தேவசயனி ஏகாதசி


  ஆஷாட மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை தேவசயனி, (பத்ம) ஏகாதசியாக கொண்டாடுவர். இந்த ஏகாதசிக்கு சயன ஏகாதசி , மஹா ஏகாதசி, பத்ம ஏகாதசி, தேவ்போதி ஏகாதசி மற்றும் ஆஷாத ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.


தேவசயனி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 


ஸ்ரீ மந் நாராயணன் சயனம் மேற்கொள்ளும் சுக்ல ஏகாதசி இதுவாகும். எல்லா ஏகாதசிகளும் புண்ணியத்தைத் தருவதாயினும் பகவான் நாராயணனுக்கு உகந்த இந்த ஏகாதசியை கடைபிடிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.தர்மத்தை எந்த சூழ்நிலையிலும் விடாது காக்கும் மஹாராஜா யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " ஒ! கேசவா, ஆஷாட மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், அன்றைய சுபதினத்தில் வழிபட வேண்டிய கடவுளர் யார். அன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள்" என்று கூறினார்.பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் பின் வருமாறு கூறத் தொடங்கினார்.- "ஒ! பூமியின் பாதுகாவலரே, ஒரு முறை பிரம்மதேவர் தன்னுடைய மகனான நாரதருக்கு விவரித்துச் சொன்ன ஒரு அதிசய புராண வரலாற்று நிகழ்ச்சியை உனக்குச் சொல்லுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


ஒரு நாள் நாரதர் பிரம்ம தேவரிடம் - "தந்தையே !  ஆஷாட மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் என்ன? அன்று தாங்கள் என்ன செய்வீர், அந்த ஏகாதசி விரதத்தை நான் எப்படி கடைபிடித்து பரந்தாமன் மஹாவிஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமாகலாம் என்பதை விவரமாக சொல்ல வேண்டும்". என்று வேண்டி நின்றார்.அதற்கு பிரம்மதேவர் - " சிறந்த ஞானியும், பேசுவதில் வல்லமையும் பெற்றவரே, ரிஷிகளில் சிறந்தவரே, பிரபு மஹாவிஷ்ணுவின் மீது தூய்மையான பக்தி பூண்டவரே, தங்கள் கேள்வி, வழக்கம் போல் மனிதநலத்திற்கு பயன்படும் வகையில் சிறப்பானதொரு கேள்வி ஆகும் பகவான் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த நாளான ஏகாதசியை விட சிறந்தது வேறு எதுவும் இவ்வுலகில் மட்டும் அல்லாது எவ்வுலகிலும் இல்லை. விதிக்கப்பட்ட வழிமுறைகளின் படி விரதத்தை கடைப்பிடித்தால், மிக மோசமான பாபங்களும் அழியப் பெறும். பாபங்களிலிருந்து மீண்டு நற்கதி அடைவதற்கு ஏதுவான ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசியை பற்றி நான் உங்களுக்குச்  சொல்கிறேன்.  கேட்பீர்களாக!."  என்று கூறத் துவங்கினார்.


ஏகாதசி நன்னாளில் உபவாசம் இருந்து விரதத்தைக் கடைப்பிடிப்போரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதோடு அல்லாமல் அவரவது அபிலாஷைகளும் பூர்த்தி அடையப் பெறுவர். ஆகவே எவரொருவர் இதை அலட்சியம் செய்து விரதத்தை கடைப்பிடிக்காமல் விடுகிறாரோ, அவர்கள் நரகத்திற்குள் நுழையத் தக்கவர் ஆகி விடுகிறார்.


ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசியை "பத்ம ஏகாதசி" என்றும் பிரபலமாக அழைப்பர். ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது பஞ்சேந்திரியங்களின் தலைவனான பகவான் ரிஷிகேசருக்கு மகிழ்ச்சியை அளித்து அவரின் அருளாசி பெற்றுத் தரும். ஒ! நாரதா, புராணங்களில் இடம் பெற்றுள்ள வியப்பானதொரு வரலாற்று நிகழ்வினை நான் உனக்கு சொல்கிறேன். இப்புராண நிகழ்வினை கேட்பவரின் பாவங்கள் அனைத்தும் அழிவதோடு அல்லாமல் ஆன்மிகப் பாதையில் ஏற்படும் தடங்கல்களையும் நீக்கி உயர்வான நிலையை அடையச் செய்யும். 


ஒ! மைந்தனே கேள் – “சூரிய வம்சத்தில் மாந்தாதா என்னும் புண்ணியசீலன் அரசனாக இருந்தார். சத்தியத்தின் பக்கம் எப்பொழுதும் நின்று நீதி வழுவாமல் இருந்ததால் அவர் சக்ரவர்த்தியாக நியமிக்கப்பட்டார். தன் அரசின் பிரஜைகளை தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் போலக் கவனத்துடன் பாதுகாத்து வந்தார். அவருடைய தெய்வ பக்தி மற்றும் நம்பிக்கையின் விளைவாக, நாட்டில் வறட்சி, பஞ்சம், தொற்று மற்றும் இதர நோய் நொடிகளின் தொல்லை இல்லாமல் இருந்தது. பிரஜைகள் அனைவரும் எவ்விதமான தொந்தரவும் இல்லாமல் மிகவும் சுபிக்க்ஷத்துடன் வாழ்ந்து வந்தனர்.  அரசாங்க கருவூலத்தின் வரவு மற்றும் சொத்துக்கள் அனைத்தும் நல்வழியில் ஈட்டப்பட்டதால் நிறைந்து வழிந்தது. அதனால், மாந்தாதா சந்தோஷமாகப் பல ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார்." 


ஒரு முறை, யார் செய்த பாவத்தாலோ, மாந்தாதாவின் நாடு மழை காணாமல் வறட்சியால் மூன்று ஆண்டுகள் மிகவும் அவதிப்பட்டது. பஞ்சத்தால் பிரஜைகள் மிகவும் கஷ்டப்பட்டனர். உணவு தான்யங்களின் தட்டுப்பாட்டின் காரணமாக  வேள்வித்தீயில் சமர்ப்பிக்கப்படும் ஆகுதிகள் தர இயலாமல் இருந்தது.  மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நெய் ஆகுதி வழங்குதல், விதிமுறைகளின் படியான வழிபாடு, வேதம் ஒதுதல் ஆகியவையும் சாத்தியமில்லாமல் போனது. முடிவாக, மக்கள் அனைவரும் அரசரவைக்கு வந்து மன்னரிடம் - "அரசே!   நீங்கள் எப்பொழுதும் எங்கள் நல வாழ்வில் அக்கறை கொண்டவர். ஆதலால் நாங்கள் பணிவன்புடன் உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம். தாங்கள் அறியாததல்ல... இவ்வுலில் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது நீர். நீரில்லாமல் எதுவும் செய்ய இயலாது. நீரின்றி எதுவும் பயன் இல்லாது போகும் அல்லது உயிரில்லாத ஜீவனுக்கு சமமாகும். மறைநூல்கள் நீரை "நாரா" என்னும் நாமத்தால் குறிப்பிடுகின்றன. பரம்பொருளான பரந்தாமன் நீரின் மீது நித்திரை கொண்டுள்ளதால், "நாராயணா" என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பரந்தாமன் நீரைத்   தன்னுடைய உறைவிடமாக கொண்டு அதில் அறிதுயில் கொள்கிறார்.மூன்று விஷயங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அவை முத்து, மனிதர் மற்றும் மாவு. முத்து அதன் "காந்தி"  அதாவது பளபளப்பான ஒளிரும் தன்மையை கொண்டு  நல்முத்து என தரம் பிரிக்கப்படுகிறது. அதன் பளபளப்பு தன்மை நீரிலிருந்து வருவது ஆகும். அதே போல் மனிதனுக்கு முக்கியமானது அவனது ஜீவசக்தி. நீர் அதில் முக்கிய பங்காக அமைந்துள்ளது. அதே போல், நீரில்லாமல் மாவினை பிசைந்து ரொட்டியின் பல்வேறு வகைகளாக சமைக்கவும், பிறருக்கு வழங்கவும், சாப்பிடவும் இயலாது. ஜீவன் நிலைத்திருக்க உதவும் முதன்மையான,  ஸ்தூல வடிவில் உள்ள பரம்பொருள் எனும் அர்த்தத்தில் சில நேரங்களில் நீரானது ஜல-நாராயணா என்றும் அழைக்கப்படுகிறது. மேகங்கள் வடிவில் பரம்பொருளான இறைவன் வானமெங்கும் பரவி நிறைந்துள்ளார். மேகங்கள் மழை பொழிய, அதன் விளைவாக பயிர்கள் செழிக்க, அதிலிருந்து விளையும் உணவு தான்யங்கள், அனைத்து ஜீவராசிகளையும் உயிர் வாழ வைக்கிறது. 


"அரசே ! நிலவும் கடுமையான வறட்சியால் தாங்க  இயலாத அளவு உணவு தானிய இருப்பில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பசியாலும், பட்டினியாலும் மிகவும் அவதிப்படுகிறோம். பசியாலும், பட்டினியாலும் சிலர் இறந்து போக, சிலர் நாடு விட்டு நாடு செல்ல, நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்பூமியில் சிறந்த அரசாட்சி செய்து வரும் அரசே, நாட்டை பீடித்துள்ள இப்பிரச்னைக்கு தயவு செய்து ஒரு நல்ல தீர்வை கண்டுபிடித்து, அனைவரும் அமைதியுடனும், சுபிக்க்ஷத்துடனும் மீண்டும் வாழ வகை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறாம்." என்று பணிவோடு தெரிவித்தனர்.அரசன் மாந்தாதா அதற்கு பதிலளிக்கையில் - " நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. சத்தியமானது. தான்யங்கள் கடவுளரைப் போன்றது. சத்தியத்தின் வடிவான இறைவன் அந்த தான்யங்களின் வடிவில் வசித்து சகல ஜீவராசிகளும் வாழ்வ‌தற்கு ஏதுவாகிறார். இவ்வுலகமே தானியங்களால் தான் உயிர் வாழ்கிறது என்றால் அது மிகையாகது.  இப்போது, ஏன் நம் நாட்டை இத்தகைய கொடிய வறட்சி பீடித்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். புனித மறை நூல்கள் இத்தகைய சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்து அதற்கான காரண, காரியங்களை விவரமாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி ஒரு நாட்டின் அரசன் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அரசனும், நாட்டின் பிரஜைகளும்  அவதிப்படுவர் என்று கூறுகிறது. இந்த விஷயத்தில் நான் தியானத்தின் மூலம் இப்பிரச்னை வந்த காரணத்தை அறியும் முயற்சியில் நான் நெடு நாட்கள் தியானத்தில் இருந்திருக்கிறேன். என்னுடைய கடந்த கால மற்றும் தற்போதைய நடவடிக்கைகளை ஆராய்ந்ததில், நான் எவ்வித பாவச் செயல்களும் புரியவில்லை என்பது சத்தியமான உண்மை. இருந்தாலும், நாட்டின் பிரஜைகளின் நன்மையைக் கருதி இப்பிரச்னையை தீர்க்க வழி காணுகிறேன்" என்றான். பின்னர் அரசன் மாந்தாதா தன்னுடைய இராணுவம் மற்றும் பரிவாரங்களை கூட்டிக் கலந்து ஆலோசித்தான். அதன்படி, தவத்தில் சிறந்த ரிஷிகள், முனிவர்கள் வசிக்கும் வனத்திற்கு சென்று அவர்களிடம் இதற்கு விடை காணலாம் என்று முடிவு செய்தான். ஆகையால் இறைவணக்கத்துடன் பூஜையை முடித்துவிட்டு,  இராணுவம் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ வனம் புகுந்தான். காட்டில் அங்குமிங்கும் அலைந்து, அங்கு ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கும் ரிஷிகளிடத்தில் தன் நாட்டின்,நிலைமையை கூறி அதை தீர்ப்பதற்கான மார்க்கத்தை  அருளுமாறு வேண்டி நின்றான். ஆனால் அரசனுக்கு தீர்வு கிட்டவில்லை. கடைசியில் என்(பிரம்மாவின்) மற்றொரு புதல்வனான  ஆங்கிர முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான்.  அவருடைய தவவலிமையின் பேரொளி அனைத்து திசைகளிலும் பரவி ஆசிரமத்தை பிரகாசிக்க வைத்துக் கொண்டிருந்தது. ஆங்கிர முனி தன்னுடைய ஆசனத்தில் தவத்தில் அமர்ந்து இருந்த கோலம், அவருக்கு மற்றுமொரு பிரம்மதேவனைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. இடைவிடாத தவத்தின் பயனாக  பஞ்சேந்திரியங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேன்மைமிகு ரிஷியவ‌ர்களைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான் அரசன் மாந்தாதா. உடனடியாக  தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி, ஆசிரமத்தினுள் சென்று ஆங்கிர முனிவருக்குத் தன்னுடைய மரியாதையையும், வணக்கத்தையும் பணிவுடன் அவரின் பத்ம பாதஙகளில் சமர்ப்பித்தான். பிறகு இருகரங்களையும் கூப்பி முனிவரின் அருளாசி வேண்டிப் பிரார்த்தித்தான். வேதமந்திரங்களால் மஹானான ஆங்கிர முனிவரும் அரசனை ஆசீர்வதித்தார். பின்னர் அரசின் ஏழு (7) அங்கங்களின் நலத்தை பற்றி விசாரித்தார். 


(1). அரசன்,  (2). மந்திரிமார்கள்,  (3). கருவூலம், (4). ராணுவம், (5). தோழமை அரசுகள்,  (6). பிராம்மணர்கள், (7). நாட்டில் நடக்கும் வேள்வியில் இடப்படும் பலி, தானங்கள் மற்றும் அரசின் கவனிப்பில் இருக்கும் பிரஜைகளின் தேவைகள், இவை ஒரு அரசின் 7 அங்கங்களாக கருதப்படுகின்றன.பின்னர் அரசன் முனிவரின் ஆசிரமத்தைப் பற்றியும், அவர்கள் எக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றும் வினவினான். பின் ஆங்கிர முனிவர் அரசனிடம் - "ஏன் காட்டில் இக்கடினமான பயணத்தை மேற்கொண்டீர்கள்" என்று கேட்க, அதற்கு அரசன் தன் நாட்டின் வறட்சி நிலைமையைப் பற்றியும், அதனால் குடிமக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்றும், ஒன்றும் செய்ய இயலாத நிலைமையும் விரிவாக எடுத்துரைத்தான்.   


"மஹரிஷி அவர்களே, வேதங்கள் காட்டிய வழியில் தான் என் நாட்டை ஆட்சி செய்தும், பராமரித்தும் வருகிறேன். அப்படியிருக்க இந்த வறட்சி நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் புரியாமல் தவிக்கிறேன். இந்த புரியாத புதிரின் விடை காணவே காட்டில் இக்கடின பிராயணத்தை மேற்கொண்டேன். இப்பொழுது தங்கள் முன்னால் உதவி கோரி நிற்கிறேன். தாங்கள் தயைகூர்ந்து என் நாட்டின் குடிமக்கள் படும் அவதியை தீர்க்க எனக்கு உதவி புரியுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தான்.  


ஆங்கிர ரிஷி மன்னரிடம் - "மன்னா ! யுகங்களில் மிகவும் சிறந்த யுகமான சத்ய யுகம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்த யுகத்தில் தர்மம் தனது நான்கு கால்களில் நின்றுள்ளது. வாய்மை அதாவது உண்மை, சிக்கனம், காருண்யம், தூய்மை ஆகிய நான்கும் தர்மத்தின் நான்கு கால்களாகும். இந்த யுகத்தில் பிராமணர்கள் சமூகத்தின் உயர்குடிமக்களாக மதிக்கப்படுவர். அனைவரும் தங்களது தொழில் தர்மத்தையும் கடமையையும் தவறாது பூர்த்தி செய்வர். இரண்டு முறை பிறப்பவர், மட்டுமே வேத கர்மங்களையும் தவத்தினையும் செய்ய அனுமதிக்கப்படுவர்.  இது மரபு வழக்கமாக இருந்தாலும், அரசர்களில் சிம்ஹத்தை போன்றவனே !  உன் நாட்டில்  பயிற்சி இல்லாதவன், குரு உபதேசம் பெறாதவன் ஒருவன், அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை விட்டுவிட்டு,  மரபு வழியாக இருந்து வரும் வழக்கத்தை மீறி சட்டவிரோதமாக வேத கர்மாக்களையும், தவத்தையும் செய்து வருகிறான். உனது நாட்டில் மழை இல்லாமல் வறட்சி நிலவுவதற்கு இது தான் காரணமாகும். ஆகையால் நீ,  அவன் செய்த செயலுக்கு தண்டனையாக மரண தண்டனை அளித்தால், அவன் செயல்களால் நாட்டில் விளைந்துள்ள மாசுக்கள் நீங்கி அமைதியும் சுபிக்க்ஷமும் மீண்டும் தாண்டவமாடும்." என்று கூறினார்.


அரசன் முனிவரின் வார்த்தையைக் கேட்டு அதிர்ந்து போனான். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு முனிவரிடம் ‍ "தவசிரேஷ்டரே! யாருக்கும் எவ்வித குற்றமும் விளைவிக்காமல், அமைதியாக வேத கர்மாக்களையும், பலி தானங்களையும் செய்யும் ஒருவனை எப்படி நான் கொல்லுவேன்?. அது பாபம். ஆகவே தயைகூர்ந்து சில ஆன்மீகத் தீர்வினைச் சொல்லுங்கள்." என்று வேண்டினான்.


மஹாதபஸ்வியான ஆங்கிரஸ முனிவர் - "மன்னா ! நீ கேட்டபடி மற்றொரு உபாயத்தை சொல்லுகிறேன் கேள். ஆஷாட மாத சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பத்ம ஏகாதசி என்று அழைப்பர். அந்த ஏகாதசி சுபதினத்தில் விரதத்தை விதிமுறைப்படி வழுவாது கடைபிடித்தால், அந்த சக்தி வாய்ந்த விரதத்தின் பயனாக பெய்யும் மழையினால் பயிர்கள் செழித்து வளர்ந்து அள்ள அள்ள குறையாத தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களும் கிட்டும். நாடு மறுபடியும் சுபிக்க்ஷமடையும். இந்த ஏகாதசி விரதத்தை நம்பிக்கையுடன் கடைபிடிப்பவர்கள் குறைகள் அகலப்பெறுவர், தீய சக்திகள் அண்டாமல் பாதுகாக்கப்படுவர். குற்றம் குறை இல்லாதவர்களாக ஆவதற்கான பாதையில் வரும் தடைகளை நீக்குகிறது இந்த விரதம். அரசே, நீ, உன் சுற்றத்தார் மற்றும் நாட்டின் பிரஜைகள் அனைவரும் அன்று தவறாது இந்தத் தெய்வீகமான விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால், சந்தேகமில்லாமல், உன் நாட்டில் சுபிக்க்ஷம் மீண்டும் தாண்டவமாடும். " என்றார்.


முனிவரின் அறிவுரைக் கேட்டதும் அரசன் மகிழ்ச்சியுடன் முனிவருக்கு தன்னுடைய வந்தனங்களை சமர்ப்பித்து, விடைபெற்று, தன்னுடைய மாளிகைக்கு திரும்பினான். பத்ம ஏகாதசி திதி தினத்தன்று, மன்னன் மாந்தாதா தன் சுற்றத்தார், மக்கள் அனைவரையும் ஒரு சேரக் கூட்டி, அன்று விரதம் அனுஷ்டிக்கும்படி அறிவித்தான். அனைவரும் மன்னரின் ஆணைப்படி விரதம் அனுஷ்டிக்க, முனிவர் கூறியபடி மழை பெய்து, பயிர்கள் அமக விளைச்சலை அள்ளித் தந்தன. பஞ்சேந்திரியங்களையும் அடக்கி ஆளும் வல்லமை கொண்ட பரம்பொருளான ரிஷிகேசனின் கருணையால், நாட்டின் குடிமக்கள் அனைவரும் வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.'எனவே, நாரதா, முக்கியமான இந்த பத்ம சயனி ஏகாதசி விரதத்தை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு இது அனைத்து வித மகிழ்ச்சியையும் அளித்து இறுதியில் மோட்சத்தையும் அளிக்கும் சக்தி வாய்ந்தது' என்று பிரம்மதேவர் நாரதரிடம் கூறினார்.இந்தக் கதையை யுதிஷ்டிரருக்குத் தெரிவித்த ஸ்ரீகிருஷ்ணர் - " பிரியமான யுதிஷ்டிரா, பத்ம ஏகாதசி, சகல பாவங்களையும் முற்றிலும் நீக்கி விடுதலை அளிக்கும் வலிமை பெற்ற சுபநாளாகும். இந்த விரதக் கதையைப் படித்தாலோ, அல்லது கேட்டாலோ, அனைத்து பாவங்களும் நீங்கும். ஒ! பாண்டவா, என்னை மகிழ்விக்க விரும்பும் பக்தர்கள் தேவசயனி ஏகாதசி என்ற அழைக்கப்படும் இந்த பத்ம ஏகாதசி விரதத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.


தேவசயனி அல்லது விஷ்ணு சயனி என்னும் நாள் பகவான் மஹாவிஷ்ணு மற்றும் அனைத்து தேவர்களும் நித்திரையில் ஆழ்ந்து போகும் தினமாகும். இந்நாளுக்கு பிறகு தேவாட்தானி ஏகாதசி (ஹரிபோதினி (பிரபோதினி) தேவோத்தானி (உத்தான) ஏகாதசி, கார்த்திகை (அக்டோபர் - நவம்பர்) மாதத்தில் வரும் ஏகாதசி வரை, எந்தவிதமான சுப சடங்குகளையும் செய்யக் கூடாது என்று கூறுவர். சூரிய பகவான் தன் தென் திசை கோள்சார பிரயாணத்தை (தட்சிணாயனம்) தொடங்குவதாலும், தேவர்கள் அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருப்பதாலும், அவர்களை வேள்வியின் ஆகுதிகளை ஏற்றுக்கொள்ள அழைக்க இயலாது.அரசர்களில் சிம்மத்தை போன்ற மஹாராஜனே யுதிஷ்டிரா ! இவ்வுலக இகபர சுகங்களிலிருந்து விடுதலை பெற்று முக்தியை அடைய விரும்புவோர் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கும் இந்த ஏகாதசி நன்னாளில் வழிமுறைகளில் கூறியுள்ளபடி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று அருளினார்.பிரம்ஹ வைவர்த்தன புராணம் ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி அதாவது தேவசயனி (பத்ம) ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more