ராதாஷ்டமி( ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த சுபதினம்)

 


ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமையமான அந்தரங்க சக்தியும், மிக மிகச்சிறந்த தூய பக்தையுமாவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லட்சுமி தேவியின் மூலமாவார்.


ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த விதம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதிதேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது.


கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரியசிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனேதனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலை ஆசைப்பட்டது. இந்த ஆசை நிறைவேற பிரம்மதேவரை வேண்டி, 1000 வருடங்கள் கடுமையான தவம் புரிந்தது விந்தியமலை. இந்த தவத்தினால் திருப்தி அடைந்த பிரம்ம தேவர், ''பகவான் கிருஷ்ணரே, உனது மருமகனாக வருவார்'' என்று வரமளித்தார். அதன் பிறகு விந்தியமலைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதை கொண்டாட பெரிய விழா ஒன்று நடந்தது. இதில் இமயமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.


இதே தருணத்தில், கிருஷ்ணரும் மதுராவில் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது கம்சனின் ஆணையின் பேரில், பிள்ளைக் கொல்லி அரக்கி 'பூதனா' பிறந்த குழந்தைகளை எல்லாம், கொன்றுதின்று கொண்டிருந்தாள். எனவே விந்திய மலைக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும், அங்கும் இந்த பூதனா விரைந்தாள். விந்திய மலையின் இரண்டு அழகான பெண் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தாள்.


இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவர்கள் பலர், சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி, பூதனாவை தடுத்தனர். மந்திரத்தின் சக்தியால், பூதனாவின் உடல் நெருப்பு போன்று எரிந்தது. நேரம் செல்ல, செல்ல எரிச்சல் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பூதனா கீழே போட்டு விட்டாள். அதில் ஒரு குழந்தை விருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில் ஒரு தங்கத் தாமரையில் விழுந்தது. அவர்தான் ஸ்ரீமதிராதாராணி. பொன்னிறத்தில் அவதரித்தவர். மற்றொரு குழந்தை விருஷபானுவின் சகோதரர் சந்திர பானுவின் தோட்டத்தில் விழுந்தது. இவர்'சந்திராவளி'ஆவார்.



யமுனை நதியில், தாமரை மலரில் அவதரித்தார்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


யமுனை நதியில், தாமரை மலரில் தங்க ஒளிவீசுவது போன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதை கண்டார் மன்னர் 'விருஷபானு'. அப்போது வானத்தில் தோன்றியபிரம்ம தேவர், மன்னர் விருஷபானவே! நீ தரிசிக்கும் இந்தகுழந்தை. சாதாரண குழந்தை அல்ல. லஷ்மிதேவியின் மூலம் ஆவார். மிகக் கவனமாக இக்குழந்தையை வளர்த்து வா. நீயும் உனது மனைவி கீர்த்திதாவும் முந்தைய பிறவியில் பகவானே உங்களது மருமகனாக வர வேண்டும் என்று தவம் செய்தீர்கள். அதன் பலனாக இந்ததெய்வீக குழந்தையை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்.


பிறகு அக்குழந்தையை, மன்னர் விருஷபானு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பெளர்ணமி நிலவு போன்று பொன்னிறத்தில் பிரகாசித்த குழந்தையின் பேரழகை பார்த்தவுடன் ராணி 'கீர்த்திதா" மிகவும் மகிழ்வுற்றாள். பெரியாழ்வாருக்கு, தாயார் ஆண்டாள்தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதிராதாரணி அருள்புரிந்தார். இப்படியாக ஸ்ரீமதி ராதாராணி, மன்னர் விருஷபானுவுக்கும், தாய் கீர்த்திதாவிற்கும் தெய்வப் புதல்வியாக அவதரித்தார்.


ராதாராணி பிறந்த பிறகு, யாரையும் பார்க்கவில்லை. அவரது தெய்வீக கண்கள் திறக்கவே இல்லை. திருவாய் மலர்ந்து பேசவும் இல்லை இதனால் விருஷபானுவும், கீர்த்திதாவும் மிகவும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் மன்னரின் இல்லத்திற்கு மகாரிஷ நாரதர்வந்தார். அவரை வணங்கி வரவேற்ற மன்னர், தனது கவலையை தெரிவித்தார். அதற்கு நாரதர், "கவலைப்படவேண்டாம். இந்த தெய்வீக குழந்தையின் பிறப்பிற்க்கு ஒரு விழாநடத்துங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்''என்று ஆசீர்வதித்தார்,


பிறகு மன்னர் ராதாராணி பிறந்த விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட தனது நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் அவரது நெருங்கிய நண்பரும், கிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்ற நந்த மகாராஜா, குழந்தைகள் கிருஷ்ண பலராமருடனும் விழாவிற்கு சென்றார். உடன் கிருஷ்ணரின் தாய் யசோதை, பலராமரின்தாய் ரோகிணி உட்பட விராஜவாசிகள் பலரும் சென்றனர்.



ஶ்ரீ கிருஷ்ணரே முதல் தரிசனம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


விழாவில் ஒருவரையொருவர் பரஸ்பரம் விசாரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பசும் பால், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்பு வகை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அப்போதுதான் அது நடந்தது. சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து, ராதாராணியின் தொட்டிலருகே சென்றார். கிருஷ்ணர் தன்முன்வந்ததும், ராதாராணி உடனே தன் கண்களைத்திறந்தார். முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். அவரது பார்வையும், மகிழ்ச்சி சிரிப்பும் குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின.


கிருஷ்ணர் மீது ஸ்ரீமதி ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும், தூய பக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர, வேறு யாரையும் முதலில் தரிசிக்கக்கூடாதென்று ராதாராணி உறுதி எடுத்திருந்தார்.  எனவே இந்த தெய்வீக திருவிளையாடல் நடந்தேறியது. "அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுகரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல், ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின் மேல் நழுவி விழுந்தது. இப்படியாக கிருஷ்ணரும், தன் அன்பை ராதாராணிக்கு தெரிவித்தார். இந்த தெய்வீக வைபவத்தை கண்ணுற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணரையும், ராதாராணியையும் போற்றி துதித்தனர். குறிப்பாக ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவும், தாய் கீர்த்திதாவும் பெரு மகிழ்ச்சி அடைந்து மேலும் விழாவை சிறப்புற நடத்தினர்.


கிருஷ்ணரின் சேவையில் ராதாராணியே முதலிடம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதிராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது. ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது செலுத்திய பக்தி எத்தகையது என்பதை அறிவதற்காகத்தான், கிருஷ்ணரே. சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் என்று சைதன்ய சரிதாம்ருதம் குறிப்பிடுகிறது, அந்த அளவிற்கு ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் செலுத்தியுள்ளார். ஆயிரக்கணக்காண வருடங்கள் தவங்கள் செய்தாலும் கிருஷ்ணர் ராதாராணியின் அன்பை புரிந்து கொள்ள இயலாது. தூய பக்தர் ஒருவரின் கருனையால்மட்டுமே ஶ்ரீஶ்ரீராதா கிருஷ்ணரின் புகழை உணர இயலும்.



கிருஷ்ணரின் கருனையை பெற ஶ்ரீமதி ராதாராணியின் திருவருள் அவசியம்



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ணபக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதிராதாராணயின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்களின் கூற்றுகளில் இருந்து ஸ்ரீமதி ராதாராணி பற்றி


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீல பிரபுபாதா வழங்கிய முக்கியமான குறிப்புகள்


 🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீமதி ராதாரணி, தூய பக்தையும், பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் நித்யமான அன்பிற்குரியவரும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவர். எங்கு ஸ்ரீமதி ராதாராணி இருக்கிறாரோ, அங்கு எதற்கும் பஞ்சம் என்பதே கிடையாது ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்ரீமதி ராதாராணியுடன் சேர்த்து வழிபடுபவர்கள் விரைவில் கிருஷ்ண பக்தியில் முன்னேற்றம் அடைவதுடன் அனைத்து வளங்களையும் பெறுவர். சாஸ்திரங்கள் ஸ்ரீமதி ராதாராணி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உட்சக்தி ஆவார் என்று குறிப்பிடுகிறது.


ஸ்ரீமதி ராதாராணி ஸ்ரீகிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தராவார். ஏனென்றால் ஸ்ரீமதிராதாராணி, கிருஷ்ணரிடம் அளவுகடந்த அன்பு செலுத்தினார். ஸ்ரீமதி ராதாராணி எப்போதும் எல்லா பக்தர்களின் நலனை விரும்புபவராக இருக்கிறார்.நாம் முதலில் ஸ்ரீமதிராதாராணியிடம் பிரார்த்திக்க வேண்டும். 'நீங்கள் நேரடியாக கிருஷ்ணரிடம் செல்லமுடியாது. ஆனால்  ஒரு கிருஷ்ண பக்தர் உங்களிடம் திருப்தி அடைந்தால் அவர் உங்களை கிருஷ்ணரிடம் சிபாரிசு செய்வார். தன் பக்தனின் வேண்டுகோளை கிருஷ்ணர் அவசியம் ஏற்றுக்கொள்வார். எனவே ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெற்றால் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையை எளிதில் பெறலாம். ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு செய்வது என்றால், ஸ்ரீமதி ராதாராணியின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதே ஆகும். விருந்தாவனத்தில் உள்ள பக்தர்கள், பக்தியின் பரிபக்குவ நிலையை அடைய தங்களை ஸ்ரீமதி ராதாராணியின் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக, பக்தி சேவை என்பது இந்த ஜடவுலகைச் சேர்ந்தது அல்ல; பக்திசேவை என்பது நேரடியாக ஸ்ரீமதி ராதாராணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவர் ஸ்ரீமதி ராதாராணியிடம் சரணடைந்தார் என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் மிக எளிதாக தீர்ந்துவிடும். 


( ஸ்ரீமத் பாகவதம் 4.8.24 பொருளுரையில்)


ஸ்ரீமதி ராதாராணியை வழிபடுவதற்கு எளிய வழி அவருடைய திருநாமம் அடங்கிய

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை தினமும் குறைந்தது(108)முறையாவது உச்சரிப்பதே ஆகும். ஏனென்றால் இம்மந்திரத்தில் உள்ள 'ஹரே என்ற சொல் ஸ்ரீமதி ராதாராணியை குறிப்பதாகும்


திருப்பாத தரிசனம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஶ்ரீராதாஷ்டமி திருநாளின் விசேஷம் என்னவென்றால், "ஸ்ரீமதி ராதாரணியின் திருப்பாத தரிசனமாகும். பொதுவாக ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில்களில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் இருக்கும். ஆனால் ஸ்ரீராதாஷ்டமி அன்று ஒருநாள் மட்டும் ஸ்ரீமதிராதாரணியின் திருப்பாதங்களை தரிசிக்க முடியும். எனவே ஏராளமான பக்தர்கள் இத்திருநாளில் விரதம் இருந்து ஶ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் பெறுவர்..!


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more