அனந்தாழ்வாரின் "ராமானுஜ நந்தவனம்"


 அனந்தாழ்வாரின்  "ராமானுஜ நந்தவனம்"


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?"


திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.


எப்படி..?


திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான 'கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தைத் தோண்ட, பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது.


 திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வார்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



அனந்தாழ்வாரின் குருபக்தி


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் தூய பக்திதொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமானுஜ ஆச்சாரியருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. 'நாம் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்துக்கொண்டு பகவத்சேவையில் நித்யம் ஈடுபட்டிருக்கிறோம். அதேபோல் திருவேங்கடத்திலும் (திருப்தி ) இப்படி ஒரு நந்தவனம் அமைக்க வேண்டும் 'என்பதுதான் அவருடைய ஆதங்கம். ஒரு நாள் ராமானுஜ ஆச்சாரியர் அதை தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தும்விட்டார். தெரிவித்ததோடு நில்லாமல், 'உங்களில் எவர் திருவேங்கடம் சென்று பகவானின் சேவைக்கு ஒரு அற்புதமான நந்தவனம் அமைத்து அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் சேவையை எடுத்துக்கொள்ளப் போகிறீர் ?' எனக் கேட்கவும் செய்தார். 


ஆனால், சீடர்கள் ஆச்சாரியரை பிரிய மனம் இல்லாததால் அவர்கள் எவரும் வாய் திறக்கவில்லை.


'குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?' என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வார். அவரது கண்களில் வைராக்கியம். உதட்டில் புன்முறுவலுடன் ஆச்சாரியரின் திருபாதம் சரணாகதியடைந்தார்., ஆச்சாரியாரின்  பூரண அனுக்கிரகத்தால் அவரது இந்த கட்டளையை தான் சிரமேற்கொண்டு செய்வதாக பணிவுடன் கூறினார். அனந்தாழ்வாரை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார்.ஶ்ரீ ராமானுஜ ஆச்சாரியர்


 ஏழுமலை ஆண்டவனுக்கு 'திருமாலை சேவை' செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.


முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமானுஜ ஆச்சாரியரின் தாய்மாமனான, திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.


'அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். முதல் காரியமாக பெருமாளை வணங்கிவிட்டு வந்து உணவு அருந்துங்கள். களைப்பு தீர ஓய்வு எடுங்கள். நாளை முதல் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம்' என்றார். அனந்தாழ்வாரும் அவரது மனைவியும் அப்படியே செய்தனர்.


அவரது குடிசையின் அருகே நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.


மழைக்காலத்தில் செடிகள் பூத்துக் குலுங்கின. தண்ணீர் பிரச்னை எழவில்லை. கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார்.


 நந்தவனம் அருகே சிறுபள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்இட்டு உயரமாக நிரப்பி, பள்ளத்தை ஆழப்படுத்தினார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.


மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வாரோ, 'நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக, அந்தச் சிறுவனைப் பார்த்து, 'உன் வேலை எதுவோ அதைப் போய் செய்' என்று அனுப்பிவிட்டார்.


தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வார் மறுத்துவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதுமட்டுமின்றி தமது குருவின் கட்டளையை யாருடைய உதவியுமின்றி தானே செய்ய வேண்டும் அதில் வேறு எவரும் பங்கு கொள்ள அவர் விரும்பவில்லை. இந்த ஆழ்ந்த சேவைமனப்பான்மை தான் அந்த சிறுவனின் உதவியை அவர் மறுக்க காரணம். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. 


ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். நான் மண் சுமக்கிறேன். உங்கள் மனைவி கர்ப்பிணி அவர் இவ்வாறு கஷ்டபடுவதை அந்த பெருமாளே தாங்கி கொள்ள மாட்டார் என்றான். 


'அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாமல் போய்விடு. கண்டிப்பாக இவ்விஷயத்தில் நீ தலையிடாதே' என்று சிறுவனைக் கடிந்துகொண்டு அங்கிருந்து அனுப்பினார் அனந்தாழ்வார்



சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வார் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அந்த சிறுவன் இன்னும் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான். மேலும் அனந்தாழ்வாரின் மனைவி அவ்விடத்தில் வந்ததும். '' தாயே, நான் அவருக்கு உதவுகிறேன் என்றால் அவர் கோபப்படுகிறார். நீங்கள் இருவரும் இவ்வாறு கஷ்டப்படுவதை என்னால் காணமுடியவில்லை. அதுவும் கர்பவதியான நீங்கள் இவ்வாறு கஷ்டபடவேண்டாம் அதனால்  அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் ''என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.


'சரி,' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வாருக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, ''சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் ஏதும்  இல்லை''என்று பதில் சொல்லி சமாளித்தாள்.


சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வார் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான். 


இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய் திருமலை கோவிலில் அர்ச்சா விக்ரகத்தில் மறைந்தான். 


அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வாரும், அந்த சிறுவனை தொடர்ந்து கோவிலுக்குள் வந்தார். அங்கு வந்து பெருமாளை பாரத்ததும் தனது நெஞ்சு பதைபதத்தது  ஆம் ! பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வார் கண்டார். குற்றவுணர்வுடன் கூனிகுறுகி கண்ணீர் மல்க மீண்டும் மீண்டும் மன்னிப்பு வேண்டினார்.''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க'' என்று விழுந்து விழுந்து வணங்கினார் அனந்தாழ்வார்.


'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்''என்று அசரீரியாகக் கேட்டார்.



''கருணைக் கடலே! உன் அருளே வேதனை போக்கும். கஷ்டம் துடைக்கும். என்னை மன்னியுங்கள் சுவாமி'' என்றார்.ஆனால் உங்கள் தாடையில் ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று கேட்டார். 



பெருமாளோ மோகனமாக தனக்கே உரிய புன்னகையை உதித்தார். பின்னர் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.



மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிவது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பெருமாளை தரிசிக்க வருபவர்கள் தாடையில் பச்சைக் கற்பூரத்தை  பார்கும் போது பகவானுக்கும் அவரது தூய பக்தர்ருக்கும் நடந்த இந்த அற்புதமான லீலையை நினைவு கூர்ந்து, அனைவரது உள்ளம் தூய்மையடைய வேண்டும். என்பதே பகவானின் விருப்பம்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more