உபாக்யானே உபதேசம்
( அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )
மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்
பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்
ஒரு முறை, ஒரு ஆன்மீக குரு தன்னுடைய சந்நியாச சீடனுக்கு பகவத் கீதையை கொடுத்து, அதை தினமும் இடைவிடாமல் படிக்குமாறு அறிவுறுத்தினார். குருவின் கட்டளையை ஏற்ற சந்நியாச சீடன், விந்திய மழையின் ஒரு குகையில் அமர்ந்து, பகவத் கீதையை தினமும் படிக்க ஆரம்பித்தார்.
அந்த குகையில் இருந்த ஒரு சிறிய எலி, பகவத் கீதையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து தின்ன ஆரம்பித்தது. எலியுடைய இந்த சேட்டையை பார்த்த அந்த சீடர், அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு பூனையை கொண்டு வந்தார்.
அடுத்த பிரச்சனை வந்தது. பூனையை பராமரிக்க பால் தேவை என்பதை உணர்ந்தார். இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு பசுவை தேடினார். பகவானின் கருணையால் ஒரு அன்புள்ளம் கொண்டவர், இந்த சீடருக்கு பசுவை தானமாக வழங்கினார். மிகவும் மகிழ்ந்த சீடர், தனது இருப்பிடத்திற்கு வந்தார்.
அடுத்த பிரச்சனை வந்தது. பசு குகைக்குள் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கு ஒரு தொழுவத்தை கட்ட முடிவு செய்தார். தானே வனத்திற்குள் சென்று மரங்களை சேகரித்து மிகவும் சிரமேற்கொண்டு ஒரு கொட்டகையை அவரே கட்டி முடித்தார்.
அடுத்த பிரச்சனை வந்தது. மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வது, பால் கறப்பது, மாடு மேய்ப்பது - என்று அவருக்கு வேலை கூடிக்கொண்டே போயிற்று. தன்னுடைய ஆன்மீக கடமைகளை செய்ய முடியவில்லையே என்று வருந்திய அவர், பசுவை பராமரிக்க ஒரு இடையனை பணியமர்த்த முடிவு செய்தார். அதன்படியே செய்தார்.
அடுத்த பிரச்சனை வந்தது. இடையனுக்கு உணவளிப்பது மற்றும் இதர வேலைகளை செய்வது யார் என்ற பிரச்சனை? இறுதியாக தான் சந்நியாசம் மேற்கொண்டதையே மறந்து ஒரு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் பெரிதானது. அவருடைய செல்வமும் பெருகியது. கடமைகளும் கூடின. ஒரு முழு குடும்பஸ்தனாக மாறிய அவர், பகவத் கீதையை படிப்பதையே மறந்து விட்டார்.
சில காலம் கழித்து தன்னுடைய சீடரை தேடி வந்த ஆன்மீக குரு, அந்த சீடரின் செல்வ செழிப்பையும் குடும்பத்தையும் பார்த்து, மிகுந்த கோபத்தோடு "என்ன இதெல்லாம்??", என்று கேட்டார். அந்த சீடர், கூப்பிய கரங்களோடு குருவிடம், "நீங்கள் கொடுத்த பகவத் கீதையை பாதுகாக்க நான் செய்த ஏற்பாடு இது" என்று கூறினான்.
நீதி
"யுக்த வைராக்கியம்" என்ற பெயரில், ஒரு கிருஷ்ண பக்தர் எப்போதும் தன்னுடைய தேவைகளை பெருக்கிக்கொள்ள கூடாது. பக்தி தொண்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு பக்தர் தன்னை ஒருபோதும் ஒரு முக்தி அடைந்த ஆன்மாவோடு ஒப்பிடக்கூடாது. சந்நியாசியாக இருந்தாலும் சரி, க்ரிஹஸ்தராக இருந்தாலும் சரி, ஒரு பக்தர் எப்போதும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பின்பற்ற வேண்டும். சாஸ்த்திரத்தில், "யவன்னிற்வஹ பிரதிகிரஹ" - "பகவான் ஸ்ரீ ஹரியின் வழிபாட்டில் ஈடுபடுவதற்கு எவ்வளவு செல்வம் வேண்டுமோ, அவ்வளவு செல்வம் மட்டுமே ஒருவர் ஈட்ட பாடுபட வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது. ஒருவன் தேவைக்கு அதிகமாக செல்வம் திரட்டுவது அல்லது கடமைகள் எதுவும் செய்யாமல் இருப்பது - இந்த இரண்டுமே ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும்.
ஒருவர் ப்ரஹ்மச்சாரி, வானப்ரஸ்தா மற்றும் சந்நியாசம் - ஆகிய மூன்று ஆசிரமங்களில் இருக்கிறார் என்றால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையேல் இந்த கதையில் உள்ளபடி பந்தங்களில் சிக்கி கொள்ள நேரிடும். அந்தந்த ஆசிரமத்திற்குரிய நியமங்களை கடைபிடிக்காமல் பெயரளவிற்கு 'பிரமச்சாரி', 'சந்நியாசி' என்று கூறுவது பலனளிக்காது.
பகவான் ஹரியின் பக்தி தொண்டில் ஈடுபடும்போது மாயாவிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மனிதன் எந்த ஆசிரமத்தில் இருந்தாலும், அவனுடைய புலன்கள் எப்போதும் இன்பத்தையே தேடும்.
பகவானிடம் சரணடைந்த ஆன்மீக குருவிடமிருந்து நாம் அறிவுரைகளை ஏற்று அதை பின்பற்றுவது போல தோன்றலாம். ஆனால் குரூரமான நம்முடைய மனது எப்போதும் புலனின்பத்தையே நாடும். மேலும், இந்த தேவை (புலனின்பம்) ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும்", என்று நம்முடைய மனம் நம்மையே ஏமாற்றும். க்ரிஹஸ்தர்கள் பெரும்பாலும் "நான் கிருஷ்ண பக்தியில் இருக்கிறேன்" என்று கூறுவார்கள். அனால் உண்மையில், தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் தொழில், பதவி மீது அதீத அக்கறை செலுத்துவார்கள். இது தான் யுக்த வைராக்கியம் என்று நினைக்கின்றனர்.
ஒரு சந்நியாச பக்தர், தனக்கு பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இது முழுமையான ஆன்மீக அழிவிற்கு வழிவகுக்கும்.
ஆகையால் நாம் தூய கிருஷ்ண பக்தியில் ஈடுபட நாம் செய்யவேண்டியவை:
• பகவான் மற்றும் தூய பக்தர்களின் கருணையை ஈட்ட வேண்டும்;
• பகவானிடம் சரணடைந்த தூய பக்தர்களோடு மட்டுமே சங்கம் வைத்துக்கொள்ள வேண்டும்;
• பகவான் மற்றும் ஆன்மீக குருவிடம் செய்து கொடுத்த வாக்குறுதிகளை என்றும் மறக்கவோ மீறவோ கூடாது;
• நாம் செய்த தவறுகளை ஒளிவு மறைவு இன்றி குருவிடம் தெரிவித்து அதற்கான மன்னிப்பு கோர வேண்டும்.
இவை அனைத்தையும் பின்பற்றினால் பகவானுடைய தூய பக்தியை அடைய குருவின் கருணை நிச்சயம் கிடைக்கும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment