மார்கஸீர்ஷ மாதத்தில் ஆயர்குல
இளமங்கையர் அதிகாலையில் எழுந்து ஒருத்தி மற்றொருத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின்
கல்யாணகுணங்களைச் சிறப்பித்துக் பாடிக்கொண்டே யமுனை நதிக்கு நீராடச் செல்வர். நீராடி
முடித்த கோபியர்கள் கிருஷ்ணரே தமது கணவராக வர வேண்டும் என்று விரும்பி கார்த்தியாயினி தேவியை
தூய தீபங்கள் மற்றும் மலர்களைக் கொண்டு வழிபடுவர்.
ஒரு நாள் காலையில் கோபியர் தமது ஆடைகளைக் கரையில்
களைந்து வைத்துவிட்டு, யமுனை நதியில் இறங்கி கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றியபடியே நீர்
விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு தோன்றிய கிருஷ்ணர் கோபியர்களின்
ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் நின்ற ‘கதம்ப’ மரத்தில் ஏறிக் கொண்டார்.
கோபியர்களைக் கேலி செய்ய விரும்பிய கிருஷ்ணர் அவர்களிடம் “நீங்கள் மேற்கொண்ட விரதங்களினால்
எவ்வாறு களைப்புற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆகையினால் கரைக்கு வந்து
உங்களது ஆடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
இதனைக் கேட்டுச் சினமுற்றவர்களைப் போல் நடித்த
கோபியர்கள், அதிக நேரம் யமுனையின் குளிர்ந்த நீரில் தாங்கள் துன்புறுவதாகவும், கிருஷ்ணர்
தமது ஆடைகளைத் திருப்பித் தராவிட்டால் நடந்தது அனைத்தையும் தாங்கள் மன்னன் கம்சனிடம்
கூறப்போவதாகவும், மாறாகக் கிருஷ்ணர் தமது ஆடைகளைக் கொடுத்து விட்டால், பணிவுள்ள சேடிப்
பெண்களைப் போல் தாங்கள் அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும் பதில் கூறினார்.
இதற்குப் பதிலாக ஸ்ரீ கிருஷ்ணர் மன்னன் கம்சனைக்
கண்டு தாம் அஞ்சவில்லை என்றும் உண்மையிலேயே கோபியர்கள் தமது சேடிப் பெண்களைப் போல்
பணிபுரிவர் என்றால் அவர்கள் உடனடியாக் கரைக்கு வந்து அவரவர்க்குரிய ஆடைகளைப் பெற்றுக்
கொள்ள வேண்டும் என்று கூறினார். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த கோபியர்கள் தமது இருகருங்களாலும்
தங்கள் மேனியை மூடியவாறே நீரினின்று வெளியே வந்தனர். அவர்கள் மீது அதீதப் பாசமுடைய
பகவான் அவர்களிடம் மீண்டும் கூறினார் “உங்கள் விரதத்தை நிறைவேற்றும் பொருட்டு நீங்கள்
பிறந்த மேனியாக நதியில் நீராடியதால் தேவர்களிடத்து நீங்கள் பெருங்குற்றமிழைத்திருக்கின்றீர்கள்.
இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் இருகரங்களையும் கூப்பி அவர்களை
வணங்க வேண்டும் அப்போது தான் உங்கள் விரதத்தின் பலனை நீங்கள் அடைவீர்கள்”.
கிருஷ்ணரின் கட்டளையைச் சிரமேற் தாங்கிய கோபியர்கள்
தமது இருகரங்களையும் கூப்பி மரியாதையுடன் கிருஷ்ணரை வணங்கினர். அவர் அவர்களது ஆடைகளை
அவர்களிடம் மீண்டும் அளித்தார். ஆனால் அவர் மீது நாட்டங் கொண்ட கோபியர்கள் அங்கிருந்து
அவரைப் பிரிந்து செல்ல இயலாது நின்றனர். அவர்களது மனநிலையினை நன்கு அறிந்து கொண்ட கிருஷ்ணர்
அவர்களிடம், தன்னைக் கணவராக வரிக்க விரும்பியே அவர்கள் காத்யாயனி விரதம் இருந்தனர்
என்பது தமக்குத் தெரியுமென்றும், அவர்கள் தமது இதயங்களைத் தன்னிடம் இழந்து விட்ட காரணத்தினால்,
வறுத்த விதை மீண்டும் முளைக்காதது போல் அவர்களது ஆசைகளில் ஒருபோதும் உலகியல் இன்பத்தை
அனுபவிக்க வேண்டும் என்னும் கறைபடியாதென்றும் கூறியதோடு, அடுத்த இலையுதிர் காலத்தில்
அவர்களது விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
அவரது வார்த்தைகளில் முற்றிலும் திருப்தியுற்ற
கோபியர்கள் அங்கிருந்து மீண்டும் விரஜத்திற்குத் திரும்பிச் சென்றனர். ஸ்ரீ கிருஷ்ணரும்
அவர்தம் ஆயர்குல நண்பர்களும் பசுக்களை மேய்ப்பதற்காக வெகுதூரத்திலுள்ள ஓரிடத்திற்குச்
சென்றனர்.
ஶ்ரீமத் பாகவதம் / பத்தாம் காண்டம்
/ அத்தியாயம் 22
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment