🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிருகு முனிவரின் மகனாக, சியவனர் என்ற மாமுனிவர் இருந்தார். அவர் பெரும் தபஸ்வி. ஒரு தடவை, ஒரு விரதத்தை மேற்கொண்டு தண்ணீருக்குள்ளேயே வாழ்வது என்று நிச்சயித்தார். செருக்கு, சினம், மகிழ்ச்சி, இன்பதுன்பம், சோகம் ஆகியவற்றைத் துறந்து பன்னிரண்டு ஆண்டுக்காலம் தண்ணீருக்குள் சமாதி நிலையில் இருந்தார். மகாத்மாவான அவருடைய, பிற பிராணிகளுக்குத் தீங்கு செய்யாத இயல்பையும், தவத்தையும் கண்டு நீர்வாழ் பிராணிகள் அனைத்தும் அவருடன் நட்புப் பூண்டன. நீர்வாழ் மீன்கள் முதலியவற்றுக்கு அவரிடம் கொஞ்சம் கூட அச்சம் இல்லை.
ஒரு தடவை, மாமுனிவரான சியவனர், மிகுந்த ஆர்வத்தோடும், வணக்கத்தோடும் கங்கை யமுனை கூடுமிடத்தில் தண்ணீருக்குள் புகுந்தார். சில வேளைகளில் ஜல-சமாதியில் இருப்பார் மற்றும் சில வேளைகளில் தண்ணீரின் மேல் அசைவற்று அமர்ந்திருப்பார். இம்மாதிரி விரதத்தைத் தவறாமல் செய்து நீண்ட காலத்தைக் கழித்துவிட்டார்.
ஒரு நாள் சியவனர் ஜல சமாதியாக தண்ணீருக்குள் இருக்கும் அதே இடத்தில் மீன்பிடிப்பதற்காக வலை எடுத்துக்கொண்டு சில செம்படவர்கள் வந்து சேர்ந்தார்கள். மீன் பிடிப்பதற்காக நீர் பரப்பில் வலையை வீசினார்கள் தற்செயலாக, மீன்களோடு கூட மாமுனிவர் சியவனரும் வலையில் சிக்கிக் கொண்டார். வலையை இழுப்பதற்கு முயன்றபோது, மீனவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. 'இன்றைக்கு, ஏதோ ஒரு பெரிய மீன் அல்லது வேறு ஒரு நீர்வாழ் பிராணி, வலையில் சிக்கியிருக்கிறது' என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. மிக வேகமாக அவர்கள் வலையை இழுத்த போது மீன்களுடன் கூட மஹரிஷி சியவனரும், தண்ணீருக்கு வெளியே வந்தார். அப்போது அவர் உடல் முழுவதிலும் பாசி ஒட்டிக் கொண்டிருந்தது.
சியவனரைப் பார்த்ததும் எல்லா மீனவர்களும் பயந்து நடுங்கினார்கள். கைகூப்பி மன்னிப்பு கேட்டார்கள். தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன், வலையில் சிக்கியிருந்த மீன்கள் துடிதுடித்தபடி செத்துப் போயின. இந்தக் காட்சியைக் கண்டதும் சியவனருடைய இதயத்தில் கருணை பெருகியது. 'இந்த மீன்கள் கூட, நானும் உயிர் துறக்கப் போகிறேன்' என்று, செம்படவர்களிடம் அவர் சொன்னார். 'நான், இவைகளுடன் கூடவே பலநாட்கள் வாழ்ந்திருக்கிறேன். நான் இவைகளை விட்டுப் பிரிந்திருக்க முடியாது அவர்கள் இப்போது உயிரற்றுப் போய்விட்டதால், நான் உயிரோடு இருப்பது வீண். நானும் என் உயிரைத் துறந்து விடுகிறேன்.
மாமுனிவரின் சொற்களைக் கேட்டு, மீனவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். சியவனர் போன்ற ஒரு மஹரிஷி, உயிரை விடுவதற்கு அவர்கள் காரணமாக ஆகிவிட்டார்களே என்று அவரை அங்கே அப்படியே விட்டுவிட்டு, ஓட்டமாக ஓடி மன்னன் நஹுஷனிடம் வந்து நிகழ்ந்ததையெல்லாம் சொன்னார்கள். நஹுஷன், அவர்கள் கூறியதைக் கவனமாகக் கேட்டான். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். 'எனக்கு அருள்புரிவதற்காகவே, இந்த மகாத்மா இவ்வித வடிவத்தில் இங்கே வந்திருக்கிறார்! 'இது பகவானுடைய கருணை' என்று எண்ணி அமைச்சர், புரோகிதர், செம்படவர்களோடு முனிவர் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். மிகுந்த வணக்கத்தோடு இரு கைகளையும் கூப்பி, ஸத்யவிரதரான சியவனரை அடிபணிந்தார்; முறைப்படி அவரைப் போற்றினார். 'ஐயா! தங்கள் ஆணைக்காக, இந்தப் பணியாளன் காத்திருக்கிறேன்.. இவனுக்கு ஆணையிட்டு அருள்புரிய வேணும்' என்று கேட்டுக் கொண்டான்.
மஹரிஷி சொன்னார்: 'மன்னா! இன்று இந்தச் செம்படவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு மீன்களுடன் கூட என்னையும் வலையில் சிக்க வைத்து வெளியே கொண்டு வந்தார்கள் ஆனால், வலையில் என்னைக் கண்டதும் மிகவும் பயந்து போய்விட்டார்கள். இவர்களுக்கு மீன்களும் கிடைக்காமல் போய்விட்டது. இவர்களுக்குத் தம் தொழிலால் வரும் வருமானம் இல்லையென்றால், என்ன செய்வார்கள் அதனால், இந்த மீன்களின் விலையோடு எனக்கும் ஒரு விலை கணக்கிட்டு, இவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். அதனால் இவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படாமல் போகும்.
உடனே, நஹுஷன் புரோஹிதரிடம் : 'பண்டிதரே, மஹரிஷிக்கு விலைக்கு ஓராயிரம் பொற்காசுகள் இந்த மீனவர்களிடம் கொடுத்துவிடுங்கள்' என்றான்.
இதைக் கேட்ட சியவனர், 'அரசனே! என்னுடைய விலை ஓராயிரம் பொற்காசுகள் தானா.? இவ்வளவு குறைந்த தொகைக்கு தான் நான் விலை போவேனா? நீங்கள் நன்றாக சிந்தித்து என் விலையை நிர்ணயம் செய்யுங்கள்' என்றார்.
அந்தணப் பெரியோரே, இந்த மீனவர்களுக்கு ஒரு லட்சம் பொற்காசு கொடுங்கள் என்று தன் புரோஹிதரிடம் கூறிவிட்டு, முனிவரைப் பார்த்தான். 'இது சரியான விலைதானே ?
மன்னா! என்னை ஒரு லட்சம் பொற்காசுகளுடன் முடித்துப்போட்டு விடாதீர் நீங்கள் உங்கள் அமைச்சர் முதலானோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்
ஆனால், அரசனோ யாரையும் கேட்காமல் ஒரு கோடி பொற்காசு கொடுக்கும்படி பண்டிதரிடம் கூறினான். முனிவர் மறுபடியும் தடுத்தார். பின் தன் நாட்டில் பாதியைத் தருவதாக அரசன் கூறினான்.
மன்னா! உன்னுடைய நாட்டில் பாதியோ, அல்லது முழுவதுமோ எனக்குச் சரியான விலை ஆகாது. ஒரு சரியான யோசனை உங்களுக்குத் தோன்றாவிட்டால் தவசிகளையும் அந்தணர்களையும் கேளுங்கள்.
இதைக் கேட்டதும், நஹுஷன் மிகவும் துக்கமடைந்தார். அவருக்கு வழி ஏதும் புலப்படவில்லை. தன் அமைச்சர்கள் புரோஹிதர்களைக் கலந்து ஆலோசித்தார்.
அந்த நேரத்தில், காட்டில் இருந்து கொண்டு காய்-கனி மட்டும் உண்டு வாழும் முனிவர் ஒருவர் அங்கே வந்தார். 'அரசனே, கவலைப்படாதீர். நான் அந்த முனிவரைத் திருப்தி அடையச் செய்கிறேன்; அவருக்கு உரிய விலையையும் உமக்குக் கூறுகிறோம் என் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள் நான் வேடிக்கையாகக்கூட, பொய்கலந்து பேசியதில்லை; எப்போதும் நான் உண்மையே பேசுவேன். அதனால், என் வார்த்தைகளில் நீர் ஐயம் கொள்ள வேண்டாம்.
பெரியீர்! நான் பெரிய சிக்கலில் இருக்கிறேன். என் காரணமாக ஒரு முனிவர் தமது உயிரை விட்டுவிடத் தயாராக நிற்கிறார். அவருடைய சரியான விலையை நீங்கள் கூறினால் அது நீங்கள் எனக்குச் செய்யும் பேரருள் என்றே சொல்வேன். பயங்கரமான இந்தத் துன்பத்திலிருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பாற்றுங்கள்
அரசே அந்தணரும் பசுவும் ஒரே இனம் ஆனால் உருவங்களால் வேறுபட்டிருக்கிறார்கள். அந்தணர் மந்திரங்களின் வடிவம் என்றால், பசு (யாக-யக்ஞங்களில் தேவர்களுக்கு உணவாக வழங்கப்படும்) ஹவிஸ்ஸின் வடிவம். அந்தணர்-பசுக்களின் விலையை நிர்ணயிக்கமுடியாது. அதனால், முனிவரின் விலையாக ஒரு பசுவைக் கொடுத்துவிடுங்கள்.
இதைக் கேட்டதும், அரசனும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் விரைந்து, முனிவரிடம் வந்தார்கள்.
பெரியவரே! ஒரு பசுவைக் கொடுத்துத் தங்களை விலைக்கு வாங்கிவிட்டேன். அருள் கூர்ந்து எழுந்திருங்கள், இது தங்களுக்குச் சரியான விலை என்று கருதுகிறேன்.
அரசனின் பேச்சைக் கேட்டு, 'மன்னா! சரியான விலை கொடுத்துத்தான் நீங்கள் என்னை வாங்கியிருக்கிறீர்கள். உலகத்தில் பசுவுக்கு ஒப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை. பசுவைப் புகழ்ந்து பேசுதல், அதன் நற்குணம் பற்றி விவரித்தல், அதைக் கேட்பது பசுவைத் தானமாகக் கொடுப்பது, பசுவைத் தரிசிப்பது இவைகளை அறநூல்கள் வெகுவாகக் கூறியிருக்கின்றன. இப்படியெல்லாம் செய்வதால், பாவங்கள் விலகி, மிக மேலான புண்ணியம் வந்து சேரும். பசுக்கள் செல்வத்தைக் கொடுக்கின்றன; அவற்றிடம் அணுவளவும் தீமை இல்லை . பசுக்கள் தான் எப்போதும் மனிதர்களுக்கு உணவு அளிப்பவையாகவும், தேவர்களுக்கு அவியுணவு கொடுப்பவையாகவும் இருக்கின்றன. ஹோமங்களில் கூறப்படும் ஸ்வாஹா, வஷட் ஆகியவை, எப்போதும் பசுக்களிடம் நிலைகொண்டுள்ளது. பசுக்கள் தான் வேள்விகளை நடத்திவைக்கின்றன; அதன் முகமாகத் திகழ்வதும் பசுக்களே. அவைகள் மாறுபடாத தெய்விக அமுதத்தைத் தாங்கி, கறக்கும் போது அமுதத்தையே கொடுக்கின்றன. அவைகள் அமுதத்தின் நிலைக்களன்கள் ஆகும் . உலகம் முழுவதும் அவற்றின் முன் தலைவணங்குகிறது. எந்த இடத்தில் பசுக்கூட்டம், எவ்வித அச்சமும் இல்லாமல் நிம்மதியாக சுவாசிக்கிறதோ, அவ்விடத்திற்கு மகிமை கூடுகிறது அங்குள்ள சகல பாவங்களையும் இழுத்துக் கொண்டு விடுகிறது. பசுக்கள் வானுலகத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள்; வானுலகிலும் போற்றப்படுகின்றன. நம்முடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் சக்தித் திருவுருவங்கள். அவைகளைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை; அவைகளின் பெருமையை யாராலும் வர்ணிக்கவும் முடியாது என்று சியவனர் கூறினார்.
இவ்வாறு கூறிவிட்டு மாமுனிவர் மௌனமானார். உடனே, அரசனால் கொடுக்கப்படும் பசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, மகரிஷியை மீனவர்கள் வேண்டிக்கொண்டார்கள் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, 'இந்த கோ தானத்தின் மகத்துவத்தால் உங்களுடைய எல்லா பாப-தாபங்களும் விலகி விட்டன. நீங்கள், இந்த மீன்களுடன் விரைவில் தேவலோகம் செல்வீர்கள் என்றும் சொன்னார் அவர் சொல்லி முடித்தவுடன், செம்படவர்கள் மீன் கூட்டம் சொர்க்கம் போக ஆரம்பித்தன அவைகள் எல்லாம் வானுலகம் செல்வதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார், நஹுஷன் அப்போது, வனம் வாழ் முனிவரும், நீர்வாழ் முனிவரும் ஏதேனும் வரம் கேட்கும்படி நஹுஷனக் கேட்டுக் கொண்டார்கள். 'தரும வழியிலேயே மனம் நிலைக்க வேண்டும் பகவானிடம் பக்தி இருக்க வேண்டும்' என்ற வரத்தை அரசர் கோரினார். அப்படியே ஆகுக' என்று அருளிய முனிவர்களை மன்னர் கௌரவித்தார். பின்னர், அவ்விரு முனிவர்களும் தத்தம் இடங்களுக்கு ஏகினர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment