பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -12



பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம்

அத்தியாயம் -12

பக்தித் தொண்டு

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பதினொன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம்


கிருஷ்ணரின் அழிவற்ற பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றினால் பூரண தெளிவு பெற்றான். இருப்பினும், பிற்காலத்தில் வரக்கூடிய மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணர் பத்தாம் அத்தியாயத்தில் தமது பெருமைகளாகப் பட்டியலிட்டவை அனைத்தையும் அவரது விஸ்வரூபத்தில் நேரில் காண விருப்பம் தெரிவித்தான். அர்ஜுனனின் விருப்பத்தை ஏற்று, அவன் காண விரும்பியவை மட்டுமின்றி, வருங்காலத்தில் காண விரும்புபவற்றையும் தனது விஸ்வரூபத்தில் காட்டுகின்றேன் என்று கூறி, அவனுக்கு தெய்வீகக் கண்களை கொடுத்த பின்னர், கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். விஸ்வரூபத்தில் எண்ணற்ற கண்கள், கால்கள், கைகள் என அற்புதமான தரிசனத்தினை அர்ஜுனன் பெற்றான். பல்வேறு தேவர்களையும் உயிரினங் களையும் கண்டான். ஆச்சரியத்தில் மூழ்கித் தனது பிரார்த்தனையை முன்வைத்த அர்ஜுனன் படிப்படியாக பயம் கொண்டான். தான் காலம் என்றும் அனைவரையும் அழிக்க வந்திருப்பதாகவும் கிருஷ்ணர் விளக்கிய பின்னர், அவரது நான்கு கரங்களைக் கொண்ட நாராயண ரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனன் வேண்ட, அதன்படி கிருஷ்ணர் தனது நாராயண ரூபத்தைக் காட்டி, பின்னர் தனது மூல ரூபமான கிருஷ்ண ரூபத்திற்கு மாறினார். பிறழாத பக்தியினால் மட்டுமே தன்னை கிருஷ்ணராகக் காண முடியும் என்று பக்தியின் மகத்துவத்தைக் கூறியபடி கிருஷ்ணர் பதினொன்றாம் அத்தியாயத்தினை நிறைவு செய்தார்.

அர்ஜுனனின் கேள்வி

பன்னிரண்டாம் அத்தியாயம் “பக்தி யோகம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கீதையின் அனைத்து அத்தியாயங் களிலும் (அதிலும் குறிப்பாக ஏழாம் அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரை) பக்தி யோகமே பிரதானமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பன்னிரண்டாம் அத்தியாயத்தில், பக்தி யோகமானது அருவப் பிரம்மனை மையமாகக் கொண்ட இதர யோகப் பயிற்சிகளைக் காட்டிலும் உயர்ந்தது என்பது தெள்ளத் தெளிவாக கிருஷ்ணரால் விளக்கப்படுவதால், இந்த அத்தியாயம் அவ்வாறே பெயர் பெற்றுள்ளது.

விஸ்வரூபத்தைப் பற்றிய விளக்கங்களைக் கேட்கும் ஆன்மீக அன்பர்கள், அந்த விஸ்வரூபமே மிகமிக உயர்ந்தது என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவும், அருவப் பிரம்மனை அணுகுவதைக்காட்டிலும் கிருஷ்ணரை வழிபடுதல் உயர்ந்தது என்பதை கிருஷ்ணரின் திருவாயிலிருந்து பெறுவதற்காகவும், அர்ஜுனன் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தான்: “உமது பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர், அருவ பிரம்மனை அணுகுவோர்–இருவரில் யார் பக்குவமானவர்?”

ஆன்மீகவாதிகளைப் பொதுவாக இரு பிரிவினராகப் பிரிக்கலாம்: பரம் பொருளின் உருவத்தை வழிபடுபவர்கள், உருவமற்ற பரம்பொருளை (அருவ பிரம்மனை) வழிபடுபவர்கள். இவர்களில் யார் சிறந்தவர்? எந்தப் பாதை எளிதானது? என்பதே அர்ஜுனனின் கேள்வியாகும். கிருஷ்ணரின் தனிப்பட்ட உருவில் பற்றுதல் கொண்டுள்ள அர்ஜுனன், தனது நிலையை உறுதி செய்துகொள்வதற்காகவும் இக்கேள்வியை எழுப்புகிறான்.

அருவவாதத்தைக் காட்டிலும் பக்தியே உயர்ந்தது

கிருஷ்ணரின் தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் அவரை வழிபடுபவர்களே மிகவும் பக்குவமானவர்கள் என்று உடனடியாக கிருஷ்ணர் பதிலளித்தார். அத்தகைய பக்தனுக்கு ஜடச் செயல்கள் ஏதும் கிடையாது. அவன் சதா சர்வ காலமும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டுள்ளான்; சில நேரங்களில் ஜபம் செய்கிறான், சில நேரங்களில் கிருஷ்ணரைப் பற்றிய நூல்களைப் படிக்கவோ கேட்கவோ செய்கிறான், சில நேரங்களில் பிரசாதம் சமைக்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணருக்காக ஏதேனும் வாங்குவதற்குச் சந்தைக்குச் செல்கிறான், சில நேரங்களில் கோவிலைத் தூய்மை செய்கிறான், பாத்திரங்களைக் கழுவுகிறான்–இவ்வாறாக அவன் எதைச் செய்தாலும் சரி, தனது செயல்களை கிருஷ்ணருக்கென அர்ப்பணிக்காமல் நொடிப் பொழுதையும் அவன் கழிப்பதில்லை.

ஆனால், தோற்றமற்ற, சிந்தனைக்கு எட்டாத பரம்பொருளின் அருவத் தன்மையை வழிபடுபவர்கள், பல்வேறு புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லாரிடமும் சம நோக்குடன் பழகி, அனைவருக்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபட்டு, பல்வேறு கஷ்டங்களுக்குப் பின்னரே இறுதியில் கிருஷ்ணரை அடைய முடியும். உண்மையில், கிருஷ்ணரின் உடலிலிருந்து தோன்றும் பிரம்மஜோதியை அடைய முடியும். இருப்பினும், அருவ பிரம்மனின் மீது பற்றுதல் கொண்டுள்ளவர்களின் வளர்ச்சி மிகவும் கடினமானது என்று கிருஷ்ணர் தெளிவுபடுத்துகிறார். முழுமுதற் கடவுளின் நேரடித் தொண்டில் ஈடுபடும் பக்தி யோக வழிமுறை அனைவருக்கும் எளிதான பாதையாகும். பக்தன் பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுகிறான், அதில் அவனுக்கு எந்தவித சிரமமும் இல்லை. ஆனால் அருவத் தன்மையைப் பின்பற்றுபவர்களின் வழி மிகவும் சிரமமானதாகும். (அடுத்த பக்கத்தில் இருக்கும் பட்டியல், அருவ பிரம்மனை வழிபடுவதற்கும் கிருஷ்ணரை நேரடியாக வழிபடுவதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தும்).
எல்லா செயல்களையும் கிருஷ்ணருக்காகத் துறந்து, பிறழாமல் கிருஷ்ணரின் மீது பக்தி செலுத்தி, பூரணமாக கிருஷ்ணரை வழிபடுபவர்களை பிறப்பு இறப்பு என்னும் கடலிலிருந்து அவரே உடனடியாகக் காப்பாற்றுகிறார். அதற்கான உத்திரவாதத்தை அவரே வழங்குகிறார். தனது சொந்த பலத்தினால் முயற்சி செய்யும் அருவவாதிக்கு கிருஷ்ணர் நேரடியாக உதவி செய்வதில்லை, ஆனால் அவரிடம் சரணடையும் பக்தனைக் கரையேற்றும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்கிறார். ஒரு பெருங்கடலில் வீழ்ந்து தத்தளிப்பவன், எவ்வளவுதான் மிகச்சிறந்த நீச்சல் வீரனாக இருந்தாலும், தனது சுய வலிமையில் நீந்தி கரைசேருதல் என்பது இயலாத காரியம். யாரேனும் அங்கு வந்து அவனை நீரிலிருந்து தூக்கினால், உடனடியாக அவன் காப்பாற்றப்படுவான். அதுபோல, பகவான் தனது பக்தர்களைப் பிறவிக் கடலிலிருந்து நேரடியாக விடுவிக்கின்றார். எனவே, தம்மைத் தாமே பாதுகாப்பதற்கான வீண் முயற்சியில் ஈடுபடாமல், ஒவ்வொருவரும் கிருஷ்ணரிடம் தஞ்சமடைய வேண்டும். அதுவே வாழ்வின் உன்னதமான பக்குவநிலை.

படிப்படியான நிலைகள்

அவ்வாறு மனதில் கிருஷ்ணரை நிறுத்தி, முழு அறிவையும் கிருஷ்ணரில் ஈடுபடுத்தினால், கிருஷ்ண பக்தன் எப்போதும் கிருஷ்ணரிலேயே வாழ முடியும். அத்தகைய உயர்ந்த நிலையைப் பின்பற்ற முடியாதவன், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றலாம். அத்தகைய பயிற்சி ஸாதன பக்தி எனப்படும். ஸாதன பக்தியைப் பின்பற்றுபவன் திறமை வாய்ந்த ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்கீழ் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லுதல், பிரார்த்தனை செய்தல், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைக் குறிப்பிட்ட அளவு ஜபம் செய்தல், விக்ரஹத்திற்கு அலங்காரம் செய்தல், விக்ரஹத்திற்காகச் சமைத்தல், பிரசாதம் ஏற்றல் போன்ற பல்வேறு சட்டதிட்டங்கள் உள்ளன.

இவையனைத்திற்கும் மேலாக, தூய பக்தர்களிடமிருந்து பகவத் கீதை, பாகவதம் போன்ற சாஸ்திரங்களைக் கேட்க வேண்டும். அதன் மூலமாக ஒருவன் படிப்படியாக உயர்வு பெற்று எப்போதும் கிருஷ்ணரை நினைக்கும் நிலையை அடைய முடியும்.

பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண பக்தியின் செயல்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம்; அவ்வாறு செயல்படுபவனும் படிப்படியாக பக்குவநிலையை அடைய முடியும். எந்தவொரு முயற்சிக்கும் சற்று நிலம், பணம், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் அவசியம் என்பதால், கிருஷ்ணருடைய தொண்டிற்கும் இவை தேவைப்படுகின்றன. ஜடவுலகில் புலனுகர்ச்சிக்காக செய்யும் செயல்களை கிருஷ்ணரின் திருப்திக்காக செய்தால், அவை ஆன்மீகச் செயல்களாகிவிடும். ஒருவனிடம் போதுமான பணம் இருந்தால், அவன் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கான அலுவலகத்தையோ கோவிலையோ கட்டுவதில் உதவி செய்யலாம், அல்லது புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவலாம். இவ்வாறாக, ஸாதன பக்தியைப் பயிற்சி செய்ய இயலாதவன், தனது வருமானத்தில் ஒரு சிறு பங்கையாவது கிருஷ்ண உணர்வின் பிரச்சாரத்திற்காகத் தியாகம் செய்யலாம்.

இவ்வாறு கிருஷ்ணருக்காக உழைக்க இயலாதவன், தனது உழைப்பின் பலன்களை ஏதேனும் நற்காரியங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும். இதனடிப்படையில், சமூகத் தொண்டு, குலத் தொண்டு, தேசத் தொண்டு என்று ஒருவன் ஈடுபடலாம். அதனையும் ஒருவனால் பின்பற்ற முடியாவிடில் ஞானத்தை வளர்ப்பதில் ஈடுபடலாம். ஞானத்தைவிட தியானம் சிறந்தது. இருப்பினும், முன்னரே கூறியபடி இவை எல்லாவற்றையும்விட கிருஷ்ணரை எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பக்தனே உயர்ந்தவன்.

கிருஷ்ணருக்கு பிரியமான பக்தனின் குணங்கள்

கிருஷ்ணர் பக்தனுக்கு மிகவும் பிரியமானவர், பக்தன் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவன். பக்தனை கிருஷ்ணருக்கு பிரியமானவனாக மாற்றக்கூடிய சில தன்மைகளை கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் பட்டியலிடுகிறார். பக்தனின் மிக முக்கியமான குணம், கிருஷ்ணரின் மீதான கலப்பற்ற அன்பில் அவருக்குத் தொண்டு செய்வதே. இந்த ஒரு குணம் மற்ற அனைத்து குணத்தையும் பக்தனுக்கு படிப்படியாக வழங்கும்.

பக்தன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, உரிமை உணர்வின்றி, அஹங்காரமின்றி, சகிப்புத் தன்மையுடன் கட்டுப்பாடுடையவனாக இருந்தால், அத்தகு பக்தன் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவனாகிறான்.

யாருக்கும் தொல்லை தராமல், தூய்மையாக, நிபுணனாக, கவலைகளின்றி, பலனுக்காக முயற்சி செய்யாத பக்தன், கிருஷ்ணருக்கு பிரியமானவன்.

நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவித்து, மான அவமானம், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி, ஆகியவற்றில் நடுநிலை வகித்து, இருப்பதை வைத்து திருப்தியுற்று, அறிவில் நிலைபெற்று கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டுள்ளவன் அவருக்கு மிகவும் பிரியமானவன்.

பக்தித் தொண்டு என்னும் இந்த அழிவற்ற பாதையைப் பின்பற்றி, கிருஷ்ணரை பரம இலக்காக வைத்து நம்பிக்கையுடன் ஈடுபடுபவர்கள், அவருக்கு மிகமிக பிரியமானவர்கள். ஆன்மீக வழிமுறைகளில் பக்தித் தொண்டே சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை பகவான் இந்த அத்தியாயத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்

 "இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more