காமிகா ஏகாதசி




ஆஷாட, மாத கிருஷ்ண‌பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமிகா ஏகாதசியாக கொண்டாடுவர். காமிகா ஏகாதசியின் விரத கிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா,  ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மகிமையை சொல்கிறேன். கவனமாக கேள்." என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறலாயினார்."ஒரு முறை, நாரத ரிஷியும் பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச்சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையான பிரம்மாவை நோக்கி - "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை போல் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவரே, மைந்தனான எனக்கு ஆஷாட சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன,  அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதத்தை மேற்கொள்ளுவதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.


பிரம்மா அதற்கு பதிலளிக்கையில் - " என் அருமை மகனே, நாரதா ! இவ்வுலகத்தின் நலனுக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய அனைத்தை பற்றியும் உனக்கு விரிவாக எடுத்துச் சொல்லுகிறேன். கவனமாக கேள். சிராவண மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசி காமிகா ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது. காமிகா ஏகாதசியின் மஹத்துவம் சொல்லில் அடங்காதது.இவ் ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, அஸ்வமேதயாகம் நடத்திய பலனை பெறுவர் என்றால் இதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்..சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் நான்கு திருக்கரங்களில் ஏந்தி கதாதாரன் என்னும் திரு நாமத்தாலும், ஸ்ரீதரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்னும் மற்ற திரு நாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோருக்கும், அவரது பாதாரவிந்தங்களே சரணாகதி என்று தியானிப்போருக்கும் நிச்சயமாக பெரும்நற்பலன்கள் கிட்டும்.  காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்கு செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, புண்ணிய க்ஷேத்ரமான காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி வழிபடுதல் அல்லது புவியில் என்னை மூலவராக கொண்ட புஷ்கர திருத்தலத்தில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றினால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தையும், அருளையும் பெற்றுத் தரக்கூடியது.பனி சூழ் இமாலயத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சென்று, பிரபு கேதாரநாதரின் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியைத் தானமாக அளிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளிக்கிரமங்களை தன்னகத்தே கொண்ட தெய்வீக நதியான கண்டகீ நதியில் நீராடுதல், அல்ல‌து  சிம்மராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தன்று, கோதாவரி நதியில் நீராடுதல், இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட சிராவண மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்ளுவதுடன், அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலன்களை அருளும். காமிகா ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் நற்பலனானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் கிடைக்கும் நற்பலனுக்கு சமமானது. சுபமான காமிகா ஏகாதசி தினத்தன்று  ஸ்ரீதரன் என்னும் திருநாமத்தைக் கொண்ட மஹாவிஷ்ணுவை வணங்குபவரின் பக்தியை தேவர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், பந்நாகர்களும் மெச்சுவர். கடந்த பிறவியின் பாபங்களைக் கண்டு அஞ்சுபவரும், இப்பிறவியில் பாபங்களை விளைவிக்கும் ஆதாயகரமான வாழ்க்கையில் மூழ்கி இருப்பவரும், தங்களால் இயன்ற அளவிற்கு இந்த காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து  தம் பாபங்களிலிருந்து  விடுதலை பெறலாம்.  காமிகா ஏகாதசி தினமானது அனைத்து தினங்களையும் விட மிகவும் பவித்ரமான நாளாகும். ஆகையால் அன்று விரதம் மேற்கொள்ளுதல் அனைத்து பாபங்களையும் அழிக்கும் சக்தி கொண்டதாக உள்ளது.நாரதா! ஸ்ரீ ஹரியே இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி கூறும் போது, " காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார்.காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண்விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்துடன் ஒரு போதும் ஆளாக மாட்டார்.


பவித்ரமான காமிகா ஏகாதசி தினத்தன்று உபவாசத்துடன் விரதத்தை கடைப்பிடிப்பவர் தன் பிறப்பு இறப்பு என்னும் மாயசக்ரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம்.  கடந்த காலத்திலும், நிறைய தவசிகளும், யோகிகளும் இந்த காமிகா ஏகாதசி தினத்தன்று விரதம் மேற்கொண்டு  மிக உயர்ந்த ஆன்மீக நிலையினை அடைந்துள்ளனர். ஆகவே, அவர்கள் காட்டிய நல்ல வழியை  பின்பற்றி நாமும் அன்று உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பது மிக நல்லது.அன்று ஸ்ரீ ஹரியை துளசி தளங்களுடன் (இலைகளால்) வணங்குவோர் த‌ம் பாபத்தின் விளைவுகளிலிருந்து விடுபடுவர்.மேலும் எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ, அதே போல், அவர்க‌ள் பாபங்கள் தீண்டாமல் வாழ்வார்.


ஸ்ரீ ஹரிக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி தளத்தை (இலையை) சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் இருநூறு கிராம் தங்கம் மற்றும் எண்ணூறு கிராம் வெள்ளியை தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்கு சமமானது.முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலை மதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட, பவித்ரமான துளசி இலைகளால் செய்யப்படும் பூஜையானது பகவான் மஹாவிஷ்ணுவிற்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது.புதிதாக தோன்றிய மலர்களுடன் (மஞ்சரி மொட்டுகள்) கூடிய துளசியை பகவான் கேசவனுக்கு சமர்ப்பிப்பவர் இப்பிறவி மட்டுமல்லாது, தன் முந்தைய  பிறவியின் பாபங்களும் நீங்கப் பெறுவர்.மேலும், காமிகா ஏகாதசியன்று  துளசி தேவியை தரிசனம் செய்பவர்  தம் பாபங்கள் அழியப் பெறுவர். அன்று துளசி தேவியிடம் இருப்பிடமான துளசி செடியை தொட்டு வணங்குதல், பிரார்த்தனை செய்தல் ஆகியவை ஒருவருடைய நோய் நொடிகளிலிருந்து அவருக்கு நிவர்த்தி அளிக்கும்.அன்று, துளசி செடிக்கு நீர் ஊற்றுபவர் எக்காலத்திலும் யமதர்ம ராஜனைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.அன்று துளசி செடியின் சிறிய  நாற்றினை நடுபவர் அல்லது மாற்று நாற்று (பதியன்) செய்பவர், தம் வாழ்நாள் முடிவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் இருப்பிடத்தை அடைவர்.தினமும் துளசி தேவியை  பூஜித்து ஆராதித்தால் நமது பக்தியின் சேவையினால் மோட்சப் பிராப்தியை அடையலாம்.துளசி தேவிக்கு தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை யமதர்ம ராஜனின் சித்ரகுப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான இந்த காமிகா ஏகாதசி தினமானது பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு ஸ்வர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர்.அன்று, எவரொருவர் நெய் அல்லது எள் எண்ணையினால் (நல்லெண்ணை) விளக்கேற்றி ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரியமண்டலத்தை  பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாசமான உடலுடன் அடைவர்.இந்த ஏகாதசியானது மிகவும் பவித்ரமானது மட்டுமல்லாமல் மிகவும் சக்தி பெற்ற நாளும் ஆகும். இந்நாளில் உபவாசம் இருக்க் இயலாதோர், இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர்," இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்".இதைக் கூறிய‌ ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் -- "யுதிஷ்டிரா, மஹாராஜனே, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்..இப்புனித காமிகா ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவங்களிலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது.இவ்விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைபிடிப்போர் பக்தி யோகத்தில் சிறந்து விளங்குவர்.அப்பாவிகளை கொல்வதால் உண்டாகும் பாவங்கள் அதாவது பிரம்ம ஹத்தி தோஷம்,  சிசு ஹத்தி தோஷம், பக்திமான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம். ஆனால் இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தை கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலைபாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த் சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும். " - என்றார்.எவரொருவர் பவித்ரமான இந்த காமிகா ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும, நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாபங்களிலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் எனப்படும் வைகுந்தத்தை அடைவர்.ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது. 



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more