ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை
ஆதாரம் :- கர்க ஸம்ஹிதை / வ்ருந்தாவன கண்டம்
/ அத்தியாயம் 16 / துளசி பூஜை / துளசியின் மஹாத்மியம்,
🔆🔆🔆🔆🔆🔆🔆
பஹூலாஸ்வ மன்னர், நாரத மகரிஷியிடம் ஶ்ரீமதி ராதா ராணி , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்கா துளசி தேவிக்கு சேவை செய்து வரம் பெற்ற நிகழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஶ்ரீ நாரத மகரிஷி மன்னரின் கேள்விகளால் மனமகிழ்ந்து பின்வருமாறு கூறினார்.
ஒரு முறை ராஸேஸ்வரி ஶ்ரீமதி ராதா ராணி தர்ம மறிந்தவர்களில் சிறந்தவரான சந்திரானனா எனும் தோழியிடம் . ' 'ஸ்ரீ கிருஷ்ணனை மகிழ்விப்பதற்காக பரம சௌபாக்யத்தை அதிகரிக்கச் செய்வதும் புண்ணியமளிப்பதும் மனம் விரும்பும் பொருளை அளிக்க வல்லதுமான தேவதையின் பூஜையைப் பற்றிக் கூறு.' என்று கேட்டார்.
ஸ்ரீ ராதாவின் பேச்சைக் கேட்டு தோழிகளில் சிறந்தவளான சந்திரானனா தன் இதயத்துள் ஒருகணம் யோசித்து பின் பின்வருமாறு பதில் கூறினாள்.
'ராதே! சிறந்த மற்றும் சௌபாக்யமளிப்பதும், மிகுந்த புண்ணியத்தைத் தருவதும் ஸ்ரீ கிருஷ்ணனையே அளிக்கக்கூடிய வரம் தருவதுமான விரதம் - துளசிக்கு சேவை செய்வதாகும். என் கருத்தின்படி துளசி சேவையையே நீ நியமமாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் துளசியை ஸ்பரிசிப்பதோ, தியானம் செய்வதோ , துளசிதேவியின் முன் நாம கீர்த்தனம் துதி செய்வதோ, செடியை நட்டு, நீரூற்றி துளசி தளத்தாலேயே தினமும் பூஜை செய்யப்பட்டால் அது பெரிய புண்ணியத்தை அளிப்பதாகிறது. சுபே!, தினந்தோறும் துளசியிடம் ஒன்பது வகையான பக்தி செய்பவர்கள் கோடி ஆயிரம் யுகங்கள் தனது அந்த நற்செயலின் உத்தமமான பலனை அனுபவிக்கிறார்கள்.
மனிதர்கள் நட்ட துளசி, கிளை, சிறு கிளை, விதை, மலர் மற்றும் அழகிய இலைகளோடு பூமியில் வளர்ந்து கொண்டிருக்கும்வரை அவர்களது வம்சத்தில் பிறவியெடுப்பவர்கள் அனைவரும் நட்ட மனிதனோடு கூட இரண்டாயிரம் கல்பங்கள்வரை ஸ்ரீ ஹரியின் தாமத்தில் வாழ்கிறார்கள். ராதிகே!, எல்லா இலைகளையும் மலர்களையும் பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பிப்பதால் கிடைக்கக் கூடிய பலன் எப்போதும் துளசி தளத்தை அர்ப்பணம் செய்வதனாலேயே கிடைத்துவிடுகிறது. எந்த மனிதன் துளசி தளத்தினால் ஸ்ரீ ஹரியை பூஜை செய்கிறானோ அவன் நீரின் தாமரை மலர்போல பாபத்தால், பற்றப்படாதவனாகி விடுகிறான்.
நூறு பாரம் (பல மணங்கு) தங்கமும் நானூறு பாரம் வெள்ளியையும் தானம் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன் துளசி வனத்தை வளர்ப்பதாலேயே மனிதனுக்குக் கிட்டிவிடுகிறது. ராதே!, எந்த வீட்டில் துளசித் தோட்டம் இருக்கிறதோ அதுவே தீர்த்த ரூபமாகும். அங்கு யமராஜனின் தூதர்கள் செல்வதில்லை. எல்லாப் பாவங்களையும் போக்குவதும், புண்ணியத்தைத் தருவதும், மனம் விரும்பும் பொருளை அளிக்க வல்லதுமானதுளசி வனத்தை அமைக்கும் சிறந்த மனிதன் சூரிய புத்திரனான யமனை ஒருபோதும் பார்ப்பதில்லை. நடுதல், வளர்த்தல், நீர் பாய்ச்சுதல், தரிசனம், ஸ்பரிசம் ஆகியவற்றால் துளசி மனிதனின் மனம், வாக்கு, காயத்தால் சேர்த்து வைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தையும் எரித்துப் பொசுக்கி விடுகிறது. புஷ்கரம் முதலான தீர்த்தங்கள், கங்கை முதலிய நதிகள், வாசுதேவன் முதலான தெய்வங்கள் எல்லாம் எப்போதும் துளசி தளத்தில் வாசம் செய்கின்றன.
துளசியின் மஞ்சரியைத் தலையில் வைத்துக்கொண்டு உயிரிழப்பவர்கள் நூற்றுக்கணக்கான பாவங்களைச் செய்திருந்தாலும் யமராஜன் அவர்கள் இருக்கும் பக்கம்கூட திரும்பிப் பார்ப்பதில்லை. துளசிக் கட்டையால் தேய்த்த (இழைத்த) சந்தனத்தை இட்டுக் கொள்பவர்களின் உடலை இங்கு பாவம் தொடுவதில்லை. சுபே!, எங்கெல்லாம் துளசி வனத்தின் நிழல் உள்ளதோ அங்கு பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யவேண்டும். அங்கு அளிக்கப்படும் சிரார்த்தம் சம்பந்தமான தானம் அக்ஷய தானமாகிறது. தோழி!, சதுர்முக பிரம்மாவான ஆதிதேவரும் சார்ங்கமேந்திய ஸ்ரீ ஹரியின் மகிமையைப்போல ஶ்ரீ துளசியின் மகிமையைக் கூறும் திறமுடையவரல்லர். ஆகவே ஆயர் குலக் கொழுந்தே!, நீ தினமும் துளசியை சேவித்து வா. அதனால் ஸ்ரீ கிருஷ்ணன் எப்போதும் உன் வசத்திலிருப்பார்.
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னா!, சந்திரானனா இவ்வாறு கூறியதைக் கேட்ட ராஸேஸ்வரி ஸ்ரீராதாராணி ஸ்ரீஹரியை மகிழ்விக்கும் துளசி சேவை செய்யும் விரதத்தைத் தொடங்கினார். கேதகீ வனத்தில் நூறு அடி வட்டமான பூமியில் மிக உயரமானதும் வனப்புடையதும் ஆன துளசி கோவிலை, தங்கச்சுவற்றாலும் ஓரங்களில் பத்மராக மணி பதித்ததுமான கோவிலைக் கட்டுவித்தார். அந்த அழகிய கோவில் மரகதம், வைரம் மற்றும் முத்தாலான கோட்டை (சுற்று)ச் சுவற்றால் சோபையுடன் திகழ்ந்தது. அதன் நான்குபுறமும் வலம் வருவதற்காக தெரு அமைக்கப்பட்டது. அதன்தரைசிந்தாமணி இழைக்கப்பட்டது. உயர்ந்த தோரணம் கோவிலின் வனப்பை அதிகரித்தது. தங்கத்தண்டத்துடன் கொடி பறந்து கொண்டிருந்தது. நான்குபுறமும் கட்டப்பட்ட தங்கமய விதானங்களால் அந்த துளசி கோவில் வைஜயந்தி கொடியோடு கூடிய. இந்திரபவனத்தைப் போன்று ஒளிமயமாக இருந்தது.
இத்தகைய கோவிலின் நடுப்பகுதியில் பசுமையான இலைகளோடு கூடிய துளசியை ஸ்தாபனை செய்த ராதாராணி அபிஜித் முகூர்த்தத்தில் அவருடைய சேவையைத் தொடங்கினார். கர்க முனிவரை வரவழைத்து அவர் கூறிய விதிப்படி ஸ்ரீ ராதா ராணி பக்திபாவத்தோடு ஸ்ரீ கிருஷ்ணரை மகிழ்விப்பதற்காக ஐப்பசி மாத சுக்ல பௌர்ணமியிலிருந்து சித்திரை மாத பௌர்ணமி வரை துளசி சேவை விரதத்தை அனுஷ்டித்தார்.
விரதத்தைத் தொடங்கிய அவர் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ரஸத்தால் துளசிக்குப் பாய்ச்சினார். கார்த்திகையில் பாலால், மார்கழியில் கரும்புச் சாற்றால், தையில் திராக்ஷை ரஸத்தால், மாசியில் மாம்பழ ரஸத்தால், பங்குனியில் பல வஸ்துக்கள் கலந்த கற்கண்டுச் சாற்றால், சித்திரை மாதத்தில் பஞ்சாமிருதத்தால் அதற்கு சேவை செய்தார். இவ்வாறு விரதத்தை நிறைவேற்றி ஸ்ரீராதாராணி கர்க முனிவர் கூறிய விதிப்படி வைகாசி மாதம் கிருஷ்ணபக்ஷம் பிரதமையன்று (உத்யாபன) உற்சவம் கொண்டாடினார். அவர் இரண்டு லக்ஷம் அந்தணர்களுக்கு 56 வகை உணவு வகைகளால் திருப்தி செய்து ஆடையணிகளோடு தக்ஷிணை அளித்தார். விதேஹ மன்னா!, பருமனான திவ்ய முத்துக்கள் ஒரு பாரமும், தங்கம் கோடி பாரமும் கர்காசாரியாருக்கு அளித்தார். அச்சமயம் வானில் துந்துபிகள் முழங்கின. அப்சரசுகள் நடனமாடலாயினர். தேவர்கள் அந்த துளசிக் கோவிலின் மீது திவ்ய புஷ்பங்களைப் பொழிந்தனர்.
அதேசமயம் தங்க அரியணையில் வீற்றிருந்தவாறு ஹரிப்ரியாவான துளசிதேவி , நான்கு திருக்கரங்களும் தாமரையைப் போன்ற விசாலமான கண்களும், பதினாறு வயது ஷ்யாம காந்தியுமாகத் அங்கே தோன்றினார். தலையில் தங்கமகுடம் ஒளிர்ந்தது. காதுகளில் தங்க குண்டலங்கள் பளபளத்தன. பீதாம்பரத்தால் போர்த்த இழுத்துக்கட்டப்பட்ட நாகம்போன்ற கூந்தலில் வைஜயந்தீ மாலை அணிந்து, கருடனிலிருந்து இறங்கிய துளசிதேவி, ஸ்ரீ ராதாராணியை தன் கைகளால் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு அவரது சந்திர முகத்தை முத்தமிட்டார்.
துளசி தேவி, ஶ்ரீமதி ராதாராணியிடம் : 'கலாவதியின் மகளான ராதே!, நான் உனது பக்திபாவத்தின் வசமாகி எப்போதைக்கும் மகிழ்ந்தேன். நீ உலக வழக்கின் பாவனையால் மிகச்சிறந்த இந்த விரதத்தை அனுஷ்டித்தாய். (நீ உண்மையில் பூர்ணகாம ஆவாய்) இங்கு புலன், மனம், அறிவு மற்றும் சித்தத்தால் நீ என்ன செய்தாயோ அவை அனைத்தும் வெற்றிபெறும். கணவன் எப்போதும் உனக்கு அனுகூலமாகட்டும். இதேபோன்ற புகழத்தக்க பரமசௌபாக்யம் நிலைத்திருக்கட்டும்.'கூறினார்
விருஷபானு நந்தினி ஶ்ரீமதி ராதாராணி துளசியை வணங்கி அவரிடம், 'தேவி!, கோவிந்தனுடைய திருவடித் தாமரைகளில் எனது பக்தி நிலைத்திருக்கட்டும் என்று கேட்டார்'. 'மிதிலேசா!, ஹரிப்ரியா துளசி அவ்வாறே ஆகட்டும் என்று கூறி மறைந்துவிட்டார். அப்போதிலிருந்து விருஷபானு நந்தினி ஸ்ரீ ராதா தன் நகரில் மகிழ்வோடு வசிக்கலானார். இப்புவியில் எவன் பக்தியோடு ஸ்ரீ ராதிகாவின் இந்த விசித்திரமான கதையைக் கேட்கிறானோ, அவன் மனதிலேயே மூவகை சுகத்தை அனுபவித்து முடிவில் பகவானை அடைந்து தன்யனாகிறான்'.
கர்க சம்ஹிதையின் வ்ருந்தாவன கண்டத்தின் துளசி பூஜை எனும் பதினாறாம் அத்தியாம் முடிவுற்றது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
Comments
Post a Comment