தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும்

 




தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும்

( ஆதாரம் - கர்க சம்ஹிதை ) 


🔆🔆🔆🔆🔆


முன்பு ஒரு சமயம் மிதிலாபுரியில் பஹுலாஸ்வன் (ஜனகர்) என்னும் பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு வீர மன்னன் அரசாண்டு வந்தான். அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பரம பக்தரும், அமைதியான மனதுடையவரும் ஆணவமற்றவரும் ஆவார். ஒருமுறை நாரத முனிவர் ஆகாய வழியே வந்து இவரது வீட்டில் இறங்கினார். அவர் வந்ததைக் கண்ட மன்னன் இருக்கையில் அமரச் செய்து, நன்கு பூஜை செய்த பின் இரு கைகளையும் கூப்பி அவரிடம் கேட்டார். முனிவரே, சாதுக்களைக் காப்பதற்காக பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் எத்தனை வகையானவை? இதை எனக்கு கூறியருள வேண்டும்.


ஸ்ரீ நாரதர் கூறினார்: வியாசர் முதலான முனிவர்கள், அம்சாம்சம், அம்சம், கலை, பூரணம், பரிபூரணதமம் என்னும் ஆறுவகையான அவதாரங்களைக் கூறியுள்ளனர். இவற்றில் ஆறாவது பரிபூரணதமம் அவதாரம் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார்.


பகவானுடைய அவதாரத்தை, சிறந்த வித்வான்கள் சாக்ஷாத் பரிபூர்ணதமம் என்று கூறுகிறார்கள். எந்த அவதாரத்தில் பூரணத்தின் முழு லக்ஷணங்களும் தென்படுகிறதோ, மனிதன் தன் தனித்தனி பாவனைக்கேற்ப தனக்கு மிகவும் பிரியமான உருவத்தில் காண்கிறானோ அதுவே சாக்ஷாத் பரிபூர்ணதம் அவதாரமாகும். (இந்த எல்லா லக்ஷணங்களும் நிறைந்த) ஸ்வயம் பரிபூர்ணதமபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான். மற்றொன்று கிடையாது. ஏனெனில் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு காரியத்தை உத்தேசித்து அவதாரம் செய்து பல கோடிக்கணக்கான காரியங்களை முடித்திருக்கிறார். முழுமையான பழமையான புருஷோத்தமனும் பராத்பர புருஷனான பரமேஸ்வரனும் ஆன அந்த ஸ்வயம் சதானந்த மய கருணை நிதி, நற்குணங்களின் உருவமான ஸ்ரீகிருஷ்ணரை  நான் சரணடைகிறேன்.


இதைக் கேட்ட மன்னன் மகிழ்ச்சியுற்றார். புளகாங்கிதமுற்றார். அன்பில்திளைத்தார். கண்ணீரைதுடைத்துக்கொண்டு நாரதரிடம் பேசினார்.


பஹூலாஸ்வ மன்னர் கேட்டார்: மஹரிஷியே சாக்ஷாத் பரிபூரணதம பகவானான ஸ்ரீ கிருஷ்ண சந்திரன் எங்கும் நிறைந்த சின்மயமான கோலோக தாமத்திலிருந்து இறங்கி பரத கண்டத்திற்குள் அடங்கிய துவாரகாபுரியில் இருந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அழகிய பெரியதான (விசாலமான அல்லது ப்ரம்ம ஸ்வரூபம்) கோலோகதாமத்தை வர்ணித்துக் கூறுங்கள். மஹாமுனியே, அத்துடன் அவருடைய மதிப்பிட முடியாத செயல்களையும் கூறியருள வேண்டும். மனிதன் நூறு பிறவி உத்தமமான தவம் செய்தும், தீர்த்த யாத்திரை செய்தும் அதற்குப் பலனாக சத்சங்கத்திற்கான நல்வாய்ப்பைப் பெறுகிறான். பிறகே ஸ்ரீ கிருஷ்ண சந்திரரை விரைவில் பெற்றுவிடுகிறான். எப்போழுது நான் பக்தி ரஸத்தினால் நனைந்த உள்ளத்தனாக ஆகி, மனதால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாஸனுக்கும் தாஸானு தாஸனாவேன்? எல்லா தேவர்களுக்குமே கிடைத்தற்கரியவரான அந்த பரப்ரம்ம பரமாத்மா, ஆதிதேவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என் கண்னெதிரே எப்போது தோன்றுவார்?


ஸ்ரீ நாரதர் கூறினார்: சிறந்த மன்னா, நீ தன்யனானாய். பகவான் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனுக்குப் பிடித்தமானவன், அந்த ஹரியின் பரமப்ரிய பக்தன். உனக்கு தரிசனம் அளிப்பதற்காகவே பக்தவத்ஸலனான அந்த பகவான் இங்கு அவசியம் எழுந்தருளுவார். ப்ரம்மண்ய தேவனான பகவான் ஜனார்தனர் துவாரிகாவில் இருந்தாலும் கூட உன்னையும் அந்தணரான ச்ருததேவரையும் நினைவு கூர்ந்தபடியுள்ளார்.ஆஹா, இவ்வுலகில்  சாதுக்களின் சௌபாக்யம்தான் எத்தகையது?



தேவர்கள் கோலோக தாமத்தை தரிசித்தல்


🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: நாவு பெற்றும் கூட புகழத்தக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப் பாடாத துர்புத்தி உடைய மனிதன், மோக்ஷத்தின் (வழி) படியைப் பெற்றும் அதில் ஏற முயற்சிக்காதவனாவான். மன்னா, இந்த வாராஹ கல்பத்தில் புவியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடி படிந்து, இங்கு அவர் புரிந்த லீலை எல்லாம் நான் உனக்குக் கூறுகிறேன் கேள். மிகவும் பழைய காலத்தில் நடந்த விஷயம் - தானவ, தைத்ய, ஆசுர சுபாவ மனிதர்கள் மற்றும் துஷ்ட மன்னர்களின் பெருஞ்சுமையால் மிகவும் துயரமடைந்த பூமி, பசுவின் உருவம் தரித்து, அனாதையைப்போல அழுது புலம்பியபடி தன் உள்ளத் துயரை நிவேதனம் செய்துகொள்ள பிரம்ம தேவரை சரணடைந்தார். அச்சமயம் பூமிதேவி, உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பூமிதேவியின் துயரக் கதையைக் கேட்ட பிரம்மா அவளுக்கு ஆறுதளித்து, அக்கணமே தேவரனைவருடனும், சிவபிரானை அழைத்துக் கொண்டு பகவான் நாராயணனுடைய வைகுண்ட தாமத்திற்குச் சென்றார். அங்கு சென்ற பிரம்மா பகவான் விஷ்ணுவை வணங்கி தன் அபிப்பிராயத்தை சமர்ப்பித்தார். லக்ஷ்மிநாதனான விஷ்ணு, துயருற்றிருந்த தேவர்களிடமும் பிரம்மாவிடமும் கூறினார். 


பிரம்மதேவரே, ஸ்வயம் பகவானான ஸ்ரீ கிருஷ்ணரே எண்ணற்ற பிரம்மாண்டங்களுக்கு சுவாமியும், பரமேஸ்வரனும், அகண்ட ஸ்வரூபனும், தேவர்களுக்கு மேலானவரும் ஆவார். அவரது லீலைகள் எண்ணற்றவை, முடிவற்றவை, சொல்லுக் கெட்டாதவையாகும். அவரது அருள் இல்லாமல் இந்தக்காரியம் ஒருநாளும் வெற்றிபெற முடியாது.ஆகவே நீங்கள் அழிவற்றதும் மிக ஒளி மிக்கதுமான அவரது தாமத்திற்கு விரைந்து செல்லுங்கள்.


ஸ்ரீ பிரம்மதேவர் கூறினார்: பிரபோ தங்களைத் தவிர வேறொருவர் பரிபூரணதம தத்வமானவர் என்பதை நான் அறியேன். உங்களைவிடச் சிறந்த பரமேஸ்வரர், வேறொருவர் உண்டெனில் அவரது உலகை எனக்குக் காட்டுங்கள்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: பிரம்மதேவர் இவ்வாறு கூறியதும் பரிபூரணனான விஷ்ணு பகவான் எல்லா தேவர்களோடும் பிரம்மதேவருக்கும் பிரம்மாண்டத்தின் உச்சியில் திகழ்ந்த கோலோக தாமத்தின் வழியைக் காண்பித்தார். வாமன பகவானின் இடது காலின் கட்டை விரலால் பிரம்மாண்டத்தின் தலைப்பகுதியில் கிழிந்துவிட்டதால் உண்டான துவாரம், ப்ரம்மத்ரவத்தால் (நித்ய அக்ஷய நீர்) நிறைந்திருந்தது. தேவரனைவரும் அதே வழியாக அதற்கென்றிருந்த நீர் ஊர்தி மூலம் வெளிவந்தனர். அங்கு பிரம்மாண்டத்திற்கு மேல் சென்ற அவ்வனைவரும் கீழே அந்த பிரம்மாண்டத்தை சுரைக்குடுக்கையைப் போல பார்த்தனர். இதைத் தவிர இன்னும் பல பிரம்மாண்டங்கள் அதே நீரில் இந்த்ராயண பழத்தைப் போல இங்குமங்கும் அலைகளுல் புரண்டு கொண்டிருந்தன. இதைக்கண்ட தேவரனைவரும் வியந்தனர்.


அங்கிருந்து நூற்றுக்கணக்கான யோசனை உயரத்தில் நான்குபுறமும் திவ்ய சுற்றுச்சுவர் சோபையுடன் விளங்கும் எட்டு நகரங்கள் இருந்தன. பெரும் ரத்தின மயமான மரங்களால் அந்த நகரங்களின் மனம்கவர் தன்மை அதிகரித்தது. அங்கேயே மேலே தேவர்கள் அலைகள் மோதிக்கொண்டிருக்கும் விரஜா நதியின் அழகிய கரையைக் கண்டனர். அந்த கரைப்பகுதி வெண்மையான பட்டுத் துணியைப்போல வெள்ளை வெளேரென்று காட்சி அளித்தது. திவ்ய மணிமயமான படிகளினால் அது மிகவும் ஒளிமயமாகத் திகழ்ந்தது. கரையின் அழகைப் பார்த்துக்கொண்டு முன்னேறிய தேவர்கள், அனந்தகோடி சூரியனின் ஒளிக் குவியலாகத் தோன்றிய சிறந்த நகரத்தை அடைந்தனர். அதைக்கண்ட தேவர்களின் கண்கள் கூசின. அவர்கள் அந்த ஒளியால் தாக்கப்பட்டு அங்கேயே நின்றுவிட்டனர். பகவான் விஷ்ணுவின் ஆணைப்படி அந்த ஒளியை வணங்கிய பிரம்மா அதை தியானம் செய்யலானார். அதே ஒளியினுள்ளே அவர் பிரம்ம சாந்திமயமான உருவமுள்ள தாமம் ஒன்றைக் கண்டார். அதில் மிக அற்புதமான தாமரைத் தண்டைப்போன்ற வெண்ணிற ஆயிரம் முகம்கொண்ட சேஷ நாகத்தை தரிசித்து (தேவரனைவரும்) அவரை வணங்கினார்கள்.


மன்னா, அந்த சேஷ நாகத்தின் மடியில் மிக ஒளிமயமான  கோலோகதாம தரிசனமுண்டாயிற்று. அங்கு தாமஅபிமானியான தேவர்களின் தலைவன் மற்றும் பிரதான காலனுடைய எந்த செல்வாக்கும் செல்லுபடியாகாது. அங்கு மாயைகூடதன் பிரபாவத்தை வெளிப்படுத்த முடியாது. மனம், சித்தம், அறிவு, அகங்காரம், பதினாறு விகாரங்கள் மற்றும் மஹத் தத்துவம் கூட அங்கு பிரவேசிக்க முடியாது என்றால் மூவகை குணங்களைப் பற்றிக்கூற என்ன இருக்கிறது? அங்கு மன்மதனைப் போன்ற மனங்கவரும் ரூப லாவண்ய சாலினி, ஸ்யாம சுந்தர விகரஹாவான ஸ்ரீகிருஷ்ண பார்ஷதா (எப்போதும் அருகிலிருப்பவள்) வாயிற்காவல் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். தேவர்கள் உள்ளே செல்லத் தயாராவதைக் கண்டு தடுத்தார்கள்.


அப்போது தேவர்கள் கூறினர்: நாங்கள் அனைவரும் பிரம்மா, விஷ்ணு, சங்கரன் என்னும் பெயருடைய லோக பாலகர்களும் இந்திரன் முதலான தேவர்களும் ஆவோம். பகவான், ஸ்ரீகிருஷ்ணருடைய தரிசனத்திற்காக இங்கு வந்துள்ளோம்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: தேவர்களின் பேச்சைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணனுடைய வாயிற் காவலரான அந்தத் தோழிகள் அந்தப்புரத்தினுள் சென்று தேவர்களின் சொல்லைக் கூறினர். அப்போது சதசந்திரானனா என்ற பெயருடைய ஒரு தோழி மஞ்சளாடை உடுத்து, கையில் பிரம்புத் தடியை வைத்திருந்தவள் வெளியே வந்து அவர்களின் விருப்பத்தைக் கேட்டாள்.


சதசந்திரானனா கூறினாள்: இங்கு வந்துள்ள தேவராகிய நீங்கள் அனைவரும் எந்த பிரம்மாண்டத்தைச் சேர்ந்தவர்களென்பதை விரைவில் கூறுங்கள். அப்போதுதான் நான் இதை ஸ்ரீகிருஷ்ணரிடம் தெரிவிக்க முடியும்.


தேவர்கள் கூறினர்: ஆஹா, இது மிக வியப்பிற்குரிய விஷயம். பல்வேறு பிரம்மாண்டங்கள் கூட உள்ளனவா? நாங்கள் அவற்றை ஒருபோதும் கண்டதில்லை. சுபே, நாங்கள் ஒரு பிரம்மாண்டம் தானுள்ளது, இதைத்தவிர வேறு கிடையாது என்றுதான் அறிவோம்.


சதசந்திரானனா கூறினாள்: பிரம்ம தேவா, இங்கு விரஜா நதியில் கோடிக்கணக்கான பிரம்மாண்டங்கள் இங்குமங்கும் உருண்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் உங்களைப் போலவே தனித்தனி தேவர்கள் வசிக்கின்றனர். அடடா, நீங்கள் உங்கள் பெயரையும் ஊரையும் கூட அறியாதவர்களா? இங்கு ஒருபோதும் வந்ததில்லை. தன் சிறிதளவு அறிவிலேயே மகிழ்ந்து பூரித்துவிட்டீர்கள் என்று தோன்றுகிறது. ஒருபோதும் வீட்டைவிட்டு வெளியே கிளம்பவேயில்லை என்று தோன்றுகிறது. அத்திப்பழத்தில் வாழும் புழுக்கள் தான் இருக்கும் பழத்தைத் தவிர வேறெதையும் அறியாததைப்போல, உங்களைப் போன்ற சாதாரண ஜனங்கள் தான் தோன்றியதையே ஒரே பிரம்மாண்டம் என்று கருதுகிறீர்கள்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: மன்னா, இவ்விதம் கேலிக்குப் பாத்திரமான தேவர்கள் பேசாமல் நின்றனர். ஏதும் பேச முடியவில்லை. அவர்கள் வியப்போடு நிற்பதைக்கண்ட விஷ்ணு பகவான் கூறினார்.


ஸ்ரீ விஷ்ணு கூறினார்: பகவான் ப்ருஷ்னி கர்பனுடைய பழமையான அவதாரம் உண்டானதும் த்ரிவிக்ரம (விராட் ரூபம் தரித்த வாமனன்)னுடைய நகத்தால் துவாரம் ஆகிவிட்டதுமான பிரம்மாண்டத்தில் தான் நாங்கள் வாசம் செய்கிறோம்.



ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: விஷ்ணு பகவானின் இந்தப் பேச்சைக் கேட்ட சதசந்திரானனா அவரை வெகுவாகப் புகழ்ந்து உள்ளே சென்றுவிட்டாள். பிறகு விரைவில் திரும்பி அனைவரையும் அந்தப் புறத்திற்குள் வருமாறு ஆணை அளித்து திரும்பி சென்றுவிட்டாள். பிறகு தேவரனைவரும் மிகவும் அழகியதான கோலோக தாமத்தை தரிசித்தனர். அங்கு கோவர்தனம் என்னும் மலையரசன் சோபையுடன் இருந்தார். கிரிராஜனின் அந்தப் பிரதேசம் அச்சமயம் வஸந்த உற்சவம் கொண்டாடும் கோபியர் மற்றும் பசுக்கூட்டத்தால் சூழப்பட்டிருந்தது. கல்பக மரங்கள் மற்றும் கல்பக கொடிகளால் பொலிவுடன் விளங்கிற்று. ராஸ மண்டலம் அதை அலங்கரித்துக் கொண்டிருந்தது.


அங்கு ச்யாம வண்ண உத்தம யமுனாநதி தன்னிச்சையாக பெருகிக் கொண்டிருந்தது. கரையில் அமைந்திருந்த கோடிக்கணக்கான மாளிகைகள் அதன் அழகை அதிகமாக்கின. அந்த நதியில் இறங்குவதற்கு வைடூர்யமணிகளால் ஆன அழகிய படிக்கட்டுகள் அமைந்திருந்தன. அங்கு தெய்வீக மரங்களும், கொடிகளும் நிறைந்த பிருந்தாவனம் மிகப் பொலிவுடன் திகழ்ந்தது. பலவகையான விசித்திரமான பறவைகள், வண்டு மற்றும் மூங்கில்கள் காரணமாக அங்கிருந்த அழகு அதிகமாகிக் கொண்டிருந்தது. அங்கு ஆயிரம் இதழ்த் தாமரைகளின் நறுமண மகரந்தத்தை நாற்புறமும் பரப்பியபடி குளிர்ந்த காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது. பிருந்தாவனத்தில் நடுப்பகுதியில் கொடிகளால் ஆன மண்டபம் (நிகுஞ்ஜம்) உள்ளது. சுற்றி  சுவர்களுடன் அகழிகளும் அதை அழகுறச் செய்து கொண்டிருந்தன. அதன் மைய்ய பகுதி செவ்வண்ண அக்ஷயவடத்தால் அலங்காரமாக விளங்கியது. பத்மராகம் முதலான ஏழு வகையான மணிகளால் அமைந்த சுவர்களால் மைதானத்தின் தரையும் மிக அழகாகத் தோன்றின.


கோடிக்கணக்கான சந்திர மண்டலங்களின் அழகை தரிசிக்கும் விதானங்கள் அதை அழகுறச் செய்ததுடன் பளபளக்கும் உருண்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. வீசிப் பறக்கும் திவ்ய கொடிகளும் மலர்ந்த பூக்களும் கோவில் மற்றும் வழியின் அழகைப் பன்மடங்காக்கின. அங்கு வண்டுகளின் ரீங்காரம் இசையைப் படைத்துக் கொண்டிருந்தது. போதையுள்ள மயில் மற்றும் குயில்களின் ஒலி எப்போதும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. அங்கு இளஞ்சூரியனைப் போன்ற ஒளியுள்ள சிவப்பு- மஞ்சள் குண்டலங்களை அணியும் பெண்கள் நூற்றுக்கணக்கான சந்திரனைப் போல வெண்ணிறத்தில் ஒளிருகின்றனர். தன்னிச்சையாக உலவிவரும் அந்த அழகிகள் ரத்னமயமான சுவர்களில் மனதைக் கவரும் தமது முகத்தைப் பார்த்தவாறு ரத்னம் பதித்த முற்றங்களில் ஓடித் திரிகின்றனர். அவர்களது கழுத்தில் ஹாரமும் கைகளில் கேயூரமும் அழகு செய்கின்றன. சலங்கை மற்றும் ஒட்டியாணத்தின் மதுர ஜங்காரம் அங்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.


அந்த இடைப்பெண்கள் தலையில் சூடாமணி தரித்துள்ளனர். அங்கு ஒவ்வொரு வாயிலும் கோடிக்கணக்கான பசுக்கள் காட்சியளிக்கின்றன. அவை திவ்ய அணிகளால் அலங்கரிக்கப்பட்டு வெண்மையான மலைபோலத் தென்படுகின்றன. எல்லா கறவை மாடுகளும் புதியவை. நல்ல சீலமும், நற்குணமும் கொண்டவை. எல்லாம் கன்றோடு கூடியதும் மஞ்சள் வால் உடையதுமாகும். இவ்வளவு அழகிய உருவமுள்ள பசுக்கள் அங்கு எல்லா இடங்களிலும் சஞ்சரிக்கின்றன. அவற்றின் மணிகளிலிருந்தும் சிலம்புகளிலிருந்தும் இனிய ஒலி தோன்றிக் கொண்டிருக்கிறது.


மணிகள் ஒலிக்கும் அப்பசுக்களின் கொம்புகள் தங்கத்தால் மூடப்பட்டுள்ளன. அவை தங்கத்துக்கு நிகரான மாலைகளை அணிகின்றன. அவற்றின் அங்கங்களிலிருந்து ஒளி சிதறிக் கொண்டேயிருக்கிறது. எல்லாப் பசுக்களும் வெவ்வேறு வண்ணங்கள், சிலது வெள்ளை, சில கறுப்பு, சில மஞ்சள், சில சிவப்பு, சில பச்சை, சில தாமிர வண்ணம், சில பல நிறங்கள் கலந்தவை. சிலவற்றின் வண்ணம் புகை போன்றுள்ளது. பல குயிலைப் போன்ற நிறமுடையவை. பால் தருவதில் கடலுக்கு ஒப்பான அந்தப் பசுக்களின் உடலில் யுவதிகளின் கை அடையாளம் - அதாவது யுவதிகளின் கைகளின் வண்ண அடையாளம் உள்ளது. மானைப்போல துள்ளும் கன்றுகளால் அவற்றின் அழகு அதிகரித்துள்ளது. பசுக் கூட்டங்களில் பெரிய சரீரமுள்ள காளைகளும் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு நீண்ட கழுத்தும் பெரிய கொம்புகளும் உள்ளன. அந்தக் காளைகள் தர்மத்தில் சிறந்ததென்று கூறப்படுகின்றன. பசுக்களைக் காக்கும் மேய்ப்பர்களும் பலர் உள்ளனர். அவருள் சிலர் கையில் பிரம்புத்தடியை வைத்துள்ளனர். பலரது கையில் அழகிய குழல் திகழ்கிறது. அவர்கள் அனைவரின் உடல் வண்ணம் சியாமளம். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணசந்திரனின் லீலைகளை, காமதேவன் கேட்டாலும் மோகிக்கும்படி இனிய குரலில் பாடுகிறார்கள்.


இந்த தெய்வீக சொந்த கொடிமண்டபத்தை (திவ்ய நிஜ நிகுஞ்ச) தேவரனைவரும் வணங்கி உள்ளே சென்றார்கள். அங்கு ஆயிரம் இதழ்களுடைய ஒரு மிகப்பெரிய தாமரை காணப்பட்டது. ஒளிக் குவியலோ என்ற சோபையோடிருந்தது. அதன்மீது 116  இதழுடைய ஒரு தாமரையும் அதன்மீது எட்டு இதழுடைய தாமரையும் இருக்கிறது. அதன்மீது பளபளக்கும் ஒரு சிம்மாசனம் இருந்தது. மூன்று படிகளுடனிருந்த அந்தச் சிறந்த திவ்ய சிம்மாசனம் (அரியணை) கௌஸ்துப மணிகள் பதிக்கப்பட்டு அதி சோபையுடன் திகழ்ந்தது. அதன்மீதுதான் ஸ்ரீகிருஷ்ண சந்திரன் ஸ்ரீராதிகாதேவியுடன் எழுந்தருளியுள்ளார். இந்தக் காட்சி அனைத்து தேவருக்கும் கிட்டியது. அந்த யுகளரூப பகவான், மோஹினி முதலான எட்டு திவ்ய தோழியரோடு சேர்ந்து ஸ்ரீதாமா முதலான எட்டு கோபபாலர் மூலம் தொண்டு செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்.


அவர்களுக்கு அன்னத்தைப் போன்ற வெண்ணிற விசிறி வீசப்படுகின்றன. வைரப் பிடியுள்ள சாமரங்கள் போடப்படுகின்றன. பகவானுடைய சேவையில், கோடி சந்திரர்களின் ஒளியோடு போட்டியிடும் கோடிக்கணக்கான குடைகள் இருக்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணனின் இடதுபுறம் திகழ்ந்த ராதிகாவோடு அவரது வலதுபுஜம் சோபையுடனுள்ளது. பகவான் சுதந்திரமாகத் தன் வலது காலை கோணலாக வைத்துள்ளார். அவர் கையில் குழலைத் தரித்துள்ளார். அவர் மனங்கவரும் புன்முறுவல் நிறைந்த திருமுகத்தாலும் புருவ விலாஸத்தினாலும் பல காமதேவர்களை மோகிக்கச் செய்துள்ளார். ஸ்ரீஹரி மேகம் போன்ற ச்யாமள ஒளி (நீல ஒளி)யுடையவர். தாமரை இதழைப் போன்ற பெரிய விசாலமானவை அவருடைய கண்கள். முட்டி வரை நீண்ட கைகளுடைய அந்தப் பிரபு மஞ்சளாடை அணிந்துள்ளார். கழுத்தில் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கும் போதையுள்ள வண்டுகள் ரீங்காரமிடும் வனமாலை அணிந்துள்ளார். கால்களின் சலங்கையிலும் கை கங்கணங்களிலும் அழகு சிதறிக் கொண்டிருக்கிறது. மிக அழகிய முறுவல் மனதை மோகிக்கச் செய்து கொண்டிருக்கிறது. ஸ்ரீ வத்ஸ சின்னமும், விலை உயர்ந்த ரத்தினங்களாலான கிரீடமும் தோளணியும் ஹாரமும் தத்தமிடத்தில் பொருந்தி அழகுக்கு அழகு செய்கின்றன. பகவான் ஸ்ரீகிருஷ்ணனுடைய இத்தகைய திவ்ய தரிசனம் பெற்ற தேவரனைவரும் ஆனந்தக் கடலில் மூழ்கி எழுபவரானார்கள். மிக அதிக மகிழ்ச்சியின் காரணமாக அவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். பின் எல்லா தேவரும் கை குவித்து வினயத்தோடு பரம புருஷனான ஸ்ரீகிருஷ்ண சந்திரனை வணங்கினார்கள்.



பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் திருமேனியில் ஸ்ரீ விஷ்ணு முதலானோரின் ப்ரவேசம், தேவர்கள் மூலம் பகவானின் துதி


🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ ஜனகர் கேட்டார் : முனிவரே பராத்பர மகாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனை தரிசனம் பெற்ற தேவரனைவரும் மேலே என்ன செய்தார்கள்? எனக்கு இதைக்கூறி அருளுங்கள்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: அவர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எட்டு கைகள் கொண்ட வைகுண்ட அதிபதி ஸ்ரீஹரி எழுந்தார். ஸ்வயம் பகவானான ஸ்ரீகிருஷ்ண சந்திரனின் திருமேனியோடு கலந்துவிட்டார். அதே சமயம் கோடி சூரியர்களைப் போன்ற மகாப் பராக்ரமசாலியான பூர்ணஸ்வரூப நரசிம்ம பகவான் வந்தார். ஸ்ரீகிருஷ்ணனின் ஒளியில் அவரும் ஐக்கியமாகிவிட்டார். இதன்பின் ஆயிரம் கைகளுடனிருந்த வேததீபத் தலைவன் விராடபுருஷர், தன் வெண்ணிறத் தேரில் ஒரு லக்ஷம் வெண்ணிற குதிரைகளைப் பூட்டி அதில் ஏறி அங்கு வந்தார். அவரோடு ஸ்ரீ லக்ஷ்மிதேவியும் இருந்தார். அவர் தன் பல ஆயுதங்களோடு சோபையுடனிருந்தார். தொண்டர்கள் (எப்போதும் அருகிலிருந்து தொண்டு செய்பவர்) நான்குபுறமும் சேவை செய்து கொண்டிருந்தனர். அந்த பகவானும் ஸ்ரீகிருஷ்ணனுடைய திருமேனியில் லயமாகிவிட்டார்.


பிறகு பூரண ஸ்வரூபரான தாமரைக் கண்ணன் பகவான் ஸ்ரீ ராமர் கைகளில் வில்லும் அம்பும் தாங்கி வந்தார். உடன் சீதையும் பரதன் முதலான சகோதரர்களும் இருந்தனர். அவரது திவ்யரதம் பத்துகோடி சூரியர்களைப்போல ஒளிர்ந்தது. எப்போதும் அதற்குச் சாமரம் போடப்பட்டு வந்தது. எண்ணற்ற வானரக் குழுத்தலைவர்கள் அதன் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தத் தேரின் லக்ஷம் சக்கரங்களிலிருந்தும் மேகத்தின் கர்ஜனையைப் போன்ற ஒலி எழும்பிவந்தது. அதன்மீது லக்ஷம் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அதில் லக்ஷம் குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அந்தத் தேர் தங்கமயமானது. அதன்மீது ஏறி ஸ்ரீராமன் அங்கு வந்தார். அவரும் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனின் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டார்.


அதேசமயம் யக்ஞ நாராயணரான ஸ்ரீஹரி, பிரளயகால அக்னிக் கொழுந்தைப்போல பிரகாசத்தோடு வந்தார். தேவேஸ்வரரானயக்ஞர் தன் மனைவி தக்ஷிணாவோடு ஒளிமயமான தேரில் அமர்ந்தவாறு காட்சி தந்தார். அவரும் சியாம திருமேனியுடைய கண்ணனோடு ஒன்றிவிட்டார்.


பிறகு ஸ்வயம் பகவானான நர நாராயணர் அங்கு வந்தனர். அவர்களது திருமேனியின் காந்தி மேகத்தைப்போல சியாம வண்ணமாக இருந்தது. அவருக்கு நான்கு கைகளும் விசாலமான கண்களும் இருந்தன. முனிவேஷத்திலிருந்தனர். அவர்களது ஜடாமுடி கண்ணைக் கூசவைக்கும் ஆயிரக்கணக்கான மின்னல்களைப்போல ஒளிர்ந்தன. அவர்களின் ஒளி நான்குபுறமும் பரவியது. சிறந்த முனிவர்களால் சூழப்பட்ட பகவான் நாராயணன் தனது அகண்ட பிரம்மசரியத்தால் சோபையுடன் திகழ்ந்தார். மன்னா, தேவரனைவரும் வியப்போடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவரும் சியாம சுந்தரரான ஸ்ரீகிருஷ்ணனோடு கலந்துவிட்டார்.


இவ்விதம் விசித்திரமான திவ்ய தரிசனம் பெற்ற தேவர்கள் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று. பரமாத்மா ஸ்ரீகிருஷ்ண சந்திரன் ஸ்வயம்பரிபூர்ணதம பகவான் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டது.


தேவர்கள் கூறினர்: பூரண புருஷரும், பரத்திற்கும் பரமானவரும், யக்ஞங்களின் சுவாமியும், காணங்களுக்கெல்லாம் காரணமானவரும், பரிபூரணதம பகவானும் சாக்ஷாத் கோலோக தாமத்தின் ஆதிவாசியுமான பரமபுருஷர் ராதா நாயகனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நாங்கள் பணிவோடு வணங்குகிறோம். யோகேஸ்வரர்கள் தங்களை ஒளிக் குவியல் என்று சொல்கிறார்கள். சுத்த மனமுடைய பக்தர்கள், தாங்கள் லீலா திருமேனி தாங்கும் அவதார புருஷன் என்று கருதுகிறார்கள். ஆனால் இன்று நாங்கள் அறிந்த ஸ்வரூபமானது அத்வைதம் எல்லாவற்றிடமிருந்தும் எல்லோரிடமிருந்தும்தனித்திராத ஒரு இணையற்றதாகும். ஆகவே தாங்கள் மிகப்பெரிய தத்துவங்களுக்கும் மகாத்மாக்களுக்கும் கூடதலைவராவீர்கள்.


பரப்ரம்ம பரமேஸ்வரரான தங்களுக்கு எங்கள் வணக்கங்கள் உரித்தாகட்டும். எத்தனையோ அறிவாளிகள் பலவழிகளில் தங்களை அறிந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் தங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் தாங்கள் குறிப்பிட்ட பாவனையற்றவர். ஆகவே மாயையால் பற்றப்படாத நிர்குண பிரம்மமாகிய தங்களை நாங்கள் புகலடைகிறோம். சிலர்தங்களை பிரம்மமென்றும் வேறு சிலர் காலன் என்றும் கூறுகின்றனர். தாங்கள் மிக அமைதியான ப்ரசாந்த ஸ்வரூபத்தினர் என்பது சிலரின் கொள்கை. மீமாம்ஸகர்கள் தாங்கள் உலகில் கர்ம ரூபத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர். பழமையை விரும்புவோர் யோகம் எனும் பெயராலும் சிலர் கர்த்தா (செய்பவன்) என்றும் தங்களை ஒப்புக் கொள்கின்றனர். இவ்விதம் பரஸ்பரம் பல்வேறு கூற்றுகள் உள்ளன. ஆகவே யாருமேதங்களை உள்ளபடி அறிய முடியவில்லை. (யாருமே இதுதான் தாங்கள். இப்படித்தான் இருக்கிறீர்கள் என்று கூற இயலவில்லை.) ஆகவே குறிப்பிட முடியாத. எண்ண முடியாத, சொல்வொண்ணாத பகவானான தங்களை நாங்கள் சரணடைகிறோம். தங்களது பாத சேவை எல்லா நன்மைகளையும் அளிக்கவல்லது. அதைவிட்டு தீர்த்தம், யக்ஞம், தவத்தை ஏற்பவனுக்கு அல்லது ஞானத்தின் மூலம் பிரசித்தி அடைந்தவனுக்கு பல இடையூறுகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் வெற்றியடைவதில்லை.


பகவானே! நாங்கள் தங்களிடம் எதைக் கேட்பது? தங்களிடம் மறைந்துள்ள விஷயம் ஏதும் கிடையாது. ஏனெனில் தாங்கள் சராசரமனைத்தினுள்ளும் திகழ்கிறீர்கள். தூய உள்ளத்தினரும் உடல் பந்தனத்திலிருந்து விடுபட்டவரும் போன்ற (விஷ்ணு போன்ற) தேவரும் உங்களை வணங்க மட்டுமே முடிகிறது. அத்தகைய புருஷோத்தம பகவானான தங்களை வணங்குகிறோம். ஸ்ரீராதிகாவின் இதயத்தைப் பொலிவுறச் செய்யும் சந்திரஹாரமும், கோபியரின் கண்களானவரும், வாழ்வின் மூலாதாரமும் கொடியைப்போல கோலோகதாமத்தை அலங்கரிப்பவருமான ஆதிதேவனான நீர், சங்கடத்தில் அகப்பட்ட தேவராகிய எங்களைக் காப்பாற்றுங்கள்.


பிரபு! தாங்கள் பிருந்தாவனத்தின் தலைவன், கிரிராஜபதி என்றும் அழைக்கப்படுகிறீர்கள். தாங்கள் விரஜ நாயகன், கோபாலனாக அவதரித்து பலவகையான நித்ய-விஹார லீலைகளைச் செய்கிறீர்கள். ஸ்ரீராதையின் பிராணவல்லபரும், வேதத்தை தரிப்பவருக்கும் தாங்கள் சுவாமியாவீர். தாங்களே கோவர்தனகிரி, இப்போது தாங்கள் தர்மபாரத்தைச்சுமக்கும் இந்த பூமிதேவியை உத்தாரம் செய்தருளவேண்டும்.


நாரதர் கூறுகிறார்: இவ்விதம் துதித்ததும் கோலோகேச பகவானான ஸ்ரீகிருஷ்ண சந்திரனை  வணங்கும் தேவர்களை அழைத்து மேக கம்பீரக் குரலில் பேசினார்.


பகவான் அவதரிக்க நிச்சயித்தல், ஸ்ரீ ராதாவின் கவலை, பகவான் அவருக்கு ஆறுதல் அளித்தல்

 

🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறினார் : பிரம்மனே, சங்கரரே, (மற்ற) தேவர்களே நீங்கள் அனைவரும் என் பேச்சை நன்கு கேளுங்கள். என் ஆணைப்படி நீங்கள் தத்தம் தேவியரோடு யதுகுலத்தில் பிறப்பெடுங்கள். நானும் அவதரிக்கப் போகிறேன். என் மூலம் பூமியின் பாரம் விலகும். நான் யதுகுலத்தில் பிறந்து உங்கள் காரியங்களை வெற்றியுடன் முடிப்பேன். வேதம் எனது சொல்; அந்தணர் முகம் ; பசுவே சரீரமாகும். தேவரனைவரும் எனது அங்கங்களாவீர். சாது புருஷர்கள் இதயத்தில் இருக்கும் என் உயிருக்குச் சமமாவார்கள். ஆகவே ஒவ்வொரு யுகத்திலும் தற்பெருமைமிக்க ஆணவக்கார துஷ்டர்களால் இவர்களுக்குத் துன்பம் நேரும் போதும் தர்மம், யக்ஞம் மற்றும் தயைக்குத் தடையுண்டாகும் போதும் நான் என்னை புவியில் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: ஜகத்பதியான ஸ்ரீ கிருஷ்ண சந்திரன் இவ்விதம் கூறிக் கொண்டிருக்கும் போதே பிராணநாதனின் பிரிவு உண்டாகிவிடப் போகிறது என்றெண்ணிய ஸ்ரீராதாதேவி துயரமடைந்தார். காட்டுத் தீயிலகப்பட்ட கொடியைப்போல மூர்ச்சையாகி விழுந்துவிட்டார். அவரது உடலில் நடுக்கம், கண்ணீர், ரோமாஞ்சம் முதலிய சாத்வீக பாவங்கள் தோன்றின.


ஸ்ரீராதிகா கூறுகிறார்: தாங்கள் பூமியின் பாரத்தை நீக்குவதற்காகக்கட்டாயம் பூமிக்கு எழுந்தருளுங்கள். ஆனால் எனது ஒரு சபதத்தையும் கேளுங்கள். பிராணநாதா, தாங்கள் சென்றபின் நான் ஒரு கணம்கூட இங்கு உயிர் தரிக்க முடியாது. தாங்கள் என் பிரதிக்ஞையைக் கவனிக்கவில்லையென்றால் நான் மறுபடி கூறுகிறேன். என் உயிர் வாய்வரை வந்து திணறுகிறது. இது புறாவிலிருந்து தூசி பறப்பதுபோல உடலிலிருந்து பறந்துவிடப்போகிறது.


ஸ்ரீ பகவான் கூறினார்: ராதிகே! நீ கவலைப்படாதே. நான் உன்னை அழைத்துச் சென்றே பூபாரத்தை நீக்கப் போகிறேன். உன் பேச்சை அவசியம் நிறைவேற்றுவேன்.


ஸ்ரீ ராதிகா கூறினார்: (ஆனால்) பிரபோ, பிருந்தாவனமோ,


யமுனா நதியோ, கோவர்தன மலையோ இல்லாத இடத்தில் என் மனதிற்கு சுகம் உண்டாகாதே. 


நாரதர் கூறினார்: (ஸ்ரீராதா இவ்வாறு கூறியதும்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தமது தாமத்திலிருந்து 84 கோஸ் பூமியையும் கோவர்தன மலையையும் யமுனா நதியையும் பூவுலகிற்கு அனுப்பினார். அப்போது பிரம்மா தேவர்களோடு பரிபூரணதம பகவான் ஸ்ரீகிருஷ்ணனை வணங்கிக்கூறினார். இறைவா எனக்கு எது இடம், நீங்கள் எங்கு செல்வீர்கள், இந்த தேவர்கள் எந்த வீட்டில் இருப்பார்கள்? எந்தெந்த பெயர்களால் இவர்கள் பிரசித்தி அடைவார்கள்?


ஸ்ரீ பகவான் கூறினார்: 'நான் வசுதேவ-தேவகியிடம் தோன்றுவேன். என் கலையுருவான் இந்த சேஷன் ரோஹிணியின் கர்ப்பத்தில் தோன்றுவார். இதில் ஐயமில்லை. ஸ்வயம் லக்ஷ்மிதேவி பீஷ்மகரின் புதல்வியாகத் தோன்றுவார். இவருக்கு ருக்மிணி என்று பெயர். பார்வதி ஜாம்பவதி என்னும் பெயரில் தோன்றுவார். யக்ஞபுருஷனின்மனைவி 'தக்ஷிணாதேவி' அங்கு 'லக்ஷ்மணா' என்னும் பெயர் தரிப்பார். இங்குள்ள 'விரஜா' எனும் நதியே 'காளிந்தீ என்னும் பெயரில் பிரசித்தியடைவார். 'லஜ்ஜா' எனும் பகவதிக்கு 'பத்ரா' எனும் பெயர் உண்டாகும். எல்லாப் பாவங்களையும் போக்கும் கங்கை 'மித்ரவிந்தை' என்று பெயர் தரிப்பார். இப்போது காமதேவனாக இருப்பவர் ருக்மிணியின் வயிற்றில் 'பிரத்யும்னனாகத் தோன்றுவார். பிரத்யும்னனிடம் உமது அவதாரம் நிகழும். அப்போது அனிருத்தன் என்று அழைக்கப்படுவீர். இதிலும் ஐயம் இல்லை. த்ரோணரெனும் பெயரில் பிரசித்தமாக உள்ள இந்த வசு வ்ரஜத்தில் நந்தனாவார். இவரது மனைவி தராதேவி யசோதா என்று பெயர் பெறுவார். சுசந்திரன் வ்ருஷபானுவாகவும் இவரது மனைவிகலாவதி புவியில் கீர்த்தி என்றும் தோன்றுவார்கள். பின் அவரிடமே ஸ்ரீராதா தோன்றுவார். நான் வ்ரஜ மண்டலத்தில் கோபியர்களுடன் எப்போதும் ராஸவிஹாரம் செய்து கொண்டிருப்பேன்.


ஹரே கிருஷ்ண !


பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளில் திருப்தி அடைந்த தேவர்கள் தங்கள் உலகங்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more