பதம் 1
நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம்
லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்
யஷோதா-பியோலூகலாத் தாவமானம்
பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா
மொழிபெயர்ப்பு
பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுறா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்டதும் பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்து விட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 2
ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜன்தம்
கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம்
முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட
ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்
மொழிபெயர்ப்பு
(அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்டதும்) அவர் அழுதபடி தாமரை கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும்மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில் அவர் அணிந்திருக்கும் முத்து மணி மாலை, விம்மி அழுவதனால் அங்குமிங்கும் அசைகின்றது. கயிற்றினால் அல்ல, தமது அன்னையின் அன்பினால் வயிற்றில் கட்டப்பட்ட முழுமுதற் கடவுள் ஸ்ரீ தாமோதரருக்கு எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 3
இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்டே
ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்
ததீயேஷித-ஜ்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்
புன: ப்ரேமதஸ் தம் ஷதாவ்ருத்தி வந்தே
மொழிபெயர்ப்பு
அத்தகு பால்ய லீலைகளினால் கோகுலவாசிகளை அவர் ஆனந்தக் கடலில் மூழ்கடிக்கின்றார். இதன் மூலமாக, மதிப்புமரியாதையைக் கடந்த நெருக்கமான தூய பக்தர்களால் மட்டுமே தம்மை வெல்ல முடியும் என்பதை, ஐஸ்வர்ய ஞானத்தில் மூழ்கியுள்ள பக்தர்களுக்கு அவர் வெளிப்படுத்துகிறார். மீண்டும்மீண்டும் எனது பணிவான வணக்கத்தை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறை சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 4
வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சான்யம் வ்ருணே ஹம் வரேஷாத் அபீஹ
இதம் தே வபுர் நாத கோபால-பாலம்
ஸதா மே மனஸ்யாவிராஸ்தாம் கிம் அன்யை:
மொழிபெயர்ப்பு
வரம் நல்குவோரில் சிறந்தவரான எம்பெருமானே, அரூபமான முக்தி, உயர்ந்த முக்தியான வைகுண்ட பிராப்தி, அல்லது வேறு எந்த வரத்தையும் நான் தங்களிடம் வேண்டுவதில்லை. பிரபுவே, விருந்தாவனத்திலுள்ள உமது பால கோபால ரூபம் என் மனதில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். இதைக் கைவிட்டு வேறு வரத்தைப் பெறுவதால் என்ன பயன்?
பதம் 5
இதம் தே முகாம்போஜம் அத்யந்த-நீலைர்
வ்ருதம் குன்தலை: ஸ்நிக்த-ரக்தைஷ் ச கோப்யா
முஹுஷ் சும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே
மனஸ்யாவிராஸ்தாம் அலம் லக்ஷ-லாபை:
மொழிபெயர்ப்பு
எம்பெருமானே, செம்மை கலந்த மிருதுவான கருமை நிற சுருள் கூந்தலால் சூழப்பட்டுள்ள தங்களின் தாமரைத் திருமுகம் மீண்டும்மீண்டும் அன்னை யசோதையினால் முத்தமிடப்படுகிறது; உதடுகள் கோவைப் பழம்போல சிவந்துள்ளன. இத்தாமரைத் திருமுகம் எப்போதும் என் மனதில் தோன்றுவதாக. எனக்கு இலட்சக்கணக்கான இதர இலாபங்களால் எந்தப் பயனும் இல்லை.
பதம் 6
நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ
ப்ரஸீத ப்ரபோ துக்க- ஜாலாப்தி-மக்னம்
க்ருபா-த்ருஷ்டி-விருஷ்ட்யாதி-தீனம் பதானு
க்ருஹாணேஷ மாம் அஜ்ஞம் ஏத் யக்ஷீ-த்ருஷ்ய:
மொழிபெயர்ப்பு
முழுமுதற் கடவுளே, எனது பணிவான வணக்கத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். தாமோதரா! அனந்தா! விஷ்ணு! பிரபுவே, என்மீது திருப்தியடைவீராக. உலகாயத துன்பக் கடலில் மூழ்கி முட்டாளாக இருக்கும் என் மீது கருணை மிகுந்த தங்களது பார்வையைப் பொழிந்து என்னை விடுவியுங்கள்; எனது கண்களுக்கு காட்சியளியுங்கள்.
பதம் 7
குவேராத்மஜெள பத்த-மூர்த்யைவ யத்வத்
த்வயா மோசிதெள பக்தி-பாஜெள க்ருதெள ச
ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச
ந மோக்ஷே க்ரஹோ மே ஸ்தி தாமோதரேஹ
மொழிபெயர்ப்பு
தாமோதரரே, மர உரலில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள உமது ரூபத்தால், குபேரனின் இரு மகன்களும் (மணிக்ரீவன், நளகூவரன்) நாரதரின் சாபத்திலிருந்து விடுபட்டு மாபெரும் பக்தர்களாயினர். அதுபோன்ற பிரேம பக்தியை எனக்கும் கொடுங்கள். நான் அதற்காகவே காத்திருக்கிறேன், வேறு எந்த முக்தியிலும் எனக்கு ஆசையில்லை.
பதம் 8
நமஸ்தே ‘ஸ்து தாம்னே ஸ்புரத்-தீப்தி-தாம்னே
த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே
நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை
நமோ ‘நந்த-லீலாய தேவாய துப்யம்
மொழிபெயர்ப்பு
தாமோதரரே. நான் எனது முதற்கண் வணக்கத்தை உமது வயிற்றைக் கட்டியுள்ள அந்த பளபளப்பான அர்ப்பணிக்கின்றேன். பின்னர், முழு பிரபஞ்சத்தின் இருப்பிடமான உம்முடைய வயிற்றிற்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீமதி ராதாராணிக்கும், அதன் பின்னர் அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எமது வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment