காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பஹுலாஸ்வ மன்னன் கேட்டான், 'ரமணகத் தீவில் வாழ்ந்த மற்ற பாம்புகளை விட்டு விட்டு காளிய நாகத்திற்கு மட்டும் கருடனிடம் பயம் உண்டானது ஏன்? இந்த விஷயத்தைக் கூறுங்கள்
ஸ்ரீ நாரதர் கூறினார் : மன்னா ! நாகங்களை அழிப்பவரான கருடன் ரமணகத் தீவிற்கு ஒவ்வொரு நாளும் சென்று ஏராளமான பாம்புகளை அழித்து வந்தார். அதனால் பயமும் கவலையுமடைந்த அங்கிருந்த நாகங்கள் ஒருநாள் கருடனிடம் இவ்வாறு கூறின." 'கருடனே, உனக்கு வணக்கம். நீ சாக்ஷாத் பகவான் விஷ்ணுவின் வாஹனமாவீர். இவ்விதம் நீங்கள் சர்ப்பங்களைச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்களானால் எங்கள் வாழ்விற்குப் பாதுகாப்பு ஏது? ஆகவே ஒவ்வொரு மாதமும் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு சர்ப்பத்தை பலியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் வனஸ்பதி அல்லது அமுதத்திற்கு நிகரான இனிப்பு அன்னமும் உங்களுக்கு அளிக்கப்படும். அவற்றை முறைப்படி நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
கருடன் கூறினார்: 'நீங்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பாம்பை பலியாக ஒவ்வொரு நாளும் அளித்து வாருங்கள். பாம்பைத் தவிர நான் வேறு எந்த பலியாலும் என் வயிறு நிறையப் போவது இல்லை.
நாரதர் கூறினார்: 'கருடன் இவ்வாறு கூறவே எல்லா சர்ப்பங்களும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஒவ்வொன்றாக கருடனுக்கு தினமும் திவ்ய பலி அளிக்கலாயின அரசே! காளியனின் வீட்டு பலி கிடைக்க வேண்டிய சமயம் வந்தபோது அவன் கருடனுக்கு அளிக்கப்படும் பொருட்கள் அனைத்தையும் தானே சாப்பிட்டுத் தீர்த்தான். அப்போது மிகுந்த கோபத்தோடு கருடன் வந்தார். வந்ததுமே காளிய நாகத்தைத் தன் கையால் அடித்தார். கருடனின் அந்தப் அடியால் காளியன் மூர்ச்சித்து விட்டான். பிறகு எழுந்து பெருமூச்சு விட்டபடியும். நாக்கால் வாயை நக்கியபடியும், பலசாலியான காளியன் தனது நூறு படங்களையும் விரித்து விஷப்பற்களால் கருடனை தீண்டினான்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்ய வாகனனாகிய கருடன் அவனை அலகால் பற்றி பூமியின் மீது அறைந்தார். சிறகுகளால் தொடர்ந்து அடிக்கலானார். கருடனின் அலகிலிருந்து நழுவிய சர்ப்பம் தொடர்ந்து சீறியபடி அவரது சிறகுகளை இழுக்கலானான். . ரோஷம் நிறைந்த கருடன் மறுபடி காளியனை அலகால் பற்றி பூமியின் மீது அடித்தார். அவன் உடலை இழுக்கலானார். அப்போது பயந்த காளியன் கருடனின் அலகிலிருந்து விடுபட்டு ஓடலானான். அடக்கவொண்ணா ஆற்றல் கொண்ட பக்ஷிராஜன் கருடனும் அவனைப் பின்தொடர்ந்தார். ஏழு தீவுகள், ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள் வரை அவன் சென்ற இடங்களில் எல்லாம் கருடன் பின்தொடரக் கண்டான். அந்த நாகம் பூலோகம், புவர்லோகம் ஸ்வர்லோகம் மஹர்லோகம் எல்லாவற்றிற்கும் வரிசையாகச் சென்றான். அங்கிருந்து ஜனலோகம் சென்றான். அங்கும் கருடன் பின் தொடர்ந்தார். ஆகவே அவன் மறுபடி கீழே உள்ள லோகங்களுக்கும் சென்றான். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனிடம் உள்ள பயத்தால் யாரும் அவனுக்கு உதவவில்லை எங்குமே தனக்கு ஆதரவு கிட்டாததால் அவன் தேவாதி தேவனான ஆதிசேஷ பகவானிடம் வந்தான். அவரை வணங்கி வலம்வந்து கைகுவித்து பெருத்த சரீரமுடைய காளியன் தீனனாக பயத்தோடு நடுங்கியவாறு கூறினான். 'புவனேஸ்வரா!, பூமியின் பாரம் போக்கும் பிரபோ உங்களுடைய விளையாட்டுகள் எல்லையற்றவை. நீங்கள் எல்லாம் வல்லவர். பூரண பராத்பர புராண புருஷர். என்னைக் காப்பாற்றுங்கள்
நாரதர் கூறுகிறார்: 'காளியனை தீனனாக பயத்தால் பீடிக்கப்பட்டவனாகக் கண்ட ஆதிசேஷன் இனிய சொற்களால் அவனை மகிழ்வித்தவாறு கூறலானார். காளியா!, உத்தமமான என் பேச்சை கேள். உலகில் எங்கும் உனக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதில் ஐயம் இல்லை. ஒரே உபாயம்தான் உள்ளது. அதைக் கூறுகிறேன் முன் காலத்தில் சௌபரி என்னும் பெயருடைய முனிவர் இருந்தார். அவர் பிருந்தாவனத்தில் யமுனை நீரினுள் பத்தாயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அந்த நீரில் மீன் அரசனின் விளையாட்டை கண்டு அவர் மனதிலும் குடும்பம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விழைவுண்டாயிற்று. அவர் மகாராஜா மாந்தாதாவினுடைய நூறு புதல்விகளை மணந்து கொண்டார். ஸ்ரீஹரி அவருக்கு பரம ஐஸ்வர்ய, ஷாலினி, வைஷ்ணவி, போன்ற செல்வத்தை அளித்தார். அதைக்கண்ட மாந்தாதாவே அசந்து போய்விட்டார். செல்வம் பற்றிய அவரது ஆணவம் முழுவதும் வீணாகிவிட்டது. யமுனை நீரில் சௌபரி முனியின் நீண்டகாலத் தவம் தொடர்ந்து கொண்டிருந்த போது கருடன் அவ்விடத்தில் உணவுக்காக மீன்களை கொன்று தின்றார். மீன்களின் குடும்பம் மிகவும் துயரமுறுவதைக் கண்ட சௌபரி முனிவர், மற்றவர் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் கோபமுற்று கருடனுக்கு சாபமளித்தார். " பக்ஷி ராஜனே இன்றைய தினத்திலிருந்து நீ இந்தக் குண்டத்தினுள் பலவந்தமாக மீனை உண்பாயாகில் என் சாபத்தினால் அக்கணமே உன் உயிருக்கு முடிவுண்டாகிவிடும். என்றார்
'அன்றைய நாளில் இருந்து கருடன் அங்கு ஒருபோதும் வருவதில்லை. களியா நீ என் சொற்படி உடனே ஸ்ரீ ஹரிக்குச் சொந்தமான வ்ருந்தாவனத்திற்குச் சென்றுவிடு அங்கு பயமின்றி யமுனையில் உன் இருப்பிடத்தை நியமித்துக்கொள். அங்கு உனக்கு கருடனால் பயமுண்டாகாது என்று ஆதிசேஷன் கூறினார்.
நாரதர் கூறுகிறார்: மன்னா, ஆதிசேஷ நாகம் இவ்வாறு கூறியதும் பயனடைந்த காளியன் தன் மனைவி மக்களோடு காளிந்தியில் வசிக்கத் தொடங்கினான். பிறகு ஸ்ரீ கிருஷ்ணன் அவனை யமுனையிலிருந்து கிளப்பி வெளியே அனுப்பினார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment