சுதாம பிராமணர்

 


தானம் பெற அரண்மனைக்கு வந்த தமது நண்பர் சுதாம பிராமணரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டதையும், தங்கள் ஆன்மீக குருவான சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்தபொழுது தாங்கள் லீலைகளைப் பகிர்ந்து கொண்டதைப் பற்றி அவர்கள் உரையாடியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான சுதாம பிராமணர் பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார். தானாக வருவதைக் கொண்டு அவர் தன்னையும், தன் மனைவியையும் பராமரித்து வந்ததால் அவர்கள் ஏழ்மையில் வாடினர். ஒருநாள், தன் கணவருக்கு அளிப்பதற்கு எந்த உணவும் இல்லாததைக் கண்ட சுதாமரின் மனைவி, துவாரகைக்குச் சென்று நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் யாசித்து வரும்படி தன் கணவரிடம் வேண்டினான். சுதாமர் தயஙகினார். ஆனால் அவள் வற்புறுத்தியதால் அவர் செல்ல ஒப்புக் கொண்டார். பகவானைத் தரிசிக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று அவர் எண்ணினார். அவரது மனைவி ஸ்ரீ கிருஷ்ணருக்குகொடுப்பதற்காக சிறது அவலை யாசித்துப் பெற்று வந்தாள். அதை எடுத்துக்கொண்டு சுதாமர் துவாரகைக்குப் புறப்பட்டார்.


சுதாமர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கிய மனைவியான ருக்மிணி தேவியின் அரண்மனையை நெருங்குவதை பகவான் சிறிது தூரத்திலிருந்து கண்டார். உடனே அவர் ருக்மிணியின் கட்டிலிலிருந்து எழுந்து சென்று தன் நண்பனைப் பெரு மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டார். பிறகு சுதாமரை அவர் கட்டிலில் அமரச் செய்து, தமது கைகளால் அவரது பாதங்களைக் கழுவி, அத்தீர்த்தத்தை தமது தலை மேல் தெளித்துக்கொண்டார். பிறகு அவர் பல்வேறு பரிசுகளை சுதாமருக்கு வழங்கி, தூபம், தீபம் முதலியவைகளால் அவரைப் பூஜித்தார். அப்பொழுது கந்தலாடையை அணிந்திருந்த அந்த பிராமணருக்கு ருக்மிணி வெண்சாமரத்தால் காற்று விசிறினாள். இவையெல்லாம் அரண்மனைவாசிகளுக்கு ஆச்சரியமூட்டின.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறகு தமது நண்பரின் கையைப் பிடித்துக் கொண்டு, நீண்ட நாட்களுக்கு முன் தங்களுடைய குருவின் ஆசிரமத்தில் தாங்களிருவரும் இணைந்து செய்த விஷயங்களைப் பற்றி பேசினர். கிருஷ்ணர், மனித சமூகத்திற்கு ஒருதாரணத்தை அமைப்பதற்காகவே கல்வி கற்கும் லீலையில் ஈடுபடுகிறார் என்று சுதாமர் சுட்டிக் காட்டினார்.

 

தமது நண்பர் சுதாமருடனான அன்பான உரையாடலின் போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கேட்டார்; “எனது பிரியமுள்ள பிராமணரே, எனக்காக வீட்டிலிருந்து ஏதேனும் காணிக்கைப் பொருள் கொண்டு வந்தீரா? என் அன்பு பக்தனிடமிருந்து பெறும் மிகச்சிறிய காணிக்கையைக்கூட, நான் மிகவும் பெரிதாக மதிக்கிறேன்.” ஆனால் அந்த ஏழை பிராமணர், தான் கொண்டுவந்த அற்ப காணிக்கையான அந்த அவலைக் கிருஷ்ணரிடம் கொடுக்க வெட்கப்பட்டார். ஆயினும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றிருக்கிறார் என்பதால், சுதாமர் தம்மைக் காண வந்த நோக்கத்தை அறிவார். எனவே சுதாமர் ஒளித்து வைத்திருந்த அவல் முடியைத் தானே எடுத்துக் கொண்டபின், அதிலிருந்து ஒரு பிடி அவலை எடுத்துப் பெருமகிழ்ச்சியுடன் உண்டார். இரண்டாவது பிடி அவலை உண்ணத் தயாராக இருந்த அவரை ருக்மிணிதேவி தடுத்துவிட்டாள்.


தான் பரமபதம் அடைந்து விட்டதுபோல் உணர்ந்த சுதாமர், அன்றிரவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அரண்மனையில் இன்பமாகக் கழித்தார். மறுநாள் காலையில் அவர் தன் வீட்டிற்க்குப் புறப்பட்டார். நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற அவர், ஸ்ரீ கிருஷ்ணரால் அவ்வாறு கௌரவிக்கப்படுவதற்குத் தான் எவ்வளவு பாக்கியசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். சுதாமர் இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்தவராய் முன்பு தன் குடிசை இருந்த இடத்திற்கு வந்தார். அந்த இடத்தைப் பார்த்து பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளானார். அங்கு உடைந்து போன தனது எளிய குடிசைக்குப் பதிலாக, வரிசை வரிசையாக ஐசுவரியம் மிக்க அரண்மனைகள் இருப்பதைக் கண்டார். ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்ற அவரை வரவேற்பதற்கு, அழகிய ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு வாத்தியக் குழு அவரை நோக்கி வந்தது. மேலுலக ஆபரணங்களால் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த பிராமணரின் மனைவி, அரண்மனையிலிருந்து வெளியே வந்து, மிகுந்த அன்புடனும், பயபக்தியுடனும அவரை வரவேற்றாள். அற்புதமான இந்த மாற்றம் பரமபுருஷர் தன்னிடம் கொண்டுள்ள கருணையால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணியபடி சுதாமர்தன் மனைவியுடன் தன் அரண்மனைக்குள் பிரவேசித்தார்.


அன்று முதல் சுதாமர் ஏராளமான செல்வத்தின் மத்தியில் வாழ்ந்து வந்த போதிலும், அவர் துறவு மனப்பான்மையை விடாது பாதுகாத்து வந்தார். எப்பொழுதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடினார். மிகக் குறுகிய காலத்திலேயே அவர் தேகப் பற்றுகளையெல்லாம் களைந்து பரமபதம் அடைந்தார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 80-81)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more