பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -14



பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம்

அத்தியாயம் -14


ஜட இயற்கையின் முக்குணங்கள்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பதிமூன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம்

க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ, க்ஞானம், க்ஞேயம், புருஷ, பிரக்ருதி ஆகிய ஆறு விஷயங்களை விளக்கும்படி பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் வினவ, அவற்றை கிருஷ்ணர் பதிமூன்றாம் அத்தியாயத்தில் விளக்கினார். உடலே க்ஷேத்ரம் (களம்) என்றும், உடலை அறிபவர்களான ஆத்மாவும் பரமாத்மாவும், க்ஷேத்ரக்ஞ (களத்தை அறிபவர்கள்) என்றும் கிருஷ்ணர் கூறினார். அடக்கம், கர்வமின்மை, பொறுமை போன்றவற்றை ஞானம் என்றும், அந்த ஞானத்தினால் அறியப்படும் பரமாத்மாவே க்ஞேயம் என்றும் எடுத்துரைத்தார். முக்குணங் களைக் கொண்ட ஜட இயற்கை பிரக்ருதி என்றும், அதை அனுபவிக்கும் ஜீவனும் பரமாத்மாவும் புருஷர்கள் என்றும் மேலும் விளக்கப்பட்டது.

13ஆம் அத்தியாயத்திற்கும் 14ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

ஜீவன் தனது களத்தின் செயல் களால் பந்தப்படுவதை கிருஷ்ணர் பதிமூன்றாம் அத்தியாயத்தில் (13.22) சுருக்கமாகக் கூறினார். அந்த பந்தத்தின் தன்மையையும் ஜட இயற்கையின் குணங்களால் அவன் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறான் என்பதையும் பதினான்காம் அத்தியாயத்தில் விளக்கு கிறார்.

ஜீவன்களின் முக்தியும் கட்டுண்ட நிலையும்

ஞானங்களில் உயர்ந்த ஞானத்தை மீண்டும் எடுத்துரைப்பதாகக் கூறி கிருஷ்ணர் பதினான்காம் அத்தியாயத்தை தொடங்குகிறார். ஜட இயற்கையின் முக்குணங்களைப் பற்றிய இந்த ஞானத்தில் நிலைபெறுவதால், ஒருவன் தெய்வீக இயற்கையை அடைய முடியும். அவ்வாறு நிலைபெற்றவனுக்கு மறுபிறவி இல்லை என்று உறுதியளித்த பின்னர், ஜீவன்கள் ஜட இயற்கையில் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை கிருஷ்ணர் சுருக்கமாக எடுத்துரைக்கின்றார். ஜட பொருட்கள் அனைத்தும் ஒரு கருவறைப் போன்றது என்றும், அந்த கருவறையினுள் ஜீவாத்மாக்களைச் செலுத்தி அவர்களின் பிறப்பினை தானே சாத்தியமாக்குவதாகவும், அதனால் எல்லா உயிர்களுக்கும் தானே தந்தை என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்.

திவ்யமான உயிர்வாழி, ஜட இயற்கையில் செய்ய வேண்டியது ஏதுமில்லை. இருப்பினும், அவன் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் வரும் போது, இயற்கையின் முக்குணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறான். ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய மூன்றும் ஜட இயற்கையின் குணங்களாகும். இம்மூன்று குணங்களும் ஜீவனை பந்தப்படுத்துகின்றன என்றபோதிலும், ஸத்வ குணமானது மற்றவற்றை விட தூய்மையானதாகவும் பிரகாசப்படுத்துவதாகவும் பாவ விளைவுகளிலிருந்து விடுவிப்பதாகவும் அமைகின்றது. இருப்பினும், ஸத்வ குணத்தில் நிலைபெற்றோர், அதில் கிடைக்கும் இன்பத்தினாலும் ஞானத்தினாலும் தொடர்ந்து இப்பௌதிக உலகில் பந்தப்படுகின்றனர்.

எல்லையற்ற ஆசையினாலும் ஏக்கத்தினாலும் பிறக்கும் ரஜோ குணமானது ஜீவன்களை அவர்கள் செய்யும் செயல்களின் பலனை வைத்து பந்தப்படுத்துகின்றது. ரஜோ குணத்தின் தன்மை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள கவர்ச்சியில் வெளிப்படுகிறது. அக்கவர்ச்சி அதிகரிக்கும்போது ஏக்கமும் வளர்கிறது. மேலும், சமூக அந்தஸ்து, நல்ல வீடு, குழந்தைகள் எனப் பல்வேறு விஷயங்களைப் பெறுவதற்காக அவன் கடினமாக உழைக்கின்றான். அந்த உழைப்பின் விளைவுகளால் அவன் தொடர்ந்து பந்தப்படுத்தப்படுகிறான்.

அறியாமையினால் பிறந்த தமோ குணமானது பைத்தியக்காரத்தனம், சோம்பல். உறக்கம் ஆகியவற்றினால் ஜீவனை பந்தப்படுத்துகின்றது. அறியாமையில் மயங்கியவனால் உண்மையை உணர முடியாது. உதாரணமாக, தாத்தா, தந்தை என பலரும் மரணமடைவதைக் காணும்போதிலும் தமோ குணத்தினால் பாதிக்கப்பட்டவன், நிச்சயமான மரணத்தினை உணராமல் பணத்தைச் சேகரிப்பதில் பைத்தியமாக அலைவான். ரஜோ குணத்தில் இருப்பவனிடம் காணப்படும் சுறுசுறுப்பு கூட இவனிடம் இருக்காது, ஆறு மணி நேரம் உறங்குவதற்குப் பதிலாக பத்து மணி நேரம் உறங்குவான்; போதைப் பொருள்களிடம் அடிமையாக இருப்பான்.

இவ்வாறாக, ஸத்வ குணம் இன்பத்தினாலும், ரஜோ குணம் செயல்களின் பலன்களினாலும், தமோ குணம் பைத்தியக்காரத்தனத்தினாலும் பந்தப்படுத்துகின்றன.


குணங்களின் உயர்நிலையை உணர்தல்

முக்குணங்களுக்கு இடையே எப்போதும் போட்டி நிலவுகின்றது. சில நேரங்களில் ஸத்வ குணமானது ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகிறது; சில நேரங்களில் ரஜோ குணம் மற்ற குணங்களைக் காட்டிலும் மேலோங்குகிறது; சில நேரங்களில் தமோ குணம் மேலோங்குகின்றது. உடலில் இருக்கும் ஒன்பது கதவுகளும் (இரு கண்கள், இரு காதுகள், இரு நாசித்துவாரங்கள், வாய், பாலுறுப்பு, ஆசனவாய் ஆகியவை) ஞானத்தால் பிரகாசிக்கும்போது, ஸத்வ குணம் மேலோங்கியிருப்பதாக உணரலாம். உதாரணமாக, காதுகள் முறையான விஷயங்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டும்போதும், கண்கள் முறையான விஷயங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டும்போதும், அவை ஸத்வ குணத்தின் அறிகுறிகளாக உணரலாம்.
அதிகமான பற்றுதல், பலனை எதிர்பார்த்து செயல்படுதல், தீவிரமான முயற்சி, கட்டுப்பாடற்ற ஆசை, ஏக்கம் ஆகியவை வளரும்போது ரஜோ குணம் மேலோங்குகின்றது என்பதை உணரலாம். இருள், செயலற்ற தன்மை, பைத்தியக்காரத்தனம், மயக்கம் ஆகியவை தோன்றும்போது தமோ குணம் அதிகரிப்பதாக உணரலாம்.

குணங்களின் செயல்களும் கதியும்

ஸத்வ குணத்தில் மரணமடைபவன், பிரம்ம லோகம், ஜன லோகம் போன்ற உயர்ந்த லோகங்களை அடைந்து தேவர்களின் சுகத்தை அடைகிறான். ரஜோ குணத்தில் மரணமடைபவன் மீண்டும் மனிதர்களின் மத்தியில் பூவுலகில் பிறக்கின்றான். தமோ குணத்தில் மரணமடைபவன் மிருகங்களுக்கு மத்தியிலோ நரகத்திலோ பிறக்கின்றான். ஸத்வ குணத்தின் செயல்கள் தூய்மையை விளைவிக்கின்றன. ரஜோ குணத்தின் செயல்கள் துக்கத்தை விளைவிக்கின்றன. தமோ குணத்தின் செயல்கள் முட்டாள்தனத்தில் முடிகின்றன. உதாரணமாக, மாமிசம் உண்பதற்காக அப்பாவி மிருகங்களைக் கொல்லும் தமோ குணத்தினர் இருண்ட எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

ஸத்வ குணத்திலிருந்து ஞானமும் ரஜோ குணத்திலிருந்து பேராசையும் தமோ குணத்திலிருந்து மயக்கமும் வளர்கின்றன.
குணங்களிலிருந்து விடுபடுதல்

எல்லாச் செயல்களும் குணங் களினால் செய்யப்படுகின்றன என்பதை ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுள் இக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணர்ந்து, அவரது பக்தித்தொண்டில் ஜீவன் ஈடுபடும் போது, அவனும் முக்குணங்களிலிருந்து உயர்வு பெற முடியும்.

குணங்களிலிருந்து விடுபடுவதற்குரிய விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன், முக்குணங்களைக் கடந்தவர்களின் அறிகுறிகள் யாவை என்றும், நடத்தைகள் யாவை என்றும், உயர்வு பெறுவதற்கான வழி யாது என்றும் வினவினான்.

பிரகாசம், பற்றுதல், மயக்கம் ஆகியவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமல் இருத்தல், இல்லாதபோது ஏங்காமல் இருத்தல், குணங்களின் விளைவுகளுக்கு மத்தியில் ஸ்திரமாக சஞ்சலமின்றி, நடுநிலையில், அப்பாற்பட்டு இருத்தல் ஆகியவை முக்குணங்களைக் கடந்தவர்களின் அறிகுறிகளாகும்.

இன்ப துன்பத்தை சமமாகக் கருதுதல், மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காணுதல், பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை கொள்ளுதல், திடமாக இருத்தல், புகழ்ச்சி இகழ்ச்சி மற்றும் மான அவமானத்தில் சமமாக இருத்தல், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துதல் ஆகியவை முக்குணங்களைக் கடந்தவர்களின் நடத்தையாகும்.

முக்குணங்களைக் கடந்த தூய்மையான நிலையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான தூய பக்தியே வழியாகும். எல்லாச் சூழ்நிலைகளிலும், இராமர், நாராயணர் போன்ற கிருஷ்ணரின் ஏதாவதொரு ரூபத்தின் பக்தித் தொண்டில் ஈடுபடுபவன் ஜட இயற்கையின் குணங்களிலிருந்து உடனடியாக விடுபட்டு, களங்கமற்ற நிலை என்று அறியப்படும் பிரம்மன் நிலையை அடைகிறான். மரணமின்மை, அழிவின்மை, நித்தியம், இன்பம் ஆகியவை பிரம்ம நிலையின் தன்மைகளாகும். அத்தகைய பிரம்மனின் ஆதாரம் கிருஷ்ணரே.

பிரம்மனின் ஆதாரம் கிருஷ்ணரே என்பதால், கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணருக்கான நேரடி பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும்.

கிருஷ்ணருக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தினை உண்ணுதல், அவரது தாமரைத் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை நுகருதல், அவரது லீலைகள் நடைபெற்ற இடங்களை தரிசித்தல், பகவத் செய்திகளை பக்தர்களுடன் பரிமாறிக் கொள்ளுதல், இறைவனும் பக்தர்களும் தோன்றிய நாள்களில் விரதம் அனுசரித்தல், மற்றும் தெய்வீக சப்தமான, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரித்தல் ஆகியவை பக்தித் தொண்டின் செயல்களாகும்.

பதினான்காம் அத்தியாயத்தின் ஐந்து பகுதிகள்

(1) ஜீவன்களின் முக்தியும் கட்டுண்ட நிலையும் (14.1-4)

குணங்களைப் பற்றிய ஞானத்தினால் முக்தி அடையலாம்.
கிருஷ்ணரே படைப்பாளி, அவரே தந்தை

(2) ஆத்மாவைக் கட்டுப்படுத்தும் முக்குணங்கள் (14.5-9)

ஸத்வ குணம் மகிழ்ச்சியினாலும் ரஜோ குணம் பலன்நோக்குச் செயல்களாலும் தமோ குணம் பைத்தியக்காரத்தனத்தினாலும் ஆத்மாவைக் கட்டுப்படுத்துகிறது.

(3) குணங்களின் உயர்நிலையை உணர்தல் (14.10-13)

குணங்கள் தங்களுக்குள் போட்டியிட்டு ஜீவனை பந்தப்படுத்துகின்றன

(4) குணங்களின் செயல்களும் கதியும் (14.14-18)

ஸத்வ குணம்–உயர் லோகங்கள், தூய செயல்கள், ஞானம்
ரஜோ குணம்–பூலோக வாழ்க்கை, துன்பமான செயல்கள், பேராசை
தமோ குணம்–நரக வாழ்க்கை, மடத்தனமான செயல்கள், அறியாமை

(5) குணங்களிலிருந்து விடுபடுதல் (14.19-27)
கிருஷ்ணர் குணங்களுக்கு அப்பாற்பட்டவர்

குணங்களிலிருந்து விடுபட்டவனின் அறிகுறிகள் யாவை? நடத்தைகள் யாவை? வழி யாது?–அர்ஜுனனின் கேள்வி

அறிகுறி–பிரகாசம், பற்றுதல், மற்றும் மயக்கத்திலிருந்து விலகியிருத்தல் நடத்தைகள்–இன்ப துன்பங்களில் சமநிலை, கல்லையும் பொன்னையும் சமமாகக் காணுதல்.


"இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more