வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கடவுளின் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு அறிவினைப் புகட்டுவதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சி செய்து வருகிறது. நாங்கள் எதையும் புதிதாக தயாரிப்பதில்லை. இவையனைத்தும் வேதங்களில் இருந்து பெறப்படுகின்றன. வேதங்கள் அறிவைப் பெறுவதற்கான நூல்களாகும் (வேதம் என்றால் “அறிவு” என்று பொருள்). நாம் தற்போது பாவச் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறோம், இவற்றிற்காக மறுபிறவியில் துன்பப்பட நேரிடும். நாம் அனைவரும் நிச்சயம் மரணமடைவோம். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே, “உடல் மடியும்போது ஆத்மா மடிவதில்லை.”
நாஸ்திகர்கள் நினைக்கின்றனர்: “உடல் அழியும்போது, அனைத்தும் முடிந்துவிடுகிறது.” ஆனால் இஃது உண்மையல்ல. நாம் வெறுமனே உடையைப் போன்ற இந்த உடலை மட்டுமே மாற்றுகின்றோம். ஆனால் ஆத்மாக்கள் என்ற முறையில், நான் நித்தியமானவன், நீங்கள் நித்தியமானவர்கள். நம்முடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினாலேயே நாம் பலதரப்பட்ட உடல்களினுள் நுழைகின்றோம். உதாரணமாக, நான் மனிதனாக என்னுடைய வாழ்வினை மிகவும் அருமையாக அனுபவித்து வருகிறேன். ஆனால் என்னுடைய மறுபிறவியில் நான் தெருவில் இருக்கும் ஒரு நாயாக மாறலாம், அப்போது என்னுடைய வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானதாக அமையும்! அல்லது நான் மிகவும் சக்திபெற்ற ஒரு மிருகமாக ஆகலாம்–ஒரு புலியாக அல்லது சிங்கமாக ஆகலாம்–அப்போதும்கூட வாழ்க்கை துன்பகரமானதாகவே இருக்கும். எப்போதும் துன்பகரமானதாகவே இருக்கும்.
எனவே, நாம் இந்த பௌதிக உலகில் இருக்கும்வரை, உடல்களை மாற்றுதல் என்பதும், வாழ்க்கை என்பதும் துன்பகரமானதாகவே இருக்கும். ஒவ்வோர் உடலும் வலியைக் கொடுக்கக்கூடியது, துன்பகரமானது. பகவான் ரிஷபதேவர் ஸ்ரீமத் பாகவதத்தில் (5.5.4) கூறுகிறார்:
நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம
யத் இந்த்ரிய பிரீதய ஆப்ருணோதி
ந ஸாது மன்யே யத ஆத்மனோ யம்
அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ
மக்கள் எல்லாவிதமான பாவ காரியங்களைச் செய்வதனால் பைத்தியமாகியுள்ளனர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றனர்? யத் இந்த்ரிய பிரீதய ஆப்ருணோதி, “வெறுமனே புலனுகர்ச்சிக்காக.” இங்கே உயர்ந்த நோக்கம் ஏதும் இருப்பதில்லை, புலனுகர்ச்சி மட்டுமே உள்ளது. அப்போது ரிஷபதேவர் கூறுகிறார், ஸாது மன்யே, “இது நல்லதாக எனக்குத் தோன்றவில்லை.” ஏன்? ஏனெனில், அவர்களுடைய பாவச் செயல்களின் காரணத்தினால், அவர்கள் ஏற்கனவே பௌதிக உடல் என்னும் துன்பகரமான கட்டுண்ட வாழ்வினை அனுபவித்து வருகின்றனர், அவர்கள் மேலும் தொடர்ந்து பாவ காரியங்களில் ஈடுபடுவார்களேயானால், நிச்சயம் அவர்கள் மீண்டும் ஓர் உடலைப் பெற்று தொடர்ந்து துன்பப்படுவார்கள். இதுவே ஞானமாகும். நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக துன்பமின்றி வாழ முயற்சி செய்து கொண்டுள்ளோம், அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும். நாம் அனைவரும் உயிர்வாழிகள், கிருஷ்ணரின் அம்சங்கள், அதன்படி நம்முடைய இயற்கை மகிழ்ச்சியாக ஆனந்தமயமாக இருப்பதேயாகும்.
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், மொரிஷியஸ் -1975)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment