குரு என்பவர் யார்?


குரு என்பவர் யார்?


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


தண்ணீரைத் தொடாமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது; குரு இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. அத்தகு குருவின் தன்மைகளைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.


ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய  ஜ்ஞானாஞ்ஜன - ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேன  தஸ்மை ஸ்ரீ-குரவே நம:


“நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.”

இந்த ஸ்லோகம், நம்முடைய அறியாமையை நீக்கி உண்மையான ஞானத்தை விருத்தி செய்ய உதவுபவர் ஆன்மீக குரு என்று விளக்குகின்றது. ஆன்மீக குருவின் மூலமாகநாம் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைய முடியும்.


ஆன்மீக ஞானத்தை அடைவதற்கு குருவிடம் சரணடைய வேண்டும் என்பது ஸ்ரீமத் பாகவதத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (11.3.21), அதாவது பரம சத்தியத்தைப் பற்றிய திவ்ய ஞானத்தை அறிய விரும்புபவர் ஆன்மீக குருவை அணுக வேண்டும்.

ஆன்மீக குரு புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்
ஆன்மீக குருவின் தகுதிகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தன்னுடைய உபதேசாமிருதம் என்னும் நூலின் முதல் ஸ்லோகத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:


“பேச்சின் தூண்டுதல், மனதின் தேவைகள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு, பாலுறுப்புகள் ஆகியவற்றின் தூண்டுதல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய நிதான புத்தியுள்ள ஒருவர் உலகம் முழுவதிலும் சீடர்களை ஏற்கும் தகுதி வாய்ந்தவராவார்.”

குரு சீடப் பரம்பரையில் வர வேண்டும்

🔆🔆🔆🔆🔆🔆

பகவத் கீதையில் (4.2), ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:, உன்னதமான பகவத் கீதையின் இந்த விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் (பரம்பரையின்) மூலமாகப் பெறப்பட்டு அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஆன்மீக குருவானவர் அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையில் வருபவராக இருத்தல் அவசியம்.

கலி யுகத்தில் நான்கு குரு சீடப் பரம்பரைகள் உள்ளன; அவற்றில் ஏதேனும் ஒரு பரம்பரையில் வரும் ஆன்மீக குருவையே ஒருவர் அணுக வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனத்தில் படித்தால், அங்கு பெறப்படும் சான்றிதழ் எப்படி செல்லாததோ, அதுபோல நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெறாத ஆன்மீகமும் வீணான கால விரயமே.

உண்மையான குரு என்பவர், அங்கீகரிக்கப்பட்ட நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வருபவராக இருக்க வேண்டும்.

நான்கு சம்பிரதாயங்கள் –அடிப்படை விளக்கம்

🔆🔆🔆🔆🔆🔆

1.   ருத்ர சம்பிரதாயம்: இது சிவபெருமானால் விஷ்ணு ஸ்வாமியை ஆச்சாரியராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும்.

2.   ஸ்ரீ சம்பிரதாயம்: இது லக்ஷ்மி தேவியினால் தோற்றுவிக்கப் பட்டு ஆதிஷேசனின் அவதாரமான இராமானுஜாசாரியரால் பரப்பப்பட்டது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஸ்ரீ சம்பிரதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. விசிஷ்டாத்வைத-வாதம் என்பது ஸ்ரீ சம்பிரதாயத்தின் தத்துவமாகும்.

3.   குமார சம்பிரதாயம்: பிரம்மதேவரின் நான்கு சனகாதி குமாரர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்பிரதாயம், நிம்பார்க ஆச்சாரியரால் பரப்பப்பட்டது. துவைதாத்வைத-வாதம் என்னும் தத்துவத்தை நிலைநாட்டிய நிம்பார்க சம்பிரதாயம், தற்போது பெரும்பாலும் அவருக்குப் பின் வந்த வல்லபாசாரியரின் பெயரில் அறியப்படுகிறது.

4.   பிரம்ம சம்பிரதாயம்: பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்டு மத்வாசாரியரின் மூலமாக பரப்பப்பட்டது பிரம்ம சம்பிரதாயம், அல்லது பிரம்ம-மத்வ சம்பிரதாயம். ஆச்சாரியர் மத்வர் சுத்த-த்வைத-வாதத்தை தனது தத்துவமாக நிலைநாட்டினார்.

நான்கு சம்பிரதாயங்களுக்கு இடையில் தத்துவ நுணுக்கங்களில் வேறுபாடு உள்ளபோதிலும், அடிப்படையில் நான்கு தத்துவங்களும் பகவான் விஷ்ணுவை அல்லது கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, அவருக்கு தொண்டு செய்யும் பக்திப் பாதையைப் பயிற்சி செய்பவர்களாக உள்ளனர். வாழ்வில் பக்குவமடைய விரும்புவோர் இந்த நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் வரும் குருவிடம் சரணடைய வேண்டும். இந்த நான்கு பரம்பரையில் வராத எந்தவொரு நபரும் ஆன்மீக குருவாக முடியாது.

பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயம்

🔆🔆🔆🔆🔆🔆

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு சைதன்ய மஹாபிரபு தோன்றினார். சைதன்ய மஹாபிரபு, மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த ஈஸ்வர புரியை தனது குருவாக ஏற்ற காரணத்தினால், சைதன்யரைப் பின்பற்றுபவர்கள் பிரம்ம-மத்வ சம்பிரதாயத்தின் ஒரு கிளையாக, பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இப்பரம்பரையில் வந்த பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் 64 கௌடீய மடங்களை நிறுவி, அதற்கு அடித்தளம் அமைத்தார். அவரது சீடரான ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய ஆன்மீக குருவின் கட்டளையின்படி அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவி கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

சீடனின் கடமைகள்

🔆🔆🔆🔆🔆🔆

 “ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” (பகவத் கீதை 4.34)

உண்மையான ஆன்மீக குருவை பகவானின் நேரடி பிரதிநிதியாக ஆராதிக்க வேண்டும். ஏனெனில், அவர் பகவானின் நெருங்கிய சேவகர் என்று எல்லா சாஸ்திரங்களும் ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர். கிருஷ்ணருக்கும் ஜீவனுக்கும் இடையில் ஒரு பாலமாக அவர் செயல்படுகிறார். அடக்கம், கேள்விகள் கேட்டல், தொண்டு செய்தல் ஆகியவை சீடனின் முக்கிய கடமைகள் என்பதை நாம் கீதையிலிருந்து அறிகிறோம்.

 “சீடனானவன் தனது ஆன்மீக குருவின் போதனைகளை தனது இதயத்தில் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும், அவற்றைத் தவிர வேறு எதையும் விரும்பக் கூடாது. குருவின் பாதங்களில் பற்று கொண்டிருப்பதால் உத்தம கதியை அடைய முடியும், அவரது கருணையால் ஆன்மீக ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” (ஸ்ரீ-குரு-வந்தனம் 2)



போலி குருக்கள்

🔆🔆🔆🔆🔆🔆

ஆன்மீக குருவானவர் வேதங்களையும் வேத வழி வந்த நூல்களையும் பின்பற்றி தன்னுடைய சீடர்களையும் அவற்றை பின்பற்றுமாறு போதனை செய்வார். இன்றைய சமுதாயத்திலோ பல்வேறு போலி ஆன்மீக குருக்கள் மக்களைத் தம்முடைய சுய புகழுக்காகவும் செல்வத்திற்காகவும் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கின்றனர். காவி உடை அணிந்த எந்த ஒரு நபரும் குரு என்று மக்கள் நம்பி விடுகின்றனர். குறைந்த காலத்தில் அதிகமான சொத்துக்களைச் சேகரித்த ஏராளமான மடங்களை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மக்களிடத்தில் தற்காலிகமான பௌதிக ஆசிகளை வழங்கி அவர்களிடமிருந்து நிறைய செல்வத்தைப் பெறுகின்றனர்.

அதுபோன்ற குருக்கள் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அத்தகு சமூக நலச் செயல்கள் அனைத்தும் நாட்டை ஆளும் சத்திரியர்களுக்கு (தலைவர்களுக்கு) உண்டான செயல்களாகும். இத்தகு செயல்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று காவி உடை அணிந்துள்ளவர்கள் அனைவரையும் ஆன்மீகவாதிகள் என்று நம்மால் கூறி விட முடியாது.

பொதுமக்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள செய்திகளை அறியாத காரணத்தினால், இதுபோன்ற போலி குருமார்களிடம் செல்கின்றனர். இஃது அவர்களுடைய ஆன்மீக அறிவின்மையை எடுத்துக் காட்டுகிறது. பலருடைய தவறுகள் ஊடகங்களில் வெளிவந்த பிறகும்கூட, ஆன்மீக அறிவற்ற நபர்கள் அவர்களைப் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது.

ஒருமுறை வல்லப ஆச்சாரியர் தனது சீடர்களுடன் கானகம் வழியே சென்றார். அப்போது அங்கு ஒரு நீளமான பாம்பு இறக்கும் தருவாயில் ஆயிரக்கணக்கான எறும்புகளால் கடிக்கப்படுவதைக் கண்டனர். சீடர்கள் தங்களது குருவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த பாம்பு தனது முற்பிறவியில் போலி ஆன்மீகவாதியாக இருந்தது என்றும், அந்த ஆயிரக்கணக்கான எறும்புகள் அவரது சீடர்களாக இருந்தனர் என்றும் அவர் பதில் கூறினார். இன்றைய உலகிலுள்ள போலி ஆன்மீக குருமார்களின் நிலையும் அவர்களைப் பின்பற்றும் சீடர்களின் நிலையும் அதுபோன்றது என்பது உறுதி.


எனவே, போலி குருமார்களைத் தவிர்த்து உண்மையான ஆன்மீக குருவிடம் தஞ்சமடைந்து வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே





🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண!



ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Telegram செயலி



🔆🔆🔆🔆🔆🔆🔆



Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇



🔆🔆🔆🔆🔆🔆🔆




https://t.me/suddhabhaktitami




Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more