ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணாஸ் தைர்
யுக்த:பர:புருஷ ஏக இஹாஸ்ய தத்தே
ஸ்திதி-ஆதயே ஹரி-விரின்சி-ஹரேதி ஸம்ஞா:
ஸ்ரேயாம்ஸி தத்ர கலு சத்வ-தனோர் நிர்ணாம் ஸ்யு:
மொழிபெயர்ப்பு
தெய்வீக புருஷராகிய பகவான், ரஜோ குணம், சத்வ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய ஜட இயற்கையின் முக்குணங்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும் ஜடவுலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் முத்தொழில்களுக்காக அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று குண அவதாரங்களை ஏற்றுக்கொள்கிறார். இம்மூவருள், நற்குண (சத்வ) ரூபமான விஷ்ணுவிடமிருந்தே மக்களனைவரும் முடிவான நன்மைகளைப் பெற முடியும்
பொருளுரை
மேலே குறிப்பிட்டதுபோல், விரிவங்கங்களாகத் தோன்றியுள்ள அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்ற வேண்டும் என்பது இப்பதத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அவரது எல்லா விரிவங்கங்களும் ‘விஷ்ணு-தத்வங்கள்’ அல்லது பரம புருஷர்களேயாவர். ஸ்ரீ கிருஷ்ணரிலிருந்து வரும் அடுத்தத் தோற்றம் பலதேவராவார். பலதேவரிலிருந்து சங்கர்ஷணரும், சங்கர்ஷணரிலிருந்து நாராயணரும், நாராயணரிலிருந்து இரண்டாவது சங்கர்ஷணரும், இந்த சங்கர்ஷணரிலிருந்து விஷ்ணுவின் புருஷ-அவதாரங்களும் தோன்றுகின்றனர். நற்குணத்திற்கு அதிபதியாக உள்ள விஷ்ணு, க்ஷீரோதகசாயீ விஷ்ணு அல்லது பரமாத்மா என்றறியப்படும் புருஷ-அவதாரமாவார். பிரம்மா ரஜோ குணத்திற்கும், சிவன் தமோ குணத்திற்கும் அதிபதிகளாக உள்ளனர். ஜட உலகிலுள்ள முக்குணங்களின் முப்பெரும் இலாகாக்களுக்கு இவர்கள் தலைவர்களாக உள்ளனர். விஷ்ணுவின் நற்குணத்தினால் படைப்பு சாத்தியமாக்கப்படுகிறது. மேலும் பிரளய காலத்தில் சிவபெருமான் தமது சிவதாண்டவத்தினால் அதை அழித்து விடுகிறார். பௌதிகவாதிகளும், மூடர்களும் முறையே பிரம்மனையும், சிவனையும் வழிபடுகின்றனர். ஆனால் தூய ஆன்மீகிகள் நற்குண ரூபியான விஷ்ணுவை, அவரது பல்வேறு உருவங்களில் வழிபடுகின்றனர். விஷ்ணு, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான அம்சங்களாகவும், பிரிக்கப்பட்ட பின்னப்பகுதிகளாகவும் தோன்றுகிறார். அம்சங்கள் பரம புருஷ பகவான் என்றும், பிரிக்கப்பட்ட பகுதிகள் ஜீவாத்மாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஜீவாத்மா மற்றும் பரம புருஷ பகவான் ஆகிய இருவருக்குமே அவர்களது நிலையான ஆன்மீக உருவங்கள் உள்ளன. ஜீவராசிகள் சில சமயங்களில் ஜட சக்தியின் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகின்றனர். ஆனால் விஷ்ணு மூர்த்திகள் எப்பொழுதும் ஜட சக்தியை ஆள்பவர்களாகவே இருக்கின்றனர். பரம புருஷராகிய பகவான் விஷ்ணு, ஜட சக்தியின் ஆதிக்கத்திலுள்ள பந்தப்பட்ட ஜீவராசிகளை விடுவிப்பதற்காக இந்த ஜட உலகில் அவதரிக்கின்றார். இத்தகைய உயிரினங்கள் ஜடவுலகை அடக்கியாளும் எண்ணத்துடன் இவ்வுலகில் தோன்றி இயற்கையின் முக்குணங்களில் சிக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாக, வெவ்வேறு கால அளவுகளைக் கொண்ட சிறைவாசத்தை அனுபவிப்பதற்காக ஜீவராசிகள் தங்களது பௌதிக உடலை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஜடவுலகமெனும் சிறைச்சாலை, பரம புருஷரின் ஆணையின் கீழ் பிரம்மாவால் படைக்கப்படுவதாகும். மேலும் கல்ப முடிவில் அனைத்தும் சிவனால் அழிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், நாட்டின் சிறைச்சாலை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவதைப் போல், இந்த சிறைச் சாலையைப் பாதுகாக்கும் பொறுப்பை விஷ்ணு ஏற்றுக்கொள்கிறார். ஆகவே, தொடர்ச்சியான பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் போன்ற துன்பங்கள் நிறைந்ததான ஜட வாழ்வெனும் இச்சிறைக் கூடத்திலிருந்து வெளியேற ஆவல் கொண்டுள்ள ஒருவன், அத்தகைய முக்தியைப் பெறுவதற்கு பகவான் விஷ்ணுவை திருப்தி செய்யவேண்டும். பகவான் விஷ்ணு பக்தித் தொண்டினால் மட்டுமே வழிபடப்படுகிறார். மேலும் ஜடவுலகிலுள்ள சிறை வாழ்வைத் தொடர வேண்டியுள்ள ஒருவர் தற்காலிகமான விடுதலைக்காக, அதற்குரிய வசதிகளை சிவன், பிரம்மா, இந்திரன் மற்றும் வருணன் முதலான தேவர்களிடம் கேட்டுப் பெறலாம். இருப்பினும், பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டுள்ள ஜீவராசிகளை எந்த தேவராலும் விடுவிக்க முடியாது. விஷ்ணுவால் மட்டுமே இதைச் செய்யமுடியும். எனவே, பரம புருஷரான விஷ்ணுவிடமிருந்துதான் முடிவான நன்மை அடையப்படுகிறது.
(ஸ்ரீமத் பாகவதம் (பாகவத புராணம்) ஸ்கந்தம் 1 அத்தியாயம் 2 பதம் 23)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Hare Krishna Prabhu,I under stand the concept.
ReplyDeleteHare Krishna
ReplyDelete