ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி
🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் வசித்தவரான வேங்கட பட்டரின் மகனாவார். கோபால பட்டர் முன்பு இராமானுஜ ஸம்பிரதாயத்தின் சீடப் பரம்பரையைச் சார்ந்திருந்தார், ஆனால் பின்னர் கௌடீய ஸம்பிரதாயத்தின் அங்கமானார். 1433 சகாப்த ஆண்டில் (கி.பி. 1511), சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சாதுர்மாஸ்ய காலத்தின் நான்கு மாதங்களில் வேங்கட பட்டரின் இல்லத்தில் தங்கினார். அச்சமயத்தில் வேங்கட பட்டர் பூரண மனநிறைவை அடையும் வரை மஹாபிரபுவிற்கு சேவை செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது மஹாபிரபுவிற்குத் தொண்டு புரியும் வாய்ப்பினை கோபால பட்டரும் பெற்றார். காலப்போக்கில் ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி தனது சித்தப்பாவும் மாபெரும் சந்நியாசியுமான பிரபோதானந்த சரஸ்வதியினால் தீக்ஷையளிக்கப்பட்டார். கோபால பட்ட கோஸ்வாமியின் தாய்தந்தை இருவருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் தங்களது முழு வாழ்வையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சேவையில் அர்ப்பணித்தனர். அவர்கள் கோபால பட்ட கோஸ்வாமியை விருந்தாவனத்திற்குச் செல்ல அனுமதித்தனர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை நினைத்தபடியே அவர்கள் தங்களது உயிரைத் துறந்தனர். கோபால பட்ட கோஸ்வாமி விருந்தாவனத்திற்குச் சென்று, ஸ்ரீ ரூபரையும் ஸநாதன கோஸ்வாமியையும் சந்தித்த செய்தியானது சைதன்ய மஹாபிரபுவிற்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர் மிகவும் திருப்தியுற்றார். கோபால பட்ட கோஸ்வாமியை தங்களது இளைய சகோதரராக ஏற்று அவரை கவனித்துக்கொள்ளுமாறு சைதன்ய மஹாபிரபு ஸ்ரீ ரூபரிடமும் ஸநாதனரிடமும் அறிவுறுத்தினார். கோபால பட்ட கோஸ்வாமியின் மீதான பெரும் பாசத்தினால், ஸ்ரீ ஸநாதன கோஸ்வாமி தாம் இயற்றிய ஹரி-பக்தி-விலாஸம் எனப்படும் வைஷ்ணவ ஸ்மிருதியினை அவரது பெயரில் பிரசுரித்தார். ஸ்ரீல ரூபர் மற்றும் ஸநாதனரின் உபதேசத்தின்படி, கோபால பட்ட கோஸ்வாமி விருந்தாவனத்தின் ஏழு முக்கிய விக்ரஹங்களில் ஒருவரான ராதாரமண விக்ரஹத்தினை பிரதிஷ்டை செய்தார். ராதாரமண கோயிலின் சேவாதாரர்கள் (பூஜாரிகள்) கௌடீய ஸம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள்.
கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தினை எழுதுவதற்கு முன்பாக எல்லா வைஷ்ணவர்களிடமிருந்தும் அனுமதியைப் பெற்றபோது, கோபால பட்ட கோஸ்வாமியும் தமது ஆசிகளை வழங்கினார். ஆயினும், கோபால பட்டர் தம்முடைய பெயரை நூலில் குறிப்பிட வேண்டாமென்று கிருஷ்ணதாஸ கவிராஜரிடம் வேண்டிக் கொண்டார். எனவே, கோபால பட்ட கோஸ்வாமியினை சைதன்ய சரிதாம்ருதத்தின் ஓரிரண்டு இடங்களில் மட்டுமே கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி மிகுந்த கவனத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி தமது தத்த்வ-ஸந்த ர்ப நூலின் தொடக்கத்தில் எழுதியுள்ளார். "தென்னிந்தியாவின் பிராமண குடும்பத்தில் பிறந்த பக்தரும் ரூப கோஸ்வாமி மற்றும் ஸநாதன கோஸ்வாமியின் மிக நெருங்கிய நண்பருமான ஒருவர், வரிசைக்கிரமமாக தொகுக்கப்படாத நூல் ஒன்றினை எழுதியுள்ளார். எனவே, ஜீவன் என்று சொல்லப்படும் சின்னஞ்சிறு உயிர்வாழியான நான், மிகச்சிறந்த நபர்களான மத்வாசாரியர், ஸ்ரீதர ஸ்வாமி, இராமானுஜாசாரியர் மற்றும் சீடப் பரம்பரையைச் சார்ந்த இதர மூத்த வைஷ்ணவர்களின் வழிகாட்டுதலை அணுகி, அந்நூலில் உள்ள தகவல்களை வரிசைக்கிரமமாக தொகுத்து கோர்வையாக வழங்க முயல்கிறேன்.'' பகவத்-ஸந்தர்பத்தின் தொடக்கத்திலும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் இதே போன்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. ஸ்ரீல கோபால பட்ட கோஸ்வாமி, ஸத்-க்ரியா-ஸார-தீபிகா என்னும் நூலை இயற்றினார், ஹரி-பக்தி-விலாஸத்தினைத் திருத்தி அமைத்தார், ஷட்-ஸந்தர்பத்திற்கு முன்னுரை எழுதினார். ஶ்ரீ க்ருஷ்ண-கர்ணாம்ருதத்திற்கு வியாக்கியானம் எழுதினார், மற்றும் விருந்தாவனத்தில் ராதாரமணர் விக்ரஹத்தினை பிரதிஷ்டை செய்தார். பகவான் கிருஷ்ணருடைய லீலைகளில் அவருடைய முந்தைய பெயர் அனங்க-மஞ்சரி என்று கௌர-கணோத்தேஷ-தீபிகா (184) கூறுகிறது. சில நேரங்களில் அவர் குண-மஞ்சரியின் அவதாரமாகவும் கூறப்படுகிறார். ஸ்ரீநிவாஸ ஆச்சாரியரும் கோபிநாத பூஜாரியும் அவரது இரு சீடர்களாவர்.
ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.10.105 / பொருளுரை
Comments
Post a Comment