நான்கு விதமான பக்தியின் தளம்

 




நான்கு விதமான பக்தியின் தளம்


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


பக்தியில் பல நிலைகள் உள்ளன என்றால் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் பக்தி பல தளங்களில் உள்ளது என்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும்.  அது என்னென்ன தளங்கள் என்றும் அதில் நாம் எங்கு உள்ளோம், எந்த தளத்தினை அடைந்தால் அது தூய பக்தி நிலை என்றும் இப்பொழுது பார்க்கலாம்.


பக்தி மொத்தம் நான்கு தளங்களில் உள்ளது, அவை: புலன்களின் தளம், மனதின் தளம், புத்தியின் தளம் மற்றும் ஆன்மீகத் தளம்.  இதனை விவரமாக அலசுவோம்.


புலன்களின் தளத்தில் பக்தி


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


ஆரம்ப நிலையில் கடவுளிடம் மிதமான நம்பிக்கைகொண்டவர்கள் இவர்கள்.  தங்களின் புலன்களின் திருப்திக்காக பகவானிடம் வேண்டுகோளை வைத்தபடியே இருப்பவர்கள்.  இறைவன் (அல்லது நமக்கு மேலே உள்ள ஒரு சக்தி) இருப்பதை ஒப்புக்கொள்பவர்கள் இவர்கள்.  நாத்திகர்களை விட இவர்கள் கொஞ்சம் முன்னேறியவர்கள் என்றாலும், இவர்களின் நிலை மிகவும் பரிதாபமானதே.


தங்களது அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், தங்களது எதிர்காலத்தை வளமாக்கவும், தங்களின் சந்ததியினர் அனைத்துவிதமான நலன்களையும் பலன்களையும் பெறவேண்டும் என்றும் ஏதேனும் ஒரு வழியில் நமது அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவும் இவர்கள் கடவுளிடம் முறையிடுவர்.  மீண்டும் மீண்டும் முறையிட்டுக்கொண்டே இருப்பர்.  இவர்களை பொறுத்தவரை, தங்களது புலனின்பமே முக்கியமானது என்பதால் அதனை வழங்கும் ஒரு மேன்மையான சக்தியாகவே கடவுளை பார்ப்பதால், இந்த பக்தி (இதனை பக்தி என்று ஒப்புக்கொண்டாலும்), புலன்களின் அடிப்படையிலேயே உள்ளது.


இதில் உள்ள பரிதாபம் என்னவென்றால், இவர்களுக்கு தங்களின் புலன் திருப்தியினை பூர்த்தி செய்யும் கடவுளே மெய்யான கடவுள் என்பதால், கடவுளை மாற்றுதல், மதம் மாறுதல், பலர் கூறும் பரிகாரங்களை ஒருவித குருட்டு நம்பிக்கையில் நிறைவேற்றுதல் போன்றவைகளை எல்லாம் செய்வர்.  நிறைவேற்றாவிட்டால், அந்த கடவுளை திட்டுவது முதல் எல்லாம் நடக்கும்.  இவர்கள் நாத்திக எண்ணங்களையும் கூடவே கொண்டிருப்பர்.  கடவுளை பலனை வேண்டி வழிபடுவதைத் தவிர வேறொன்றும் அறியார்கள்.  இவர்கள் கடவுளிடம் வியாபாரம் மட்டுமே செய்வர்.


இதுபோன்ற பக்தர்கள் பல ஆலயங்களுக்கும் செல்வர்.  பல துறவிகளை வணங்குவர்.  ஆனால் மறந்தும் வாழ்வினை பற்றி கேள்வி எழுப்ப மாட்டார்கள்.  இவர்களாலேயே பல போலி துறவிகள் வளமுடன் வாழ்கின்றனர்.  இவர்கள் எந்தவிதமான கட்டுப்பாட்டு விதிகளையோ அல்லது கோட்ப்பாடுகளையோ பின்பற்றாது எளிதில் கடவுளின் அனுக்ரகம் கிடைக்கவேண்டும் என்று நினைப்பதால், அதனை பல போலி சாமியார்கள் அறுவடை செய்கின்றனர்.


எந்த மதமாக இருந்தாலும் இது போன்ற மக்கள் தான் அதிகமாக இருக்கின்றனர்.  வேண்டும் என்ற நிலைவரும்போது கடவுளை வணங்குவதும், வளம் பெருகும் போது நாத்திகம் பேசுவதோ அல்லது கடவுளை எளிதாக மறந்துவிடுவதோ செய்வர்.  கடவுளின் பணி தன்னை எப்பொழுதும் காப்பாற்றிக்கொண்டும், இன்பத்தினை வழங்கிக்கொண்டும் இருப்பதுவே எனபதே இவர்களின் நம்பிக்கை. தங்களின் கௌரவத்தினை நிலைநாட்டும் பக்தியினை இவர்கள் முன்னெடுக்க தயங்குவதே இல்லை.  புலனின்பத்தில் தீவிரமாக இருக்கும் ஒருவர், அனைத்து புலன்களின் சேவகனாக இருப்பார். இறைவனை உணர வேண்டும் என்றால் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் அறியார்.


மேலும் ஒரு சிறந்த அடையாளம்: தங்களின் புலன்களின் அடையாளத்திலேயே, அதாவது தான் இந்த உடல் என்ற எண்ணத்திலேயே வாழ்வர்.  அதன் விரிவாக்கமாக இந்த உடல் பிறந்த குடும்பம், நாடு, மொழி எல்லாமே தனது என்றும் வாழ்வர்.  இவர்கள் அந்தந்த மதங்களின் கூட்டத்திற்கு கணக்கெடுக்க வேண்டுமானால் பயன்படுவார்களே ஒழிய பெரும் சமய பலன் கிடையாது.  இவர்களால் மத வியாபாரம் நன்கு நடைபெறும்.  பெரும் மடாதிபதிகளும் ஆலய நிர்வாகிகளும், மக்களை இந்த அளவிலேயே வைத்திருக்க முயல்கின்றனர்.


மனதின் தளத்தில் பக்தி


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


இவர்கள் புலன்களின் தளத்திலிருந்து பக்தி செய்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் முன்னேறியவர்கள், பக்தியில் அல்ல, உணர்வில்.  மனதின் பணி: எண்ணுதல், உணருதல், மற்றும் விரும்புதல் இவையே.   மனதின் தளத்தில் பக்தி செய்பவர்கள், சாஸ்திர விதிகளை நம்பாது, தனக்கென ஒரு திட்டங்களை வகுத்துக்கொண்டு, அதனை நியாயப்படுத்துவர்.  உதாரணமாக, வாரத்தில் ஏதேனும் ஒரு நாளினை விரதம் அனுஷ்டிக்க ஒதுக்கிவிடுவர்.  முறையற்ற இந்த விரதங்கள் அசுர மனப்பான்மையானது (பகவத் கீதை 17.5-6) என்று சாஸ்திரங்கள் கூறினாலும் இவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள்.  கடவுளின் உருவத்தினை கற்பனையானது என்று எண்ணுவர்.  கடவுள் எந்த வடிவினையும் ஏற்கலாம் என்பதால், சராசரி மனிதனையும் கடவுளாக போற்றுவர். கடவுளை பற்றியும், அவரது இடத்தினைப் பற்றியும் எவ்விதமான விவரமும் தெரியாது என்றாலும், இவர்கள் கற்பனை செய்வதை நிறுத்தமாட்டார்கள்.   மனம் போன போக்கில் இவர்களின் பக்தி இருப்பதால், இவர்கள் ஆரம்ப நிலையில் உள்ள அல்லது புலன்களின் தளத்தில் உள்ள பக்தர்களையும் குழப்பிவிடுவார்.  குரு மற்றும் ஆச்சாரியர்களிடம் மேலோட்டமாக சரணடைந்து அதனை தனது மன சந்தோஷத்திற்காக பயன்படுத்திக்கொள்வர்.  அதிகாரம் பெற்ற பக்தர்களிடமிருந்து ஞானத்தினை வளர்த்துக்கொள்வது கிடையாது என்பதால், இவர்கள் ஆலயங்களில் இருந்தாலும் மனதின் சேவகர்களே.


சில நேரங்களில் இவர்கள் கற்பனையாக கடவுளுடன் உறவாடும் நிலைக்கு சென்றுவிடுவர்.  கடவுள் இவர்களுடன் நெருக்கமாக உறவாடுவதாக மற்றவர்களிடமும் காட்டி அதன்மூலம் பெரும் புலனின்பத்தினை, மன இன்பத்தினை அடைவர்.


ஆன்மீக வாழ்வின் ஆரம்ப நிலையில் புலன்களை கட்டுப்படுத்தவும் (பகவத் கீதை 3.41), மனதினை கட்டுப்படுத்தவும் வேண்டும் என்று பகவத் கீதை போதிக்கின்றது.  கட்டுப்படுத்தாத மனம் மிகப்பெரிய எதிரி என்று கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார் (பகவத் கீதை 6.6).


புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை. (பகவத் கீதை 2.44)


மனம் நமக்கு நண்பன் போலவும் நமது நன்மைக்கு செயல்புரிபவன் போன்றும் காட்டினாலும், அது நமது ஜட பற்றுதலை இன்னும் இன்னும் இருக்குகின்றது.  எனவே தான் சில நேரங்களில் நாம் எதையும் விரும்பவில்லை என்றாலோ அல்லது எதையேனும் செய்து ஓய்வெடுக்க நினைக்கும் போதும், மனம் மற்றொன்றின் மீது திசை திருப்புகின்றது.  இல்லை என்றால் வாழ்வினைப் பற்றி செயற்கையான அச்சத்தினை எழுப்புகின்றது.  எனவே எந்த நிலையிலும் நமக்கு பூரண திருப்தி வாய்ப்பதில்லை.


அறிவின் தளத்தில் பக்தி


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


இது மிகவும் நன்மை பயக்கவோ அல்லது மிகுந்த ஆபத்தினை விளைவிக்கவோ செய்யும் நிலை.  இந்த தளத்தில் மக்கள் அதிகமாக சிந்திப்பர்.  எதனையும் ஆராய்ந்து செய்திடவே விரும்புவர். கேள்விகளை கேட்டு, பதிலினை பெற்று, அதனை மேலும் ஆராய்ந்து என்று முடிவினை எட்ட மிகுந்த சிரமமும், மேலும் மேலும் சந்தேகங்களை கொள்ளுதலும் இந்த நிலையாகும்.  இவர்கள் நன்கு புரிந்துகொள்வதால், எதனையும் முறையாய் செய்திடவே விரும்புவர்.  இவர்களுக்கு பயக்கும் நன்மை, எதனையும் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்களாதலால் போலிகள் இவர்களை எளிதில் ஏமாற்ற முடியாது. எனவே நிச்சயமாக இவர்கள் புலன்களின் தளம், மனதின் தளத்தில் உள்ள பக்தர்களை விட சிறந்தவர்கள்.  இவர்கள் தங்கள் புத்தியினை முறையாய், அதிகாரம் பெற்றவர்களின் அறிவுரைப்படி பயன்படுத்தினால் இவர்கள் உள்ள சம்பிரதாயத்திற்கு உதவிகரமாக இருக்கலாம்.


ஆனால், பெரும்பாலும் இந்த புத்தியின் தளத்தில் உள்ள பக்தர்கள், தங்களின் அறிவினை அதிகப்படியாக நம்புவதால், சாஸ்திரங்களின் இறுதிக்கு வர முடியாது.  புத்திக்கு அப்பாற்பட்டதையும் தங்களின் புத்திக்குள் கொண்டுவர முயற்சிசெய்து கொண்டிருப்பர்.  உதாரணமாக, பரந்துவிரிந்த இந்த  ஜட பிரபஞ்சத்திற்கு அப்பால் ஆன்மீக உலகம் எல்லையற்று உள்ளது என்னும் போது, அதனை அளந்திட முயல்வர்.  காலத்திற்கப்பாற்பட்ட என்றால் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்பார்.


இவர்களின் அறிவால் ஆனந்தம் கிடைத்தாலும், இவர்களின் அறிவே இவர்களை கட்டுப்படுத்திவிடுவதாக பகவத் கீதையில் (2.44) கிருஷ்ணர் கூறுகிறார்.


அதிக்கப்படியான ஞானத்தில் இருப்பவர்களின் வாழ்வில், அன்பு உணர்ச்சிகள் வெளிப்பாடாது ஆன்மீக வாழ்வு வறண்டு காணப்படும்.  எனவே இவர்கள் பல நேரங்களில் தங்களின் சொந்த சித்தாந்தங்களை உருவாக்க முயலுவர்.  இவர்களை கிருஷ்ணர் மாயயாபஹ்ருத-க்ஞானா (மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும்) என்று கூறுகிறார்.


இந்த மூன்றில் உள்ள பிரச்சனைகள்


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


இந்த மூன்று தளத்தில் நாம் பக்தி செய்ய முயலும் போது, அது தூய பக்தியன்று.  இந்த மூன்றிலும் பிரதானமாக இருப்பது “நான்” என்ற எண்ணமே.  இங்கு நமக்கு என்ன வேண்டுமோ, நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன அறிகின்றோமோ அப்படிதான் செயல்பட விரும்புகின்றோம்.  இங்கு பகவான் யார் அல்லது யார் பகவானாக இருக்க தகுதியானவர்கள் என்றும் அறியமாட்டார்கள்.  தங்களது சுய விருப்பங்களை இவர்கள் விடுவதில்லை.  இந்த மூன்று தளங்களை பற்றியும் அதிலுள்ள ஆபத்தினைப் பற்றியும் கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்:


புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும். இவற்றின் மூலம், ஜீவனின் உண்மையறிவை மறைத்து காமம் அவனை மயக்குகின்றது (பகவத் கீதை 3.40).


இந்த ஜட வாழ்வில் நமது எதிரியாக காமத்தினை குறிப்பிடுகின்றார்.  அந்த எதிரி நம்மை எப்பொழுதும் இறைவனிடம் சேரவிடாது தடுத்துக்கொண்டே உள்ளது.  நாம் ஆலயத்திலேயே குடியிருந்தாலும் இந்த காமம் என்னும் நித்திய எதிரி நம்மை தூய பக்தியினை அறியவிடாது, ஏற்கவிடாது தடைசெய்துகொண்டே உள்ளது.  எனவே இந்த மூன்று தளங்களில் ஒருவர் நின்றுவிட்டால், ஆன்மீக முன்னேற்றம் என்பது வெறும் கவர்ச்சிக்காகவே இருந்துவிடும்.


ஆன்மீகத் தளத்தில் பக்தி.


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


உண்மையில் பக்தியின் தளம் ஆன்மீகமே.  ஆனால் நாம் இந்த ஜட இயற்கையின் முக்குணங்களில் சிக்கியுள்ளதால், நமது ஆரம்ப நிலை பயிற்சியும் இந்த மூன்று குணங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே தான் இந்த மூன்று தளங்களில் பக்தி செய்பவர்களை நாம் அதிக்கப்படியாக காண்கின்றோம்.  வேறுவிதத்தில் சொல்வதென்றால், அனைவரும் அந்த அளவிலேயே இருக்கின்றார்கள்.


தூய பக்தியினை நாம் அறிந்து, அதனை வளர்த்துக்கொண்டால் அது ஆன்மீகத் தளமாகும்.  நாமும் ஆன்மீகமாவோம், நமது பக்தியும் ஆன்மீகமாகும். முதலில் நாம் இந்த உடல் அல்ல என்று அறிந்துகொள்ள வேண்டும்.  பகவத் கீதையில் கிருஷ்ணரின் முதல் உபதேசமே இது தான்.  நாம் ஆத்மா என்று அறிந்து அந்த நிலையில் செயல்பட வேண்டும்.


செயலாற்றக்கூடிய புலன்கள், ஜடப்பொருளைவிட உயர்ந்தவை, மனம் புலன்களைவிட உயர்ந்தது; புத்தி மனதைவிடவும் உயர்ந்தது; மேலும், அவனோ (ஆத்மாவோ) புத்தியை விடவும் உயர்ந்தவன். (பகவத் கீதை 3.42).


முதல் மூன்று தளங்களில் பக்தி “தன்னை” பிரதானப்படுத்தியும் ஆன்மீகத் தளத்தில் பகவானை பிரதானப்படுத்தியும் இருக்கும். இஸ்கானின் ஸ்தாப ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் நாம் இந்த மூன்றில் எந்த நிலையிலிருந்தாலும் உடனடியாக ஆன்மீகத் தளத்திற்கு வரும் வழியினை அதிகமாக போதித்துள்ளார்.  இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தலையாய பணி இது தான்.  வேருக்கு நீரூற்றுவது போன்று, வயிற்றுக்கு உணவளிப்பது போன்று, நாம் பரம புருஷ பகவானாகிய கிருஷ்ணரை திருப்திப்படுத்தும் போது, அவருக்கு பணி செய்யும்போது, சுய தேவைகளை அணுவளவும் கலக்காத போது, அது ஆன்மீகத் தளத்தில் செயல்படுவதாகும் (பகவானின் கருணையால் நமது தேவைகள் எல்லாம் தானாகவே பூர்த்தியடைந்துவிடுகிறது).


பகவானின் சக்திகளாகிய நாம் அவரின் தேவைக்காக செயல்படுவது தான் நமது இயல்பான நிலை.  ஆனால் நாம் அதனை மறந்துள்ளதால், பல முகமூடிகளை (உடல்களை) இட்டுக்கொண்டு, இவைகளை திருப்திப்படுத்த நமது சக்திகளை வீணாக்குகின்றோம்.  அதனை மீண்டும் கிருஷ்ணரின் திருப்திக்காக திருப்பும் போது, அது தான் ஆன்மீகத் தளத்தில் செய்யப்படும் பக்தி.  மற்ற தளங்களில் செயல்படுதல் உண்மையில் பக்தி அல்ல.  பலன்நோக்கி செயல்புரிவதாகும்.


பலம் பொருந்திய புயங்களை உடையோனே, பக்தியில் செயல்படுதல் மற்றும் பலனை நோக்கிச் செயல்படுதல் இவற்றின் வேறுபாட்டை நன்கு அறிந்திருப்பதால், பூரண உண்மையின் ஞானமுடையவன், புலன்களிலும் புலனுகர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. (பகவத் கீதை 3.28)


எனவே தான் கடவுள் நம்பிக்கை கொண்டோர் அரசாங்கம் அமைத்தாலும், நாத்திகர்கள் அரசாங்கம் அமைத்தாலும் யாரும் திருப்தியடைவதே கிடையாது, பூரண திருப்தியைப் பற்றி என்ன சொல்வது?  பகவானுக்கு முடிவில்லா சேவைகள் செய்யும் போது தான் பூரண திருப்தியும், முடிவில்லா ஆனந்தமும் கிடைக்கின்றது.  அந்த ஆனந்தத்தை அறியாது நாம் முதல் மூன்று தளங்களில் நின்றுவிடுகிறோம், அல்லது கற்பனை செய்ய ஆரம்பிக்கின்றோம்.


எனவே மதங்களுக்கு ஆள் சேர்க்காமல், எந்த நிலையில் நாம் உள்ளோம், எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் இருந்து அறிந்துகொள்ளவேண்டும் எனவும் கிடைத்தற்கரிய மானிட பிறவியினை “முறையாய்”, “நேர்மையாய்” பயன்படுத்தும் படியும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more