ஸ்ரீபாத இராமானுஜாசாரியருக்கு பிரியமான ஸ்தலம்
வழங்கியவர்: அத்புத ஹரி தாஸ்
தென்னிந்தியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், பாரத பாரம்பரியத்தின் மிகமுக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான இராமானுஜர் உட்பட பலருக்கும் அடைக்கலம் கொடுத்த திருத்தலம்.
மேல்கோட்டை, மைசூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீபாத இராமானுஜாசாரியரைப் பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களால், உலகின் மிக முக்கியமான நான்கு புனித ஸ்தலங்கள் என்று கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இராமானுஜர் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் தங்கி, விக்ரஹ வழிபாட்டிற்குரிய உயரிய தரத்தை வகுத்துக் கொடுத்தார், இஃது இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
மேல்கோட்டையின் பிரதான கோயில் திருநாராயணரின் திருக்கோயில்; மேலும், இங்குள்ள ஒரு குன்றின் மீது யோக நரசிம்மருக்கென அமைக்கப்பட்டுள்ள கோயிலும் முக்கியமானதாகும்.
மேல்கோட்டையை தரிசிப்பதற்கு நான் எனது ஆன்மீக குருவான தவத்திரு. ஸ்ரீதர ஸ்வாமி, மற்றும் சில இஸ்கான் பக்தர்களுடனும் சென்றேன். பல தென்னிந்திய கோயில்களில் விஷேச பூஜைகள் செய்ய நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு, அப்பூஜையை நேரடியாக காணும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, நாங்களும் யோக நரசிம்மருக்கான சிறப்பு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்
மதியம் பதினொரு மணியளவில் மலையடிவாரத்திற்குச் சென்றோம். மலைப்பாதையின் படிகளில் ஏறி நுழைவு கோபுரத்தை அடைந்து, அங்குள்ள பல கூடங்களையும் தாழ்வாரங்களையும் கடந்தவுடன், கோயிலின் பிரதான அர்ச்சகரான நாராயண பட்டரால் நாங்கள் வரவேற்கப்பட்டோம். அபிஷேகத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அவர் தயாராக வைத்திருந்தார். பால், தயிர், தேன் முதலியவற்றால் நரசிம்மருக்கு அபிஷேகம் செய்ய தொடங்கினார். அர்ச்சகர்கள் பவமான-ஸூக்தம் என்று அழைக்கப்படும் தூய்மைப்படுத்தும் பிரார்த்தனைகளையும், பகவானைப் புகழக்கூடிய நாராயண உபநிஷத் மற்றும் விஷ்ணு-ஸூக்த மந்திரங்களையும் உச்சரித்தனர்.
அபிஷேகத்திற்கு பிறகு கருவறைக் கதவுகள் ஐந்து நிமிடங்கள் மூடப்பட்டன. பின்னர் கதவுகள் திறக்கப்பட்டபோது, பகவானின் திருமேனி முழுவதும் மஞ்சள் பொடியால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அர்ச்சகர் பகவானுக்கு கற்பூரம், நெய்தீபம், வெற்றிலை, பாக்கு, மற்றும் வாழைப்பழத்தை சமர்ப்பித்து, பின்னர் அவற்றை பிரசாதமாக எங்களுக்கு வழங்கினார்.
நாங்கள் கருவறையில் நின்று கொண்டிருந்தோம், தரிசனத்திற்கு வந்த இதர பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பகவானுக்கு அலங்காரம் செய்வதற்காக கதவுகளை மூடிய அர்ச்சகர்கள் எங்களை வெளியே காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர். வாழைப் பழம், வெல்லம், தேன், இளநீர், மற்றும் துளசி இலைகள் கலந்த சரணாம்ருதத்தை (அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை) எங்களுக்கு அளித்தனர்.
கோயிலைச் சுற்றி
இறைவனுக்கு அலங்காரம் நடக்கும் நேரத்தில், கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று அங்கிருந்து மேல்கோட்டையின் முழு அழகையும் கண்டோம். மேல்கோட்டையின் முக்கிய இடங்களான திருநாராயணர் கோயில், கல்யாணி குளம், மேல்கோட்டையில் (ஒரு காலத்தில்) அமைந்திருந்த கோட்டையின் சிதைவுற்ற நுழைவாயில் ஆகியவற்றைக் கண்டோம். மேலும், அங்குள்ள சமஸ்கிருத மொழி ஆராய்ச்சி மையம், பழமையான புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஆகியவற்றையும் கண்டோம்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து இடங்களும் மலையின் மேலிருந்து தெளிவாக தெரிந்தன. இரவு நேரத்தில் மைசூர் நகரின் மின்விளக்குகளைக்கூட காணலாம் என்று அர்ச்சகர் எங்களிடம் கூறினார்.
பிரஹலாதர் குகை
இங்குள்ள நரசிம்மரின் விக்ரஹம் மாமன்னர் பிரஹலாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை நாரதீய புராணத்தின்படி அர்ச்சகர் ஒருவர் எங்களுக்கு விளக்கினார். இவ்விடத்தில் தவம் புரிந்து வந்த விஷ்ணு சித்தன் என்ற துறவியைக் காணவந்த பிரஹலாதர் நரசிம்மரை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். அர்ச்சகர் எங்களை கோயிலின் அடியிலுள்ள பிரஹலாதர் தியானம் செய்த குகைக்கு அழைத்தார். அவருடைய அழைப்பை ஏற்று, எங்களில் சிலர் கோயிலின் பின்புறத்திற்குச் சென்றோம். அதன் நுழைவாயில் குறுகலான படிகளைக் கொண்டிருந்தது. அங்கே நாங்கள் குனிந்து சென்றோம், பின்னர் தவழ்ந்து செல்ல நேரிட்டது. பிரஹலாதர் தியானம் செய்த இடம் மூலவர் அமைந்துள்ள இடத்திற்கு நேராக அடியில் அமைந்துள்ளது. அங்கிருந்து மேலும் சற்று தவழ்ந்து, கோயிலின் தாழ்வார பகுதி வழியாக வெளியே வந்தோம்.
அச்சமயத்தில் பகவானுக்கு அலங்காரம் முடிந்திருந்ததால், அவரை தரிசிக்கச் சென்றோம். அர்ச்சகர்கள் நரசிம்மரின் 108 நாமங்களைக் கூற, மற்றொரு அர்ச்சகர் 108 துளசி இலைகளை அவரது பாதத்திற்கு சமர்ப்பித்துக் கொண்டிருந்தார்.
நரசிம்மரை தரிசிக்க பெரும் கூட்டம் கூடிவிட்டது. யோக நரசிம்மர் சிவப்பு-வெள்ளை நிற ஆடையணிந்து, மலர்களாலும் துளசி மாலை களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தலையில் அழகிய கிரீடம் அணிந்து திருக்கரங்களில் தங்க கவசமும் அணிந்திருந்தார். அவர் தனது இரு கரங்களை முழங்கால் மீது வைத்தபடியும், மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியபடியும் இருந்தார்.
கல்யாணி குளம்
யோக நரசிம்மர் கோயிலில் இருந்து இறங்கி வந்து, அங்கு வசிக்கும் அர்ச்சகரான சுதர்சன ஆச்சாரியரைக் காணச் சென்றோம். வழியில், மேல்கோட்டையில் உள்ள திருக்குளங்கள் அனைத்திற்கும் மேன்மையானதாக விளங்கும் கல்யாணி குளத்திற்குச் சென்று, அதன் நீரை தலையில் தெளித்து மரியாதை செலுத்தினோம். ஈஸ்வர சம்ஹிதையின்படி, பகவான் தனது வராஹ அவதாரத்தில் பூமியை பிரபஞ்சக் கடலில் இருந்து தூக்கியபோது, அவரது உடலிலிருந்து சிதறிய நீர்த் துளிகளிலிருந்து கல்யாணி குளம் உருவானது. மத்ஸ்ய புராணத்திலிருந்து, பகவான் விஷ்ணுவின் சேவகரான கருடன், இப்பிரபஞ்சத்தினுள் உள்ள விஷ்ணுவின் திருத்தலமான ஸ்வேத-தீபத்திலிருந்து வெள்ளை நிற களிமண்ணைக் கொண்டு வந்து இக்குளத்தை வடிவமைத்தார் என்பதை அறிகிறோம்.
சுதர்சன ஆச்சாரியரின் இல்லத்தில்
பிரதான வீதியை கடந்து சுதர்சன ஆச்சாரியரின் இல்லத்தை அடைந்தோம். அங்கு இரண்டு மணி நேரம் தங்கினோம். பகவான் கிருஷ்ணர், பகவான் பலராமர், பகவான் இராமசந்திரர், பகவான் தத்தாத்ரேயர், பாண்டவர்கள், நாரதர், பிரஹலாதர், பராசர முனிவர், ஸ்ரீ இராமானுஜர் என பலரும் மேல்கோட்டையை தரிசித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அவரது முன்னோர்களுக்கு இராமானுஜாசாரியர் வழங்கிய சுதர்சன சக்கரம் மற்றும் லக்ஷ்மி நரசிம்மரின் விக்ரஹங்களையும் எங்களுக்கு காண்பித்தார். அவரது இல்லத்தில் மதிய உணவருந்திய பின்னர், மாலை நான்கு மணிக்கு திருநாராயணரின் கோயில் நடைதிறப்பிற்குச் சென்றோம்.
திருநாராயணர் கோயில்
பகவான் நாராயணர் பிரம்மதேவரின் தவத்திற்கு இணங்கி, இங்குள்ள கோயிலில் விக்ரஹமாக தோன்றினார் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள திருநாராயணரின் கோயில் பஞ்சராத்ர ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களுக்கு முழுமையாக பொருந்தவில்லை என்றாலும், இவ்விடம் மிகச்சிறந்த புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.
கோயிலினுள் நுழைவாயிலுக்கு நேர் எதிரில் திருநாராயணரின் சந்நிதி அமைந்துள்ளது. ஐந்து அல்லது ஆறு அடி உயரத்தில் உள்ள எம்பெருமான், ஒரு கரத்தில் அபய முத்திரையுடன், மற்ற மூன்று கரங்களில் சங்கு, சக்கரம், மற்றும் கதையை ஏந்தியும் காட்சியளிக்கின்றார். அர்ச்சகர்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். இந்த விக்ரஹம் இராமானுஜாசாரியரால் எறும்பு புற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டவர்; அவரது கனவில் பகவான் தோன்றி தம்மை வெளிக்கொணர்வதற்கு வழிகாட்டினார்.
செல்வ நாராயணர்
நுழைவாயிலின் வலதுபுறம் ஒரு தனி சந்நிதியில் திருநாராயணரின் உற்சவ விக்ரஹமான செல்வ நாராயணர் வீற்றுள்ளார். செல்வ நாராயணர், செல்வப் பிள்ளை, சம்பத்-குமாரர், இராமபிரியர் ஆகிய பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார். இவர் பகவான் இராமசந்திரரால் மிகவும் பிரேமையுடன் வணங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகவான் நாராயணர் இங்கு எவ்வாறு வந்தார் என்பதை நாரதீய புராணத்தில் நாரதரிடம் சாதுக்கள் கேட்க, அவர் அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்.
நாராயணரின் இந்த விக்ரஹம் முதலில் பிரம்மதேவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், அவர் தனது புதல்வர்களில் ஒருவரான சனத் குமாரரிடம் இவரை வழங்கினார். பகவான் விஷ்ணு தமது படுக்கையான ஆதிசேஷனிடம், மேல்கோட்டையில் ஒரு மலையின் வடிவத்தை எடுத்து, தனது வருகைக்காக காத்திருக்கும்படி ஆணையிட்டார். அதன் பின், நாராயண விக்ரஹத்தை சனத் குமாரர் மேல்கோட்டைக்கு கொண்டு வந்தார். பின்னர், சனத் குமாரர் இவ்விக்ரஹத்தை பகவான் இராமருக்கு பரிசளித்தார், இராமரின் மகனான குசன் தனது மகளை யது வம்சத்தினருக்கு திருமணம் செய்விக்கையில், இந்த விக்ரஹத்தையும் வரதட்சணையாக வழங்கினார்.
பின்னர், யது வம்சத்தினர் இவரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். அச்சமயத்தில், பாற்கடலில் வாழும் பகவான் விஷ்ணுவின் வைர கிரீடத்தை பிரஹலாதரின் மகனான விரோசனன் திருடினான். கருடன் அவனைக் கொன்று கிரீடத்தை மீட்டார். கிரீடத்துடன் திரும்பும் வழியில், கிருஷ்ணர் விருந்தாவனத்தில் தனது நண்பர்களுடனும் பசுக்களுடனும் விளையாடுவதைக் கண்ட கருடன், அக்கிரீடத்தை கிருஷ்ணருக்கு அளித்தார். அதன் பின்னர், கிருஷ்ணர் அதனை யது வம்சத்தினரின் இந்த விக்ரஹத்திற்கு அணிவித்தார். (வைரமுடி சேவை தற்போதும் இங்கு மிக முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.)
பகவான் பலராமர் ஒருமுறை தனது யாத்திரையை முடித்து துவாரகைக்கு திரும்பியபோது, மேல்கோட்டையில் இருக்கும் திருநாராயண விக்ரஹம் இங்குள்ள இராமபிரிய விக்ரஹத்தைப் போலவே காட்சியளிப்பதாகக் கூறினார். அவர்கள் இராமபிரியரை மேல்கோட்டைக்குக் கொண்டு சென்று, திருநாராயணரின் முன்பு வைத்தனர்; இருவரின் உருவத்திலும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. அதைத் தொடர்ந்து இராமபிரியர் மேல்கோட்டையிலேயே தங்கி விட்டார். யதுக்கள் அவரை வழிபட மேல்கோட்டைக்கு வரத் தொடங்கினர், காலப்போக்கில் இராமபிரியர் யதுக்களின் குல தெய்வமாக மாறினார்.
தூண்களின் மண்டபம்
இராமபிரியரை வணங்கிவிட்டு கோயிலைச் சுற்றி நடக்க ஆரம்பித்தோம். அனுமான், ஸ்ரீ லக்ஷ்மி, பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் சிறு சந்நிதிகளையும் தரிசித்தோம். லக்ஷ்மி தாயார் இங்கே யதுகிரி நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவர்களின் அருள் பகவானின் அருளைவிட முக்கியமானதாக கருதப்படுகிறது. அச்சன்னதிக்கு எதிரில் பெரும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட தூண்களின் மண்டபம் உள்ளது. அத்தூண்கள் ஒவ்வொன்றிலும் இராமாயணக் காட்சிகள், நடனமாடும் உருவங்கள் என பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன
ஸ்ரீபாத இராமானுஜர்
இத்தூண்களை பார்த்தபடி ஸ்ரீபாத இராமானுஜாசாரியரின் சந்நிதியை அடைந்தோம். இங்குள்ள இராமானுஜரின் விக்ரஹம், அவரது காலத்திலேயே வடிக்கப்பட்டு அவரால் அங்கீகரிக்கப் பட்டதாகும். மேல்கோட்டையிலிருந்து புறப்படுவதற்கு இராமானுஜர் முடிவெடுத்தபோது, அவரது விக்ரஹம் ஒன்றை செய்வதற்கு சீடர்கள் அனுமதி கேட்டனர். சீடர்கள் தன்மீது வைத்திருந்த குரு-பக்தியாலும் குரு-பிரேமையாலும் மகிழ்ந்த இராமானுஜர் அதற்கு சம்மதித்தார்.
இராமானுஜர் பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் வாழ்ந்தபோது, தமிழகத்தின் பெரும்பகுதியை குலோத்துங்க சோழன் என்ற கொடிய மன்னன் ஆண்டு வந்தான். அவன் விஷ்ணு வழிபாட்டிற்கு முற்றிலும் விரோதியாக இருந்ததால், பல்வேறு வைஷ்ணவர்கள் மேல்கோட்டையில் தஞ்சமடைந்தனர்; மேல்கோட்டையின் மக்களும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அம்மக்களின் தயாள குணத்தினால் மகிழ்ச்சியுற்ற இராமானுஜர், அவர்களை “திருக்குலத்தார்” என்று குறிப்பிட்டார்.
அக்காலத்தில், பித்திதேவன் என்ற ஜைன மத அரசர் கர்நாடகாவின் பேலூர் பகுதியை ஆண்டு வந்தார். பின்னர், அவர் இராமானுஜரின் சீடராக மாறி, விஷ்ணுவர்தன் என்ற வைஷ்ணவ பெயரை ஏற்றார். அவர் தனது குருவிற்கு செய்யும் தொண்டாக, திருநாராயணரின் கோயிலைப் புனரமைத்தார்.
இரவில் பெங்களுரை அடைந்தோம். மேல்கோட்டையின் மக்கள் வைஷ்ணவர்களுக்கு செய்த சேவைகளையும் அவர்களின் தூய்மையான பக்தித் தொண்டையும் எண்ணிப் பார்த்தோம். இக்கொள்கைகளை சைதன்ய மஹாபிரபுவும் வலியுறுத்தியுள்ள காரணத்தால், ஒரு பிணைப்பை உணர்ந்தோம்.
இஸ்லாமிய இளவரசியின் பக்தி
கற்களால் செய்யப்பட்ட பெரிய விக்ரஹங்களைக் கொண்ட கோயில்களில், திருவிழாக்களின் போது வெளியில் செல்வதற்கென்று சிறிய விக்ரஹங்கள் இருப்பது வழக்கம். அவர்கள் உத்ஸவ-மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். மேல்கோட்டையில் இருக்கும் உத்ஸவ-மூர்த்தி திருசெல்வ நாராயணர் (அல்லது செல்வப்பிள்ளை) என்று அழைக்கப்படுகிறார்; கோயிலும் திருசெல்வ நாராயணர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஒருமுறை இராமானுஜாசாரியரின் கனவில் தோன்றிய பகவான், இக்கோயிலின் உத்ஸவ-மூர்த்தியினை இங்கு சூறையாட வந்த முகலாயர்கள் கொண்டு சென்று விட்டனர் என்றும், விக்ரஹம் தற்போது தில்லியில் உள்ளது என்றும் கூறினார். தனது சீடர்களுடன் தில்லி சென்ற இராமானுஜர், தென்னிந்தியக் கோயில்களைச் சூறையாடிய சுல்தானைச் சந்தித்து, விக்ரஹத்தைத் திருப்பித் தரும்படி வேண்டினார். சுல்தான் அவரிடம் பல்வேறு விக்ரஹங்களைக் காட்டினார், ஆனால் இராமானுஜர் அவற்றில் எந்த விக்ரஹத்தையும் ஏற்கவில்லை. தனக்கு வேண்டிய விக்ரஹம் இளவரசியின் அந்தப்புறத்தில் இருப்பதாக இராமானுஜர் தெரிவித்தார். சுல்தானோ தங்களுக்கு அந்த விக்ரஹம் வேண்டுமெனில், தாங்களே விக்ரஹத்தை இங்கு வரவழையுங்கள் என்றார்.
இராமானுஜர் ஓர் இனிமையான பாடலைப் பாடி, “செல்வமே வா,” என்று அழைத்தார். விக்ரஹம் ஓர் அழகிய சிறுவனின் வடிவில் வந்து அவரது மடியில் அமர்ந்தார். தெய்வீகக் குழந்தையைப் பெரும் பாசத்துடன் அரவணைத்த இராமானுஜர், அவரை ஸம்பத்-குமாரர் (இளைய பெருமான்”) என்று அழைத்து, மேல்கோட்டைக்கு எடுத்துச் சென்றார்.
பகவானின் பிரிவைத் தாங்கவியலாத இளவரசி இராமானுஜரைப் பின்தொடர்ந்தாள். இளவரசியின் துணைக்காக தனது படையை சுல்தான் அனுப்பி வைத்தார், ஆனால் அவர்கள் எதிரியின் இராஜ்ஜியத்தினுள் நுழைந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இளவரசியோ தனது பயணத்தை நிறுத்தவில்லை. அவள் மேல்கோட்டையை அடைந்தபோது, முஸ்லீம் என்ற காரணத்தினால் கோயிலினுள் அவளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அவள் தனது வாழ்வை தவத்தில் கழிக்க முடிவு செய்தாள். அதனைக் கேள்விப்பட்ட இராமானுஜர் அவளை கோயிலினுள் விடும்படி தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். கோயிலினுள் நுழைந்த அவள் பகவானுடன் ஒன்றற கலந்தாள்.
திருசெல்வ நாராயணரின் திருவடிகளில், பீபி நாச்சியார் என்று அந்த இளவரசியின் விக்ரஹத்தை இராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். அன்றிலிருந்து, இக்கோயிலின் நைவேத்யங்கள் அவள் மூலமாகவே செய்யப்படுகிறது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Hare Krishna Prabhu, I understood the brief history clearly.
ReplyDeleteHare Krishna Prabhu
ReplyDelete