புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

 




ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில புத்தாண்டின்போது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு, கடிகாரம் பன்னிரண்டு மணியைத் தொடுகின்ற தருணத்தில், “கொண்டாட்டங்கள்” என்ற பெயரில் பலவிதமான அமர்க்களங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதுதானா புத்தாண்டு?


நன்றாக குடித்துவிட்டு பைக்குகளில் தோழிகளை அழைத்து செல்லும் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்; அவர்களை ஊக்குவிக்கும் கிளப்புகளும் அந்த நாளில் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர். வேறு சிலரோ, மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை கண்டு களிப்பர், பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவர்; கிருஸ்துவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகளும் நிகழ்கின்றன. இதர சிலரோ, விடிந்த பின் எங்கெல்லாம், எந்தெந்த வகையில் புத்தாண்டு நிகழ்வுகள் நடந்தன என்று தெரிந்து கொள்ள செய்தித்தாள்களையும் தொலைக் காட்சியையும் காண்பர். சிலர் காலை வேளையில் கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு, இந்த புத்தாண்டில் தம் வாழ்வு மாற்றமடைந்து, வெற்றிகள் குவிய வேண்டும், இன்பமும் பணமும் பெருக வேண்டும் என பிரார்த்திப்பர்.

இதுதானா புத்தாண்டு? கடிகாரத்தில் உள்ள முட்கள் பன்னிரண்டில் சேர்க்கின்ற அந்த நொடியில், அப்படி என்ன உள்ளது? வருடம், மாதம், நாள் ஆகியவை மாறுவதால், நம் வாழ்க்கை முறையில் என்ன மாற்றம் நிகழப் போகின்றது? இவை எல்லாம் நம்முடைய அறியாமையினையே பறை சாற்றுகின்றது.

சிந்திக்க வேண்டிய விஷயங்கள்

புத்தாண்டின் கொண்டாட்டங்கள் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றினை மறக்கடிக்கின்றன: ஒவ்வொரு வருடமும் கழிந்து புதிய வருடம் பிறக்கின்றது என்றால், நம் வாழ்வு நம்மை விட்டுச் செல்கின்றது என்பதே பொருள். உண்மையில், ஒவ்வொரு நாளின் சூரிய அஸ்தமனமும் நம் வாழ்வினை ஓட்டிக் கொண்டுள்ளது. மரணம் நம்மை நெருங்குகின்றது, நமக்கு வயதாகின்றது, முதுமை நெருங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும். நான் யார்? நான் இங்கு என்ன செய்கின்றேன்? இயற்கை என்னை ஏன் துன்புறுத்துகின்றது? இவ்வுலகில் வாழ்கின்ற இத்தனை கோடி மனிதர்களுக்கும் எனக்கும் என்ன உறவு? ஏன் இவ்வளவு உயிரினங்கள்? இதுபோன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும்; குறைந்தபட்சம் ஒவ்வொரு வருடமும் கடந்துசெல்லும்போதாவது கேட்க வேண்டும். ஆனால் இன்றைய உலகின் கொண்டாட்டங்கள் அவற்றை மறக்கடித்துவிடுகின்றன. கடந்த வருடம் துன்பமயமாக இருந்தது என்பதை மறந்தது மட்டுமின்றி, புது வருடம் துன்பமயமாகவே இருக்கும் என்பதையும் யோசிக்காமல், ஒவ்வொருவரும் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மயக்கத்தில் வாழ்கின்றனர்; சென்ற வருடம் மகிழ்ச்சியாக இருந்தது என்று பெயரளவில் முகநூல் அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். என்னே மதிமயக்கம்!

ஒவ்வொரு நாளிலும் இரண்டு முறை கடிகார முட்கள் பன்னிரண்டாம் எண்ணில் ஒன்று கூடுகின்றன. அதனால் நம் வாழ்வில் ஏதேனும் மாற்றம் நிகழ்கின்றதா? புத்தாண்டு பிறக்கின்ற அந்த இரவும் மற்ற இரவுகளைப் போன்ற இரவே. இயற்கை எவ்வித மாற்றமும் இன்றி செயல்படுகின்றது; நில்லாது ஓடிக் கொண்டிருக்கின்ற காலத்தினை கணக்கிட்டு குறிக்க, நொடிகள், நிமிடங்கள், மணிகள், நாள்கள், மாதங்கள், வருடங்கள் என கணக்குகள் கொண்டு வரப்பட்டன. இவை மக்களின் வசதிக்கு ஏற்ப கணக்கிடப்பட்டு வந்ததால், பல்வேறு மாதக் கணக்குகளும் வருடக் கணக்குகளும் வழக்கத்தில் உள்ளன.

பாரத பாரம்பரியத்தில் புது வருடம்

பாரத பாரம்பரியத்தில், புதிய நாள் என்பது சூரிய உதயத்துடன் தொடங்குகின்றது; அதாவது, நமது சுற்றுச்சூழலில் இருள் ஒழிந்து ஒளி பிறக்கும்போது, அது புதிய நாளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இன்று பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மேற்கத்திய வழக்கத்திலோ புதிய நாள் என்பது இரவு 12 மணிக்கு தொடங்குகின்றது. இரவு 12 மணிக்கு எந்தவொரு மாற்றமும் சுற்றுச்சூழலில் நிகழாதபோது, அதனை புதிய நாள் என்று உரைத்தல் அறிவுப்பூர்வமானதல்ல.

அதுபோலவே, புது வருடம் என்பதும் பாரத பாரம்பரியத்தில் ஏதேனும் ஒரு சுற்றுப்புற காலநிலையின் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டது. சித்திரை மாதம் பிறக்கும்போது நம்முடைய காலநிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை ஒவ்வொருவராலும் உணர முடிகிறது. ஆனால் ஜனவரி முதல் தேதியன்று ஏதேனும் மாற்றம் ஏற்படுகின்றதா? நிச்சயமாக இல்லை.

எப்படிப் பார்த்தாலும், புது வருடம் என்பது மகிழ்ச்சிக்கோ கொண்டாட்டத்திற்கோ உரித்தான நாள் அல்ல. பிறப்பு, இறப்பு, நோய், முதுமை என்னும் துன்பங்களில் சிக்கியுள்ள நமக்கு இந்த புத்தாண்டு எவ்வித மாற்றத்தையும் தரப்போவது இல்லை. வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் புரிந்து கொண்டு நாம் செயல்பட்டால், நாம் வாழும் ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு வருடமும் பயனுள்ளதாக அமையும்; இல்லாவிடில், நமது வாழ்வில் எத்தனை புது வருடங்களைப் பார்த்தாலும், அவற்றால் பயனில்லை.

வாழ்வின் குறிக்கோளை உணர்வோம்

நாம் அறிய வேண்டிய வாழ்வின் அர்த்தம் என்ன, குறிக்கோள் என்ன? பகவத் கீதை இதற்கான அறிவை வழங்குகின்றது. பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் இருவிதமான சக்திகளைக் குறிப்பிடுகிறார்: ஒன்று ஜட இயற்கை, மற்றொன்று ஜீவாத்மாக்களான நாம். ஜட இயற்கை தன்னுடைய கீழான சக்தி என்றும், உயிர்வாழிகள் உயர்ந்த சக்தி என்றும் குறிப்பிடுகிறார். எப்போதும் இறைவனின் சேவையில் இருக்க வேண்டிய நாம் நமது அறியாமையின் காரணத்தினால், மீண்டும்மீண்டும் பற்பல பிறவிகளை எடுத்து இன்ப துன்பங்களை அனுபவித்து வருகிறோம். மொத்தம் 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன; ஒவ்வொரு முறை நாம் ஒரு குறிப்பிட்ட உடலில் பிறக்கும்போது, அவ்வுடலையே நாம் என்று எண்ணிக் கொள்கிறோம்.

உடல் சார்ந்த நிலையிலிருந்து விடுபட்டு, ஆத்மாவையும் பரமாத்மாவையும் உணர்வதே மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளாகும். இருப்பினும், ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே பக்குவமடைய முயற்சி செய்யலாம், அவ்வாறு பக்குவமடைந்தவர்களில்கூட யாரேனும் ஒருவரே கிருஷ்ணரை உண்மையாக அறிய முடியும் என்று பகவத் கீதை (7.3) கூறுகின்றது. ஆயினும், கலி யுகத்தின் பல்வேறு துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஒரு விசேஷ கருணை வழங்கப்படுகிறது; அதாவது, ஹரி நாம ஸங்கீர்த்தனம் என்னும் எளிமையான முறையின் மூலமாக, அனைவரும் பகவான் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டு வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும்.

கிருஷ்ண பக்தர்களாவோம்

இந்த எளிமையான வழிமுறையினை விட்டுவிட்டு, நம்மை உடல்களாக அடையாளம் கொண்டு காலங்களை வீணாக்குவது புத்திசாலித்தனம் அல்ல. ஒவ்வொரு புத்தாண்டும் பிறந்த நாளும் நம்மை மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன என்பதை உணர்ந்து, மறுவுடல், மறுபிறவி, மரணம் போன்ற நிகழ்வுகளை அறிவதற்கு முக்கியத்துவம் கொடுத்தல் புத்திசாலித்தனமாகும். ஒவ்வொரு முறையும் புத்தாண்டு வருவதைப் போல, ஒவ்வொரு முறையும் நாம் பிறந்து இறந்து வருகின்றோம். இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பகவான் கிருஷ்ணரின் பாதங்களை நாம் சரணடைய வேண்டும். அதற்கான வழிமுறையினை அவரே கீதையில் (18.65) பின்வருமாறு வழங்குகிறார்:

மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே பிரியோ ’ஸி மே

“எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால் இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.” (பகவத் கீதை 18.65)

பிறவிப் பெருங்கடலைக் கடக்க பகவான் கிருஷ்ணரை சரணடைய வேண்டும் என்னும் கருத்தினை பகவத் கீதை மட்டுமின்றி, அனைத்து சாஸ்திரங்களும் ஆச்சாரியர்களும் அ றுதியிட்டு கூறுகின்றனர். கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியில், கிருஷ்ணரிடம் சரணடையும் வழிமுறையினை மக்களுக்கு விளக்கி, ஜடவுடலுடன் பின்னிப் பிணைந்துள்ள உணர்வினைத் தூய்மைப்படுத்தி, சரியான பாதையான பக்தி யோக மார்க்கத்தினை மக்களுக்குக் கற்றுத் தருவதே அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பணியாகும்.


புத்தாண்டின் எச்சரிக்கை


களங்கமான நமது உணர்வினைத் தூய்மைப்படுத்துவது என்பது வாரத்திற்கு ஒருமுறை வாகனங்களை சுத்தப்படுத்துவது போன்ற காரியமல்ல. நமது உணர்வினை நாம் ஒவ்வொரு வினாடியும் தூய்மைப்படுத்த வேண்டும், இறையுணர்வில் படிப்படியாக ஏற்றம் பெற வேண்டும். இறையுணர்வில் பல்வேறு நிலைகள் உள்ளபோதிலும், பகவான் கிருஷ்ணரின் தொண்டில், தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவதே மிகச் சிறந்ததாகும். பக்தர்களின் சங்கத்தில், அலைபாயும் மனதினை புலனின்ப பொருட்களிலிருந்து விலக்கி, புலன்களின் எஜமானரான ரிஷிகேஷரின் (கிருஷ்ணரின்) சேவையில் ஈடுபடுத்த வேண்டும். இதை விடுத்து, அறிவினை மயக்கும் செயல்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது.

புத்தாண்டினை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நிரந்தரமற்ற இவ்வுலகில் நிரந்தரமான இடத்தினைத் தேடி நேரத்தினை செலவிடக் கூடாது, அழியக்கூடிய இவ்வுலகில் அழிவற்ற புகழினைத் தேடி காலத்தினை வீணடிக்கக் கூடாது. காலங்கள் ஓடிக் கொண்டே உள்ளன; இதோ இன்னொரு வருடமும் வந்துவிட்டது. இவ்வாறு வருடங்கள் ஓடுவதால், இந்த உடலின் ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது. இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தூய உணர்வில் நிலைபெற வேண்டிய காலம், இதோ வந்துவிட்டது என்று உணர வேண்டும். ஒவ்வொரு புத்தாண்டும் ஒவ்வொரு பிறந்தநாளும் மரணத்தை துரிதப்படுத்துகின்றன என்பதை உணர்ந்து, பகவத் பக்தர்கள் இதுபோன்ற விஷயங்களை கொண்டாட்டங்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது.


மீண்டும் வேண்டாம் சிறைச்சாலை


எந்நாளிலும் எந்நேரத்திலும் எவ்விதத்திலும், உடலோடு நம்மை அடையாளப்படுத்துகின்ற காரியங்களை விட்டொழிக்க வேண்டும்; புத்தாண்டு, பிறந்த நாள், அரசியல், சினிமா, விளையாட்டு, கேளிக்கை, விருந்து என நம்மை மயக்கி வைக்கின்ற காரியங்களை விட்டொழிக்க வேண்டும். ஒரேயொரு புலன்கூட நமது உணர்வினை தாழ்த்திவிடும் என்று பகவத் கீதை (2.67) நம்மை எச்சரிக்கின்றது.

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன் மனோ ’னுவிதீயதே
தத் அஸ்ய ஹரதி ப்ரக்ஞாம் வாயுர் நாவம் இவாம்பஸி

“நீரின் மீதுள்ள படகை கடுங்காற்றானது அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் புலன்களில் ஏதேனும் ஒன்றின்மீது கவனம் ஈர்க்கப்பட்டுவிட்டால், அந்த ஒரே ஒரு புலன்கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.

மனதை மயக்குகின்ற புலனுகர்வுப் பொருட்களின் மீது பற்றுதலை வளர்த்துக் கொள்பவரால் தனக்கு இலக்கான உன்னத பக்தித் தொண்டிற்கு ஏற்றம் பெற இயலாது. எனவே, காலங்கள் கரைந்து, முதுமை தொற்றி, நடமாடவே இயலாத பருவம் வருவதற்கு முன்பாகவே பக்தியினைப் பயில வேண்டும்.

உடல் என்பது ஆத்மாவை சிறைப்படுத்தப்பட்டுள்ள ஓர் இடம். ஞிசிறைச்சாலைக்குள் வந்தவர் யாரேனும், தான் வந்த நாளை விழாவாக கொண்டாடுவரோ? இத்தனை வருடங்கள் சிறைக்குள் இருந்தேன், இன்று முதல் இத்தனை வருடங்கள் கழிந்துவிட்டது, புதிய வருடம் உதயமாகின்றது என எவரேனும் மெழுகுவர்த்திகள் ஏற்றி கொண்டாடுவரோ? அவ்வாறு கொண்டாடுவது புத்திசாலிகளின் செயலாகுமா? இதையெல்லாம் கருத்தில் கொண்டு புது வருடத்தினை அணுகுவீர்; பகவத் கீதையினைப் படித்து, கிருஷ்ண உணர்விற்கு ஏற்றம் பெறுவோமாக.


"இக்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more