பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு, சந்நியாசம் ஏற்பதற்கு முன் அவரை சந்தித்த ஒரே கோஸ்வாமி, ஶ்ரீல லோகநாத் கோஸ்வாமி ஆவார். ஶ்ரீல லோகநாத் கோஸ்வாமி மகாபிரபுவின் நேரடி சீடர் மற்றும் நெருங்கிய சகாவாக கருதப்படுகிறார். சைதன்ய மகாபிரபுவை நவத்வீபில் சந்திக்க வருவதற்கு முன் தற்போதைய பங்களாதேஷில் உள்ள ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் உள்ள தாலகடி கிராமத்தில் வசித்தார். அதற்கு முன் காங்சடாபாடா எனும் இடத்தில் வசித்து வந்தார். லோகநாத் கோஸ்வாமியின் தந்தை பெயர் பத்மநாப சக்கரவர்த்தி, தாயார் பெயர் சீதாதேவி என்பதை 'பக்தி ரத்னாகரா' என்னும் கிரந்தத்திலிருந்து இந்த தகவலை நாம் காணலாம். லோகநாதரின் சகோதரர் பிரகல்பா பட்டாச்சாரியாரின் சந்ததியினர் 'தாலகடி"' கிராமத்தில் இன்றளவும் வசித்து வருகின்றனர். 'பூகர்ப்ப கோஸ்வாமி', லோகநாத கோஸ்வாமியின் நெருங்கிய சகா மற்றும் எப்போதும் உடன் இருப்பவர் ஆவார். 'சாதன தீபிகா' என்னும் நுலின்படி பூகர்ப கோஸ்வாமி, லோகநாதரின் தந்தைவழி மாமா ஆவார்.
ஶ்ரீல லோகநாத கோஸ்வாமி பகவான் ஶ்ரீ சைதன்ய மகா பிரபுவை சந்தித்தல்
🔅🔅🔅🔅🔅🔅
லோகநாத கோஸ்வாமி 1510ல் தனது குடும்ப வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று, நவதீப்பிற்கு சென்று, அப்போது நிமாய் பண்டிட் என்று அழைக்கப்பட்ட பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவை சந்தித்தார். பிறகு லோகநாதரிடம் சைதன்ய மகாபிரபு, "விருந்தாவனம் சென்று அங்கு வசிப்பாயாக, என்றும் விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் லீலை நிகழ்த்திய ஸ்தலங்களை அடையாளம் கண்டு வெளிபடுத்துவாயாக" என்றும் கூறினார். சைதன்ய மகாபிரபு லோகநாதரிடம் தான் விரைவில் சந்நியாசம் ஏற்க இருப்பதாகவும் அதன்பின் அவரை விருந்தாவனத்தில் சந்திப்பதாகவும் உறுதி கூறினார். பகவானின் அழகிய சுருண்ட கேசங்கள் அற்ற நிலையையும் மேலும் பகவானை பிரிந்த பக்தர்கள் அடையும் துன்பத்தையும் எண்ணிப் பார்த்த லோகநாத கோஸ்வாமி தாங்க இயலாத துயரத்தில் கண்ணீர் விட ஆரம்பித்தார். லோகநாதரின் கவலையை கண்ட பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு அவரை கட்டி அணைத்து பல்வேறு ஆன்மீக அறிவுரைகளால் அவரை சமாதானப்படுத்தினார். லோகநாத கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபுவிடம் முழுவதுமாக சரண் அடைந்தார். லோகநாதரின் மகிழ்ச்சியற்ற நிலையைக் கண்ட 'பூகர்பர்’ தானும் லோகநாதர் உடன் விருந்தாவனம் செல்ல முடிவு செய்தார். இரு யாத்திரிகர்களும் ராஜ் மஹால், டாஜ்பூர், மற்றும் புண்ணிய பல ஸ்தலங்களை தரிசித்து இறுதியில் விருந்தாவனம் சென்றடைந்தனர்.
விருந்தாவனத்தில் லோகநாத கோஸ்வாமி
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
லோகநாத் கோஸ்வாமி சைதன்ய மகாபிரபுவின் ஆணைப்படி விருந்தாவனம் சென்ற போதிலும் சைதன்ய மகாபிரபுவின் பிரிவினால் கடும் வேதனையை உணர்ந்தார். சைதன்ய மகாபிரபுவை மீண்டும் காணும் ஆவலினால் அவர் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தார். சைதன்ய மகாபிரபு சந்நியாசம் எடுத்து ஜெகன்நாத் பூரிக்கு சென்றதையும் பின்னர் அங்கிருந்து தென்னிந்தியா புனித பயணம் மேற்கொண்டிருப்பதையும் கேள்விப்பட்டு லோகநாத் கோஸ்வாமி மகாபிரபுவை சந்திப்பதற்காக தென்னிந்தியாவை நோக்கி பயணமானார். தென் பகுதியை அடைந்த லோகநாத் கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபு தென்னிந்திய புனித யாத்திரையை முடித்து ஜெகநாத் பூரிக்கு சென்று இருப்பதையும், பின்னர் அங்கிருந்து விருந்தாவனம் செல்ல இருப்பதையும், கேள்வியுற்றார். உடனடியாக விருந்தாவனம் நோக்கிப் பயணமானார் லோகநாத் கோஸ்வாமி விருந்தாவனத்தை அடையும்போது மகாபிரபு பிரயாகை சென்றுவிட்டார். ஏமாற்றம் அடைந்த லோகநாத் கோஸ்வாமி, பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவை சந்திக்கும் உறுதியுடன் மறுநாள் பிரயாகை நோக்கி பிரயாணம் செய்ய முடிவு செய்தார்.
அன்று இரவு லோகநாத் கோஸ்வாமின் கனவில் தோன்றிய சைதன்ய மகாபிரபு, லோகநாத் கோஸ்வாமி பிரயாணம் செய்வதை நிறுத்தும்படியும் இங்குமங்கும் செல்லாமல் விருந்தாவனத்தில் கிருஷ்ணனுடைய லீலை புரிந்த இடங்களை கண்டு பிடிப்பதிலும் மேலும் பஜனை செய்வதிலும் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.
சைதன்ய மகாபிரபு, லோகநாத் கோஸ்வாமியிடம் பின்வருமாறு கூறினார், '' நான் உங்களிடம் முன்பு உறுதி அளித்ததை போல் நான் விருந்தாவனத்தில் மற்றொரு வடிவில் நான் வசிக்கிறேன். இவ்வழியில் நீ என்னோடு நிரந்தரமான தொடர்பினை ஏற்படுத்துவாயாக. இந்நிகழ்வு நடந்த சிறிது காலத்திலேயே ஸ்ரீ ரூப கோஸ்வாமி, ஸ்ரீல சனாதன கோஸ்வாமி மற்றும் ஶ்ரீ கோபால் பட்ட கோஸ்வாமி மற்றும் மகாபிரபுவின் மற்ற சகாக்களை விருந்தாவனத்தில் சந்தித்தார் லோகநாத கோஸ்வாமி. அவர்களது சங்கம் லோகநாத் கோஸ்வாமிக்கு மிகப்பெரிய ஆனந்தத்தை கொடுத்தது.
ஸ்ரீல ரூப கோஸ்வாமி முதுமையால் கோவர்த்தன் நடந்து சென்று பகவான் கோபாலரை தரிசிப்பது அவருக்கு மிகவும் கடினமான செயலாக இருந்தது. பகவான் கோபால் தனது சொந்த விருப்பத்தினால் முகமதியர்கள் தாக்குதலுக்கு பயந்து மதுரா செல்வது போன்று வெளிப்படையான காரணம் காட்டிய போதும் ரூப கோஸ்வாமிக்கு தனது தனிப்பட்ட கருணையை காண்பித்த கோபால், மதுராவில் உள்ள பித்தலேஸ்வர் வீட்டில் தங்கினார். பகவான் கோபால் விக்ரகம் ஒருமாதம் அங்கு தங்கியிருந்த போது, ஸ்ரீ ரூப கோஸ்வாமி ,.ஶ்ரீலலோகநாத் கோஸ்வாமி மற்றும் மற்ற கௌடிய வைஷ்ணவர்களுடன் அங்கு வந்து கோபாலை தரிசித்தார். லோகநாத கோஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை ஆழ்ந்த பிரிவுத் துயரில் வழிபட்டார். இந்த வழிபாட்டு முறையானது அவரது துறவினை மேலும் ஆழப் படுத்தியது எப்பொழுதும் மிகச் சிறிய அளவு புகழுக்கு கூட அஞ்சியவராக இருந்தார் அந்த காரணத்தினால் லோகநாத் கோஸ்வாமி, கிருஷ்ணராஜ் கவிராஜ் கோஸ்வாமி தன்னைப்பற்றி சைதன்ய சரிதாம்ருததில் எழுதுவதை தடை செய்தார். அந்த காரணத்தினால் லோகநாத கோஸ்வாமியின் பெயரைத் தவிர வேறு எந்த சம்பவமும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடப் படவில்லை. ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, தனது 'ஹரிபக்தி விலாஸம்' மற்றும் வைஷ்ணவ தோஷணி ( ஸ்ரீமத் பாகவதத்தின் 10-வது காண்டத்திற்காண தனது விளக்க உரை) இவற்றில் மங்களாசரணத்தில் லோகநாத கோஸ்வாமிக்கு தனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறார்.
ஸ்ரீ ஸ்ரீ ராதா வினோதா
🔆🔆🔆🔆🔆🔆🔆
லோகநாத கோஸ்வாமி தொடர்ந்து விரஜ பூமி முழுவதும் பெரும் ஆனந்தத்துடன் பயணம் செய்து கிருஷ்ணர் தனது லீலைகளை நிகழ்த்திய இடங்களை கண்டறிந்தார். ஒருமுறை அவர் 'கதிரவனம்' எனும் பகுதிக்கு சென்றார். அதன்பின் சத்ரவனத்தின் 'உமரே' எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள கிஷோர் குண்டத்தை பார்வை இட்டார். அப்பகுதியின் அழகினால் மிகவும் கவரப்பட்ட லோகநாத் கோஸ்வாமி, அந்த இடத்தில் சிறிது காலம் தங்கி தனது நிர்ஜன பஜனையில் ஈடுபட்டார். சிறிது காலம் தனது பஜனையில் ஈடுபட்ட பின் லோகநாத கோஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை அவர்களது விக்ரக வடிவில் வழிபட பெரும் ஆவல் கொண்டார். பகவான் எப்பொழுதும் தனது பக்தர்களின் ஆசைகளை அறிந்தவராகவும், பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதை தனது கடமையாகவும் கருதுவார். எனவே பகவானே நேரில் வந்து லோகநாதரிடம் தனது விக்கிரகத்தை கொடுத்து விக்ரகத்தின் பெயர் 'ராதா வினோதா' என்று கூற மறைந்து போனார்.
அழகிய விக்கிரகங்களை கண்டு ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து போன லோகநாதர், பகவான் தானே நேரில் வந்ததை எண்ணி புலங்காகிதம் அடைந்தார் . தனது அழகிய விழிகளின் வழியே லோகநாதரை நோக்கியவண்ணம் இனிமையான குரலில் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ராதா வினோதர் "நான் இந்த கிஷோர் குண்டத்தின் கரையில் உள்ள உமரோ கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சேவை செய்வதற்கான உனது ஆர்வத்தை கண்டு எனது சொந்த ஆசையினால் நான் இங்கு வந்தேன். வேறு யார் என்னை இங்கு அழைத்து வர முடியும்? இப்பொழுது நான் மிகவும் பசியாக இருக்கிறேன் எனவே விரைவாக சிறிது உணவை நான் ஏற்பதற்காக தயார் செய்" என்று கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு லோகநாதரின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. விரைந்து செயல்பட்ட லோகநாதர் ஸ்ரீஸ்ரீ ராதா வினோதருக்கு உணவினைத் தயார் செய்து அர்ப்பணித்தார். ஸ்ரீஸ்ரீ ராதா வினோதர் மிக்க திருப்தியுடன் உணவினை ஏற்றனர். லோகநாதர், ஸ்ரீஸ்ரீ ராதா வினோதருக்கு மலரினாலான படுக்கையை தயார் செய்து அவர்களை படுக்கையில் அமர்த்தினார். இலைகளைக் கொண்ட கிளைகள் மூலம் விசிறி செய்தும் அவர்களுக்கு இதமாக காற்று வீசிய லோகநாதர் அளவற்ற மகிழ்ச்சியோடு அவர்களது பாதங்களைப் பிடித்து விட்டார். தனது உடல் மனம் மற்றும் ஆத்மா மூன்றினையும் ஸ்ரீஸ்ரீ ராதா வினோதருக்கு அர்ப்பணித்து சேவையில் ஈடுபட்டார் லோகநாதர்.
விரஜ பூமியில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டுடிருக்கும் தான், எங்கு தனது ஸ்ரீஸ்ரீ ராதா வினோத விக்கிரகத்தை வைப்பது என்று ஆலோசித்தார் . லோகநாதர் ஒரு பெரிய துணிப்பையை தயாரிக்க முடிவு செய்தார். அந்த பையை ஸ்ரீஸ்ரீ ராதா வினோதரின் கோவிலாக மாற்ற முடிவு செய்தார். அந்த பையை தனது கழுத்தில் அணிகலன் போன்று அணிந்துகொண்ட லோகநாதர், எப்போதும் தனது வழிபாட்டிற்குரிய ஸ்ரீஸ்ரீ ராதாவினோதரை தனது இதயத்தின் அருகிலேயே வைத்திருந்தார். லோகநாதர் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதா வினோதருக்கும் இடையில் இருந்த மிக நெருக்கமான பற்றினை கண்ட விருந்தாவனவாசிகள் இல்லம் ஒன்றை கட்டித்தர முயன்றனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டார் லோகநாதர். துறவு நிலையில் மிகவும் உறுதியாக இருந்த லோகநாதர் விக்கிரகத்தின் சேவைக்கு தேவையானதை தவிர மற்ற எதையும் ஏற்க மறுத்துவிட்டார். துணிப்பையையே தனது கோயிலாக கருதினார் லோகநாதர். தனது வாழ்நாள் முழுவதும் இந்த முறையையே லோகநாதர் கடைபிடித்தார்.
ஸ்ரீல நரோத்தம தாஸ தாகூர்
🔆🔆🔆🔆🔆🔆
சிறிது காலம் கிஷோர் குண்டத்தில் கழித்த லோகநாதர் பின்னர் விருந்தாவனம் திரும்பினார். ஶ்ரீல ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமிகள் தங்களது மண்ணுலக லீலைகளை முடித்து கிளம்பியதை கேள்வியுற்று வருத்தத்துடன் புலம்பினார். அச்சமயத்தில் ராஜ்ஷாகி - கோபால்பூர் அரசரான கிருஷ்ண நந்த தத்தா' அவர்களின் மகனான 'நரோத்தம தாஸ்' விருந்தாவனம் வந்து லோகநாதரை சந்தித்தார்.
சில வருடங்களுக்கு முன் மகாபிரபு வங்காளத்தில் பயணம் செய்தபோது நித்யானந்த பிரபுவை பூரி செல்லுமாறு கூறிய மகாபிரபு பின்னர் பெரும் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினார். இந்தச் சம்பவம் பிரேமதலி என்று தற்போது அறியப்படும் பத்மாவதி நதிக்கரையில் நடைபெற்றது. பின்னாளில் வரும் நரோதம தாசரின் நன்மைக்காக பகவான் ஶ்ரீ மகாபிரபு தனது தெய்வீக அன்பினை அவ்விடத்தில் பத்திரப் படுத்தினார். பல வருடங்களுக்குப் பின் நரோத்தம தாஸர், பிரேமதலி நதியில் ஸ்நானம் செய்த போது பிரேமையினால் மூழ்கடிக்கப்பட்டு அதன் பின் தனது உலக பந்தங்களை விட்டு விருந்தாவனம் சென்றார்.
லோகநாத கோஸ்வாமியின் ஒரே சீடர்
🔆🔆🔆🔆🔆🔆
விருந்தாவனத்தை அடைந்த நரோத்தம தாஸர் லோகநாதரை சந்தித்தார். துறவு நிலையில் மிகவும் உறுதியாக இருந்த லோகநாதர் யார் ஒருவரையும் சீடராக ஏற்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். நரோத்தம தாஸர் லோகநாதரை தவிர வேறு ஒருவரிடமிருந்து தீட்சை எடுப்பதில்லை என உறுதி எடுத்தார். நரோத்தம தாஸா பலமுறை லோகநாதரை அணுகி தீட்சை வேண்டியும் தனது முடிவில் உறுதியாய் இருந்த லோகநாதர் நரோத்தம தாஸரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தார்.
லோகநாதரின் கருணையைப் பெற, லோகநாதர் காலைக்கடன் கழிக்கும் இடத்தை தினமும் நடுஇரவில் சென்று தூய்மைப்படுத்த ஆரம்பித்தார் நரோத்தம தாஸர். சிறிது காலம் கழித்து, தினமும் அவ்விடம் தூய்மையாக இருப்பதை கவனித்த லோகநாதர் யார் இந்த செயலைச் செய்கிறார் என்பதை அறிய விரும்பினார். எனவே ஒரு நாள் அவ்விடத்தின் அருகில் செடிகொடிகளுக்கு இடையில் அமைதியாக மறைந்து நின்று, இந்த பணிவான சேவையை செய்யும் அந்த நபரை அடையாளம் காண காத்திருந்தார் லோகநாதர். அப்பொழுது நடுஇரவில் ஒருவர் அவ்விடத்தை அணுகி அதை தூய்மைப்படுத்த துவங்கியதை கண்டார். அந்த நபரை அடையாளம் கண்ட லோகநாதர், அவர் ராஜா 'கிருஷ்ண நந்த தத்தா' அவர்களின் மகனான இளவரசர் 'நரோத்தம தாஸரே என்று அறிந்து கொண்டார். மேலும்' இந்த பணிவான சேவையை தினமும் தனக்கு செய்து வருகிறார் என்று கண்டறிந்து பெரிதும் மனம் நெகிழ்ந்தார்.
அதே சமயம் தனக்கு இவ்வாறு செய்வதை மிகவும் சங்கடமாக உணர்ந்த லோகநாதர், என்ன தேவைக்காக இவ்வாறு செய்வதாக நரோத்தம் தாஸரிடம் வினவினார். உடனே லோகநாதர் பாதங்களில் விழுந்த நரோத்தம தாஸர், “எஜமானரே தங்கள் கருணையை பெறாத வரை எனது வாழ்க்கை பயனற்றது” என்று கூறி கதறி அழுதார். நரோத்தமரின் ஆழ்ந்த பணிவையும் துயரத்தையும் கண்ட லோகநாதர், நரோத்தமதாஸரை தனது ஒரே சீடராக ஏற்று, ஹரிநாம் தீட்சை வழங்கினார். இவ்வாறு தனது வழிபாட்டிற்குரியவரின் கருணையை, சுயநலமற்ற நேர்மையான சேவையின் மூலம் எவ்வாறு பெறலாம் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த ஒரு உதாரணம் ஆகும்.
லோகநாத கோஸ்வாமி துறவு நெறியை கடுமையாக கடைபிடிப்பவர். நரோத்தம தாஸரை, ஒரு கற்றறிந்த உயர்ந்த ஆனால் அரச குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமல்லாது ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் சங்கீர்த்தன இயக்கத்தை பரப்புவதற்கான உற்சாகமும் சுவையும் உடையவராக லோகநாதர் கண்டார். அதன் விளைவாக நரோத்தம தாஸதாகூரை அவரது சொந்த இடத்திற்கு சென்று கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்யும்படி லோகநாத கோஸ்வாமி கட்டளையிட்டார்.
லோகநாதர் எப்பொழுதும் மிக கவனத்துடன் விருந்தாவன கோஸ்வாமிகளின் சங்கத்திலேயே இருந்தார். சைதன்ய மகாபிரபுவிற்கு மிகவும் பிரியமானவரான லோகநாத கோஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் செயல்களை முழுவதுமாக விவரிப்பது மிகவும் கடினம். ஸ்ரீசைதன்ய மஹாபிரபு தொடங்கி அவரை பின்பற்றுபவர்களான ஸ்ரீ ரூப மற்றும் ஸ்ரீ சனாதன கோஸ்வாமிகளின் பிரிவினை லோகநாதரால் தாங்க முடியவில்லை. அதற்குப்பின் லோகநாதரின் வாழ்வின் ஒரே நோக்கம் சைதன்ய மகாபிரபு ஆசையை நிறைவேற்றுவதே.
ஸ்ரீல லோகநாத கோஸ்வாமி தனது முதிர்ந்த வயதில் கையரா (Khayara) என்ற கிராமத்தில் பஜனையில் ஈடுபட்டிருந்தபோது, இவ்வுலகை நீத்து பகவானின் நித்திய லீலைகளில் பங்கேற்க சென்றார். அந்த இடத்தில் உள்ள குண்டம் ஸ்ரீ யுகல குண்டம் (Shri Yugala Kunda) என்று அழைக்கப்படுகிறது.
பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா கோகுலநந்தன் கோவிலில் ஸ்ரீல லோகநாத கோஸ்வாமியின், சமாதியை இன்றும் நாம் காணலாம் அவருக்குப் பிரியமான ‘ஸ்ரீ ராதா வினோதரின்' விக்ரகம் அந்தக் கோயிலிலேயே வழிபடப் பட்டு வருகிறது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment