ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் /ஜூலை) தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் (ஜூன்/ஜூலை) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது.
ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த உண்மையை விளக்க புராணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறேன். அழகாபுரியின் மன்னனான குபேரன். பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன், அவரிடம் யக்ஷ வம்சத்தை சேர்ந்த தோட்டக்காரன் இருந்தான். அவன் பெயர் ஹேமா. அவன் மனைவியின் பெயர் விசாலாக்ஷி மிக அழகானவர். ஹேமா அவனிடம் மிக்க பற்று கொண்டிருந்தான். ஹேமா தினந்தோறும் மானஸ சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து அவற்றை குபேரனிடம் கொடுக்க, குபேரன் அம்மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் மானஸ சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து வந்து ஹேமா, தன் பிரியமான மனைவியின் அன்பால் கட்டுப்பட்டு வீட்டிலேயே தங்கிவிட்டான்.
ஓ! மன்னா. இதன் விளைவாக அன்று குபேரனுக்கு மலர்கள் கிடைக்கவில்லை. யக்ஷ வம்சத்தின் மன்னனான குபேரன் ஹேமாவின் வருகைக்காக ஆறு மணி நேரம் காத்திருந்தார். மலர்கள் இல்லாததால் அவரால் சிவபெருமானின் வழிபாட்டை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மிக்க ஆத்திரம் அடைந்த மன்னர். தோட்டக்காரனின் தாமதத்திற்குரிய காரணத்தை அறியுமாறு தன் காதுவர்களை ஏவினார். யக்ஷ தூதுவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து மன்னரிடம் ஓ! எஜமானே! ஹேமா தன் மனைவியிடம் மோகம் கொண்டு வீட்டிலேயே தங்கியுள்ளான். எனக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட குபேரன் மிகவும் ஆத்திரமடைந்தார். உடனே ஹேமாவை அழைத்து வந்து, தன் முன் நிறுத்துமாறு குபேரன் தன் சேவகர்களுக்கு கட்டளையிட்டார். தன் தவறை உணர்ந்த ஹேமா நாணமுற்று மிகுந்த பயத்துடன் குபேரன் முன் சென்று வணங்கினான். கோபத்தால் குபேரன் உடல் நடுக்கத்துடனும் கண்கள் சிவந்தும் காணப்பட்டார்.
குபேரன் கோபத்துடன் கூறினார். ஓ! பாவியே! மதக்கொள்கைளை அழிப்பவனே, நீ என்னுடைய வழிபாட்டிற்குரிய சிவபெருமானை அலட்சியம் செய்து, உன்னுடைய புலன் நுகர்வு செயல்களில் ஈடுபட்டிருக்கிறாய். ஆகையால் நான் உன்னை சபிக்கிறேன். வெண்குஷ்டத்தால், அவதிப்பட்டு உன்னுடைய மனைவியை நிரந்தரமாக பிரிந்திருப்பாய். ஓ! தாழ்ந்த மூடனே! நீ உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும். குபேரனால் சபிக்கப்பட்ட ஹேமமாலி உடனே அழகாபுரியில் இருந்து கீழிறங்கி இந்த மண்ணுலகில் பிறவி எடுத்தான். வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளானான். மிகுந்த மன உளைச்சலுடன், உணவும், நீரும் இன்றி ஒரு பயங்கரமான அடர்ந்த காட்டிற்குச் சென்றான். அங்கு அவன் பசி மற்றும் தாகத்தால் இரவும் பகலும் துன்பப்பட்டான். பகலில் எந்தவொரு இன்பமும் கிடைக்கவில்லை. இரவில் அவனால் தூங்கவும் முடியவில்லை. கோடையிலும் குளிர்காலத்திலும் அவன் மிக துன்பப்பட்டான். சிவபெருமானின் வழிபாட்டிற்கு உதவியதால் அவனுடைய பூர்விகம் நினைவில் இருந்தது. பல பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவனுடைய முந்தைய செயல்களை அவனால் நினைத்துக் கொள்ள முடிந்தது. மற்றும் அவனுடைய உணர்வு தூய்மையுடனும் எச்சரிக்கையுடனும் இருந்தது.
இதுபோன்று பல நாட்கள் காட்டில் திரிந்த பிறகு அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் ஹேமாமாலி இமயமலைத் தொடரை அடைந்தான். அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தபோது கடவுளருளால் மார்கண்டேய பெருமுனிவரை சந்திக்க நேர்ந்தது. மார்கண்டேயர் துறவிகளில் மிகச்சிறந்தவர். அவருடைய ஆயுட்காலம் ஏழு கல்பங்கள் ஆகும். தன்பாவங்களை உணர்ந்த ஹேமமாலி. முனிவரிடமிருந்து சற்று விலகி நின்று தன் பணிவான வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான். கருணை உள்ளம் கொண்ட மார்கண்டேய முனிவர் வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட ஹேமாவை அழைத்து ஓ! நீ எப்படி இந்த பயங்கரமான துன்பத்தை அடைந்தாய். இதுபோன்ற அவதிப்படுவதற்கு நீ என்னென்ன பாவமிக்க மற்றும் தீண்டதகாத செயல்களை செய்தாய்? என வினவினார். இதைக் கேட்ட ஹேமா பதிலளித்தார். ஓ! பெருமுனிவரே! நான் யக்ஷகுலத்தின் மன்னனான குபேரனின் தோட்டக்காரன். என் பெயர் ஹேமாமாலி.
நான் வழக்கமாக மானஸ் சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து வந்து, அவற்றை எனது எஜமானரான குபேரனிடம் கொடுப்பேன். குபேரன் அம்மலர்களால் பகவான் சிவபெருமானை வழிபடுவார். ஒரு நாள் என் மனைவியிடம் இச்சை கொண்டு வீட்டிலேயே தங்கியதால் குபேரனுக்கு மலர்களை கொடுக்கத் தவறினேன். அதனால் ஆத்திரமடைந்த யக்ஷ குல மன்னனான குபேரன் என்னை சபித்தார். அதன் விளைவாக நான் என் மனைவியைப் பிரிந்து வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்படுகிறேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. இன்று இந்த துர்பாக்கியசாலியான ஆத்மா. திடீரென பாக்கியசாலியாகி உம்மைப் போன்ற பெரியோரை சந்திக்க நேர்ந்தது. சாதுக்கள் எப்பொழுதும் மற்றவர் துன்பத்தை கண்டு துன்புறுவர் என்பதை நான் கேட்டறிந்துள்ளேன்.
ஓ! பெரு முனிவரே! மங்களகரமான பலன்களை அடையும் விருப்பத்துடன் இந்த நிலையிழந்த ஆத்மா உம்மிடம் சரணடைந்துள்ளது. தயவு செய்து இவனை விடுவியுங்கள். மார்கண்டேய பெருமுனிவர். கருணையுடன் அவனிடம் பேசினார். ஓ! தோட்டக்காரனே! நான் மங்களகரமான மற்றும் பயன்தரும் ஒரு விரதத்தைப் பற்றி உனக்கு அறிவுறுத்துகிறேன். நீ ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் / ஜூலை) வரக்கூடிய யோகினி ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். அதன் விளைவாக நீ இந்த வெண்குஷ்டத்தால் அவதிப்படும் சாபத்தில் இருந்து கண்டிப்பாக விடுபடுவாய். மார்கண்டேய முனிவரின் இந்த அறிவுரையைக் கேட்ட ஹேமாமாலி மகிழ்ச்சியடைந்து நன்றியுடன் தன் பணிவான வணக்கங்களை அவருக்கு சமர்ப்பித்தான். பிறகு முனிவரின் அறிவுரைப்படி இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தான். அதன் பலனாக தன்னுடைய தெய்வீக உருவத்தை அடைந்து வீடு திரும்பி தன் மனைவியுடன் சேர்ந்தான். ஒருவர் 88,000 அந்தணர்களுக்கு உணவளிப்பதால் அடையும் பலனை இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். இந்த யோகினி ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்து, மிகுந்த தெய்வ பக்தியை கொடுக்கிறது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment