, தாம்பூலம் அளித்து, உடலில் சந்தனம் பூசினார். இதனையடுத்து நால்வரில் இரு பகவான்கள் பூரிக்கு செல்ல மற்ற இரு பகவான்கள் கெளரிதாஸருடனேயே தங்கிவிட்டனர்.
கெளரிதாஸரின் அன்பிற்கு கட்டுப்பட்டு அர்ச்சா விக்ரஹ ரூபத்தில் உடன் இருப்பதற்கு பகவானையே சம்மதிக்கவைத்தது அவருடைய உன்னதமான பக்தியே காரணம் ! இவ்விதமாக கெளரிதாஸர் தங்களுடைய சேவையின் பேரின்பத்தில் லயித்திருப்பதைக் கண்ட பகவான்கள், அவருக்கு விருந்தாவன லீலைகளை வெளிப்படுத்த விரும்பி, கிருஷ்ண பலராமராக வெளிப்பட்டு, நீரே சுபலா என்று நினைவூட்டினர். இதனையடுத்து கெளரிதாஸரும் சுபலாவாக விருந்தாவன லீலைகளை அனுபவித்துமகிழ்ந்தார். இவ்வாறாக அவருடன் பல்வேறு லீலைகள் புரிந்த பகவான்கள் அவர் தள்ளாத வயதிலும் தங்களுக்காக சிரமப்பட்டு உணவு பதார்த்தங்களை தயாரிப்பதைக் கண்டு வருத்தமுற்றனர். அதனால் அவர்முன்னர் கோபத்துடன் வெளிப்பட்டு, எங்களுக்கு இவ்வளவு பதார்த்தங்கள் வேண்டாம், நாங்கள் சாப்பிடமாட்டோம் என்றனர். கெளரிதாஸரோ அவர்களிடம் கெஞ்சி இனி நான் எளிமையாக சமைக்கின்றேன். இப்போது வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று சமாதானப்படுத்தி உண்ணவைத்தார். அவருடைய வாத்ஸல்ய பாவத்திற்கு கட்டுப்பட்ட பகவான்களும் ஆனந்தத்துடன் உண்டனர்.
ஒருநாள் கெளரிதாஸர் பகவான்களை ஆடம்ரமாக அலங்கரிக்க விரும்ப, உடனே பகவான்களே தங்களை ஆடம்பரமாக அலங்கரித்துக் கொண்டு வெளிப்பட, கெளரிதாஸரோ, “எங்கிருந்து இவ்வளவு ஆபரணங்களை கொண்டுவந்தனர்” என்று வியந்தார். இதுமாதிரியாக கெளராங்கரும் நித்யானந்தரும் கெளரிதாஸரின் இல்லத்தில் வியத்தகு லீலைகளை ஆனந்தமாக மேற்கொண்டனர்.
ஒருமுறை கெளரபூர்ணிமா ( பகவான் ஶ்ரீ சைதன்யரின் அவதார தினம் )சமயத்தில் கெளரிதாஸர், பகவான் ஶ்ரீ கெளரங்கர் மற்றும் நித்யானந்தருக்கான சேவையை அவருடைய சீடர் ஹ்ருதயானந்தரின் பொறுப்பில் விட்டுவிட்டு, தனது மற்றொருசீடரின் இல்லத்திற்கு சென்றிருந்தார். அவரும் பகவான்களை நன்கு கவனித்துக்கொண்டார். இருப்பினும் கெளரபூர்ணிமாவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும்பட்சத்தில் தனது குரு திரும்பிவராமல் இருப்பதைக்கண்ட ஹ்ருதயானந்தர், விழாவிற்கான அழைப்பிதழை தானே எழுதி, பலருக்கும் அனுப்பிவைத்தார். இதனையடுத்து அங்குவந்த சேர்ந்த கெளரிதாஸர், சீடரால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்டு, உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், வெளியில் கோபமுற்றவராக ஹ்ருதயானந்தரை கோபித்துக் கொண்டார். அவரிடம் கேட்காமல், தானே உரிமையை எடுத்துக்கொண்டதற்காக அங்கிருந்து வெளியேறுமாறும் கூறினார். ஹ்ருதாயனந்தரும் குருவின் உத்தரவை சிரமேற்கொண்டு, கங்கை கரையில் ஒரு மரத்தடியில் தங்கி, வழிபாட்டினை தொடர்ந்துவந்தார். அப்போது படகில் வந்த ஒரு செல்வந்தராகிய வணிகர், பெருந்தொகையை கெளரபூர்ணிமா விழாவிற்காக வழங்கினார். அதை ஏற்ற மறுத்து, தாங்களே எனது குருவிடம் சேர்த்ப்பித்து விடுங்கள் என்று கூறினார். வணிகரும் அவ்வாரே செய்ய, கெளரிதாஸர் மிகுந்த கோபத்துடன், விழாவிற்கு ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்த, ஹ்ருதயானந்தரிடமே வழங்கி, அவரையே கொண்டாடச் சொல்லுங்கள் என்றார். குருவின் கட்டளையை சிரமேற்று, அவ்வாறே செய்தார் சீடர் ஹ்ருதாயனந்தர். பிரம்மாண்டமான கௌரபூர்ணிமா திருவிழாவில் , பக்தர்களின் ஸங்கீர்த்தனமும் நடனமும் அரங்கேறியது. ஹ்ருதாயனந்தரின் பக்தி பரவசமிக்க கீர்தனம், கெளரிதாஸரின் வீட்டில் குடிகொண்டுள்ள அர்சா விக்ரகமான, பகவான் ஶ்ரீ கெளரங்கர் மற்றும் நித்யாநந்தரையும் ஈர்க்க அவர்கள் நேரடியாகவே வந்து கலந்துகொண்டனர். இதனைக்கண்ட ஹ்ருதயானந்தர், மிகுந்த ஆனந்தமடைந்தார்.
கெளரிதாஸரும் கெளரபூர்ணிமாவை தனது இல்லத்தில் கொண்டாடினார். அர்சா விக்ரகங்ளுக்கு நைவேத்தியம் செய்ய சென்றபோது, மேடையில் அவர்கள் இருவரையும் காணாததை, பூஜாரியான கங்காதாஸ பண்டிதர், கெளரிதாஸரிடம் கூற, அவரோ சிரித்துகொண்டே கங்கைக்கரைக்குச் செல்ல, அங்கு பகவான்கள் இருவரும் பிரம்மாண்டமான ஸங்கீர்த்தனத்தில், ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று கெளரிதாஸரைக் கண்ட பகவான்கள் இருவரும், உடனடியாக ஹ்ருதயானந்தரின் இதயத்திற்குள் சென்று மறைந்தனர். இதனைக்கண்ட கெளரிதாஸர், பேரானந்தத்துடன் சீடரை தழுவி, நீ மிகப்பெரிய பாக்கியசாலி, பகவான் ஶ்ரீ சைதன்யரும், நித்யாநந்தரும் உன் இதயத்தில் குடிகொண்டதால், இனி நீ ஹ்ருதய சைதன்யர் என்று அழைக்கப்படுவாய் என்று கூறி மகிழ்ந்தார். உடனே சீடர் குருவின் தாமரைப்பாதங்களில் பணிய, அவரும் சீடரை அழைத்துக் கொண்டு, இல்லம் திரும்பி, பிரம்மாண்டமான ஸங்கீர்த்தனைத்தை மேற்கொண்டு, கெளரபூர்ணிமா விழாவினை சிறப்புடன் நிறைவுசெய்தார், அதன்பிறகு ஹ்ருதய சைதன்யரிடம் அதிகாரப்பூர்வமான சேவையை, ஒப்படைத்த கெளரிதாஸர், ஷ்ரவண மாதத்தில் சுக்ல ஏகாதசியில் இவ்வுலகைத்துறந்து, ஶ்ரீ கெளர நித்யானந்தரின், நித்ய லீலைக்குள் புகுந்தார்.
கெளரிதாஸரின் சீடரான ஹ்ருதய சைதன்யரின் சீடர், புகழ்பெற்ற சியாமனந்த பண்டிதராவார். இவ்விதமாக கெளரிதாஸ பண்டிதரின் போற்றத்தக்க வாழ்க்கை வரலாற்றினை, ஸ்ரீ நரஹரி சக்ரவர்த்தி தாகூர், தனது புத்தகமான பக்தி ரத்னாகரில், ஏழாவது தரங்கமாக அதாவது அலையாக பதிவுசெய்துள்ளார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment