ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம் பற்றி பல்வேறு கல்பங்களில் நிகழ்ந்த பல்வேறு வர்ணனைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை காண்போம்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
வர்ணனை 1 :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
(ஸ்ரீ ரூபா கோஸ்வாமியால் "ஸ்ரீ லலிதா மாதவா" வில் வர்ணிக்கப்பட்டுள்ளது)
ஒருமுறை விந்திய பர்வதம் இமாலய பர்வதத்தை கண்டு பொறாமை கொண்டது. தனது மகளான பார்வதிக்கு சாக்ஷத் மகாதேவரான சிவபெருமானே கணவராக கொண்ட இமாலய பர்வதம், இதன் மூலம் சிவபெருமானை மருமகனாக அடைந்தது தான் இந்த பொறாமைக்கு காரணம். ஆகையால் தனக்கு சிவபெருமானையே தோற்கடிக்க கூடிய ஒருவர் தான் மருமகனாக வேறவேண்டும் என்று எண்ணிய விந்திய பர்வதம் இதற்காக, பிரம்மதேவரை பிரார்த்தனை செய்து கடும் தவம் இருந்தது. மனமகிழ்ந்த பிரம்மதேவரும், விந்திய பர்வதத்திடம் தனக்கு வேண்டும் வரத்தை கேட்க சொன்னார். விந்திய பர்வதம், "பிரம்மதேவரே! சிவபெருமானை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை கரம் பிடிக்கும் ஒரு புதல்வி எனக்கு வேண்டும்" என்றது. பிரம்மதேவரும் யோசிக்காமல் "ததாஸ்து" என்று கூறி சென்றுவிட்டார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து தான் அளித்த வரம் சாத்தியமற்றது என்பதை உணர்ந்த பிரம்மதேவர் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தார். அப்போது பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் அவதரிக்கப்போவதை நினைவுகூர்ந்த பிரம்மதேவர், "ஸ்ரீமதி ராதாராணி பாகவானின் நித்தியமான துணை ஆவார். ஆகையால் ராதாராணி விந்திய பர்வதத்தின் மகளாக அவதரித்தால், தனது வரம் பொய்க்காது" என்று எண்ணிய பிரம்மதேவர், ஸ்ரீமதி ராதாராணியை நோக்கி கடும் தவம் புரிந்தார். மனமகிழ்ந்த ஸ்ரீமதி ராதாராணி பிரம்மதேவரின் வேண்டுதலை ஏற்றார். ஆனால் ராதாராணியும் சந்திராவளியும் ஏற்கனவே மஹாராஜா வ்ரிஷபானு மற்றும் மஹாராஜா சந்திரபானுவின் - மனைவிகளின் கர்ப்பத்தில் தோன்றியிருந்தனர். ஆகையால் தற்போது ஸ்ரீமதி ராதாராணி இருவரையும் விந்திய பர்வதத்தின் மனைவியின் கர்ப்பத்திற்கு மாற்றிவிடும்படி யோகமாயைக்கு ஆணையிட்டார்.
அதன்படி விந்திய பர்வதத்திற்கு இரண்டு அழகான புதல்விகள் பிறந்தனர். இதற்கிடையில் மதுராவில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்திற்கும், யசோதைக்கு பிறந்த யோகமாயை மதுராவிற்கும் மாற்றப்பட்டன. தேவகியின் எட்டாவது குழந்தையை கொல்ல வந்த கம்சனின் கரத்திலிருந்து விடுபட்ட யோகமாயா, "கொடிய கம்சனே! காலநேமி என்ற பெயரில் முந்திய பிறவியில் நீ பிறந்த பொது, எந்த பகவான் உன்னை சுதர்ஷனதால் அழித்தாரோ, அதே பகவான் இன்று மீண்டும் அவதரித்து விட்டார் என்பதை அறிவாயாக!. அதோடு மட்டுமல்லாமல்,என்னை விட சக்தி வாய்ந்த "அஷ்ட மஹா சக்திகள்" - ராதா, சந்திராவளி, லலிதா, விஷாகா, பத்மா, சைபியா, ஷ்யாமளா, பத்திரா - போன்றவர்கள் நாளை அவதரிக்கவுள்ளனர். அவர்களுள் முதல் இருவர் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். இவர்களை யார் திருமணம் செய்கிறார்களோ, அவர்கள் சிவபெருமானையே தோற்கடிக்கக்கூடியவர் " என்று கூறி யோகா மாய மறைந்தார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், பூதனை என்னும் அரக்கியை கொண்டு பிறந்த அணைத்து ஆண் குழந்தைகளை கொன்றுவிடும் படியும் அணைத்து பெண்குழந்தைகளை கடத்திகொண்டுவரும் படியும் ஆணையிட்டான். விந்திய பர்வதம், தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவை விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த புதனை இரண்டு குழந்தைகளையும் கரத்தில் தூக்கி வானில் உயரே பறந்து சென்றாள். இதை கண்ட பிராமணர்கள் மந்திரங்களை உச்சரிக்க, அதன் சக்தியால் இரண்டு குழந்தைகளையும் தூக்க முடியாமல் ஒரு குழந்தையை ஆற்றில் வீசியெறிந்தாள். அந்த குழந்தையை விதர்பா தேசத்தின் அரசன் எடுத்து வளர்த்தார். பின்னர் விந்திய பர்வதம் இந்த செய்தியை அறிந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சந்திராவளியை திரும்ப அழைத்து வந்தார். மற்றோரு குழந்தையான ராதாராணியையும் தூக்க முடியாமல் வ்ரஜ பூமியில் வீசி சென்றாள் பூதனை. குழந்தையை எடுத்த பூர்ணமாசி தேவி, முக்ஹாரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்து, "இது உங்கள் மருமகன் வ்ரிஷபானுவின் மகள்" என்று கூறிச்சென்றார். அன்று முதல் ஸ்ரீமதி ராதாராணி, வ்ரிஷபானுவின் மகளாக வளர்ந்தார்.
வர்ணனை 2 :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஒரு முறை சூர்யதேவர், பகவான் ஹரியிடம், கோலோகேஸ்வரி தனக்கு மகளாக வேண்டும் என்று வேண்டினார். இதையறிந்த பகவான் சூர்யதேவரின் வேண்டுதலை பூர்த்தி செய்ய எண்ணினார். பூலோகத்தில் கோகுல மஹாவனத்தில் ராவெல் என்ற ஊர் உள்ளது. அதன் அரசர் மஹாபானுவின் ஐந்து புதல்வர்களும் பெரும் வைஷ்ணவர்கள். அவர்களுள் வ்ரிஷபானுவை அடுத்த அரசராக அனைவரும் எண்ணினார்கள். வ்ரிஷபானு சூர்யதேவரின் அவதாரமாவார். அவர் நூற்றுக்கணக்கான ராஜசூய யாகங்களை செய்தும் மற்ற நியமனங்களை அனுஷ்டித்தும் பகவான் ஹரியை திருப்திபடுத்தினார்.
அந்த வ்ரஜ பூமியில் "பிந்து" என்ற இன்னொரு வசதியான இடையர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி முஹாராவிற்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள். அவர்களுள் ஒருவரே "கீர்த்திதா". அரசர் வ்ரிஷபானு கீர்த்திதாவை மணந்தார். அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியமே இல்லை. பல யாகங்களை செய்தனர், தானங்கள் செய்தனர். பலனில்லை. வேதனையில் வாடினர். இறுதியாக கீர்த்திதா தேவி தானும் தனது கணவரை "காத்யாயினி தேவியை" வணங்கும்படி வேண்டினார். மனைவியின் யோசனைப்படி, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள கோவர்தனகிரியின் அடிவாரத்தில், காத்யாயினி தேவியை நினைத்து உண்ணாவிரதமும் மௌன விரதமும் கொண்டு கடும் தவம் புரிந்தார். அப்போது ஒரு அசரீரி, "எனதருமை மகனே! ஹரிநாமத்தை கேட்காமல் காதுகள் தூய்மை அடையாது. அணைத்து மங்களங்களையும் தரக்கூடிய ஹரியின் நாமத்தை முறையாக பெறுவாயாக!" என்று கூறியது. இதை கேட்ட வ்ரிஷபானு க்ரது முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு க்ரது முனிவர், மஹாமந்திரமான "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே" என்ற மாஹா மந்திரத்தை உபதேசித்தார்.
மந்திரத்தை உபதேசித்த க்ரது முனிவர், "ஒருவன் சைவமானாலும் வைணவமானாலும் ஹரிநாமம் ஒன்றே தூய்மைப்படுத்தும். ஹரிநாமத்தை உச்சரித்து தன் காதுகளை தூய்மைப்படுத்தாத ஒருவன் வேறு எந்த மந்திரத்தை உச்சரித்தாலும் பிரயோஜனமில்லை. ஹரிநாமத்தை கேட்டு தூய்மையடையாத காதுகள் தீண்டத்தகாததாகும். இந்த ஹரி நாமம் பிரம்மதேவர், வேத வ்யாஸர் போன்றவர்களால் போற்றப்பட்டதாகும். இதனை முழுமனதுடன் ஜபம் செய்வாயாக" என்று கூறினார்.
க்ரது முனிவரிடமிருந்து மஹாமந்திரத்தை கேட்டறிந்த வ்ரிஷபானு, மீண்டும் யமுனை நதிக்கரைக்கு வந்து தன் தவத்தை தொடர்ந்தார். மணமகிழ்ந்த காத்யாயினி தேவி, அவர் முன் தோன்றினார். வ்ரிஷனபானுவிற்கு என்ன வரம் வேண்டும் என்பதை அறிந்த காத்யாயினி தேவி, ஒரு தங்க நிறத்திலான உருண்டை பெட்டியை தந்தார். அதை வீட்டிற்கு எடுத்து வந்த வ்ரிஷபானு, தன் மனைவியுடன் ஹரிநாமத்தை உச்சரித்தார். அதன் பலனாக ஸ்ரீமதி ராதாராணி தோன்றினார். தங்க நிற மலரை போல் தோன்றிய ராதாராணி மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருந்தார்.
வர்ணனை 3 :
🌼🌼🌼🌼🌼🌼🌼
ஒரு முறை அரசர் வ்ரிஷபானு யமுனையில் நீராடிக்கொண்டிருந்தபோது, தீடீரென்று ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் நீரில் மிதந்து அவரை நோக்கி வந்தது. அதில் உருக்கிய பொன்னிறத்தில் ஒரு பெண் குழந்தை மிக அழகாக தன் கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு படுத்திருந்தது. குழந்தை இல்லாத வ்ரிஷபானு உடனே அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு வந்து தன் மனைவியிடம் தந்தார். அன்று முதல் ஸ்ரீமதி ராதாராணி வ்ரிஷபானு - கீர்த்திதாவின் புதல்வியாக வளர்ந்தார்.
Comments
Post a Comment