வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆
மேற்கு வங்காளத்தில் ஸப்தக்ராமம் என்ற இடத்தில் ஹிரண்ய மஜீம்தார். . கோவர்தன மஜீம்தார். என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள். ராஜ வம்சத்தை சேர்ந்த அவர்களின் குலத்திற்கு கோவர்தன மஜீம்தாரின் மகனான ரகுநாத தாஸரே ஒரே வாரிசு ஆவார். அவர் ஶ்ரீல பலராம ஆசார்யரிடம் கல்வி கற்று சமஸ்கிருதம். ஸாஹித்யம். சாஸ்த்ரம் இவற்றில் சிறந்து விளங்கினார். அவருக்கு இளமையில் இருந்தே லௌகீக விஷயங்களில் நாட்டம் இல்லை. ஒருமுறை ஹரிதாஸ் தாகூர் சாந்திப்பூர் வந்தார். பலராம ஆசார்யர் அவரை வரவேற்று, அவருக்கு ஒரு குடில் அமைத்து உபசரித்து வந்தார். ரகுநாத தாஸ், ஹரிதாஸரின் பஜன நிஷ்டை, திவ்ய பாவாவேசம் இவற்றால் கவரப்பட்டார். பரம பாகவதரான ஹரி தாஸரின் திவ்யதரிசனம், அவரது கருணை, மற்றும் ஆசீர்வாதம் இவற்றின் மூலம் ரகுநாதரின் ஸாதனா பக்தி என்னும் கதவு திறந்தது. அதன் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை கிடைத்தது. ரகுநாதரின் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் உரையாடலில் பேசப்படும் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ரூப மாதுர்யம், லீலா மாதுர்யம் இவற்றைக் கேட்டுக், கேட்டுத் தமது இதயக் கோயிலில் அவரது திவ்ய மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் வாங்கிய பிறகு, ராதாதேசம் சென்று அங்கிருந்து சாந்திபூரில் அத்வைதாசார்யார் இல்லத்தில் இருப்பதாகவும், மகாபிரபுவின் கீர்த்தனம் என்னும் புதிய அலை அனைவரையும் ஆட்கொண்டு பக்தி பரவசத்தில் திழைத்திருப்பதாகவும், செய்தியை அறிந்து தம்முடைய தந்தையரின் அனுமதியுடன் ரகுநாதர், பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவை சந்திக்க சாந்திபூர் சென்றார். அத்வைதாசார்யரின் இல்லத்தை அடைந்த ரகுநாதர் , மிகவும் ஆர்வமாக பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மாபெரும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொண்டு பக்தி பரவசத்தில் பகவான் சைதன்யரின் சரணத்தில் வீழ்ந்தார். பகவான் ஸ்ரீ சைதன்யர் அவரது தலையில் தமது தாமரை திருபாதங்களை வைத்து அனுக்கிரகம் செய்து அவரை எழுப்பி ஆலிங்கனம் செய்து கொண்டார். ரகுநாதர் பகவான் சைதன்யருடன் ஒரு வாரம் தங்கி அகண்டநாம சங்கீர்த்தனத்திலும், ஹரி கதாம்ருதத்தையும் மனம் ஒன்றி அனுபவத்தார். பிறகு. ரகுநாதர் பகவான் ஶ்ரீ சைதன்யரின் பிரிவைத் தாங்காமல் அழுது கொண்டே வீடு திரும்பினார்.
அவர் தந்தையாரிடம் தம்மை பகவான் ஸ்ரீ சைதன்யரின் தாமரை பாதங்களில் சரணடைய அனுமதிக்குமாறு வேண்டினார். அதைக் கேட்டு வருந்திய அவருடைய பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்தால் மனம் மாறும் என நம்பி அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த பந்தமும் ரகுநாதரிடம் சிறிதும் மாற்றத்தை ஏற்படுத்த இயலவில்லை.
சில தினங்களுக்குப் பிறகு சைதன்ய மஹாபிரபு மறுபடியும் சாந்திபூரில் அத்வைதாசார்யர் இல்லத்தில் தங்கப் போவதாகச் செய்தி வந்தது. அவரைச் சந்திக்க ரகுநாதர் துடிப்பதைக் கண்ட பெற்றோர் உயர்ந்த காணிக்கைகளுடனும். பணி ஆட்களுடனும் ரகுநாதரை சாந்திபூர் அனுப்பினார். ஐந்தாறு வருட பிரிவில் ரகுநாதரின் பகவத் பக்தியின் ஆர்வம் மிகவும் வளர்ந்திருந்தது. ரகுநாதர் ஶ்ரீ கௌர ஹரியின்(பகவான் ஶ்ரீ சைதன்யர்) சரணத்தில் வீழ்ந்து தம்மைக் கடைத்தேற்றுமாறு வெகு உருக்கத்துடன் வேண்டினார். எல்லாம் அறிந்த மஹாபிரபு ரகுநாதரிடம். 'மனிதன் முறையாக சம்ஸார சாகரத்தை கடக்க வேண்டும் என்றும் நீ வீட்டிற்குச் சென்று உனது மனத்திற்குள் கிருஷ்ண ப்ரேம நிஷ்டையுடனும் வெளியில் உனது கடமையை பற்றற்றும் செய்து வா என்றும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் உனக்கு அருள்புரிவார் என்று கூறி விடை கொடுத்தனுப்பினார். பிறகு ரகுநாதர் தம்முடைய குலகுருவான யதுநந்தன ஆசார்யரிடம் தீக்ஷை பெற்றர், அதையே கிருஷ்ண கிருபையின் முதல் படி எனக் கருதி, விரைவில் சைதன்யசரண பிராப்திக்கான வேட்கையுடன் கிருஷ்ண மந்த்ரம் ஜபிக்க ஆரம்பித்தார்.
சில தினங்களுக்குப் பிறகு கௌராங்க மஹாப்ரபுவின் சகோதரரான ஸ்ரீ பாத நித்யானந்த பிரபு ஸப்த கிராமத்தில் ஒன்றான பானிஹாட்டிக்கு வந்திருப்பதாக ரகுநாதருக்குச் செய்தி கிட்டியது. அவருடன் பக்தர்கள் பலரும் வந்திருந்தனர். மஹாபிரபு நித்யானந்தரிடம் கலியில் பிடியில் சிக்கி தவிக்கும் ஜீவன்களுக்கு கிருஷ்ண பிரேமை அளிக்கும்படி ஆணையிட்டிருந்தார். எனவே அவர் பார்வை படும் ஜீவர்களின் உடலில் ஸாத்விக பாவங்கள் தோன்றி பிரேம மழை பொழியலாயிற்று. ஸ்ரீ நித்யானந்தரின் பிரேம பாவத்தை அறிந்த ரகுநாதர் அவரிடம் சரணாகதி அடைய பானிஹாட்டிக்குச் சென்று பிரபு நித்யானந்தரின் சரணத்தில் வீழ்ந்தார். நித்யானந்தர் அவரது சிரஸ்ஸில் தம்முடைய தாமரை பாதங்களை வைத்து ஆசீர்வாதித்து ''திருடா, உனக்கு ஒரு தண்டனை தரப் போகிறேன்'' என்றார்.
கருணாமூர்த்தியான பகவான் ஶ்ரீ நித்யானந்த பிரபுவின் தண்டனையும் அவரது கருணையாகத்தான் இருக்க முடியும். நித்யானந்தபிரபு ரகுநாதரை பார்த்துத் தம்முடைய பக்தர்களுக்கு அவல் மற்றும் தயிருடன் பழவகைகளையும் சேர்த்து செய்த பதார்த்தங்களை தன்னுடன் வந்த அனைத்து பக்தர்களுக்கும் வினியோகம் செய்ய உத்தரவிட்டார். இதைக் கேட்ட ரகுநாதர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மலை உயரத்திற்கு அவல். வாழைப்பழம், சந்தேஷ், வெல்லம் இவை குவிக்கப்பட்டன. அவலை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தை தயிரிலும், ஒரு பாகத்தைப் பாலிலும் இட்டனர். இரண்டிலும் வாழைப்பழம், வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்டது. வட விருக்ஷத்தின் கீழ் பகவான் நித்யானந்தபிரபுவிற்கும், பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவிற்கும் இரு ஆசனங்கள் அமைக்கப்பட்டு. அவர்கள் எதிரில், பால் அவல், தயிர் அவல், பானைகளில் வைக்கப்பட்டன. எல்லா பக்தர்களுக்கும் அதே மாதிரி பானைகள் அளிக்கப் பட்டன. பகவான் நித்யானந்தர் பகவான் ஶ்ரீ கௌராங்கரை ஆவாஹனம் செய்ததும் அவரும் வந்து அந்த ஆசனத்தில் அமர்ந்தார். எல்லா பானைகளிலிலிருந்தும் சிறிது எடுத்து நித்யானந்த பிரபு மஹாபிரபுவின் வாயில் ஊட்டினார். மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவிற்கு ஊட்டினார். கூடியிருந்த பக்தர்கள் இந்தக் காட்சியை ஆர்வத்துடன் கண்டனர் . பிரேம நேத்ரம் இல்லாதவர்களுக்கு இதன் ரகசியம் புரியாது. பிறகு எல்லோரும் ஜயத்வனி (ஜய கோஷம் ) செய்து கொண்டு பிரசாதம் உண்டனர். நிதாயி. கௌராங்கர் ஆகியோரின் உச்சிஷ்ட பிரசாதத்தை ரகுநாதர் உண்டார். இன்றும் ஆண்டு தோறும் அதே தினத்தில் அதே இடத்தில் அந்த உத்ஸவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் ரகுநாதர் நித்யானந்த பிரபுவின் சரணங்களில் வீழ்ந்து ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் அடைக்கலம் கிட்ட ஆசீர்வாதம் செய்ய வேண்டினார்.
நித்யானந்த பிரபு "ரகுநாத்! நான் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன். உனக்கு சீக்கிரமே சைதன்ய மகாபிரபுவின் சேவை கிடைக்கும். மேலும் அவருடைய அந்தரங்க பக்தனாக விளங்குவாய்' என்றார். ரகுநாதரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
ரகுநாதரின் வீட்டில் உள்ளவர்களும் அவரது மனநிலையை நன்கு அறிந்தனர். அவருக்கு பலத்த காவல் போட்டனர். ஒரு சமயம் அவருடைய குலகுரு ரகுநாதரை உதவிக்காக அழைத்துச் சென்றார். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து முடித்த ரகுநாதர், வெளியே தப்பியோட இதுதான் தகுந்த சமயம் எனக் கருதி, காட்டுப் பாதையில் நீலாசலம் நோக்கி நடந்து செல்லலானார். களைத்து இளைத்து மஹாபிரபுவை அடைந்து அவரது சரணங்களில் வீழ்ந்தார். மஹாபிரபு அவரை அணைத்து ஆசீர்வதித்தார். பக்தர்கள் இதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கலாயினர்.
ஸ்வரூப தாமோதரர் மஹாபிரபுவிற்கு மிகவும் இனிய அந்தரங்க ரஸிக பக்தர் ஆவார். அவர் விரஜ லீலா ரஸத்தின் ரகசியங்கள் தெரிந்தவர். மஹாபிரபு ஸ்வரூப தாமோதரரை அழைத்து "ஸ்வரூப்! ரகுநாதனை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்றார்.
முதலில் ஐந்து நாட்கள் ரகுநாதர் மிகவும் களைத்து இருந்ததால் மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் கொடுத்த மஹாபிரபுவின் உச்சிஷ்ட பிரசாதத்தை உண்டு வந்தார். பிறகு இரவு வேளைகளில் ஜகந்நாதரின் கோயிலில் சிம்ம துவாரத்தில் நின்று கொண்டு. கிடைத்த பிக்ஷையை உண்டு வாழலானார். இச்செய்தி கேட்ட மஹாபிரபு அவரது வைராக்யத்தால் மகிழ்ந்தார். ரகுநாதர் ஒருநாள் ஸ்வரூபதாமோதரரிடம் ஸாத்ய ஸாதன விஷயமாகத் தாம் செய்ய வேண்டுவது யாது என்று மஹாபிரபுவிடம் கேட்கச் சொன்னார். அதற்கு மஹாபிரபு "தன்னை தீனனாக நினைத்துக் கொண்டு கிருஷ்ண நாமத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டிரு. விரஜத்தில் உள்ள ராதாகிருஷ்ணருக்கு மானசீக சேவை செய்" என்று கூறினார். இவ்வாறு மஹாபிரபு ராகானுகா பக்தி மார்கத்தின் அந்தரங்க பக்தி சேவை, மற்றும் பகிரங்க பக்தி சேவைகளை சுருக்கமாக உபதேசம் செய்தார். வெளிபுர பக்தி சேவை கிருஷ்ண நாம ஜபம். அந்தரங்க பக்தி சேவை ராதா கிருஷ்ணரின் மானஸிக சேவை. இவைகளைப் பற்றி விரிவாக ஸ்வரூப தாமோதரரிடமிருந்து அறிந்து கொள்ளுமாறு கூறினார்.
சிவானந்த சேனா என்பவர் மஹாபிரபுவின் பக்தர்களுள் ஒருவர். அவர் ஒவ்வொரு வருடமும் கௌட தேசத்திலிருந்து நீலாசலம் சென்று மஹாபிரபுவை தரிசனம் செய்து வருவார். அவரிடம் ரகுநாதரின் பெற்றோர் ரகுநாதரைப் பற்றி விசாரித்தனர். அவரும் ரகுநாதரின் வைராக்ய வாழ்க்கையைப் பற்றிக் கூறினார். எனவே அவர்கள் ரகுநாதருக்காகச் செல்வங்கள். வெகுமதிகள் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை நீலாசலம் அனுப்பினர். முதலில் ரகுநாதர் மஹாபிரபுவிற்கும். அவரது பக்தர்களுக்கும் சேவை செய்வதற்கு செல்வம் உதவும் என அதை ஏற்றுக் கொண்டார். சில நாட்கள் அவ்வாறு சேவை செய்தார். பிறகு மனம் மாறி நிறுத்தி விட்டார். மஹாபிரபு ஸ்வரூபரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு ஸ்வரூபர் இங்கு வந்து யாசகம் ஏற்பதில் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதை ரகுநாதர் உணர்ந்தார். வைராக்ய மூர்த்தியான தங்களுக்குச் சுவையான உணவுகளில் ருசி இல்லை என்பதையும் உணர்ந்தார். விஷய போகத்தில் ஆழ்ந்த தம்முடைய தந்தையின் பணத்தினால் தங்களுக்கு உணவளிக்க அவர் விரும்பவில்லை" என்று கூறினார். இதைக் கேட்ட மஹாபிரபு மனமகிழ்ந்தார்.
ரகுநாதர் சிம்ம துவாரத்தில் யாசகம் எடுத்துக் கொண்டு நாள் முழுவதும் ஸ்வருப தாமோதரருக்கு சேவை செய்வதிலும். பஜனை செய்வதிலும் காலம் கழித்து வந்தார். சில நாட்கள் கழித்து அவருக்கு யாசகத்திலும் வைராக்யம் ஏற்பட்டது. பிறகு சத்திரத்தில் சென்று ஏழைகளுடன் சேர்ந்து உணவு அருந்தலானார். பிறகு அதிலும் வைராக்யம் ஏற்பட்டு, பிறரிடம் யாசிக்காமல் பெறும் மாசற்ற உணவுக்கான வழியைத் தேடலானார். ஜகந்நாதரின் கோயிலுக்கு அருகில் கடைகளில் ஜகந்நாதரின் மஹாபிரசாதம் விற்கப்படும். மிகுந்த பிரசாதங்களைக் கடைக்காரர்கள் ஸிம்ம த்வாரத்தில் நிற்கும் பசுக்களுக்குப் போட்டுவிடுவர். ரகுநாதர் பசுக்கள் தின்று மீதி வந்த பிரசாதத்தை எடுத்து வந்து. நன்றாக அலம்பி அதில் நன்றாக இருக்கும் பாகத்தை மட்டும் உப்புக் கலந்து சாப்பிடுவார். ஸ்வரூப தாமோதரர் இவையனைத்தையும் நன்கு அறிவார். ஒரு நாள் இரவு ரகுநாதரின் குடிலை அடைந்து அவரது கையிலிருந்தே பிரசாதத்தை எடுத்துத் தாமும் உண்டார். தம்முடைய உயர்ந்த சிஷ்யனின் வைராக்யத்தைச் சிறப்பிக்க இதை விட வேறு வழி ஏது? ஸ்வரூபரின் மூலம் எல்லா விவரமும் அறிந்த மஹாபிரபு, அவரையும் அழைத்துக் கொண்டு ரகுநாதரின் குடிலை அடைந்தார். பிறகு "ரகுநாத்! இந்த திவ்யமான மாகா பிரசாதத்தை எனக்குக் கூட கொடுக்காமல் தனியே உண்கிறாயே" என்று கூறிக் கொண்டே அதில் சிறிது எடுத்து உண்டார். ஸ்வரூபர் அதைத் தடுத்தபோது ''இதைப் போன்ற ருசியான பிரசாதத்தை நான் உண்டதே இல்லை" என்று கூறினார் மஹாபிரபு. மஹாபிரபுவுடன் வந்திருந்த பக்தர்களும் இந்த லீலையைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.
ரகுநாதரது இந்த வைராக்ய சுபாவம் அவரது கிரூஷ்ண பிரேமையாகிய பலத்தினால் ஏற்பட்டது. ஸர்வ தியாகியான ரகுநாதரை சுகப்படுத்தும் பொருள் ஒன்று இந்த மூவுலகிலும் இல்லை. இதைக் கண்டு மஹாபிரபு மன மகிழ்ந்தார். சங்கரானந்த ஸரஸ்வதி என்ற பக்தர் பிருந்தா வனத்திலிருந்து கோவர்தன சிலா (கல்) ஒன்றும். குஞ்ஜாமாலா (குந்துமணி மாலை) ஒன்றும் எடுத்து வந்து மஹாபிரபுவிடம் கொடுத்திருந்தார். மஹாபிரபு மூன்றாண்டு காலம் அக்கோவர்தன சிலாவை கிருஷ்ணராக பாவித்து சேவை செய்து வந்தார். கிருஷ்ண ஸ்மரணையின் போது குஞ்ஜாமாலையைக் கழுத்தில் அணிந்து கொள்வார். அச்சிலா, மற்றும் மாலை இரண்டும் எப்போதும் அவரது கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும். இவ்விரண்டையும் மஹாபிரபு ரகுநாதரிடம் கொடுத்து, ''இச்சிலைக்கு ஜலம், துளசி தளம் இவற்றால் ஸாத்விக சேவை செய். உனக்கு கிருஷ்ண பிரேமை என்ற நிதி கிடைக்கும்" என்று கூறினார். ரகுநாதர் அவரளித்த பிரசாதங்களை ஆனந்தத்துடன் பெற்றுக் கொண்டார். மஹாபிரபு கோவர்தன சிலா கொடுத்ததன் மூலம் கோவர்தன கிரிதாரியையும், குஞ்ஜா மாலையை கொடுத்ததன் மூலம் ராதாராணியையும் கொடுத்ததாக அவர் உணர்ந்தார். பின்னர் மஹாபிரபுவின் ஆணையுடன் கோவர்தன சிலாவிற்கு சேவை செய்யலானார்.
ரகுநாதர் பூஜை. ஜபம், ஸாதன, பஜன நியமத்துடன் பதினாறாண்டுகள் நீலாசலத்தில் இருந்தார். அப்போது மஹாபிரபுவின் பகவத் பிரேம லீலைகளைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்தார். ஸ்வரூப தாமோதரரிடமிருந்து கடந்த கால லீலைகளைக் கேட்டு மகிழ்வார். பின்னர் ரகுநாதர் இவற்றை சிஷ்யரான கிருஷ்ணதாஸ கவி ராஜருக்குக் கூறினார். அவர் எழுதிய சைதன்ய சரிதாம்ருதம் மூலம் பக்தர்கள் அந்த லீலைகளை அனுபவிக்கும் பேறு பெற்றனர். பதினாறு வருடங்களுக்குப் பிறகு மஹாபிரபு இந்த பௌதீக உலகில் தனது பூஉலக லீலையை முடித்தார். ஸ்வரூபரும் சில தினங்களில் மறைந்தார். துயரத்துடன் ரகுநாதர் ரூபர், ஸநாதன ஆகியோரை தரிசிக்க பிருந்தாவனம் சென்றார்.
பிருந்தாவனத்தில் அவர் பக்தர்களின் குழுவில் சேர்ந்து கொண்டார். ரூபரும். ஸநாதனரும் ரகுநாதரிடம் ''கோவர்தன சிலாயையும், குஞ்ஜா மாலையையும் கொடுத்ததன் மூலம் மஹாபிரபு உன்னை கோவர்தனத்தையும், ராதாகுண்டத்தையும் தரிசனம் செய்ய ஆணையிட்டுள்ளார். மஹாபிரபுவின் மஹாபாவ மயமான அந்திம லீலைகளை நேரில் பார்த்து அனுபவித்த உன்னிடமிருந்து அவற்றைக் கேட்க ஆவலாக உள்ளோம்." என்று கூறினார்கள். சில தினங்கள் அவர்களுடன் இருந்து அவர்களது மதுரஸங்கத்தை அனுபவித்தார் ரகுநாதர்.
மஹாபிரபுவின் நீலாசல லீலைகளைக் கேட்கவும், ஸ்வரூபர். ராய்ராமானந்தர் இவர்களிடமிருந்து அறிந்த பிரேமதத்வ ஸம்பந்தமான விஷயங்களைக் கேட்கவும், பக்தர்கள் பலர் ரகுநாதரின் குடிலில் குழுமினர். ரகுநாதரின் பக்தர்களில் ஸ்ரீ கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி (சைதன்ய சரிதாம்ருதம் ஆசிரியர்) மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். அவர் ரகுநாதரைத் தம்முடைய சிக்ஷா குருவாக சைதன்ய சரிதாம்ருத்தில் குறிப்பிட்டுள்ளார். ரகுநாதர் நீலாசலத்தில் ஸ்வரூப தாமோதரருடன் மஹாபிரபுவின் ரகசிய லீலைகளைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அதுபோல பிருந்தாவனத்தில் பிரேம பக்திரஸ ஸித்தரான ஸ்ரீல ரூப கோஸ்வாமியிடமிருந்து மாதுர்ய ரஸ தத்துவங்களின் விளக்கங்களை கேட்டறிந்தார்.
பிறகு ரகுநாததாஸர் கிருஷ்ண தாஸரையும் அழைத்துக் கொண்டு உபவேஷன் காட் என்னுமிடத்தில் மரத்தினடியில் வசிக்க ஆரம்பித்தார். ஸநாதன கோஸ்வாமி அவரை சந்திக்க வந்தார். அருகில் உள்ள ஒரு குளத்தில் ஒரு புலி நீர் அருந்திக் கொண்டிருப்பதையும், ரகுநாததாஸரை அப்புலியிடம் இருந்து காக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வில்லும் அம்பும் கையில் வைத்துக் கொண்டு நிற்பதையும் கண்டார். தியானம் கலைந்த ரகுநாத கோஸ்வாமி அவரை வணங்கினார். அப்போது ஸநாதன கோஸ்வாமி 'உனது ஜீவனம் முக்கியத்துவம் வாய்ந்தது. உனது வாக்கில் மஹாபிரபுவின் மதுர ரஸ லீலைகள் அருவியாகக் கொட்டுகின்றன. அதைக் கேட்கும் ஜீவர்களுக்கு நன்மை உண்டாகிறது. உன்னைக் காப்பாற்றுவதற்காக பிரபு (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ) கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. நீ ஒரு குடிலில்தான் வசிக்க வேண்டும்" என்று கூறி அதற்கான ஏற்பாடுகள் செய்தார். ரகுநாத தாஸரின் பர்ணசாலை இருந்த இடத்தின் பெயர் "அரிஷ்டக்ராமம்" ஆகும். இதன் அருகில் ராதா குண்டம் மற்றும் சியாம குண்டம் உள்ளன.
ஒரு சமயம் ராதாராணி கண்ணனிடம் பரிஹாஸமாக அரிஷ்டாஸுரனின் வதத்தின் மூலம் ஏற்பட்ட பாபத்திற்குக் கழுவாயாக எல்லாத் தீர்த்தங்களிலும் சென்று நீராடி வரக் கூறினார். ஸ்ரீ கிருஷ்ணரும் குதூகலத்துடன் தரையில் ஓங்கி உதைத்து ஒரு குண்டத்தை உண்டாக்கினார். எல்லாத் தீர்த்தங்களும் நேரில் பிரகடனமாகி ஸ்ரீ கிருஷ்ணரைத் துதி செய்து அந்தக் குண்டத்தை தங்கள் தங்கள் நீரால் நிரப்பின. அந்தக் குண்டத்திற்கு சியாம குண்டம் என்ற பெயர் ஏற்பட்டது. ராதையும் போட்டி போட்டுக் கொண்டு அதன் அருகில் மற்றொரு குண்டத்தை நிர்மாணம் செய்தார். அப்போது கண்ணனின் இங்கிதம் அறிந்து எல்லாத் தீர்த்தங்களும் ராதையை ஸ்துதி செய்து ராதையின் அனுமதி பெற்று அந்தக் குண்டத்தையும் நிரப்பின. அந்தக் குண்டத்திற்கு, “ராதா குண்டம்" என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் அக்குண்டங்கள் தூர்ந்து போயின. ரகுநாததாஸ கோஸ்வாமியின் பிரார்த்தனையின் விளைவாக அக்குண்டங்கள் இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை புனர் நிர்மாணம் செய்ய நிதி தேவைப்பட்டது. பக்தனின் தேவையை உணர்ந்த பகவான் அதற்கான ஏற்பாடுகள் செய்தார். ஒரு நாள் ஒரு பக்தர் ரகுநாத தாஸரிடம் வந்து பத்ரிநாராயணனுக்கு சேவை செய்ய பணம் எடுத்துச் சென்றேன். அவர் எனது கனவில் தம்முடைய பக்தனான ரகுநாத தாஸரின் ஆணையை ஏற்று ராதா குண்டம். சியாம குண்டம் இவற்றின் திருப்பணிக்காக உபயோகப்படுத்தும்படி கூறினார். எனவே உங்களது ஆணையை ஏற்று சேவை செய்ய வந்துள்ளேன்" என்று கூறினார். பிரபுவின் கருணையை எண்ணி ரகுநாதர் கண்ணீர் விடலானார். இவ்வாறாக சியாம குண்டம். ராதா குண்டம் இவை புனர் நிர்மாணம் செய்யப்பட்டன.
ரகுநாத தாஸர் தினமும் ஒரு லட்சம் நாம ஜபம். மஹாபிரபுவின் சரித்ர வர்ணனை. ராதா கிருஷ்ணரின் மானஸிக சேவை எனக் மிகவும் தீரமான பக்தி செய்து வந்தார். அன்னம். ஜலம் எதுவுமின்றி 2 அல்லது 3 பலம் 'மடா'(மோர்) மட்டும் குடித்து வந்தார். அவர் தமது ஸூக்ஷ்ம தேஹமான மஞ்ஜரி தேஹத்தின் மூலம் ராதாகிருஷ்ணரின் மானஸ ஸேவை செய்து வந்தார்.
ஒரு சமயம் அவருக்கு அஜீர்ணம் உண்டாயிற்று. வைத்தியர் பரிசோதனை செய்து ''இவர் பால் சாதம் சாப்பிட்டுள்ளார். எனவேதான் அஜீர்ணம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறினார். அவரது சிஷ்யரான விட்டலநாதர் இதில் ஏதோ ஒரு ரகசியம் உள்ளதாக உணர்ந்தார். ரகுநாதரும் அவரிடம் "நான் மானச சேவையில் பால் அன்னம் பிரசாதத்தை உண்டேன்" என்று கூறினார்.
ரகுநாதரிடம் ராதையின் பிராண சகியான மஞ்ஜரி பாவம் திடமாக இருந்தது. ரகுநாத தாஸருக்கு தினமும் 'மடா' கொடுக்கும் சேவையைச் செய்பவர், தொன்னை யின் அளவை அதிகரிக்க எண்ணி ராதாராணியின் எதிர் பக்ஷமான சந்த்ராவளியின் இடத்தைச் சேர்ந்த சகி ஸ்தலியிலிருந்து பெரிய இலையை எடுத்துப் பெரிய தொன்னை செய்து அதில் 'மடா' எடுத்து வந்தார். அந்த தொன்னையைக் கண்டதுமே ரகுநாதர் "அதை எங்கிருந்து எடுத்து வந்தாய்?" எனக் கேட்டார். சகி ஸ்தலி என்ற சொல்லைக் கேட்டதுமே ஸ்ரீரகுநாதர் தொன்னையை வீசி எறிந்தார். ராதா ராணியின் ஏகாந்த அனன்ய பக்தரான ரகுநாததாஸர் சந்த்ராவளியின் கிராமத்திலிருந்து ஓர் இலை கூட ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
ஒரு முறை ஸ்ரீ ரூப கோஸ்வாமி "லலிதமாதவம்'' என்னும் நாடகத்தை ரகுநாத தாஸ கோஸ்வாமியிடம் படிப்பதற்காகக் கொடுத்தார். அதில் ராதையின் விரஹ வேதனையின் வர்ணனையைத் தாளாத ரகுநாததாஸர் பாவநிலையில் உன்மத்தமானார். அவரை சமாதானப்படுத்த எண்ணிய ரூப கோஸ்வாமி "தான கேளி கௌமுதி என்னும் கண்ணனின் பரிஹாஸ லீலைக் கதையைப் படித்து அவரை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
ரகுநாததாஸ கோஸ்வாமி தீவிர பக்தியில் 20 வருடங்கள் ராதாகுண்டத்தின் அருகிலேயே கழித்தார். ஸ்ரீ ரூபர், ஸநாதனர் ஆகியோர் நித்ய லீலையில் பிரவேசித்து விட்டனர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆசீர்வாதத்தால் வளர்ச்சியுற்ற ரகுநாத தாஸர் பக்தி ஸித்தியடைந்த நிலையில் புலம்புவதும் துடிப்பதுமாகக் காலம் கழித்தார். இந்த தைன்ய குணமே பகவத் பக்தனின் உண்மையான அணிகலனும். பகவத் கிருபா பிராப்திக்கான சின்னமும் ஆகும். 90 வது வயதில் அவர் தமது பிராக்ருத தேஹத்தை விட்டு மஞ்ஜரி ரூபத்தில் நிகுஞ்ஜ லீலையில் பிவேசித்தார்.
1. ஸ்தவாவளி 2. தானகேளி சிந்தாமணி 3. முக்தா சரிதம் என்பவை இவர் அருளிச் செய்த நூல்களில் சிலவாகும்.
ஸ்தவாவளி என்பது கெளராங்க ஸ்தவகல்பதரு முதலான 29 துதிகளின் தொகுப்பு.
தான கேளி சிந்தாமணி ரூப கோஸ்வாமியின் தான கேளி கௌமுதி போன்றது. வஸுதேவர் செய்த வேள்விக்கு ராதா தேவி நெய் எடுத்துச் செல்வதும். கண்ணன் வழிமறித்து வரி கேட்பதும், நாந்தீமுகி என்ற கோபி மத்யஸ்தம் செய்வதும் இதில் இனிமையாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
முக்தா சரிதம் இந்நூலில் கண்ணன் முத்துக்களை பூமியில் விதைத்து. அறுவடை செய்து அனைவருக்கும் அணிவித்து மகிழ்ந்த லீலை விவரிக்கப்பட்டுள்ளது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment