கிருஷ்ண - இது ஒரு உன்னதமான சப்தம். கிருஷ்ண என்றால் மிக உயர்ந்த ஆனந்தம் அல்லது இன்பம் என்று பொருள். எல்லா உயிரினங்களும் இன்பத்தைத் தேடி அலைகின்றன. ஆனால் பௌதிக நோக்குள்ள இந்த வாழ்க்கையில், நாம் இன்பத்தை பூர்த்தி செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொரு அடியிலும் குழப்பத்தையே சந்திக்கிறோம். இன்பத்தை அனுபவிப்பதற்கான உண்மையான தகவல் நம்மிடம் இல்லாததே இதற்கு காரணம். ஒருவன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அவன், தான் இந்த உடல் அல்ல, தான் ஒரு உணர்வு என்பதை உணர வேண்டும். உணர்வு என்பது கூட சரியாகாது. ஏனென்றால் உணர்வே நம்முடைய உண்மை நிலைக்கான அறிகுறி. அதாவது நான் ஒரு ஆத்மா, நான் தற்பொழுது இந்த பௌதிக உடலுடன் இணைந்துள்ளேன். தற்கால பௌதிக விஞ்ஞானிகள் இந்த பௌதிக விஷயத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால்தான் அவர்கள் சில சமயங்களில் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வதில் திசை திருப்பப்படுகிறார்கள். ஆனால் தூய ஆத்மா என்பது உண்மையே. இதை ஒவ்வொருவரும் தமது உணர்வின் மூலம் உணரலாம். தூய உணர்வே தூய ஆத்மாவின் அறிகுறி என்பதை எந்தக் குழந்தையும் புரிந்து கொள்ளும்.
பகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது ஒரு ஜீவாத்மா என்ற உணர்வு நிலைக்கு நம்மை கொண்டு வருவதே ஆகும். இந்நிலைக்கு நாம் வந்துவிட்டால், இன்னொரு முறை “நான் இந்த உடல்” என்ற உணர்வின் மட்டத்திற்கு தள்ளப்பட மாட்டோம். இதனால் இந்த உடல் அழியும் தருவாயில் நாம் பௌதிகக் களங்கங்களில் இருந்து விடுபட்டு, நம்முடைய ஆன்மீக வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டு விடும். இத்தகைய நிலையில் நாம் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு நம்முடைய அடுத்த பிறவியில் அடையும் வாழ்க்கையானது முழுமையான, நித்தியமான ஆன்மீக வாழ்க்கையாகி விடுகிறது.
இந்த உடல் அழிக்கப்பட்டவுடன் உணர்வு அழிந்துவிடுவதில்லை. மாறாக இன்னொரு உடலுக்கு அது மாற்றப்படுகிறது. மீண்டும் இன்னொரு முறை அதற்கு வாழ்க்கையின் பௌதிக கொள்கை உணர்த்தப்படுகிறது. இதுவும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நாம் இறக்கும் தருவாயில் நம்முடைய உணர்வு தூய்மையானதாக இருக்குமாயின், நாம் நிச்சயமாக கூறலாம், நம்முடைய அடுத்த வாழ்க்கையானது பௌதிகமாக அல்லாமல் ஆன்மீகமானதாகவே இருக்கும். நம்முடைய உணர்வு மரணத் தருவாயில் தூய்மையாக இல்லாத பட்சத்தில் நாம் இந்த உடலை விட்ட பிறகு மீண்டும் ஒரு ஜட உடலையே அடைய வேண்டி இருக்கும். இந்த முறையே இப்பொழுது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இயற்கையின் நியதி.
நாம் இப்பொழுது ஓர் அளவிற்குட்பட்ட உடலை உடையவராகவே இருக்கிறோம். நாம் காணும் இந்த உடலானது ஸ்தூல உடலாகும். இது ஒரு சட்டையும், கோட்டும் போன்றது; அதாவது கோட்டின் உள்ளே ஒரு சட்டை உள்ளது. அந்த சட்டையின் உள்ளே ஓர் உடல் உள்ளது. இதே போல் தான் தூய்மையான ஆத்மாவும் ஒரு சட்டையாலும், கோட்டாலும் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே மூட உபயோகப்படுத்தப்பட்டுள்ள உடைகள், மனம், அறிவு, பொய் அகங்காரம் என்ற மூன்றே ஆகும். பொய் அகங்காரம் என்பது, தான் ஒரு ஜடம் என்றும், தான் இந்த பௌதிக உலகத்தின் உற்பத்திப் பொருள் என்றும் தவறான அபிப்பிராயம் கொள்வதேயாகும். இந்த தவறான எண்ணம் நம்மை ஒரு எல்லைக்குள் அடைத்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, நான் இந்திய மண்ணில் பிறந்ததால், நான் ஒரு இந்தியன் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால் தூய ஆத்மா என்ற நிலையில் நான் இந்தியனும் அல்ல, அமெரிக்கனும் அல்ல; நான் ஒரு தூய ஆத்மா. அமெரிக்கன் அல்லது இந்தியன், ஜெர்மன் அல்லது வெள்ளைக்காரன்; பூனை அல்லது நாய், தேனீ அல்லது வௌவ்வால், ஆண் அல்லது பெண் போன்றவைகள் எல்லாம் ஒரு பட்டங்களாகும். ஆனால் ஆன்மீக உணர்வில் இத்தகைய அனைத்து பட்டங்களிலிருந்து நாம் விடுபடலாம். உன்னத ஆத்மாவாகிய கிருஷ்ணரிடம் எப்பொழுதும் தொடர்பு வைத்திருப்பதின் மூலம் நாம் இந்த விடுதலையைப் பெறலாம்.
கிருஷ்ணஇன்பத்தின் இருப்பிடம் / அத்தியாயம் 1
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment