ஶ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீமதி ராதாராணியின் உயர்ந்த நிலையை நிரூபித்தல்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இந்த லீலையானது ஸ்ரீமதி ராதாராணியின் பெளகண்ட பருவத்தின் முடிவில் நடைபெற்றதாகும். ஒருமுறை ராதா ராணியின் அன்பால் பிடிக்கப்பட்ட கிருஷ்ணர் அவரிடம், " அனைத்து வழிபாடுகளின் சாரம் உன்னை வணங்குவதுதான்." யாரேனும் உன்னை வழிபடாமல் என்னை மட்டும் வழிபட்டால் அவர் பயனேதும் அடையப் போவது இல்லை. நீ என்னுடைய "மஹாபாவ மயி" - எனது ஆனந்தத்தின் ஆற்றல் நீ. என்னை சந்தோசப்படுத்துவதன் மூலம் நீ சந்தோசமடைகின்றாய். எனது ஆனந்தமே உனது ஆனந்தம். உன் சொந்த இன்பத்திற்கான ஆசையை முற்றிலும் விலக்கி விட்டாய். எனது சங்கம் மற்றும் எனது சேவையில் நிலைத்து இருப்பதை தவிர நீ எதையும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. யார் உனது இத்தகைய வழிபாட்டு முறையை பின்பற்றுகிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். நான் அவர்களை யோகிகள் மற்றும் தபஸ்விகளை விட மேலானவர்களாக பாவிகின்றேன். உன்னுடைய கருணா கடாக்க்ஷம் இல்லாமல் யாரும் என்னை அடைய முடியாது. தூய பக்தி சேவையினால் மட்டுமே என்னை அடைய முடியும். உன்னுடைய செயல்கள் அனைத்தும் தூய பக்திசேவைதான். உன்னுடைய அடிச்சுவடுகளை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு 'யம பயம்' இல்லை. அத்தகையவர் எனது ஆன்மீக உலகில் எனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை பெற்று விடுகின்றார். எவரேனும் எனக்கு பக்தியுடன் சேவை செய்ய விரும்பினால் முதலில் உன் திருநாமத்தை அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து பெற்று தூய மனதுடன் உச்சாடனம் செய்தால் அவர் பக்குவத்தை அடைவார். அதன் பிறகு அவர் எனக்கு சேவை செய்யும் தகுதியைப் பெறுகிறார். ஒருவர் ராதாகிருஷ்ண என்று உன் பெயரையும் என் பெயரையும் ஒன்றாக உச்சாடனம் செய்தால், மிகுந்த அதிர்ஷ்டசாலியான அந்த நபரால் நான் கட்டுப்படுத்தபடுபவனாவேன். அனைத்து கோபியர்களிலும் நீயே முதன்மையானவள் என் தாய் யசோதை விடவும் நீதான் முதன்மையானவள் என்று கூறினார்.
இதைக் கேட்ட ராதா ராணி சிரித்தபடியே கூறினாள். "கிருஷ்ணா உன்னுடைய இந்த பேச்சு என்னை கேலி செய்வது போல் உள்ளது. உனது வார்த்தைகளை ஒருபோதும் நான் நம்ப மாட்டேன். அன்னை யசோதாவிற்கு அவளது உயிரினும் மேலானவன் நீ அப்படியிருக்க நான் அவரை விட மேலானவள் என்று எவ்வாறு நீ சொல்கிறாய் ? அதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்.
கிருஷ்ணர் கூறினார். விரைவில் அனைத்தையும் நீ உணர்வாய். அவர் உன்னை தனது மகள் என்று கூட கூறுவார். விரைவில் அதையும் நீ காண்பாய் வேண்டுமென்றால் பார், அவர் வந்து உனது பாதங்களை பிடிக்கப் போகிறார்.
ஸ்ரீமதி ராதாராணி யின் மேன்மையை நிரூபிப்பதற்காக கிருஷ்ணர் ஒரு லீலையை உருவாக்கினார்.
ஒரு நாள் பிருந்தாவனத்து கோபியர்களில் சிலர், ராதா ராணியையும், கிருஷ்ணரையும் ஒரு வீட்டிற்கு அழைத்து வந்து வேடிக்கை செய்தார்கள். ராதா ராணியையும் கிருஷ்ணரையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் எல்லையற்ற ஆனந்தத்தை அவர்கள் அனுபவித்தனர். அனைத்து கோபியரும் வீட்டின் முற்றத்தில் கிருஷ்ணரை நடனம் ஆடவைத்து அவரோடு சேர்ந்து இவர்களும் ஆடிப்பாடி ஆனந்தித்தார்கள். அந்த சமயம் அன்னை யசோதை அங்கு வந்தார். அனைத்து கோபியரும் கிருஷ்ணருடன் நடனம் ஆடுவதை கண்டதும் கோபத்துடன் ராதாராணி மற்றும் அவளது சகிகளிடம், "இது என்ன உங்களுடைய நடத்தை?, என் கோபால் நாள் முழுவதும் மாடு மேய்க்கிறான். அவன் மிகவும் களைப்பாக இருப்பான். அவனுக்கு ஓய்வு தேவை. ஆனால் நீங்கள் விளையாடுவதற்காக அவனை இங்கே இழுத்து வந்து அவனது உறக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள். இங்கு அவனை நாட்டியம் ஆட வைக்கின்றீர்கள். எனக்குத் தெரியும் இது எல்லா நாளும் நடக்கின்றது. இது நல்லதல்ல. மறுபடியும் இதை செய்யாதீர்கள் என்றார்."
ராதாராணி அமைதியாக இருந்தாள். அவளது சகிகள், "உங்களுடைய மகன் கோபால் மாடு மேய்ப்பவன், அவன் காடுகளில் திரிந்து மாடுகளை மேய்த்ததால் உள்ள களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறான். இதோ இந்த கிருஷ்ணர் உங்கள் கிருஷ்ணர் அல்ல. உங்கள் மகன் பெயர் கிருஷ்ணர் தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக உலகில் வேறு எவருக்கும் அந்த பெயர் இல்லை என்று அர்த்தமில்லை. வீட்டிற்குச் சென்று பாருங்கள், தங்கள் மகன் அங்கு நன்றாக உறங்கிக் கொண்டிருப்பான் என்றனர்.
சகிகள் இவ்வாறு கூறியதைக் கேட்ட அன்னை யசோதை ஆச்சரியப்பட்டுப்போனாள். கிருஷ்ணா என்ற பெயரில் இன்னொரு பையன் இருக்கலாம். ஆனால் அங்க அடையாளங்கள் கூடவா ஒன்றாக இருக்கும்? இது எவ்வாறு சாத்தியமாகும்? இருந்தாலும் இந்த சகிகள் சொல்கிறார்கள். எனவே அன்னை யசோதா வீட்டிற்குச் சென்று தனது மகன் கோபால் இருக்கிறானா என்று பார்க்க விரும்பினாள்.
அன்னை யசோதை வீட்டை அடைந்தாள். அங்கு அவள் கண்டவை அனைத்தும் சகிகள் கூறியதை உண்மை ஆக்கின. அவள் ஆச்சரியப்பட்டுப் போனாள். அவரது மகன் கிருஷ்ணன் படுக்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்த யசோதை குழம்பிப் போனாள், ஆனால் அதே நேரம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். அவள் உடனே அந்த சகிகளுடன் விளையாடி கொண்டு இருந்த இன்னொரு கிருஷ்ணரை காண அந்த இடத்திற்கு சென்றாள். யசோதை கூறினாள், "ஓ சகிகளே, நான் சொல்வதை சற்று கவனியுங்கள். எனது மகன் கிருஷ்ணனைப் போலவே காட்சியளிக்கும் இந்த கிருஷ்ணனை எங்கிருந்து கண்டீர்கள் ? இரண்டு பேருக்கும் ஒரே வயது, ஒரே அங்க அடையாளம், ஒரே உடல் அமைப்புக்கள். அவர்கள் நடப்பது, பேசுவது, பழகுவது கூட ஒன்றாகவே இருக்கின்றதே ! அவர்களது உடல் நிறம் கூட ஒரே போல் இருக்கின்றது உங்களது இந்த கிருஷ்ணனை பார்க்கும்போது என் இதயத்தினுள் திருப்தியை உணருகின்றேன். அவன் மீது அதீதமான அன்பு மேலிடுவதை உணருகின்றேன். நீங்கள் உங்கள் கிருஷ்ணாரோடு எனது வீட்டிற்கு வருகை தரவேண்டும். அங்கு இருவரையும் ஒன்றாக சேர்த்து நடனமாட வைக்கலாம். நாம் அதனை கண்டுகளிக்கலாம் இரண்டு கிருஷ்ணருக்கும் இடையில் ஒரு நட்பை நாம் வளர்க்கலாம். பிறகு முடிவில் எனது கிருஷ்ணரை எனது வீட்டில் விட்டுவிட்டு உங்களது கிருஷ்ணரோடு நீங்கள் இங்கு வந்து விடலாம்". என்றாள்.
இப்போது கிருஷ்ணரால் தூண்டப்பட்ட ராதாராணி பேசலானாள், ஓ என் அன்பு அன்னையே நீங்கள், எங்கள் கிருஷ்ணரை உங்கள் வீட்டிற்கு கூட்டிவர சொல்கிறீர்கள். ஆனால் அவ்வாறு செய்வதற்கு நாங்கள் பயப்படுகிறோம். இரண்டு பேரும் சேர்ந்து நடனம் செய்யும்போது இது எங்கள் கிருஷ்ணர் என்றும், அது உங்கள் கிருஷ்ணர் என்றும் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் ? உங்கள் கிருஷ்ணர் எங்கள் கிருஷ்ணராக மாறிவிட்டால் என்ன செய்வது?
அன்னை யசோதை, ராதாராணி கூறியதை கேட்டு , அவ்வாறு மாறினால் தான் என்ன ? இரண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லையே என்று சிரித்தபடி சொன்னாள்.
ராதாராணி கூறினார்." இல்லை, அது தவறு. உங்கள் கிருஷ்ணர் ஒரு போதும் எங்கள் கிருஷ்ணர்ருக்கான தகுதியை பெற முடியாது. உங்கள் மகன் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன். அவனுக்கு காடுகளில் சுற்றித் திரிந்து மாடுகளை மேய்க்கதான் தெரியும். அவனுக்கு அன்பு, காதல், பிரேமை, தத்துவங்களைப் பற்றிய முழு அறிவும் கிடையாது. எங்கள் கிருஷ்ணர் எல்லா புருஷர்களிலும் முதன்மையாக ஜொலிப்பவர். அவர் புருஷர்களில் ரத்தினம் போன்றவர். அனைத்துப் புருஷர்களிலும் உத்தமர் நிறைய யோகிகளும், ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும், தியானிகளும் இவரது தாமரை பாதங்களை வணங்கி வருகின்றனர். எங்கள் கிருஷ்ணர் மிகப் பயங்கரமான அரக்கர்களை எல்லாம் வதம் செய்திருக்கின்றார். இந்த உலகைப் படைத்தவரான பிரம்மதேவரின் தவறுகளையும் கண்டித்திருக்கிறார்.
அன்னை யசோதை பதிலுரைத்தாள் என்னுடைய கிருஷ்ணரும் தான் இம்மாதிரியான செயல்களை செய்து இருக்கின்றானே. இங்குள்ள விருந்தாவன வாசிகள் அனைவரும் இதனை நன்கறிவர் என்னுடைய மகன் பிறந்து முன்று நாட்களே ஆகியிருந்த நிலையில் பூதனை என்ற அரக்கி கொன்றான். அதன்பிறகு சகடாசுரன் போன்ற அரக்கர்களையும் கொன்றான். இதையெல்லாம் செய்தது யசோத நந்தன் தான் என்று அனைவரும் நன்கறிவர்".
ராதாராணி கூறினாள், நம்முடைய இந்த விவாதத்தின் மூலம் சண்டையை தான் உருவாக்குவோம். எந்த கிருஷ்ணர் முதன்மையான தகுதிகள் உடையவர் என்பதை நீங்கள் பின்னர் புரிந்து கொள்வீர்கள். எவ்வாறாயினும் இப்பொழுது நான் என்னுடைய கிருஷ்ணரின் நெற்றியில் ஒரு அடையாளம் வைக்கபோகிறேன் இதனால் தாங்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை என்று சொல்லியபடியே ராதாராணி சந்தனக்கூழ் கொண்டு தனது கிருஷ்ணரின் நெற்றியில் ஓர் அடையாளம் வைத்தாள். கருமேக நிறத்தில் இருந்த கிருஷ்ணரின் நெற்றியில் இருந்த அந்த அடையாளமானது நிலவானது நீலநிற மலையின் பின்புறத்திலிருந்து உதித்து வருவது போன்று அழகாக இருந்தது. ராதாராணி தனது சகிகளிடம் சொன்னாள், "எல்லோரும் இங்கு பாருங்கள் என்னுடைய கிருஷ்ணரின் நெற்றியில் சந்தனத்தாலான அடையாளம் உள்ளது. நீங்கள் அனைவரும் நம் கிருஷ்ணர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எனவே அவர் தொலைந்து போகமாட்டார்.
ராதாராணியும் அவளது சகிகளும் அவர்களது கிருஷ்ணருடன் அன்னை யசோதையின் வீட்டை அடைந்தனர். அன்னை யசோதை வீட்டின் உள்ளே கிருஷ்ணர் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதைக் பார்த்தார். அவர் கிருஷ்ணரை எழுப்பி ராதாராணியின் கிருஷ்ணருடன் நடனமாட அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவதை பார்க்கையில் பிரகாசிக்கும் இரண்டு நீலமணிகள் நடனம் ஆடுவதை போல காட்சி அளித்தார்கள். அனைவரும் நடனத்தை மிக ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அங்கு கூடியிருந்த அனைவரும் இதற்கு முன் இது போன்ற அற்புதமான நிகழ்வை பார்த்திருக்கவில்லை.
திடீரென்று யசோதயின் கிருஷ்ணரும் ராதாராணியின் கிருஷ்ணரும் ஒன்றாகிவிட்டார்கள் நடனமும் நிறைவுற்றது. எனவே ராதா ராணியும் அவரது சகிகளும் அவர்களது கிருஷ்ணருடன் புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள்
அன்னை யசோதையினால் அவரது கிருஷ்ணரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அழ ஆரம்பித்து விட்டார்கள். "எங்கே என் கிருஷ்ணா ?, எங்கே என் கிருஷ்ணா ? அவன் எங்கு சென்று விட்டான் ? நீங்கள் உங்கள் கிருஷ்ணரை எடுத்து செல்கின்றீர்கள் நீங்கள் தான் என் கிருஷ்ணரை எனக்கு திருப்பித் தரவேண்டும்".என்று பதட்டத்துடன் கூறினார்.
அதற்கு ராதாராணி , "நாங்கள் எங்கு சென்று உங்கள் கிருஷ்ணரை கண்டுபிடிக்க முடியும்? இதோ எங்கள் வாழ்க்கையும், ஆத்மாவுமான இந்த கிருஷ்ணர் உங்கள் மகன் அல்ல. எங்கள் கிருஷ்ணரின் நெற்றியில் சந்தனம் அடையாளம் நான் வைத்திருப்பதை சற்றுப் பாருங்களேன்". என்று கூறினாள்.
அன்னை யசோதை ராதையிடம் , "நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் அவர்களை நடனமாட வைத்தீர்கள் எனவே நீங்கள் தான் என் கிருஷ்ணரை எங்காவது மறைத்து வைத்திருக்க வேண்டும் இது உங்களது தந்திரம். ஓ ராதா நீ தந்திரங்கள் பல நன்கு அறிவாய்".என்று எனக்கு தெரியும் எனது கிருஷ்ணரை என்னிடம் தந்துவிடு என்று கூறினார்.
ராதாராணி, அன்னை யசோதையிடம் "இந்த முற்றம் மதில்சுவரலால் சூழப்பட்டுள்ளது இரண்டு கிருஷ்ணரும் இங்குதான் நடனம் ஆடினார்கள் அவர்கள் எங்கு சென்றாலும் நம்மால் கவனிக்க முடியும் நாங்கள் இவ்விடத்தை விட்டு நகரவே இல்லை என்று கூறினாள்.
பிறகு அன்னை யசோதை மிகுந்த பரிதாபமான குரலில் ராதையிடம், எனக்கு 5 அல்லது 7 குழந்தைகள் இல்லை. எனக்கு இருப்பது ஒரே ஒரு மகன். அவன் எங்களின் மகிழ்ச்சிக்கான செல்வம். அவன் எங்களுக்கு ஒரு வயதானவரின் கையிலிருக்கும் ஊன்றுகோல் போன்றவன். என் மகன் கிருஷ்ணன் என் வாழ்விற்கான மூச்சு.அவன் இல்லாத இத்தருணம் என் மூச்சு என் உடலை விட்டு வெளியேற உள்ளது..... ஓ ராதா !!! தயவு செய்து என் கிருஷ்ணரை திருப்பி தந்து என் வாழ்வை காப்பாற்று நான் உன் காலைப் பிடித்துக் கொள்கிறேன். தயவு செய்து என் கிருஷ்ணரை திருப்பி தந்துவிடு. இந்நாள் முதல் உன் வேலைக்காரியாக நான் இருக்கின்றேன்".என்று கூறினார்.
அன்னை யசோதை இவ்வாறு கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் ராதா ராணியை பார்த்து புன்னகைத்து லேசான ஒரு சைகை செய்து ஏதோ ஓர் அர்த்தத்தை சுட்டிக்காட்டுவது போல் பார்த்தார்.
ராதா ராணி யசோதையிடம் கூறினாள், "நீங்கள் பிருந்தாவனத்தின் ராணி ஆவீர், என்னை விட வயதில் மூத்தவர், என் வணக்கத்திற்கு உரியவர். நீங்கள் ஏன் என் கால்களை பிடிக்கிறீர்கள்? நீங்கள் என் கால்களை பிடிப்பது நான் குற்றம் இழைத்தது போன்றதாகும். ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகின்றீர்கள்?".
யசோதை கூறினார், "தயவு செய்து என் மகனை விரைவில் திருப்பித் தந்து விடு. பிறகு நீ உன் குற்றங்களலிருந்து விடுபட்டு விடுவாய்... இதனால் உன் பங்கில் எந்த பாவமும் இருக்காது."
ராதா ராணி கூறினாள், "எவ்வாறு உங்கள் மகனை அழைத்து வர முடியும்? எங்கு சென்று அவனை நான் தேடுவேன்?." ராதா ராணி இவ்வாறு கூறக் கேட்ட அன்னை யசோதை அழத் தொடங்கி மிகவும் பரிதாபமான குரலில் பேசினார், "அன்பிற்குரிய என் நீலமணி இல்லாமல் இனி என் வாழ்வை நான் தொடர மாட்டேன்" இவ்வாறு சொல்லியபடியே அன்னை யசோதை மயங்கி தரையில் விழுந்தார். இதைப் பார்ப்பதற்கு அவர் தன் வாழ்வை விட்டது போல் இருந்தது. ராதாராணி கிருஷ்ணரைப் பார்த்து ,. "இப்போது என்ன செய்வது? உன்னை தன் கர்ப்பத்தில் சுமந்த உன் அன்னை உன் கண் முன்னேயே இறந்து கொண்டிருக்கிறார்.... இப்போது என்ன செய்வதென்று தயவுசெய்து சொல்வாயாக....." என்று கூறினார்.
கிருஷ்ணர் ராதாராணியிடம், "நீ கவலைப்பட தேவையில்லை என் அன்னை நான் இழக்கப் போவதில்லை". அன்னை யசோதையின் காதின் அருகில் சென்று , "கிருஷ்ணரின் அன்னை யசோதை அவர்களே!! எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!... உங்கள் கிருஷ்ணர் திரும்பி வந்துவிட்டார்." என்று கூறு என்றார்.
ராதாராணி அவ்வண்ணமே செய்தார் "கிருஷ்ணா" என்ற பெயரைக் கேட்டதும் அன்னை யசோதை உடனடியாக எழுந்து . "ஓ ராதா ராணி, எங்கே என் கிருஷ்ணன்? எங்கே என் கிருஷ்ணன்? அவனை காண்பி என்று கூறினார்.
ராதா ராணி அன்னை யசோதையிடம் . "எங்களது கிருஷ்ணருடன் நடனம் ஆடியதால் ஏற்பட்ட களைப்பில் உங்களது கிருஷ்ணர் அவரது அறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார்".நீங்கள் சென்று பாருங்கள் என்று பதிலுரைத்தாள்.
ராதா ராணி பொய்யுரைக்க மாட்டாள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் அன்னை யசோதை உடனே கிருஷ்ணரின் அறைக்கு சென்றார். அங்கே கிருஷ்ணர் தனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். நந்த ராணி யசோதை தன் மகனை மிகுந்த பாசத்துடன் அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார். மாறி மாறி முத்தமிட்டார். பின்னர் எல்லா கோபியரும் தத்தமது இல்லங்களுக்கு திரும்பிச் சென்றனர். இவ்வாறு கிருஷ்ணர் ஸ்ரீமதி ராதாராணி யின் மகத்துவத்தை நிலைநாட்டினார்.
ஹரே கிருஷ்ண !
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment