ஸ்ரீல ரூபகோஸ்வாமி கண்ட ஊஞ்சல் லீலை

 


ஸ்ரீல ரூபகோஸ்வாமி கண்ட ஊஞ்சல் லீலை


மொழிபெயர்ப்பு :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் அற்புதமான ஊஞ்சல் உத்ஸவ லீலைகளை ஸ்ரீல ரூபகோஸ்வாமி ராதாகுண்டத்திலுள்ள இம்லிதலாவில் அனுபவித்து மகிழ்ந்தார்.

 

ராதாகுண்டத்திலுள்ள இம்லிதலா - கோவர்தனத்தில் உள்ள ஒரு பெரிய புளியமரம், அங்குதான் ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் அற்புதமான ஜூலன் லீலை (ஊஞ்சல் உத்ஸவம்) நடைபெற்றதாக ஸ்ரீல ரூபகோஸ்வாமியால் கண்டறியப்பட்டது. 'இம்லி' என்ற வார்த்தைக்கு புளி என்றும் 'தலா' என்றால் இடம் என்றும் பொருள்படும். ஒரு முறை ஸ்ரீல ரூபகோஸ்வாமி ராதாகுண்டத்தில் இருந்த பொழுது  அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பகவானின் புனித நாமங்களை ஆழ்ந்து உச்சரிப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது மரத்தின் கிளையொன்றில் அழகான ஒரு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அவ்வூஞ்சலானது இரண்டு பேர் முகத்திற்கு முகம் பார்த்து அமர்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. திடீரென்று அங்கு பகவான் கிருஷ்ணர் ஸ்ரீமதி ராதாராணியுடனும் மற்ற கோபியர்களுடனும் அங்கு வருவதைக் கண்டார். உடனடியாக பகவான் கிருஷ்ணர் ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டு ஸ்ரீமதி ராதாராணியையும் தன்னுடன் ஊஞ்சலில் அமருமாறு அழைத்தார். முதலில் ஸ்ரீமதி ராதாராணி மறுத்துவிட்டார். ஏனென்றால் சில நேரங்களில் கிருஷ்ணர் ஊஞ்சலாட்டத்தின் போது ஊஞ்சலை மிக உயரத்திற்கு கொண்டு போவார். இதனால் ராதாராணி மிகவும் பயப்படுவார். எனவே அவர் ஊஞ்சலில் ஏற மறுத்தார். இப்போது கிருஷ்ணர் தான் அவ்வாறு உயர்த்தமாட்டேன் என்று உறுதியளித்தார். மேலும் கோபியர்கள் கூறினார்கள், 'நாங்களே ஊஞ்சலை ஆட்டுவோம் என்றும் அதனை உயரத்திற்குக் கொண்டு செல்ல மாட்டோமென்றும் கூறினார்கள். இறுதியில் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ராதாராணி ஊஞ்சலில் கிருஷ்ணருடன் அவரது முகத்தைப் பார்க்கும்படியாக அமர்ந்தார்.

 

கோபியர்கள் ஊஞ்சலை மெதுவாக முன்னோக்கியும் பின்னோக்கியும் தள்ளத் துவங்கினர். மிகவும் மகிழ்ச்சியுடனும் நிதானத்துடனும் அமைதியான நிலையில் ஊஞ்சல் உத்ஸவத்தை  கோபியர்களும், ஸ்ரீமதி ராதாராணியும் அனுபவித்துக் கொண்டிருந்ததைக் கண்ட கிருஷ்ணர் மெதுமெதுவாக ஊஞ்சலை உயர்த்தும்படியாக குறும்புத்தனத்துடன் தனது காலை அங்கும் இங்குமாக நகர்த்தத் துவங்கினார். மிகக் குறுகிய நேரத்திற்குள், இங்கு என்ன நடக்கிறது என்பதை கோபியர்கள் உணரும் முன்னரே ஊஞ்சல் வெகு உயரத்திற்குச் சென்றது. அதை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை. ஊஞ்சல் மிக அதிக உயரத்திற்குச் சென்றதால் ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரிடம் ஊஞ்சலை நிறுத்தும் படி கெஞ்சினார்கள். ஆனால் கிருஷ்ணர் இனிமையாக சிரித்தபடியே ஊஞ்சலை இன்னும் உயர்த்தினார். திடீரென்று ஊஞ்சல் மிக உயரத்தை எட்டியது. அது மரக்கிளையின்  மேலே ஒரு முழு வட்டத்திற்குச் செல்லும் போல் இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீமதி ராதாராணி உரத்த குரலில் அலறியபடி தன் கரங்களால் தனது அன்பிற்குரிய உயிரான பகவான் கிருஷ்ணரின் கழுத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது ஊஞ்சல் கிளையின் மேல் ஒரு வட்டம் சென்று மீண்டும் கீழே வந்தது. கிளைகளின் மேல் வலது புறமாக ஊஞ்சல் செல்வதைக் கண்ட கோபியர்கள் வியந்து போனார்கள். ஸ்ரீமதிராதாராணி கிருஷ்ணரின் கழுத்தை தனது கரத்தால் பற்றியிருந்ததைப் பார்ப்பதற்கு தன்னுடைய வாழ்க்கை அவரைச் சார்ந்தது என்பது போல் இருந்தது. முடிவில் ஊஞ்சல் மெதுவாக இறங்கிய பொழுதும் ஸ்ரீமதி ராதாராணி இன்னும் தனது கரத்தால் கிருஷ்ணரின் கழுத்தை ஒரு போதும் விடப்போவதில்லை என்பது போல் உறுதியாகத் தழுவியபடியே இருந்தார். இதைக் கண்ட கோபியர்கள் மிகுதியான மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் "தெய்வீகக் காதலர்களான" ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கிருஷ்ணரின் அற்புதமான மற்றும் அசாதரணமான லீலைகளைப் புகழ்ந்து, சிரித்தபடியே கைதட்ட ஆரம்பித்தனர்.

 

அதே நேரம் இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் உடலிலும் மனதிலும் பரவசத்தின் அலைகள் பாய்ந்தது. இதனால் திடீரென தன் சுய நினைவை இழந்து தரையில் விழுந்தார். இறுதியாக அவருக்கு நினைவு வந்த போது பகவான் கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாராணி மற்றும் இதர கோபியர்களுடன் அங்கிருந்து சென்று விட்டதைக் கண்டார். ஆனால் அந்த ஊஞ்சல் இன்னும் அந்த மரக்கிளையில் தொங்கியபடியே இருந்தது. மேலும் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் ஊஞ்சல் கிளையின் மேல் மற்றும் கீழ் முழு வட்டமாகச் சென்றதன் விளைவாக அந்த கிளையானது முறுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இந்த முறுக்கப்பட்ட புளிய மரம் மிகவும் புகழ் வாய்ந்தது. ராதாகுண்டத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் இம்லிதலத்தின் இம்மரத்தின் தரிசனத்திற்காகச் செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக 1970- களின் நடுவில் இம்மரம் அழிந்து தனது ஒரு தண்டு பகுதியை மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றது. அங்கு வரும் பக்தர்கள் இம்மரத்திற்கு தங்களது நமஸ்காரங்களை செலுத்துவதற்காகவும் ஸ்ரீல ரூபகோஸ்வாமி அவர்கள்  கண்ணுற்ற அழகான மற்றும் அற்புதமான ஊஞ்சல் லீலையை நினைவுகொள்வதற்காகவும் வருகை புரிகின்றனர்.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more