பகவத் கீதையினால் தன்னுணர்வு பெற முடியும் என்றால், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? என்னும் கேள்வி இயற்கையாக எழலாம். பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்குகின்றது:
1) எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இறைவன் (ஈஸ்வரன்),
2) உயிர்வாழிகள் (ஜீவன்),
3) ஜட இயற்கை (பிரக்ருதி),
4) ஜட இயற்கை தோன்றி மறைவதைக் குறிக்கும் காலம் (காலம்),
5) ஜீவன்களின் செயல் (கர்மா).
ஈஸ்வரன்
💐💐💐💐💐💐
எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இவர், கிருஷ்ணர், பரமாத்மா, அல்லது பிரம்மன் என்று அறியப்படுகிறார். ஜீவன்களும் ஜட இயற்கையும் இவருக்குக் கீழ்படிந்த சக்திகளே. இவரது ஆணையின் கீழ்தான் ஜட இயற்கை செயல்படுகிறது. இயற்கைக்குப் பின்னால் இறைவன் இருப்பதை அறியாதவர்கள், மோட்டார் வாகனத்திற்குப் பின்னால் ஓட்டுநர் இருப்பதை அறியாத குழந்தையைப் போன்றவர்கள். அந்த இறைவன் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே, பரம்பொருளை அருவப் பிரம்மனாக அல்லது பரமாத்மாவாக உணர்வதைக் காட்டிலும் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணராக உணர்தலே சிறந்தது. குன்றிய அறிவுடையவர்களே பரம் பொருள் அருவமானது என்று கருது கின்றனர். ஜட இயற்கைக்கு எப்போதும் அப்பாற்பட்டவராகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இவ்வுலகிற்கு இறங்கிவரும் போது ஒருபோதும் ஜட இயற்கையினால் களங்கமடைவதில்லை.
ஜீவன்
💐💐💐💐💐💐
ஜீவன்கள் எனப்படும் உயிர் வாழிகள், ஈஸ்வரனின் அம்சங்களாவர். தங்கத்தின் ஒரு துகள் எவ்வாறு தங்கமோ, கடல் நீரின் ஒரு துளி எவ்வாறு உப்புக் கரிக்கின்றதோ, அவ்வாறே ஈஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களான ஜீவன்களுக்கும் அந்த முழுமுதற் கடவுளின் குணங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. ஜீவன்களுக்கு உணர்வுகள் இருப்பதால், அவர்கள் பிரக்ருதியைக்காட்டிலும் உயர்ந்தவர்கள். இருப்பினும், அவர்கள் ஒருபோதும் இறைவனுக்கு இணையாக மாட்டார்கள். அவர்கள் என்றுமே (ஜடத்தில் கட்டுண்ட நிலையிலும் சரி, முக்தி பெற்ற நிலையிலும் சரி) இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக உள்ளனர். ஜீவன்கள் ஜடத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் இந்த ஜடவுலகத்தில் பந்தப்படுகின்றனர். அதிலிருந்து விடுபட்டு தன்னுடைய உண்மையான உணர்விற்குத் திரும்பு வதே முக்தியடைதல் எனப்படும். வயிற்றிற்கு உணவளிப்பதால் உடலின் இதர பாகங்கள் திருப்தியடைவதுபோல, வேருக்குத் தண்ணீர் ஊற்றுவதால் மரத்தின் இதர பாகங்கள் திருப்தியடைவது போல, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தொண்டாற்றும்போது அவரின் அம்சங்களான ஜீவன்கள் பூரண திருப்தியடைகின்றன.
பிரக்ருதி
💐💐💐💐💐💐
இது கிருஷ்ணரின் சக்தி என்றபோதிலும், கீழ்நிலை சக்தி, அதாவது ஜீவ சக்தியைக் காட்டிலும் கீழ்நிலையில் இருப்பதாகும். ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), தமோ குணம் (அறியாமை குணம்) ஆகிய முக்குணங்களால் அமைந்ததே இந்த ஜட இயற்கை. பிரக்ருதியின் தோற்றம் பொய்யானதாக சில தத்துவவாதிகள் கூறுகின்றனர்; ஆனால் பகவத் கீதையின்படி இதன் தோற்றம் பொய்யானதல்ல, மாறாக தற்காலிகமானதாகும். பிரக்ருதி (இயற்கை) ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி, சில காலம் இருந்து, பின் மறைகின்றது. ஆனால் இந்தச் சுழற்சி நித்தியமாகச் செயல்படுவதால், பிரக்ருதி நித்தியமானதாகும், பொய்யல்ல.
காலம்
💐💐💐💐💐💐💐
ஜட இயற்கையானது காலத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. இப்பௌதிக தோற்றத்தின் காலம், பரம் பொருளின் சக்தியினால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் காலம் முடிவுபெற்றவுடன், இவ்வுலகின் நிரந்தரமற்ற தோற்றங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். பின்னர், அதே காலத்தின் ஏற்பாட்டில் இவ்வுலகம் மீண்டும் படைக்கப்படுகிறது.
கர்மா
💐💐💐💐💐
இயற்கை குணங்களின் கலவையினால், நித்தியமான காலத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறும் செயல்கள், கர்மா எனப்படுகின்றன. இச்செயல்கள் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து வருபவை. அவற்றின் அடிப்படையில் நாம் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றோம். ஈஸ்வரன், ஜீவன், பிரக்ருதி, காலம், கர்மா ஆகிய ஐந்தில் கர்மாவைத் தவிர இதர நான்கும் நித்தியமானவை. கர்மத்தின் விளைவுகள் மிகவும் பழையதாக இருக்கலாம், ஆனால் அவற்றை நம்மால் மாற்ற இயலும். கர்ம பந்தத்திலிருந்து நிரந்தரமாக விடுபட முடியும், அதற்கான வழிமுறை கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment